மரபுகளின் அடிப்படையில் திருமணம்
செய்து கொள்பவர்களுக்கு இம்முறை கொஞ்சம் கசப்பாகவே இருக்கும். உலக நாடுகளுக்கிடையில் திருமண நடைமுறைகள் வித்தியாசமாக இருந்தாலும் திருமணம்
என்னவோ ஆண் பெண்களுக்கிடையே தான் இடம்பெற்றது.
ஆனால், தற்போது
அவ்வாறில்லை. அது நாகரீகமாகவும் இல்லாமல் போய்விட்டது.
தற்போதெல்லாம் ஒருபாலருக்கிடையிலான
திருமணமே அதிகமாக இடம்பெறுகிறது. ஆண் ஆண், பெண் பெண் என்ற வகையில் அவை காணப்படுகின்றன. ஆனால், இவை
தற்போது அதிகளவில் மாற்றங்களை கொண்டுள்ளது. பிரிட்டனில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள்
அந்நாட்டு குடியேற்ற சட்டத்தை ஏமாற்றுவதற்காக போலியான ஒருபால் திருமணங்களை செய்து கொள்வது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு போலியான ஒருபால் திருமணங்களை நடத்தி வைக்கும்
கும்பல்கள் அதற்காக 10,000
பவுண்கள் வரையான தொகையினை அறவிடுகின்றனர்.
ஒருபால் திருமணமானது அந்நாட்டு அதிகாரிகளை ஏமாற்ற இலகுவான வழி என்றும் இவ்வாறான கும்பல்கள் தெரிவித்துள்ளன. சட்ட விரோத
குடியேற்றக்காரர்களுக்கு போலித் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாட்டாளர் பலமுறை போலி
ஒருபால் திருமணங்களை ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் இது மிகவும்
இலகுவானது. நான் ஓரின சேர்க்கையாளர் என்று குறிப்பிட்டால் அதிகாரிகள் எந்த கேள்வியும்
கேட்காமல் விட்டுவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் குடியுரிமை
பெறுவதற்காக இந்தியர்கள் பலர் போலியான திருமணங்கள் செய்வது அதிகரித்துள்ளது. இந்தியாவைச்
சேர்ந்தவர்கள் குடியேறும் பொருட்டு பல்வேறு முரண்பட்ட வழிகளை கையாண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சுமார் 10,000
போலி திருமணங்கள் இடம்பெறுவதாக அந்நாட்டு அரச தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா விசா மூலம் சென்று தொழில் செய்வதாக கூறி
அங்கேயே முறைகேடாக சிலர் தங்கி விடுகின்றனர். கல்வி நடவடிக்கைகளுக்காக செல்பவர்களும்
இம்முறையை தற்போது கடைபிடிக்கின்றனர். அதிக
வருமானம், சொகுசு வாழ்க்கை,
வாழ்விடங்களில் ஏற்படும் பிரச்சினைகள், உள்நாட்டு
அசாதாரண நிலைமைகள் என்பனவே இவ்வாறான நிலைமைகளுக்கு
காரணம் எனக் கூறப்படுகிறது. அங்குள்ள ஆண்களையோ அல்லது பெண்களையோ திருமணம் செய்து கொள்வதன் மூலம் குடியேற்ற உரிமை கிடைக்கும் என்பதால் போலி
திருமணம் செய்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நூதன செயற்பாடுகளை
தற்போது அறிந்துள்ள பிரிட்டன் குடியேற்றத்துறை
அதிகாரிகள் , தொடர்ந்து சோதனைகள் நடத்தி பலரை கைது செய்து
வருகின்றனர். இன்னும் சிலரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்தவர்களை
திருமணம் செய்து கொள்வதன் மூலம் 5 ஆண்டுகளில் அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும்
ஆசையினாலேயே இந்தியர்கள் பலர் இத் திருமண முறையினை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தியர்களை போலவே பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா
ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் போலி திருமணங்கள் செய்கின்றனர். இதை தடுப்பதற்காக
திருமண பதிவாளர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்குலக
நாடுகள் ஒருபால் திருமணத்தை ஏகமனதாக அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூஸிலாந்து
போன்ற நாடுகள் ஒருபால் திருமணத்தை சட்டபடி அங்கீகரித்துள்ளன. தற்போது உலகில் 14 நாடுகள் இவ்வோர்பால் திருமண
நடைமுறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன.
இவ்விடயம் மேற்கூறியவாரான உள்நாட்டு நெருக்கடியை
தோற்றுவித்திருக்கும் நிலையில் பிரிட்டனில் கடந்த வாரம் முதல் ஒருபாலின திருமணம் சட்டப்படி
மத ரீதியாக மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சட்டம் அமுலுக்கு வந்த அடுத்த
நொடிகளிலேயே இங்கிலந்திலும் வேல்ஸிலும் அதிகளவான ஒருபால் திருமணங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் போலியானவை தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை. மதக் குழுக்கள் எதிர்ப்பு
தெரிவித்திருந்த போதும் பிரிட்டனின் அரசியல்வாதிகள் சென்ற ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின்
விளைவாக தற்போது இவை சாத்தியமாகியிருக்கின்றன. மரபு வாதக் கட்சியில் இதனை பலரும் எதிர்கிறார்கள் என்றாலும்
பிரிட்டனுக்கு இது முக்கியமான தருணமென்று பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைப் பொறுத்தவரை 2005 ஆம் ஆண்டு முதலே இந் நாட்டில் வாழும் ஒருபாலின
ஜோடிகள் சிவில் பாட்னர்ஷிப் (Civil Partnership) எனப்படும்
சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவர்களாக வாழ முடியும். திருமணம் செய்து கொள்கின்ற ஜோடிகளுக்குரிய அதே சட்ட அங்கீகாரம்
இவர்களுக்கு கிடைத்தது. ஆனால், மத முறைப்படி திருமணம் செய்யாததால் சமூகம் தம்மை இரண்டாம் பட்சமாகவே கருதுவதாக இவர்கள் தெரிவித்திருந்தனர்.
சமூக கட்டமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற குடும்பம் என்ற கூறு ஒருபாலின திருமணத்தால்
சேதமடையுமென பிரிட்டிஷ் மதக் குழுக்கள் வாதிடுகின்றன. இந்நிலையில் ஒருபாலின திருமணக்காரர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து கொள்ள பிரிட்டன் பாராளுமன்றம்
சென்ற ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கு மதக் குழுக்கள் ஆட்சேபங்களை தெரிவித்திருந்தும்
அவற்றை மீறி தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒருபால் திருமணம் உலகில் பல
நாடுகளில் இன்னும் சட்ட விரோதமான ஒரு செயல். எனினும் பிரிட்டனில் இச் சட்டம் அமுலுக்கு
வந்துள்ளது.இவை ஒரு புதிய அத்தியாயம் எனினும்
அவற்றால் அதிகரிக்கப்போகும் போலி திருமணங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்று தெரியவில்லை.
தற்போது பிரிட்டனில் புகலிடம் பெறுவதற்காக அங்கு
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு போலியான திருமணம் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
பிரிட்டன் உள்துறை அலுவலக தரவின்படி கடந்த
ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் மொத்தம் 7606 போலியான திருமணங்கள் பதிவாகியுள்ளன. எனினும்
குறித்த காலத்தில் இவ்வாறு பிரிட்டனில் புகலிடம்
பெற போலி திருமணம் செய்தவர்களில் 90 பேரே நாடு கடத்தப்பட்டுள்ளனர். இத் தரவுகளின்படி
ஒவ்வொரு 85 போலி திருமணம் செய்து கொள்வோரில்
ஒருவர் மாத்திரமே நாடு கடத்தப்படுகின்றார். நகர் புறங்களில் நடக்கும் ஐந்து திருமணங்களில்
ஒன்று சந்தேகத்திற்கிடமானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஓரின சேர்க்கையாளர்கள்
குறித்து பேச மறுக்கும் சமூகங்களும் அரசுகளும் அது குறித்த பேச்சும் சேர்க்கைக்கான
அனுமதிகளையும் ஒரு சில சட்டக்கட்டுப்பாடுகளுடன் வழங்கி வருகின்றன. அத்தகைய நிலையை மேற்கத்தைய
நாடுகள் எடுத்ததும் பரவலாக அதே எண்ணங்கள் பிற மதம் சாராத கிழக்கு நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு
இருக்கின்றன.
சீனாவில் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருவதை அவதானிக்க
முடிகிறது. சீனாவில் தற்போது 16 மில்லியன் பெண்கள் ஓரின சேர்க்கையாளர்களாக
மாறியுள்ளனர். சீனாவில் ஒரு பிள்ளை சட்டம் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் பெற்றோருக்கு
பிறக்கும் குழந்தைகளில் ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை தான் இருக்கும், அக்
குழந்தையும் வளர்ந்ததும் ஓரின சேர்க்கையாளராக மாறினால் நிலைமை எவ்வாறு இருக்கும் . அவ்வாறான ஒரு நிலை தற்போது
சீனாவில் தோன்றியுள்ளது.
அதேபோலவே நியூஸிலாந்தில் ஒருபால்
திருமணம் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆசிய ,பசுபிக் பிராந்தியத்தில் முதல் நாடாகவும் உலகில் 14
ஆவது நாடாகவும் நியூஸிலாந்து ஒருபால் திருமணத்தை அங்கீகரித்துள்ளது. தற்போது
அவுஸ்திரேலியாவிலிருந்து சென்றும் சிலர் ஒரு பாலின திருமணத்தை நியூஸிலாந்தில் மேற்கொள்கின்றனர்.தற்போது
உலகம் பல ஆச்சரியங்களை கடக்கின்ற போதும் இவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இன்னும் பல வருடங்களில் ஆண் பெண் திருமணம் என்பது ஆசியர்களிடமும் ஆச்சரியமாகிப் போனாலும் கவலைப்படுவதற்கில்லை.
க. பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக