கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

8 ஆகஸ்ட், 2025

மலையகத்துக்கான அதிகாரசபையை முடக்குவது யார்?

இலங்கையில் வாழும் இனக்குழுமங்களில் மலையக தமிழர்களும் தனித்துவமானவர்களாக இருக்கின்றனர். அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, வாழ்விடம், கலாசாரம் மற்றும் தொழில் என பல்வேறு விடயங்களை இவற்றுக்கு உதாரணமாக கூற முடியும். இதனால் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் தேவைகள் முன்னிலையின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும். இதற்கு அவர்களுக்கு தனித்த அதிகாரங்கள் கொண்ட அரச நிறுவனங்கள் அவசியமாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்தில் முதன்முறையாக பெருந்தோட்டத்தினை முன்னிலைப்படுத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் என்பன பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக காலப்போக்கில் உருவாக்கப்பட்டன.

இதில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளையும் கொண்டிருப்பதால், அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு ஆதரவாக செயற்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஒரு குடும்ப சொத்தாக பயன்படுத்தப்படுவதாக பல காலமாக குற்றச்சாட்டு உள்ளது.

எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு தனியானதொரு அரச நிறுவனத்தை உருவாக்குவதில் எவரும் கவனம் செலுத்தாத நிலையில் கடந்த நல்லாட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் ‘பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ உருவாக்கப்பட்டது. அதிகார சபையின் குறிக்கோள்களாக பின்வருவன அமைந்துள்ளன.

• பெருந்தோட்ட பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் உள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதை உறுதிப்படுத்தல்.

• பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச் செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச்செய்யும் பொருட்டு சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு தத்துவமளித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும் அதிகாரசபை உருவாக்கப்பட்டு ஏழு வருடங்கள் முழுமையாக கடந்துள்ள போதும் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கச் செய்வதை பெரும்பான்மைத் தலைவர்கள் விரும்பாத நிலையே காணப்படுகிறது. ஒரு அதிகார சபையின் மூலம் முன்னெடுக்கப்படக்கூடிய விடயங்களைத் தவிர்த்து வெறுமனே பயிற்சிகள் வழங்குவதற்கும் அரிசி விநியோகிப்பதற்கும், மற்றும் தற்காலிக கழிவறை வசதிகளை வழங்குவதற்கான நிறுவனமாகவே தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீப காலமாக அரசாங்கத்தின் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு அமைவாக பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரங்களை குறைத்து அதனை அமைச்சின் ஒரு அலகாக மாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து வெளியிடுகையில், “அதிகார சபைக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கான காணி உரித்துக்களை வழங்குவதற்கான பாரிய பொறுப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. 4800 தனி வீட்டுக்கான பணிகளும் காணி உறுதிகள் வழங்கும் செயற்பாடும் இதன்மூலம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தனி அதிகாரமிக்க அமைப்பாக செயற்படுமெனவும் அவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையெனவும்” தெரிவித்தார்.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் நிதி விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மலையக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை ஒரு அதிகாரமிக்க கட்டமைப்பின் ஊடாக தீர்ப்பதாற்கான நடவடிக்கையை பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக முன்னெடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அதிகார சபையில், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு, பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, விவசாயம், கால்நடை, காணி மற்றும் விவசாய அமைச்சு, நிதி திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணிப்பாளர் சபையில் உள்ளடங்குவதால் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் ஊடாக தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பாரிய வாய்ப்பு காணப்பட்டது.

குறிப்பாக காணி, முகவரி, நிதி ஒதுக்கீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பு காணப்பட்ட போதும், தற்போது அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில் பாரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு இன்று வரை அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேசிய வரவு - செலவுத் திணைக்களத்தால் எந்தவொரு நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அமைச்சால் ஒதுக்கப்படும் குறைந்தளவான நிதியைக் கொண்டே 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பெருந்தோட்டம் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலைமையானது, பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை செயற்படுவதற்கான முதல் மற்றும் முழுமையான தடையை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக 2022 - 2024 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 236.48 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் 206.08 மில்லியன் ரூபாவை அரசசார்பற்ற நிறுவனங்களே வழங்கியுள்ளன. இதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களில் 30 மில்லியன் நிதியுதவியை மாத்திரமே அதிகாரசபை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் அதிகார சபைக்காக பணியாற்றும் 10 ஊழியர்களுக்காகவும் பணிப்பாளருக்குமான கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் வருடாந்தம் 8.85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த நான்கு வருடங்களில் 35.41 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகமாகும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உபகரணங்கள், தற்காலிக கழிவறை வசதிகள், சமுதாய கூடங்களின் அபிவிருத்தி, மனநலம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை, ஒன்லைன் வைத்திய சேவை, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அரிசி விநியோகம் என்பனவே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் அரிதாக காணி உறுதிகளை வழங்கும் செயற்பாடுகள் இவ் அதிகாரசபை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மலையக மக்கள் என்ற தனித்துவமான இனக்குழுமத்துக்கு தேவையான விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய ஒரு அதிகார சபை, அதன் குறிக்கோளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? அரசாங்கம் குறித்த அதிகார சபையை முழுமையாக செயற்பட விடாமல் தடுப்பது ஏன்? என பல கேள்விகள் எழுகின்றன.

“மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்த ஒருவராலேயே இந்த அதிகார சபையை வழிநடத்த முடியும். தற்போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மலையக மக்கள் தொடர்பில் எந்தளவுக்கு புரிதல் கொண்டவர் என்பதில் சந்தேகம் இருப்பதாக” முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிகார சபை உருவாக்கத்தில் பங்கு வகித்தவருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

“மேலும், மலையக மக்கள் ஏனைய சமூகத்தை விடவும் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்களுக்கு விசேட வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. அவர்கள் அரச சேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். ட்ரஸ்ட் நிறுவனம் தோட்ட நிர்வாகத்தை கொண்ட அமைப்பாகவே காணப்படுகிறது. எனவே அரச பொறிமுறையை கொண்ட ஒரு நிறுவனத்தின் உருவாக்குவதே இதன் நோக்கம்” எனவும் வலியுறுத்தினார்.

“பிரதான அமைச்சின் செயலாளர்கள் அல்லது அவை சார்ந்து நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணிப்பாளர் சபையில் இடம்பெறுவதால், அதிகார சபையின் தலைவர் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அரச இயந்திரத்திலிருந்து விலகியுள்ள மக்களை அரச இயந்துரத்துக்குள் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அதிகாரசபை உருவாக்கப்பட்டது. அவை தொடர்பான புரிதல்கள் இல்லாமல் ஒரு அமைச்சின் அலகாக மாத்திரமே கடந்த காலங்களில் பாவிக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்திலும் அதன் குறைபாடு தென்படுவதாகவும்” சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சந்தர்ப்பத்திலேயே பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரங்களை குறைத்து, அதனை அமைச்சின் அலகாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 2018 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான நிறுவனமாகும். சட்டவிதிகளின்படி, அதிகாரசபை அதன் பணிப்பாளர் சபைக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் அதிகாரங்களின் கீழ் செயற்படுவதாகவும் அவற்றின் அதிகாரங்களை குறைக்கவோ அல்லது அதிகார சபையை நீக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணியும் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றியவருமான கௌதமன் கருத்து வெளியிடுகையில், “அரசாங்கத்துக்குச் சொந்தமான அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக அதிகாரசபையை அரசாங்கத்தின் ஒரு பிரிவாக மாத்திரம் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

“மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தை உருவாக்குவதற்கான அத்திபாரம் இடப்பட்டாலும் அதன் பின்னர் வந்த அரசாங்கங்களில், பங்காளிகளாக இருந்தவர்கள் அதிகாரசபை தொடர்பில் அறிந்து செயற்படுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொண்டமையால், அதிகாரசபையின் வினைத்திறன் செயலிழந்ததாகவும்” சுட்டிக்காட்டியுள்ளார்.

“பல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுகையுடன் அதிகாரமிக்க கட்டமைப்பாக அதிகாரசபை காணப்பட்டாலும், அவை தொடர்பான புரிதல் குறைந்த மட்டத்திலேயே இருக்கிறது. போதுமான நிதியொதுக்கீடுகளோ, ஆளணி வளங்களோ வழங்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகளை அறிந்த ஒருவர் அதன் தலைமைத்துவத்துக்கு உள்வாங்கப்படும் போதே அதனை வினைத்திறனுடன் கொண்டு நடத்தமுடியுமெனவும்” அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த ஏழு வருடங்களை எவ்வித முன்னேற்றங்களும் இன்றி பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை கடந்துள்ளதை எம்மால் இனங்காண முடிகிறது.


அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு தடையான காரணங்கள் என்ன?

பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் தகவல்களின் அடிப்படையில், பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு 28 ஆளணி பதவிகளுக்கான அனுமதி வழங்கப்பட்ட போதும், 2023 டிசம்பர் வரை அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைத் தவிர ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கும் போதிய ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.

தற்போது 10 பேர் மாத்திரமே அதிகார சபையில் பணியாற்றி வருவதுடன், அவற்றில் நான்கு பதவிகள் நிரந்தர பதவியணியினரும் ஏனையவை தற்காலிக, பதில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றன.

2023 ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெற்றப்பட்டாலும் அக்காலக்கட்டத்தில் நிலவிய தேசிய சூழ்நிலைகளால் ஆட்சேர்ப்பு செயல்முறை வரையறுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே இருந்தது. இதன் விளைவாக அதிகாரசபை குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் அதிகாரசபைக்கு எந்த நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய வரவு செலத்திட்ட திணைக்களத்துக்கு அமைச்சால் பல்வேறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், இன்றுவரை குறித்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் அமைச்சுக்கு பட்ஜெட்டின் கீழ் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் அதிகாரசபை வரையறுக்கப்பட்ட நிதியை பெற முடிந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான அதிகாரசபையின் செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்கு 710 மில்லியன் ரூபாவுக்கான நிதி கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் கோரிக்கையின் தன்மை மற்றும் அனுமதி நிச்சயமற்றதாகவே உள்ளது. முதன்முறையாக 2018 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அதிகாரசபையின் சட்டத்தின் படி அத்தகைய நிதி முடிவுகளை அங்கீகரித்து எளிதாக்குவதற்கு தேவையான பணிப்பாளர் சபை நியமனங்களும் இடம்பெறவில்லை.

பணிப்பாளர் சபையில் 13 அங்கத்தவர்களை நியமிக்கும் தேவை (அமைச்சரால் நியமிக்கப்படும் அறுவர் மற்றும் ஏழு முன்னாள் அரச அலுவலர்கள்) இருந்த போதும், தற்போது ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். 2019 இல் 14 உறுப்பினர்களும் 2020 இல் 15 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதிகாரசபை உருவாக்கப்பட்டது முதல் தேசிய வரவு செலவுத்திட்ட அலுவலகம் மற்றும் நிதி அமைச்சு ஆகிய இரண்டுக்கும் பல முறையான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள. அவை நிதி ஒதுக்கீடுகளின் முக்கியமான தேவையை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த முயற்சிகள் இருந்த போதும், இதுவரை நேரடி நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அதிகாரசபையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்த விடயத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு தான் என்ன?

மலையகத்திற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு தனியானதொரு அரச நிறுவனம் இல்லாத நிலைமையினை போக்குவதற்கு பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை கடந்த நல்லாட்சி காலத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டாலும் தொடர்ந்தும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழுள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலமே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டத்தின்படி அதிகார சபையானது தனது சொந்த நிதியத்தை கொண்டிருத்தல் வேண்டும். அதேபோல அதிகார சபையின் பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணத் தொகையையும் அதிகாரசபையின் நிதியிலிருந்தே செலுத்துதல் வேண்டும். எனினும் தற்போது அதிகாரசபையிடம் வருமானத்தை ஈட்டக்கூடிய எவ்விதமான வழிகளும் இல்லாத நிலையிலும் அதிகாரசபை தனக்கான நிதி வசதிகளை கொண்டிருக்காத நிலையிலும் அதற்கான செலவீனங்கள் அமைச்சினாலேயே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இது அதிகார சபையின் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும்.

மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் என்பன சுயாதீன நிறுவனங்களாக இல்லை. இதனால் மலையக மக்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட நேரடி அரச நிறுவனமான அதிகாரசபையினை பயனற்ற வகையில் எவ்வித திட்டங்களும் இன்றி செயலற்ற வகையில் வைத்திருப்பது மலையக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் வசதிகளை இல்லாமலாக்குகின்றது. எனவே அதிகார சபையின் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி மலையக மக்களுக்கான தனியானதொரு அரச நிறுவனத்தை உயிர் பெறச் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக