கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஏப்ரல், 2025

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் நஷ்டக் கணக்கு

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை கடந்துள்ள போதும், ஏனைய தேசிய இனங்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாழ்வாதாரம் சற்று பின்தங்கிய நிலையிலேயே இருப்பது கண்கூடு. இவற்றில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அவர்கள் கடந்த 200 வருடங்களாக அனுபவித்த வேதனைகள், வலிகள் தற்போதும் அதே நிலையிலேயே இருக்கின்றது. அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் பெருந்தோட்ட கம்பனிகளும் அரசாங்கமும் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாக மாறியிருக்கின்றது.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட ஏனைய சலுகைகளை வழங்குவதிலிருந்து பின்னடிப்பு செய்கின்றன. இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமா என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தற்போது பெருந்தோட்டங்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முகாமைத்துவம் செய்து வருகின்றன. 23 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் 453 பெருந்தோட்டங்களை நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகலவத்த, அக்கரப்பத்தனை, பலாங்கொட, பொகவந்தலாவ, ஹப்புகஸ்தன்ன, ஹொரணை, கஹவத்த, கேகாலை, களனிவெளி, கொட்டகலை, மடுல்சீமை, மல்வத்தவெளி, மஸ்கெலியா, மதுரட்ட, நமுனுகுல, புஸ்ஸலாவ, தலவாக்கலை, உடபுஸ்ஸல்லாவ, வட்டவளை, ஹட்டன், சூரியகந்த உள்ளிட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், ஜனவசம, எல்கடுவ, குருநாகல், சிலாபம் ஆகிய அரச பெருந்தோட்ட நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளில் பெரும்பாலானவை தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக முன்வைக்கும் காரணங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

“2024.07.09 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் 19 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் சுமார் 16 வருடங்களாக நட்டத்தில் இயங்குவதாக அறிவித்தாலும் அதிக இலாபத்தை பெற்றுள்ளதாக அறிவித்திருந்தார்.”

“இவற்றில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் 1782 மில்லியன் ரூபாவும் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனம் 1343 மில்லியன் ரூபாவும் எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் 1830 மில்லியன் ரூபாவும் ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்ட நிறுவனம் 159 மில்லியன் ரூபாவும் ஹொரணை பெருந்தோட்ட நிறுவனம் 170 மில்லியன் ரூபாவும் கேகாலை பெருந்தோட்ட நிறுவனம் 689 மில்லியன் ரூபாவும் வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


2023.11.23 ஆம் திகதி ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் 20 பெருந்தோட்ட நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் மாத்திரமே இலாபத்தை காண்பித்து கொண்டிருக்கின்றன. ஏனைய 14 நிறுவனங்கள் நட்டத்தை காண்பிக்கின்றன. அதனால் நட்டத்தை காண்பிக்கின்ற நிறுவனங்கள் தோட்டங்களை நடத்த வேண்டுமென்ற அவசியமில்லையென அறிவித்திருந்தார்.”

இவ்வாறு பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் நட்டக்கணக்கை ஏற்றுக்கொள்வதற்கு எவரும் தயாராகவில்லை. நட்டம் ஏற்படும் கம்பனிகளை அவர்கள் நடத்த வேண்டிய எந்த அவசியம் இல்லை. அதனை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான சட்ட அனுமதிகள் அவர்களிடம் உண்டு. ஆனால் அதனை மீண்டும் அரசாங்கத்தின் ஒப்படைத்தால் அதன் எதிர்காலம் என்ன என்ன கேள்வியும் எமக்கு உண்டு.

இதன் அடிப்படையில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் தகவல்களை ஆராய்ந்த போது சில விடயங்களை எமக்கு உறுதிப்படுத்த முடிந்தது. 2024 மார்ச் 31 ஆம் திகதி நிறைவடைந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் வருடாந்த அறிக்கையில் தங்களுடைய வருமான செலவினங்களை முன்வைத்துள்ளன.

இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா மாவட்டங்களில் 16 தேயிலை, இறப்பர் மற்றும் ஒயில் பாம் ஆகிய பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் அகலவத்தை பெருந்தோட்ட கம்பனி 2023 ஆம் ஆண்டு வரிக்கு பிந்தைய இலாபமாக 530 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 1765 ரூபாவும் பெற்றுள்ளது.

பலாங்கொடை, பதுளை, இரத்தினபுரி பிராந்தியங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உள்ளிட்ட 21 தோட்டங்களை நிர்வகிக்கும் பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனி 2023 ஆம் ஆண்டு வரிக்கு பிந்தைய இலாபமாக 69 மில்லியன் ரூபாவும் 2022 ஆம் ஆண்டு 556.9 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

ஹொரணை பெருந்தோட்ட கம்பனி 2024 ஆம் ஆண்டு வரிக்கு பிந்தைய இலாபமாக 104 மில்லியன் ரூபாவும் 2023 ஆம் ஆண்டு 170 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. கஹவத்தை பெருந்தோட்ட கம்பனி 2023 ஆம் ஆண்டு 579 மில்லியன் ரூபா நட்டத்தையும் 2022 ஆம் ஆண்டு 312 மில்லியன் ரூபா வருமானத்தையும் பெற்றுள்ளது.

கேகாலை பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 21 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 690 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 454 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 1783 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

வட்டவளை பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 4316 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 3638 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி வரிக்கு பிந்தைய இலாபமாக 2024 ஆம் ஆண்டில் 1632 மில்லியன் ரூபாவும் 2023 ஆம் ஆண்டில் 2570 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

கொட்டகலை பெருந்தோட்ட கம்பனி 2024 ஆம் ஆண்டில் 134 மில்லியன் ரூபா நட்டத்தையும் 2023 இல் 236 மில்லியன் ரூபா வருமானத்தையும் பதிவு செய்துள்ளது. களனிவெளி பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 899 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 1785 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்ட கம்பனி 2024 ஆம் ஆண்டில் வரிக்கு பிந்தைய இலாபமாக 87 மில்லியன் ரூபாவும் 2023 இல் 671 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. எல்பிட்டிய பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 1546 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 1771 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 556 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 1272 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி 2024 ஆம் ஆண்டில் வரிக்கு பிந்தைய இலாபமாக 468 மில்லியன் ரூபாவும் 2023 இல் 886 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனி 2024 ஆம் ஆண்டில் வரிக்கு பிந்தைய இலாபமாக 795 மில்லியன் ரூபாவும் 2023 இல் 1034 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது. நமுனுகுல பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 1923 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 2814 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

மல்வத்தவெளி பெருந்தோட்ட கம்பனி 2023 ஆம் ஆண்டில் 177 மில்லியன் ரூபா நட்டத்தையும் 2022 இல் 2157 மில்லியன் ரூபா வருமானத்தையும் பெற்றுள்ளது. மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனி 2023 ஆம் ஆண்டில் 1038 மில்லியன் ரூபா நட்டத்தையும் 2022 இல் 203 மில்லியன் ரூபா நட்டத்தையும் பெற்றுள்ளது. ஹட்டன் பெருந்தோட்ட கம்பனி 2023-2024 ஆம் ஆண்டுகளில் வரிக்கு பிந்தைய இலாபமாக 1010 மில்லியன் ரூபாவும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் 1706 மில்லியன் ரூபாவும் பெற்றுள்ளது.

மேலும் சூரியகந்த, மதுரட்ட மற்றும் புஸ்ஸலாவ ஆகிய பெருந்தோட்ட கம்பனிகளின் வருமான விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் 19 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் 2022 - 2024 மார்ச் வரையான காலத்தில் சுமார் 4022 கோடி ரூபாவை வருமானமாக பெற்றுள்ளமையை அறிய முடிகின்றது. சுமார் 4 கம்பனிகள் மாத்திரமே குறித்த காலத்தில் 213 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளமையை அறிய முடிகின்றது.

இதனடிப்படையில் பெரும்பாலான பிராந்திய கம்பனிகள் அதிகளவு இலாபத்தை பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. ஆனால் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பில் கோரிக்கை விடுக்கும் சந்தர்ப்பங்களில் அவை நட்டமடைந்துள்ளதாக தங்களுடைய கணக்குகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதேவேளை மலையக தமிழ் சமூகத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில், “தோட்டங்களை நிர்வகிப்பதற்கான தற்போதைய முறைமையானது மிகவும் தோல்வியடைந்துள்ளது. அரச துறையைவிட தனியாரால் தோட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தில் தோட்டங்கள் 22 கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக கம்பனிகளின் ஒரே முகாமைத்துவ மூலோபாயம் தொழிலாளர்கள் அனுபவிக்கும் எந்தவொரு நிதி மற்றும் பிற உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அவர்களின் இலாபத்தைப் பெருக்குவதாகத் தோன்றுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு குறைந்தளவான ஊதியத்தை வழங்குகின்றது. அதைப்போலவே நட்டமடைவதாகக் கூறுகின்ற கம்பனிகள் அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையாகவே நட்டமடையுமாயின் நடப்புக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடுப்படுதலை மீள்பரிசீலனை செய்து ஊழியர்களுக்கு சாதகமான தொழில் சூழலையும் போதியளவிலான சம்பளத்தையும் வழங்கத் தயாராகவுள்ள கம்பனிகளிடம் தோட்டங்கள் கையளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது அரசாங்கத்திடமிருந்து தோட்டங்களை குத்தகைக்கு பெற்றுள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை கணக்காய்வுக்கு உட்படுத்தி அவற்றின் வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை பெற வேண்டும். அதனடிப்படையில் அதிக இலாபங்களை மறைக்கு கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களை சுரண்டும் கம்பனிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயற்படும் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுவதுடன், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை கண்காணிப்பதற்கான புதிய பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக