கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஏப்ரல், 2025

லயன் அறைகள் புனரமைப்பு: காணி உரிமையை பறிக்கும் முயற்சி?

மலையக மக்களின் லயன் அறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்கு தனி வீட்டுடன் காணியுரிமை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கோஷம் பரவலாக எழுந்துள்ள நிலையில், மீண்டும் லயன் அறைகளை புனரமைத்து இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அவர்களை லயன் அறைகளிலேயே முடக்கி வைக்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

“கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கு அமைவாக  75 லயன் குடியிருப்பு தொகுதிகளில் உள்ள 1075 லயன் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டக் குடியிருப்புகளை சுத்திகரித்து புனரமைப்பு செய்து வர்ணம் பூசி சாதாரணமான முறையில் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.”

மேற்குறித்த அறிவிப்பின் மூலம் மலையக மக்களின் தனி வீடு மற்றும் காணி உரிமைக்கான கோரிக்கை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. லயன் குடியிருப்புகளில் மலையக மக்கள் கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர்களுக்கு தனி வீடுகளை வழங்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களிலும் பலராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலையக தமிழ்ச் சமூகத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலையகத் தமிழ் மக்கள் சுபிட்சமான சமுதாயமென்ற வகையில் அவர்களின் அபிவிருத்திக்கு உதவுகின்ற வீடமைப்புத் திட்டமொன்று மூலமாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான பொருத்தமான வீடுகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,  இலங்கையின் கிராமிய சனத்தொகையில் ஏறக்குறைய 2 வீதமானோர் தோட்டப்புற வீடுகளில் குடியமர்ந்துள்ளார்கள். இதனை மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பரவலாக காணக்கூடியதாக அமைவதோடு பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் சிறிய அளவிலான வசதிகள் குறைந்த வரிசை வீடுகளில் வசிக்கிறார்கள்.  இந்த குடும்பங்களில் உப குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பாரிய சமூகப் பிரச்சினைகளும் தோன்றியுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லயன் குடியிருப்புகளில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதே லயன் அறைகளை புனரமைத்து இன்னும் மலையக மக்களின் லயன் வாழ்க்கையை நீடிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெருந்தோட்டங்களிலுள்ள லயன் அறைகள்

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையின் தகவல்களின் அடிப்படையில், களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மலையகப் பெருந்தோட்டங்களில் 261,429 குடும்பங்களைச் சேர்ந்த 993,021 பேர் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 1.35 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இன்னும் லயன் அறைகளிலேயே வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றிலும் ஒரு குடியிருப்பில் பல குடும்பங்கள் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுகின்றது.

வீட்டுவசதி மற்றும் தங்குமிடங்களின் குறியீடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, தோட்ட சமூகத்தை நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகமாகக் கருதலாம். தோட்ட சமூகத்தினர் வசிக்கும் லயன் வீடுகளால் அதிக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடுகள் மிகவும் பழைமை வாய்ந்தமையினால் சிதைவடைந்த நிலையில் இருத்தல், சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் குறைவடைதல், அதிக சன நெரிசல், தனித்துவம் இன்மை, உப குடும்பங்கள் உருவாகின்றமையால் பல குடும்பங்கள் ஒரே வீட்டினுள் வாழ்கின்றமை மற்றும் அதன் காரணமாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுதல், பாதுகாப்பின்மை, சமூக அங்கீகாரம் இன்மை, சுகாதாரத்துக்கும் சிறுவர்களின் கல்விக்கும் பொருத்தமான சூழல் இன்மை போன்ற காரணங்களால் மலையக மக்களுக்கு லயன் வீடுகள் பொருத்தமில்லையென அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தால் பொருத்தமில்லாத வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள லயன் குடியிருப்புகளை மீண்டும் புனரமைத்து அங்கே மக்களை குடியமர்த்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் திட்டம் பொறுப்பற்ற செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.


இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தீ விபத்துக்கள்

மலையக மக்கள் வசிக்கும் பெரும்பாலான லயன் குடியிருப்புகள் ஏற்கனவே இயற்கை அனர்த்தங்களினாலும்   தீ விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளமை அறிந்த விடயம். பல குடியிருப்புகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்கள் அல்லது காணி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையால் அபாயமுள்ள பகுதியிலேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான வீட்டுத்திட்டதை முன்னெடுக்க அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஊடக அறிக்கையிடல் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 வருடங்களில் (2015 ஜனவரி - 2025 மார்ச்) 510 லயன் குடியிருப்புகள் தீ விபத்தினால் சேதமடைந்துள்ளன. இவற்றில் அதிகமான தீ விபத்து சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.   458 லயன் குடியிருப்புகள் கடந்த 10 வருடங்களில் நுவரெலியா மாவட்டத்தில் தீ விபத்தால் சேதமடைந்துள்ளன. இக்குடியிருப்பில் வசித்த பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் நிரந்தர வீடுகள் இல்லாமல் தற்காலிக குடியிருப்புகளிலேயே வசித்து வருகின்றனர். இவ்வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் மஸ்கெலியா - மவுசாக்கலை மற்றும் ஹட்டன் - செனன் கே.எம்.பிரிவு பகுதிகளில் 34 லயன் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்துக்களால் அதிக லயன் குடியிருப்புகள் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அதன் நெருக்கமே பிரதான காரணமாகும். நெடுந்தொடர் குடியிருப்பில் 12 முதல் 24 வரையான வீடுகள் காணப்படுவதும் இவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இருப்பதுவும் விபத்துச் சம்பவங்களின் மூலமான இழப்புகளை அதிகரிப்பதோடு பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.


தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள்

லயன் அறைகளை விடவும் மிகவும் மோசமான சூழலை தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களே இவ்வாறு தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அத்துடன் லயன் அறைகளில் உப குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் இடப்பற்றாக்குறையின் காரணமாக தற்காலிக குடியிருப்புகளை அமைத்தும் பலர் வாழ்கின்றனர்.

இதனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டத்தின் போது  இயற்கை அனர்த்தங்கள், தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்கி தனி வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இதனடிப்படையில்  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1033 தனி வீடுகள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டு தற்போது காடுகளாகியுள்ளன. அவற்றை முழுமையாக நிர்மாணம் செய்து பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மேலதிகமாக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத்திட்டமும் இன்னும் செயற்படுத்தப்படவில்லை.

லயன் அறைகளை புனரமைப்பதை விடவும் தற்போது பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானங்களை முழுமைப்படுத்தி பயனாளிகளுக்கு கையளிப்பதே அவர்களுக்கான பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்துவதற்கான தீர்வாக அமையும். மேலும் அவர்களின் காணி மற்றும் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும்.


காணி உரிமையை பறிக்கும் முயற்சியா?

மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டம் மிக நீண்டது. பல அரசாங்கங்கள் கடந்துள்ள போதும், அவர்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த முறைமையாக எவரும் முயற்சிக்கவில்லை. தற்போது 10 பேர்ச் காணி வழங்கும் திட்டம் கொள்கையளவில் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றை செயற்படுத்துவதில் பின்னடிப்புகள் செய்யப்படுகின்றன. போதியளவு காணிகள் இல்லாமையால் மாடி வீட்டுத் திட்டம், லயன் அறைகளை புனரமைத்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையானது எமது ஏற்றுமதி வருமானத்திற்கு தொடர்ச்சியாக பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. அவர்களது வாழ்க்கைத்தரம் இன்றும் நியம நிலைக்கு கீழாகவுள்ளது. பெருந்தோட்ட மக்களை லயன் அறைகளிலிருந்து வீடுகளுக்கு மாற்றும் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கவுள்ளோம். இதனால் நடுத்தர காலப்பகுதியில் 25,000 வீடுகள் இதற்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையிலுள்ள வீட்டுத் தேவைகளும் உக்கிரமடைந்த நிலையில் காணப்படுவதோடு, இன்னும் சிலர் செயலிழந்த லயன்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் கூட வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அரசாங்கம், பெருந்தோட்டத் துறைக்கு 25,000 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அப்போதைய ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கு 50,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அடுத்த வருடமே அரசாங்கமே இல்லாமல் போனதுடன் முன்மொழிவு ஏட்டளவிலேயே காணாமல் போனது.

இவ்வாறு கடந்த அரசாங்கங்களைப் போலவே புதிய அரசாங்கமும் மக்களுக்கான திட்டங்களை செயற்படுத்தாமல் அரசாங்கத்தின் கொள்கையையே செயற்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டங்களை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போது லயன் அறைகளில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வீடுகளை பெற்றுக் கொடுக்க முடியும்.

மாறாக லயன் அறைகளை புனரமைத்து வழங்குவது மலையக மக்களை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அங்கேயே தங்க வைப்பதற்கான தந்திரோபாயமாகவே பார்க்க முடிகிறது. அரசாங்கத்தின் மாடி வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்றீடாக புதிய முயற்சியை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. மக்களின் தேவைகளை அறியாது, தன்னுடைய கொள்கைகளை மாத்திரம் அமுல்படுத்தும் அரசாங்கம் நீண்டு செல்வதை தடுக்கும் வழியை மக்களே தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் உருவாவதற்கு தேசிய மக்கள் சக்தி இந்நடவடிக்கைகள் மூலம் வழியேற்படுத்துகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக