கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஏப்ரல், 2025

"கிளீன் மலையகம்" சாத்தியமா?

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் “அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்” எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் “கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்” முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய வேலைத்திட்டங்களில் பெரும்பாலும் மலையக பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கும் செயற்பாடு கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டதை போலவே, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை அடையாளம் காண முடிகின்றது.

தற்போது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அறிவித்துள்ள போதும், ஏற்கனவே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள் தொடர்பான செயற்பாடுகளில் பெருந்தோட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயற்படுத்தும் அரசாங்கம் அறிந்திருக்கவில்லையா?

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் - சமூக, சூழல்சார் மற்றும் நெறிமுறை ஆகிய மூன்று முக்கிய குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அவை பின்வருமாறு அமைந்துள்ளன.

சமூக - கழிவு முகாமைத்துவம், மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் அதேபோன்று 'முழு நாட்டின் தூய்மை” போன்ற சூழல்சார் பிரச்சினைகள் பற்றிய மக்களின் விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை. மக்களிடையே பொறுப்புடைமை, நிலைபேறான தன்மை மற்றும் சூழல் உணர்வு போன்ற மனப்பாங்குகளை வளர்ப்பதன் மூலம் தூய்மையான மனதை ஊக்குவிக்கும் கல்விப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சூழல்சார் - விதிவிலக்குக்கு பதிலாக நியமமாக மாறும் சூழல் நேய பழக்கவழக்கங்கள் இருக்கும் சூழல் நெறிமுறைகளை வளர்த்தல். இது கட்டாயப்படுத்தாமல், 'பழக்கவழக்கங்களை' மாற்றும் தனிநபர் மனநிலையைத் தூண்டுகின்ற வெகுமதி நிலைபேறான நடைமுறைகளை உருவாக்கும் முறைகளை உள்ளடக்குகிறது. நடத்தை மாற்றம் ஒரு முக்கிய சவாலாகும். அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு, முறையற்ற கழிவகற்றல் மற்றும் சக்தி திறனின்மை போன்ற நடைமுறைகளில் பலர் இன்னும் ஈடுபடுகின்றனர். இந்த பழக்கவழக்கங்கள் வேரூன்றிய கலாசார நெறிகள், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மாற்றத்திற்கான போதிய ஊக்குவிப்புகளின்மை ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன.

நெறிமுறை - பொது நிர்வாகத்தில் ஊழல் மற்றும் வினைத்திறனின்மை, குறிப்பாக சூழல் கொள்கைகள் மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் நிலவுவதே இலங்கை ஆட்சியில் உள்ள ஒரு முக்கிய சவாலாகும். சுத்தமான கரங்கள் அணுகுமுறை மீதான கவனம் செலுத்துவது, அனைத்து செயல்பாடுகளிலும் ஒருமைப்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலம் முறைமையில் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது, ஊழலுக்கு எதிரான நடைமுறைகளுக்கு ஆதரிக்கும், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைக் குறைக்கும் அத்துடன் சமூக மற்றும் சூழல் முன்னெடுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவற்றின் திட்டமிட்ட இலக்குகளை அடைவதை உறுதி செய்யும்.

மேற்கூறிய மூன்று முக்கிய கூறுகளும் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் செயற்படுத்தப்படுகின்றதா? என்பதை தற்போதைய நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் நாம் வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அரச நிறுவனங்களின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் கழிவகற்றல் திட்டங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. ஆனால் பெருந்தோட்டங்களில் இவ்வாறு எவ்வித நிகழ்ச்சித்திட்டங்களும் அமுல்படுத்தப்படவில்லை. பெருந்தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்ற பின்னர் அங்கு அரச சேவைகளை முன்னெடுப்பதற்கு தோட்ட நிர்வாகங்களின் அனுமதிகளை பெறுவதற்கான நிர்பந்தம் ஏற்பட்டது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகள் ஊடாக அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் தடைகள் காணப்பட்டது.

எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு 30 வருடகாலமாக சேவைகளை வழங்குவதற்கு தடையாகவிருந்த பிரதேச சபைகள் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் 19.09.2018 ஆம் திகதி திருத்தப்பட்டது. இவற்றில் கிராமங்கள் என்ற பதத்துடன் பெருந்தோட்டங்களும் உள்ளடக்கப்பட்டன. இதன்மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஊடான வேலைத்திட்டங்கள் பெருந்தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படுமென குறிப்பிடப்பட்டாலும் இதுவரை அவற்றுக்கு தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் கழிவகற்றல் மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பங்கு மிக முக்கியமாகும். ஆனால் குறைந்தபட்சம் அந்த சேவைகளை கூட உள்ளூராட்சி சபைகள் பெருந்தோட்டங்களுக்கு வழங்குவதில்லை. தோட்டங்களில் இதுவரை முறையான கழிவகற்றல் வசதிகள் இல்லையென்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அங்கு குப்பைகளை அகற்றுவதற்கோ, அவற்றை தரம் பிரித்து வெளியேற்றுவதற்கோ இதுவரை எந்த பொறிமுறைகளும் முன்வைக்கவில்லை. இதனால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் அவற்றை மேற்பார்வை செய்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கான தேவை எழுந்துள்ளது.

புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப 12 க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என மலையக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல வழிகளில் கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பயனாக பல இன்னல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச, நகர சபைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் அம்பகமுவ பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய புதிய சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு, நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய மூன்று பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, ஹட்டன் டிக்கோயா நகர சபை, லிந்துலை நகரசபை மற்றும் நுவரெலியா மாநகர சபை உள்ளடங்களாக 12 உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த 12 உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்படும் சேவைகள் என்ன என்பதை வரையறுத்தால், உள்ளூராட்சி சபைகள் மூலம் மக்கள் பெறும் நன்மை என்ன? என்பது தெரியவரும்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் சுற்றாடல் உட்பட, அதன் வேறு பணிகளை சனாதிபதி செயலணி மலையகப் பிரதேசங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். வரலாற்று ரீதியாக மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபையின் ஆளுகைக்கு அத்தோடு மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் பிரிவு என்ற பொது நிர்வாக கட்டமைப்புக்கு நேரடியாக உட்படாத அதாவது அரச ஆளுகைக்கு நேரடியாக உட்படாத தனியாருக்கு சொந்தமான காணிகளாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதேநிலையே இன்று வேறொரு வடிவில் தொடர்கிறது” என தெரிவித்தார்.

மேலும் “மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் தனியாருக்கு சொந்தமான காணிகள் என்ற வகைக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில் அதனை சட்ட அடிப்படையில் நிலைமாற்றத்தை செய்யாது கிளீன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலணி மலையகத் தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பாரிய சந்தேகம் நிலவுகிறது. அந்த சந்தேகம் நியாயமானதே. கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் பணிகளில், “தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் அமைப்புக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்தல்.” என்ற ஒன்றும் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்டங்களும் கிராமங்களாகவே கொள்ளப்பட்டுள்ளன என ஒருவர் வாதிடலாம். எனினும் நாம் அனைவரும் அறிந்த ஒரு உண்மை இருக்கிறது. அதாவது  தோட்டங்கள் அடிப்படையில் கிராமங்கள் என்ற கட்டமைப்பு உட்பட்டவை அல்ல என்பது” எனவும் குறிப்பிட்டார்.

எனவே, “கிளீன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலணி மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் எண்ணம் இருக்குமாயின் ஒரு முறைமை மாற்றம் பெருந்தோட்டக் காணிகள் தொடர்பில் தேவைப்படுகிறது. அந்த முறைமை மாற்றம் மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களை மற்றும் அவர்களின் பொது வாழ்க்கைக்கான காணிகள் வரையறுக்கப்பட்டு அவை கிராம சேவகர் பிரிவுக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டு பொது நிர்வாகத்தில் முழுமையாக இணைக்கப்படுவதற்கும் அதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அதனூடாக மாகாண சபைளுக்கும் எவ்வித நிபந்தனைகளும் அன்றி உட்படுவதனை உறுதி செய்வதாக அமைய வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். மலையகத் தமிழ் மக்கள் மீது காலணிய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த கட்டமைப்பு சார்ந்த அடிமை மற்றும் அரை அடிமை நடைமுறைகள் தகர்க்கப்பட்டு முழுமையான பிரஜைகள் அந்தஸ்த்தை சட்ட மற்றும் நடைமுறை அடிப்படையில் பெறாத நிலையில் கிளீன் ஸ்ரீலங்கா என்பது மலையகத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டதாகவே அமையும். இந்த கட்டமைப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்காது முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டங்கள் வெறும் ஒட்டு வேலைகளாகவும் கண்துடைப்புகளாகவே முடியும். ஆகவே, கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் மேற்குறித்த பிரச்சினையை உள்ளடக்கிய கிளீன் மலையகம் என்பதை உள்ளடக்கியிருப்பது அவசியம் என்பதை தேசிய மக்கள் சக்தி உணருவது அவசியம்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மறுபுறம் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்கும் தீர்மானம் 2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டாலும், 10 பிரதேச செயலகங்களில் மூன்று பிரதேச செயலகங்கள் பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தால் உப பிரதேச செயலகங்களாக செயற்பட்டு வருகின்றன. மேலும் சனத்தொகை அடிப்படையில் செயற்பட வேண்டிய பிரதேச செயலகங்கள், பெரும்பான்மையினரின் வசதி கருதி செயற்படுவதும் பாரிய பாகுபாட்டை உருவாக்கியுள்ளது.

எனவே கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளை பிரதான இலக்காக கொண்ட அலகு உருவாக்கப்பட்டு, சட்டரீதியான இடர்களை களைவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மலையக மக்கள் தொடர்பில் அறிந்தவர்கள் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் இல்லாமை இப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்தளவு கவனம் செலுத்துமென்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக