கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2025

வளமான வாழ்க்கையில் தொழிலாளர் நலன் கவனம் செலுத்தப்படுமா?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “மலையக மக்களுக்கு கௌரவமாக ஆதாயமொன்று, சம்பள அதிகரிப்பு மற்றும் இளைஞர்களுக்கு பயிர் செய்வதற்கான காணிகள்” வழங்கப்படுவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான பிரச்சினை மிக நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் தற்போது நாளாந்த வேதனம் 1350 ரூபா என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1750 ரூபா தொடர் கோரிக்கையின் இறுதியில் 1350 ரூபா என்றளவில் முடிவுக்கு வந்தது. எனினும் ஜே.வி.பி. தொழிற்சங்கம் 2000 ரூபா வழங்க வேண்டுமென்று கூறி 1350 ரூபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள நிலையில், மீண்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா நாளாந்த வேதனம் வழங்க வேண்டுமென்ற கதை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவை 2020 ஆம் ஆண்டில் வலுப்பெற்ற போது பெருந்தோட்ட கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறின. அதன் பின்னர் 1000 ரூபா வழங்கும் முயற்சிகளை அரசாங்கத்தின் துணையுடன் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்கு என பெருந்தோட்ட கம்பனிகள் இழுத்தடிப்பு செய்தன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது. பின்னர் சம்பள நிர்ணய சபையினூடாக தோட்டத்தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எனினும் அவற்றை பெருந்தோட்ட நிறுவனங்கள் அமுல்படுத்துவதை தவிர்த்து சட்ட போராட்டத்துக்கு தயாராகியிருந்தன.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச  சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதால், தோட்டத்துறை நெருக்கடிக்குள்ளாகும் என அறிவித்து, அக்கரப்பத்தனை, எல்பிட்டிய உள்ளிட்ட 20  பெருந்தோட்ட நிறுவனங்களினால் இவ்வாறு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற மனு மீதான பரிசீலனையின் போது, பெருந்தோட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னரும் 1000 ரூபா நாட்சம்பளத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயற்சி எடுக்கவில்லை.  

பின்னர் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 1750 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே கடந்த வருடம் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 1350 ரூபாவை நாளாந்த வேதனமாக வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்த ஜே.வி.பி. தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் 1350 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக வாக்களித்திருந்தது.

தொழில் ஆணையாளர் எச்.கே.கே.ஜயசுந்தர தலைமையில் நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில் 12.08.2024 ஆம் திகதி இடம்பெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் முதலில் 1350 ரூபா அடிப்படை சம்பளம், 350 ரூபா உற்பத்தித்திறன் கொடுப்பனவையும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாயின் தம்மால் முன்வைக்கப்படும் நான்கு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தி இருந்தது.

அவற்றில் முதலாவது தேயிலை, இறப்பர் உற்பத்தி மற்றும் உற்பத்தி தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 3 வருடங்களுக்கு 1350 ரூபாவை வழங்க வேண்டும். இந்தத் தொகைக்கு மாத்திரமே ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மேலதிக கிலோவுக்கும் 50 ரூபா வழங்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளிக்கு அவர் நாள்தோறும் பறிக்கும் கிலோவுக்கு மேல் ஊதியம் வழங்கப்படும் தொகை வரையறுக்கப்படவில்லை. அது பறிக்கப்பட்ட கிலோவுக்கு மேல் 350 ரூபாவுக்கு அதிகமாகவும் இருக்கலாம். தொழிலாளர்கள் மூன்று வருடங்கள் முடிவடைவதற்கு முன் எந்த விதத்திலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவோ மீண்டும் சம்பள உயர்வை கோரவோ முடியாது போன்ற நிபந்தனைகளை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்தது. எனினும் அவர்கள் முன்வைத்த யோசனைகளை ஏற்க முடியாதென 07 தொழிற்சங்கங்கள் ஏகமனதாக தீர்மானித்தமையால் 1350 ரூபா நாட் சம்பளமாக தீர்மானிக்கப்பட்டது.

தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டாலும் அவை போதுமானதாக இருக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு. இதற்கு முன்னர் கூட்டு ஒப்பந்தத்தின் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தின் போது, தொழிற்சங்கங்கள் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே இதற்கு பிரதான காரணம். குறிப்பிட்ட காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருந்தால் இன்று தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாவை நெருங்கியிருக்கும். அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதலாளிமார் சம்மேளனத்தை கட்டுப்படுத்துவதற்குரிய அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லாமையே இவ்வாறான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு தொழிற்சங்கங்கள் தலையசைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை கடந்த 20 வருடங்களாக தீர்மானித்த கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் 2022 ஆம் ஆண்டு விலகிய பின்னர் சம்பள நிர்ணய சபையினூடாக சம்பள அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பினை ஓரளவுக்கு வழங்கியது. அதேவேளை தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தின் மூலம் பாரிய தொகையையும் வழங்கியது. தொழிற்சங்கங்களின் அலுவலக செலவுகள் மற்றும் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இதன் மூலம் வழங்கப்பட்டதுடன் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வழங்கிய சந்தாவின் மூலம் இலாபகரமாக இயங்கியிருந்தன.
 
1998 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான 21 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 12 கூட்டு ஒப்பந்தங்களில் 11 கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுடைய சம்பள விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளன. ஆனால் அவற்றை தவிர்த்து மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில், தொழில் பாதுகாப்பு தொடர்பான 20 சரத்துகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 20 வருட காலத்தில் அடிப்படைச் சம்பளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 599 ரூபாவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 602 ரூபாவுமே சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுடைய அடிப்படைச் சம்பளமாக 101 ரூபா காணப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அத்தொகை 700 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டது. இது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நியாயமற்ற வகையில் வேதனத்தை பெற்றுக்கொண்டுள்ளமையை உறுதிப்படுத்துகின்றது.

எனினும் அதன் பின்னர் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை தீர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதுவும் சாத்தியமான முடிவுகளை தரவில்லை. இறுதியாக 1700 ரூபாவுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், 1350 ரூபா என்ற தீர்மானமே இறுதி செய்யப்பட்டது.

முதலாளிமார் சம்மேளனத்தின் தரவுகளின் அடிப்படையில், வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் வரைபு மூலம் காட்டப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளத்துடன் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் விலைக்கேற்ற கொடுப்பனவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் முதலாளிமார் சம்மேளனத்தின் தரவுகளில் மொத்த சம்பளமே காட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தற்போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக அங்கத்துவம் வகிக்கும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதியப் பொறிமுறையை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வரவேற்கத்தக்களவு வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக இடம்பெற்ற வேதன அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இவர்களுக்கு நிச்சயமாக நியாயமான தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக