கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 டிசம்பர், 2014

பாகிஸ்தான் விமான நிலைய தாக்குதல்

தெற்காசிய நாடுகளில் அதிகளவுக்கு ஆயுததாரிகளின் இலக்குக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளே உட்பட்டு வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாகவே பாகிஸ்தானின் அண்மைய தாக்குதல் சம்பவங்கள் சான்றாகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கராச்சி விமான நிலையத் தாக்குதல் மற்றும் மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கராச்சி விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளிலான துப்பாக்கச்சூட்டு சம்பவம் என்பன பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானிலுள்ள முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான கராச்சியிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையமானது பிரபலமான ஒன்றாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் விமான நிலையத்தின் வி.ஐ.பி. நுழைவாயில் வழியாகவும், விமான நிலையத்தின் பாதுகாப்பு கம்பி வேலிகளை வெட்டியும் உள்நுழைந்த பத்து தீவிரவாதிகள், உடலில் வெடிகுண்டு நிரப்பிய பைகள், ரொக்கட் லோஞ்சர்கள், ஏ.கே.47 தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு விமான நிலையத்தின் களஞ்சியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

 அவர்கள் உள்ளே நுழையும் போதே நுழைவாயிலில் இருந்த காவலர்களை சுட்டு வீழ்த்தியதுடன், தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டபடியும் விமான ஓடுபாதையை நோக்கி முன்னேறியிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கு தரித்திருந்த இரண்டு எண்ணெய்த் தாங்கிகளையும் குண்டு வீசித் தாக்கியிருந்தனர். இதனால் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமேற்பட்டதுடன், சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
மறுநாள் காலைவரை இடம்பெற்றிருந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 தீவிரவாதிகள் உட்பட 40 பேர்வரை கொல்லப்பட்டதாகவும், 25இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட 10 தீவிரவாதிகளில் ஏழு பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் தற்கொலைக் குண்டு தாக்குதல்களினால் பலியானதாக பாதுகாப்புப் படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் ஆறுமணி நேரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் இருந்த படியால் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததுடன் உள்வரும் விமானங்கள் அனைத்தும் குவெட்டா மற்றும் நவாப்ஷா ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தன. அத்தோடு, விமான நிலையத்தின் அனைத்து வாயிற் கதவுகளும் மூடப்பட்டதுடன், ஊழியர்களும் பயணிகளும் பாதுகாப்பான இடத்தை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டதுடன் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளில் அவசரகால எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், 6 மணி நேர
போராட்டத்தின் பின்பு ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியிருந்தன.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபான் இயக்கம் (தஹ்ரீக் இ தலிபான்) உரிமை கோரியுள்ளது. பாகிஸ்தான் தலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹிட் ~கராச்சி விமான நிலையம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் எமது தலைவர் ஹகிமுல்லா மெஷûத் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் நடத்தப்பட்டது| என அறிவித்துள்ளார். 

எனினும், விமான நிலைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளபோதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் உஷ்பெகி, செக்கியன், அரபு போராளிகளும் சம்பந்தப்பட்டுள்ளரென கூறப்படுகிறது. தாக்குதலின் பின்பு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 2 ரொக்கட் லோஞ்சர்கள், 12 பெட்ரோல் குண்டுகள், 19 கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளனர். தற்கொலை நடத்த வந்த 10 தலிபான்களும் இரண்டாக பிரிந்து ஐந்து பேர் கொண்ட குழுக்களாக விமான நிலையத்துக்குள் இரு வழியாக நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் அணியும் சீருடை அணிந்திருந்த காரணத்தால் இவர்களை எவரும் தடுத்து நிறுத்தியிருக்கவில்லை.

தலிபான்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்த இரு வழிகளும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன் இரு பகுதிகளிலிருந்தும் நேரடியாக விமானங்களை அடையவும் முடியும். விமானம் தரித்திருக்கும் பகுதிகளுக்குச் சென்று விமானம் ஒன்றை கடத்தலாம் என்பதே இவர்களின் திட்டமாக இருந்துள்ளது. தீவிரவாதிகளின் திட்டம் விமானத்தை கடத்துவது என ஊகிக்கப்படுவதால் இவர்களில் யாராவது விமானத்தை செலுத்தும் பயிற்சியை பெற்றிருக்கலாம் என்ற வகையில் பாகிஸ்தான்

உளவுத்துறை விசாரணைகைளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தின் அருகே பெல்வான் கோத் பகுதிகளில் உள்ள பிதாய் அபாட்டில் விமான நிலைய பாதுகாப்புப் படையின் 2ஆவது பயிற்சி மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாதிகள் முகாம் மீது திடீர் தாக்குதல்
நடத்தினர். இதில் சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்பு படைவீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி அவர்களை சுற்றிவளைக்க முயன்றபோது அந்தத் தீவிரவாதிகள் அங்கிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். இத்தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது. எனினும், இத்தாக்குதல்களுக்கு உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கமும்
உரிமை கோரியுள்ளது. துப்பாக்கித்தாரிகள் தொடர்பில் மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவை உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்களினுடையதாக காட்டுவதாக கராச்சியிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இயக்கமானது அல் ஹைடா மற்றும் தலிபான் போராளிகளுடன் மிகவும் நெருங்கிச் செயற்படுவதுடன் 2012ஆம் ஆண்டு மின்றஸ் வான் படைத்தளத்தின் மீதும் பெஷாவர் விமான நிலையத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட பெரியளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட பல தாக்குதல்களை ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்களில் உளவு விமானங்கள் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதால் பெண்களும், குழந்தைகளும் இறந்துள்ளனர். இதற்கு பதிலீடாகவே மேற்படி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் தற்போது நடக்கும் உளவு விமான ஏவுகணைத் தாக்குதல்கள்  - மத்திய புலனாய்வுத் துறை) சி.ஐ.ஏ.வால்
நடத்தப்படுவதில்லை எனவும் பாகிஸ்தான் விமானப்படையே இத்தாக்குதல்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியான வடக்கு வசிரிஸ்தானிலேயே பெரும்பாலான உளவு விமானத் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.

பாகிஸ்தான் விமான நிலைய தாக்குதலையடுத்து இந்தியாவின் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உட்பகுதியில் மட்டும் 3000 மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளால் ஏற்பட்ட இத்துயரச் சம்பவம் குறித்து ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதுடன் தீவிரவாதம் மற்றும் மதத் தீவிரவாதிகளை
ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு நிபுணர் அலோக் பன்சால், மோடி பதவி ஏற்புவிழாவில் நவாஸ் ஷெரிப் கலந்து கொண்டதன் மூலம் இந்திய- பாகிஸ்தான் உறவு பலப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் இதுபோன்ற தாக்குதல்களை பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்கின்றன என கூறியுள்ளார். தற்போது தெரீக் தலிபான், லஷ்கர் இ ஒமர், சிபா இ சபா, தெரீக் இ ஷரியா பாகிஸ்தான், ஹர்கத் உல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 32 பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயற்பட்டு வருகின்றன.

 இந்த பயங்கரவாத அமைப்புகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் மீது தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளன. இதனால் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் தொடர்ந்தும் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையானது பாகிஸ்தானிய அரசுக்கும் பாகிஸ்தானிய வாழ் மக்களுக்கும் பலத்த அச்சத்தையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறது? சுதந்திரமடைந்து 67 வருட காலங்களாக பல்வேறு தாக்குதல்களை
சந்தித்திருந்த அரசு, இராணுவ ஆட்சியினையும் எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது அந்நாட்டில் நிலவும் ஜனநாயக ரீதியான ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு எதிராக எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படப் போகின்றன என்பதினைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

15/06/2014
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக