கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஆகஸ்ட், 2025

நியாயமான எல்லை நிர்ணயம் : அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுமா?

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகத்தை அதிகரிப்பதற்கு அரைகுறை மனதுடன் நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதன்மூலமான சேவைகளை முழுமையாக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அதன் பின்னர் உருவான அரசாங்கங்கள் விரும்பவில்லை என்பது சமீபத்திய நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகள் எமக்கு வலியுறுத்தியுள்ளன.

சனத்தொகை அடிப்படையில் கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கொண்டிராத ஒரு மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் ஒரு பகுதியாக 12 உள்ளூராட்சி மன்றங்களும் 10 பிரதேச செயலகங்களும் உருவாக்கப்பட்டன. எனினும் இன்னும் சனத்தொகை அடிப்படையிலான கிராம சேவகர் பிரிவுகள் இப்பகுதிகளில் உருவாக்கப்படவில்லை என்பதும் ஒரு குறைபாடாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் சனத்தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் 2019.05.07 ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் உயர் சனத்தொகை அடர்த்தி மற்றும் உள்ளடக்குவதற்கான பாரிய விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் காணப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பொதுச்சேவைகளை வழங்கும் போது எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் அனுகுவழியில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டும் 2012 எல்லை நிர்ணயக்குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நீல்தன்டாஹின்ன, தலவாக்கலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட் ஆகிய புதிய பிரதேச செயலக பிரிவுகளை தாபிப்பதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, அம்பகமுவ கோரளை, நோர்வூட், கொத்மலை (கிழக்கு) , கொத்மலை (மேற்கு), நில்தண்டாஹின்ன, வலப்பனை, நுவரெலியா, தலவாக்கலை, ஹங்குராங்கெத்த, மத்துரட்ட ஆகிய 10 பிரதேச பிரதேச செயலகங்கள் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையானது, 12 ஆக அதிகரிக்கப்படவேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகமானது, அம்பகமுவ கோரளை, நோர்வூட், மஸ்கெலியா என மூன்றாகவும் நுவரெலியா பிரதேச செயலகமானது, நுவரெலியா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை என மூன்றாகவும் கொத்மலை பிரதேச செயலகமானது, கொத்மலை, பூண்டுலோயா என இரண்டாகவும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகமானது, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட என இரண்டாகவும் வலப்பனை பிரதேச செயலகமானது, வலப்பனை, இராகலை என இரண்டாகவும் அதிகரிக்கப்படவேண்டுமென்றே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக பத்து பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் அம்பகமுவ கோரளை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்கள் தலா மூன்று பிரதேச செயலகங்களாக உருவாக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டாலும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு நோர்வூட் என்ற புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. நுவரெலியா பிரதேச செயலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு தலவாக்கலை பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தலவாக்கலை மற்றும் நோர்வூட் உப பிரதேச செயலகங்களாக செயற்பட்ட நிலையில் கடந்த 29.05.2023 ஆம் திகதி பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டன.

தற்போது இரு பிரதேச செயலகங்களுக்கும் போதியளவான வளங்கள் ஒதுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அங்குள்ள ஊழியர்களாலும் பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 

நோர்வூட் பிரதேச செயலகம்

அண்மையில் நோர்வூட் - தியசிறிகம பகுதியில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்கருதி ஹட்டன் நகரத்துக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய உழியர்களின் நலன் கருதி மாத்திரமே குறித்த பிரதேச செயலகத்தை இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறியமுடிந்தது.

நோர்வூட் - தியசிறிகம பகுதியில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலைய கட்டிடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாரிய சர்ச்சைகள் எழுந்திருந்தன.

நோர்வூட் பிரதேச செயலாளரினால் குறித்த பிரதேச செயலகத்தை இடமாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, குறித்த கோரிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை பெறுகின்ற பொது மக்களுக்கும் போதுமான இடவசதியின்மை மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாகவும் நோர்வூட் பிரதேச செயலகம் தியசிறிகம எனும் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் பிரதேச செயலகத்திலிருந்து நோர்வூட் நகரத்துக்கும் ஹட்டன் நகரத்துக்கும் சமமான தூரமே காணப்படுவதால் இவ்வாறு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பொகவந்தலாவ, காட்மோர், சாமிமலை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி ஆகிய பிரதான மற்றும் பின்தங்கிய இடங்களைச் சுற்றியுள்ள தோட்டப்புறங்களைச் சேர்ந்த மக்களே சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. அவர்கள் அங்கு சேவையை பெற்றுக் கொள்வது இலகுவானது என்பதால் அங்கிருந்து அவற்றை மாற்றக்கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த பிரதேச செயலகத்தை இடமாற்றுவதற்கு ஆர்வம் காட்டிய அரசாங்கம் வளங்களை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்புகளையும் வழங்கவில்லை. குறித்த பிரதேச செயலகத்துக்கான கட்டிட வசதியை மேலும் விஸ்தரிப்பதற்கான வாய்ப்பு காணப்படும் நிலையில் அதற்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாமல், மக்களை அசௌகரியப்படுத்தம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.


தலவாக்கலை பிரதேச செயலகம்

தலவாக்கலை பிரதேச செயலகமானது, தற்போது தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குறித்த பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து கடந்த 26 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேற்படி பிரதேச செயலகத்தின் கீழ், தலவாக்கலையிலுள்ள லிந்துலை நகர சபைப் பகுதி, திம்புல கிராம சபையிலுள்ள சில பகுதிகள் மற்றும் கொட்டகலையிலுள்ள அக்கரப்பத்தனை பிரதேசசபை பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தலவாக்கலை பிரதேச செயலகம் அமைந்துள்ள கட்டிடமானது போதிய வசதிகளை கொண்டிராதமையால் பொதுமக்களுக்கு உரிய சேவையை வழங்க முடியவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய தலவாக்கலை பிரதேச செயலகத்தை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தலவாக்கலை பிரதேச செயலகம் இரு மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் இயங்கி வருகிறது. கீழ் தளத்தில் தனியார் மற்றும் நகரசபையால் நடத்தப்படுகின்ற முன்பள்ளி பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அவர்களுக்கு வேறு இடங்கள் வழங்கப்பட்டால் அந்த இடத்தை பிரதேச செயலகத்துக்காக பயன்படுத்த முடியும். முன்பள்ளி பாடசாலைக்கு வழங்குவதற்கு நகர சபைக்குச் சொந்தமான கட்டிடங்கள் காணப்படுவதால் அவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

தலவாக்கலை பிரதேச செயலகத்தில் போதிய கட்டிட வசதி இல்லாமையால், அஸ்வெசும நிதி வழங்கும் காலங்களில் சேவைகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் திட்டமிடல், அடையாள அட்டை பிரிவு மற்றும் பதிவாளர் காரியாலயம் என்பவற்றை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரம் ஏன் இந்த சோதனை?

நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் குறைந்த சனத்தொகை கொண்ட மக்களுக்கு அதிக கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுகின்ற போதும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகின்றன.

2019 ஆண்டு தகவல்களின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட தலவாக்கலை பிரதேச செயலகமானது, 139,255 சனத்தொகையினை கொண்டுள்ளதோடு 34 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது. நோர்வூட் பிரதேச செயலக பிரிவானது, 169,815 சனத்தொகையினை கொண்டுள்ளதோடு 35 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது.

ஆனால் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 48,496 ஆக காணப்படுவதுடன் 63 கிராம சேவகர் பிரிவு காணப்படுகின்றது. ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 60,676 ஆக காணப்படுவதுடன் 79 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 36,355 ஆக காணப்படுவதுடன் 52 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. எனவே இங்கு பாரபட்சமான பகிர்வுகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆனால் நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகைக்கேற்ப பிரதேச செயலக அதிகரிப்பு போதுமானவையாக இல்லையென்பதுடன் எதிர்வரும் காலங்களில் நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டு புதிய பிரதேச செயலகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலவாக்கலை மற்றும் நோர்வூட் பிரதேச செயலகங்கள் அதிகளவான மக்கள் பிரிவினருக்கு சேவையை வழங்க வேண்டிய தேவை காணப்படுவதால், வளப் பற்றாக்குறையை எதிர்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தால் நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்கள் மேலும் தலா ஒவ்வொரு பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.


தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு அமைந்துள்ளது.

“2021 தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகள் முறையே 225,483 மற்றும் 232,466 மக்கள் தொகையை கொண்டுள்ளன. குறிப்பாக மலையக சமூகத்தினருக்கு அரச சேவைகளை அணுகுவதில் இது பாரிய தடையாக அமைந்துள்ளது. மலையகத் தமிழ் மக்கள் கிராம அலுவலகர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கான அணுகல் இல்லாமையே பொதுச் சேவைகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் முறைமை சார்ந்த பாரபட்சத்திற்கான காரணமென தேசிய மக்கள் சக்தி கருதுவதோடு இது அவ்வாறு அமையக்கூடாதென நாங்கள் திடமாக நம்புகிறோம்.”

“நியாயமான எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய தரநியமங்களை அடிப்படையாகக் கொண்டதாக பெருந்தோட்டப் பிரதேசங்களில் கிராம அலுவலர்கள்  மற்றும் பிரதேச செயலகங்களின் விரிவாக்கம், நியாயமான எல்லை நிர்ணயம் மற்றும் தேசிய தரநியமங்களின் அடிப்படையில் பெருந்தோட்டப் பகுதிகளில் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகளை விரிவாக்க வேண்டியதும் பிரதேச சபைகளை நிறுவ வேண்டியதும் அவசியமாகும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பொது சேவைக்கான அணுகல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முன்னுரிமையின் அடிப்படையில் மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். புதிய எல்லை நிர்ணயத்துக்கு அமைவாக அவர்களுக்கான பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளை அதிகரிப்பது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையக பெருந்தோட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அரச நிர்வாகம் முழுமையாக சென்றடைவதை விரும்பாத அரசாங்கங்களே இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதற்கு தீர்வு வழங்குவதாயின் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளின் அடிப்படையில் பிரதேச செயலகங்களை மேலும் அதிகரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக