ஹட்டன் நகரத்தை மையப்படுத்தி இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நகரமாகவும் ஹட்டன் காணப்படுகின்றது. எனினும் ஹட்டன் நகரை மையப்படுத்தி இயங்கும் ஹட்டன் நகர சபை மற்றும் ஹட்டன் டிப்போ ஆகியவற்றின் செயற்பாடுகள் போதுமானளவில் மக்கள் மக்களின் நலன் கருதி அமையவில்லை என்பது வருத்தத்துக்குரியது.அண்மையில் தைப்பொங்கல் விடுமுறைக்காக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரிலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும் தொழில் இடங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து பற்றாக்குறையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டமையை நேரில் அறிய முடிந்தது. ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன் டிப்போ மற்றும் வேறு டிப்போக்களின் பஸ்கள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றன. அத்துடன் ஒரு சில தனியார் பஸ்களும் சேவைகளை வழங்குகின்றன.
ஆனால் தைப்பொங்கல் பண்டிகை நிறைவடைந்து ஒரு வார காலம் நிறைவடையும் நிலையிலும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஹட்டன் டிப்போ மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஹட்டன் சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்கு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் பற்றாக்குறை காரணமாக ஹட்டன் பஸ் நிலையத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஹட்டன் நகரை அண்மித்து கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை மற்றும் மஸ்கெலியா, சாமிமலை போன்ற நகரப்புறங்களை சுற்றி வாழும் அனைத்து மக்களுக்கும் பிரதான பஸ் நிலையமாக ஹட்டன் பஸ் நிலையம் காணப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச. பஸ்களே பெருமளவு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பண்டிகை காலங்களுக்கு ஊர்களுக்குச் சென்ற பலரும் மீண்டும் தொழில்களுக்கு திரும்புவதற்கேற்ற போக்குவரத்து வசதிகளை ஹட்டன் டிப்போ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
இந்நடவடிக்கை ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள், சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வழங்கப்பட்ட சேவைகளை கூட தற்போதைய காலங்களில் வழங்கவில்லை. இதனால் தமிழர் பண்டிகை காலமாகையால் அதிக தமிழர்கள் மாத்திரமே செல்வார்கள் என்ற நிலைப்பாட்டில் அசமந்தமாக ஹட்டன் டிப்போ செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹட்டன் டிப்போவின் இந்த செயற்பாடுகளின் காரணமாக விடுமுறைக்காக வீடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதுடன் மேலதிக விடுமுறை அனுமதியை தொழிலிடங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஹட்டன் டிப்போ பெற்றுக்கொண்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பண்டிகை காலப்பகுதியில் அதிகமான வருமானத்தை பெற்றுக் கொண்டாலும் பொதுமக்களுக்கு ஏற்ற சேவைகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக முன்வைக்கப்பட்டாலும் அவற்றை நிவர்த்திப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதேவேளை, கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக 10 பஸ்கள் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று பஸ்களை இயக்க முடியவில்லை என்றும் ஹட்டனில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்துக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக ஹட்டன் டிப்போ மேலதிக பஸ்களை கோரியுள்ளதாகவும் ஹட்டன் டிப்போ இதன்போது விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடக்கம் ஹட்டன் பஸ் நிலையம் வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் (SLTB/GT/DM/2021/07) கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொழும்பு - ஹட்டன் பஸ் நிலையம் வரையான வழித்தடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 23 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் இதன்மூலம் தினசரி 282,900 வருமானம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (வருமான அளவு மாறுபடலாம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 10 பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் அவற்றில் மூன்று பஸ்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் கடந்த இரண்டு வருடங்களில் 13 பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனவா? ஏற்கனவே கொழும்பு - ஹட்டன் வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பிலும் ஹட்டன் டிப்போ விளக்கமளிக்க வேண்டும்.
கொழும்பிலிருந்து ஹட்டன் அல்லது ஹட்டனிலிருந்து கொழும்புக்கு செல்லும் பயணிகளில் அதிகமானோர் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அத்துடன் தனியார் பஸ்களில் சாதாரண பஸ் சேவை மற்றும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. விசேட காலங்களில் அதிகமான இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் தேவையேற்படின் அதிகமான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெருந்தோட்டங்களை இணைக்கும் பிரதான போக்குவரத்து மையமாக ஹட்டன் காணப்படுகின்றது. ஹட்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே தொழில் புரிவதாலும் சாதாரண கட்டணத்தில் பயணிக்க முடியுமென்பதாலும் குறித்த வழிதடத்தில் அதிகமானோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் தினசரி கொழும்பு - ஹட்டன் வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து மூலம் அதிகமானோர் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த பண்டிகை காலப்பகுதியில் ஹட்டன் டிப்போவால் போதுமான இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட்டாலும் அவையும் போதுமானதாக இருக்கவில்லை. இதனால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் பஸ்களில் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இதன்போது ஹட்டன் - கொழும்பு வரையான பயணத்துக்கு ஒரு நபருக்கு 1300 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது. இது சாதாரண கட்டணத்தை விடவும் இரு மடங்கு அதிகமாகும்.
மேலும் சேவையில் ஈடுபடும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ்கள் கொண்டிருக்க வேண்டி எந்த தகுதிகளையும் இவை பூர்த்தி செய்வதில்லை. குறிப்பாக ஆசனங்கள் மிகவும் பழைமையானவையாக இருக்கும் நிலையில், அதிக வளைவுகளை கொண்ட ஹட்டன் - கொழும்பு வழிதடத்தில் பயணிகள் வழுக்கிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் கொழும்பு - ஹட்டன் வழி தடத்தில் பயணிக்கும் பஸ்கள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் ஹோட்டல்களின் சுகாதாரம் மற்றும் அதிக விலை தொடர்பிலும் ஹட்டன் டிப்போ அல்லது பஸ் சாரதிகள் கவனத்தில் கொள்வதில்லை.
கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடக்கம் ஹட்டன் பஸ் நிலையம் வரையான 132.5 கிலோ மீற்றர் தூரத்தை இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களின் மூலம் கடப்பதற்கு 4 – 5 மணித்தியாலங்கள் வரை செல்லும். இதனால் தினசரி கொழும்பு - ஹட்டன் வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் தேநீர் அருந்துவதற்காக தங்களுக்கு நெருக்கமானவர்களின் ஹோட்டல்களில் நிறுத்துவதுண்டு. கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு செல்லும் பொதுப்போக்குவரத்து பஸ்கள் கித்துல்கல, கரவனெல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவதுண்டு. இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவினால் இரண்டு உணவகங்களில் தங்களது பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிப்போ தெரிவித்துள்ளது. 15 – 20 நிமிடங்களுக்கு இங்கு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச. பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு உணவகங்களில் பயணிகளுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுதல் மற்றும் அதிக விலை கொண்ட உணவுகள் குறித்து எவ்விதமான முறைப்பாடுகள் வழங்கப்படாமையால் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இ.போ.ச. பஸ்கள் தரித்து நிற்கும் உணவகங்கள் தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படுவதில்லை.
பயணிகளின் நலன் கருதி மாத்திரம் உணவகங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. நிறுத்தப்படும் உணவகங்களில் சாரதிக்கும் நடத்துனருக்கு இலவசமாக உணவும் ஏனைய செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் தரமான உணவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் பயணிகளுக்கு விற்கப்படும் உணவுகள் தரமில்லாதவையாகவும் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மதிய மரக்கறி சாப்பாடு 300 ரூபாவுக்கும் சிற்றுண்டி வகைகள் 100 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேவேளை தினசரி அதிகமானோர் அங்குள்ள மலசலகூடங்களை பயன்படுத்தும் நிலை காணப்பட்டாலும் அவை முறையான சுகாதாரத்துடன் பேணப்படவில்லை. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் அங்குள்ள மலசலகூடங்களை பயன்படுத்தும் போது அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவை தொடர்பான எவ்வித பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்ட டிப்போக்கள் பொறுப்பு கூறுவதில்லை.
இதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை தினங்களில் மாத்திரம் ஹட்டன் டிப்போவுக்கு ஒரு கோடியே 31 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்தது. 2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவும் வருமானமாக கிடைத்தது. இவ்வாறு பண்டிகை காலங்களில் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் ஹட்டன் டிப்போ போக்குவரத்து சேவையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேலும் ஹட்டன் பகுதிகளை அண்மித்துள்ள பகுதிகளில் இருந்து வவுனியா, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் கற்கை நெறிகளை தொடர்பவர்களுக்கு பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கையை ஹட்டன் டிப்போ எடுக்கவில்லை. தற்போது தனியார் பஸ் அரை சொகுசு சேவையை வழங்கினாலும் அது நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வசதிகளை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிகள் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு குறைபாடுகளையும் கண்டுகொள்ளாமல் செயற்படும் ஹட்டன் டிப்போ நிர்வாகம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வருமானத்தை தொடர்ச்சியாக பதிவு செய்யும் ஹட்டன் டிப்போ பொது மக்களுக்கு ஏற்ற வகையிலான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். பயணிகளின் நலன்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ச்சியாகவே ஹட்டன் டிப்போ அசமந்தமாக செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக