கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

26 பிப்ரவரி, 2015

ஹொங்கொங் விவகாரம்: சுயாட்சி சாத்தியமா?

சீனாவின் 65ஆவது தேசிய தினமான கடந்த புதன்கிழமைக்கு முன்பாக ஹொங்கொங்கின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தேசிய தினம் நிறைவடைந்த போதிலும், போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஹொங்கொங்கின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் சீனா புதிய விதிகளை அறிவித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி பெய்ஜிங் அறிவித்த பின்பே ஜனநாயக ஆர்வலர்களும் சட்டசபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்வைத்திருந்தனர்.
அரசின் உத்தரவையும் மீறி வீதிகள் மற்றும் வர்த்தக மையப்பகுதியை முடக்கி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் தடியடி பிரயோகம் நடத்திய நிலையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிலை கொண்டுள்ளனர். இதனால் வங்கிகள் மற்றும் பாடசாலைகள், வர்த்தக மையப் பகுதிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ~ஒரு நாடு இரு ஆட்சி| முறை என்ற உடன்பாட்டின் கீழ் பிரிட்டன் கடந்த 1997ஆம் ஆண்டு ஹொங்கொங்கை சீனாவிடம் கையளித்தது. இந்த ஆட்சிமுறை மூலம் சீனாவின் பிரதான நிலப்பகுதியில் மக்களை போலல்லாமல் ஹொங்கொங் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இந்நிலையில் ஹொங்கொங் மக்கள் தங்களுடைய தலைமை நிர்வாகியை 2017இல் சுதந்திரமாக தேர்வு செய்யலாம் என்றளித்திருந்த வாக்குறுதியிலிருந்து சீனா பின் வாங்கியிருப்பதாலேயே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2017இல் ஹொங்கொங்குக்கான தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய நடக்கவுள்ள தேர்தலில் யார் போட்டியிடலாம் என்பதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் சீனா அறிவித்துள்ளது.



சீன அரசாங்கத்துக்கு சார்பானவர்களை கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு தேர்வுக் குழுவில் பாதியளவானோருக்கு அதிகமானவர்களின் ஆதரவு இருந்தால் மாத்திரமே ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியும் என சீன அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின் பிரகாரம் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் தரப்பிலிருந்து எவருமே தலைமை நிர்வாகிப் பதவிக்கு போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

சீனாவில் ஒற்றைக்கட்சி கம்ய+னிஸ ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹொங்கொங் சுதந்திர அரசியல் அலகாக உருவாக வேண்டும் என்றோ, சோஷலிச பாதையிலிருந்து நாடு திசைமாற வேண்டும் என்றோ விரும்புவர்களுக்கு அரசியல் எதிர்கால இல்லையென்றும் சீனா தெரிவித்துள்ளது. எனினும், சீனா தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதற்கான எந்த சமிக்ஞையும் தென்படவில்லை. 1946ஆம் ஆண்டு கம்ய+னிஸ சீனா நிறுவப்பட்டதையொட்டி கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட தேசிய தினத்தின் போது ஹொங்கொங் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வகையிலான தீர்ப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை ஏமாற்றமேயளித்துள்ளன.

ஹொங்கொங்கில் இடம்பெறும் இவ்வார்ப்பாட்டம் சீனாவுக்கு நேரடி சவாலாக கருதப்படுகிறது. அத்துடன், இந்த ஆர்ப்பாட்டம் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கும் பரவும் அபாயம் குறித்து அது கவலையடைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் ஹொங்கொங் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்யப்பட்ட 20 பேரையும் சீனா எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. முன்பு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சீனாவுடன் இணைக்கப்பட்டிருந்த ஹொங்கொங்கில் மட்டும்தான் மக்கள் கம்ய+னிஸ்ட் கட்சியை விமர்சிக்க முடியும். சீனாவின் ஏனைய பகுதிகளை விடவும் ஹொங்கொங்கில் பேச்சுச் சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் ஒப்பீட்டளவில் அதிகமாகும். ஆனால், சீனாவுக்கு எதிராக செயற்படக்கூடிய எவரும் ஹொங்கொங்கில் தலைவராக வந்துவிடுவதை தடுக்கும் நோக்கிலேயே சீனா தற்போது புதிய விதிகளை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போராட்டம் இன்னம் எவ்வித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருப்பதுடன் அரச கட்டிடங்களை, சூழ அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் அவர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். ஆனால், தற்போதைய பதற்றத்தில் சீன இராணுவம் கலந்து கொள்ளப் போகிறது என்று பொது மக்களிடம் பரவிய வதந்தியை சீன அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அரசு கலைந்து செல்லும்படி கோரியிருந்தும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.  ஆர்ப்பாட்டக்காரர்களை குறைப்பதற்கு போதுமான பொலிஸ் அதிகாரிகளின் தேவை பற்றாக்குறையாகவுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. ஹொங்கொங்கில் மக்கள் இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கும் சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களை நகர நிர்வாகமே கையாளும் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், ஹொங்கொங் அரசு இந்த ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க தனது முழு ஆதரவையும் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை போராட்டக்காரர்கள் ~ஜனநாயக சதுக்கங்கள்| என்று வர்ணித்தனர். இவை ஒருகணம் தியனன்மென் சதுக்கப் போராட்டத்தை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் சீன அரசு பலியெடுத்த உயிர்கள் ஏராளம். அவ்வாறானதொரு அசம்பாவிதத்திற்கு பிறகும் ஹொங்கொங் மக்கள் ஜனநாயகத்துக்காக தமது ஆதரவுக் குரலை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஹொங்கொங் மக்களின் ஜனநாயகப் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிப்பது தற்போது என்னவோ சீன அரசின் கையிலேயே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஜனநாயகப் பாதையில் ஹொங்கொங்

1984: பிரிட்டன்- சீனா உடன்படிக்கையில் 50 ஆண்டுகளுக்கு வெளியுறவு, பாதுகாப்பு தவிர்த்து ஹொங்கொங்கிற்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க இணக்கம்.

1997: ஹொங்கொங் சீனாவிடம் கையளிப்பு

2004: ஹொங்கொங் தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர சீனா ஒப்புதல்.

2008: ஹொங்கொங் தலைவரை தேர்வு செய்வதற்கான நேரடித் தேர்தல்- சீனா அறிவிப்பு.

2014: அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவர ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களால் உத்தியோகப் பற்றற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2014 ஆகஸ்ட்: புதிய நிபந்தனைகளுடன் 2017 நேரடித் தேர்தலுக்கான அறிவிப்பை சீனா வெளியிட்டது.

2014 செப்டெம்பர் 22: ஒருவார கால வகுப்பறை பகிஷ்கரிப்பு ஹொங்கொங் மாணவர்களால் முன்னெடுப்பு.

க.பிரசன்னா
05.10. 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக