கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 டிசம்பர், 2014

உக்ரைனிய ஜனாதிபதி தேர்தல்


பல சர்ச்சைகள் மற்றும் பேராட்டங்களின் பின்பு அண்மையில் உக்ரைன் நாட்டில் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. ரஷ்யா, உக்ரைனின் தனியாட்சிப் பகுதியான கிரிமியாவை கைப்பற்றியதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் கடந்த 5 மாதங்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கிடையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்த நிலையில் உக்ரைனில் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

450 உறுப்பினர்களைக் கொண்ட உக்ரைன் நாடளுமன்ற தேர்தலில் ரஷ்ய ஆதரவாளராக கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுக்கோவிச்சை வெளியேற்றும் முகமாகவே இத்தேர்தல் இடம்பெற்றதாக கருதப்படுகிறது. இருப்பினும், தேர்தலில் ஜனாதிபதி பெட்ரோவுக்கே மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி துறந்த பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் என்பதாலும் நாடாளுமன்றத்தில் இருக்கும் இவரின் ஆதரவாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும் இத்தேர்தல் அமைந்ததுடன் ஐரோப்பிய யூனியனின் ஆதரவு உறுப்பினர்களின் பெரும்பான்மையினை பெறும் வகையிலேயே, தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே ஜனாதிபதி பெட்ரோ உக்ரைன் தேர்தலை அறிவித்திருந்தார்.


உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை ரஷ்யா மேற்கொண்டிருந்தமை நாம் அறிந்ததே. ரஷ்யா மேற்குலகு நாடுகளை எதிர்த்து சோவியத் கால நாடுகளை மீண்டும் தன்னுடன் இணைத்து கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்த நிலையில் உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்ய ஆதரவு நாடுகள் என இரு அணிகளுக்குமிடையில் ஐரோப்பிய யூனியனில் இணையவே அதிக விருப்பத்தினை வெளியிட்டிருந்தது. ஆனால் இதனை தடுப்பதற்கே ரஷ்யா, கிரிமியாவை தன்வசப்படுத்தியதுடன் 5 மாதகால யுத்த பிரகடனத்தையும் முன்வைத்திருந்தது. எனினும் சர்வதேச நாடுகளின் தடைகள் மற்றும் அழுத்தம் காரணமாக நிறைவுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின் தற்போது உக்ரைன் நாடாளுமன்ற தேர்தல் சுமுகமாக இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் உக்ரைனின் முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் பிரதமர் தலைமையிலான மக்கள் முன்னணிக் கட்சசி 21.7% வாக்குகளைப் பெற்றிருந்ததோடு, ஜனாதிபதி பெட்ரோ தலைமையிலான கட்சி 21.6% வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி யானுகோவிச்சின் கட்சி மற்றும் ரஷ்ய ஆதரவாளர்கள் கட்சி இதில் படுதோல்வியை சந்தித்திருந்தன. ஆனால் இவை தொடர்பில் ரஷ்யா எவ்விதமான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கவில்லை.

கிழக்கு உக்ரைனுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சியை வழங்க வகைசெய்யும் உடன்பாட்டை கிளர்ச்சியாளர்களுடன் ஜனாதிபதி பெட்ரோ செய்து கொண்டார். இந்த உடன்பாட்டை நிராகரித்த பழைமைவாதிகளும் இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கவில்லை. ஜனாதிபதியின் கட்சியினை விட பிரதமரின் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதால் பிரதமருடன் இணைந்து ஜனாதிபதி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி பெட்ரோ தெரிவிக்கையில், 75 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இத்தேர்தலில் உக்ரைனானது ஐரோப்பிய யூனியன் வழியில் செல்லவும் கிழக்கு உக்ரைனில் இடம்பெறும்

கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டுவந்து தமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் 450 இடங்களைக் கொண்ட நடாளுமன்றத் தேர்தலில் 423 இடங்களுக்கே தேர்தல் இடம்பெற்றிருந்தது. கிரிமியா, கிழக்கு உக்ரைனில் உள்ள 27 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலின்போது அச்சுறுத்தல் இடம்பெறலாம் என்ற நிலையில் 60 ஆயிரம் பொலிஸாரின் பாதுகாப்புடன் தேர்தல் இடம்பெற்றதுடன் 29 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தன.


ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தேர்தலை அங்கீகரித்ததன் மூலம் ரஷ்யா சர்வதேச பொறுப்புக்களை மீறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் தேர்தலை அமெரிக்காவோ சர்வதேச சமூகமோ ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பெட்ரோ கையெழுத்திட்ட பின்பே தேர்தல் நடைபெறவேண்டும். சீர்த்திருத்தத்தை ஊக்குவிக்கும் அதன் முயற்சிகளில், ஊழலை எதிர்த்துப் போராட, கிழக்கு உக்ரைனில் மீண்டும் அமைதியேற்பட, கிரிமியா ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுக்குமென வெளியுறவு அமைச்சர் கெரி தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் வகையிலேயே அங்கு தேர்தல் இடம்பெற்றது. ஆனால், ரஷ்யா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நெடுங்காலமாக காணப்படும் அரசியல் நெருக்கடிகளை களைந்து உலகிற்கு தம்மை வல்லரசுகளாக காட்டிக்கொள்ள முனையும் இரு நாடுகளின் போட்டித்தன்மைக்கு இடையில் உக்ரைன் எத்தி விளையாடும் பந்தாகிப் போய் இருக்கின்றதென்பது மட்டுமே உண்மை.
க.பிரசன்னா
02/11/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக