மலையகப் பெருந்தோட்ட மக்களை லயன் குடியிருப்புகளில் இருந்து தனி வீடுகளுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளை சில பெருந்தோட்டங்கள் அவர்களை லயன் குடியிருப்புகளிலிருந்து அகற்றும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளமையை சமீபகால சம்பவங்களின் மூலம் அறிய முடிகின்றது. அத்துடன் தோட்ட மக்கள் பயன்படுத்தும் காணிகள் மீது தோட்ட நிர்வாகங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்பன அவர்களின் காணி மற்றும் வீட்டுரிமையை தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்துகின்றது.
இரத்தினபுரி, எஹலியகொடை, புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான சன்டர்லேன்ட் தோட்டத்தில் லயன் குடியிருப்புகளில் வசிக்கும் இரு குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்திருந்தார்.
பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளில் வசிக்கும் தோட்ட மக்கள் சந்திக்கும் முதலாவது பிரச்சினையாக இது இருக்கவில்லை. இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் லயன் குடியிருப்புகளில் வசித்த மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சிகளை பல தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன. லயன் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தோட்ட நிர்வாகங்கள் சட்டரீதியான உரித்து கொண்டுள்ளதாக வாதிடப்படும் நிலையிலும் அங்கு பல வருடங்களாக வசித்த குடும்பங்களுக்கு எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும்.
அண்மைக்காலத்தில் பெல்மரோல் தோட்டம் - அக்கரபத்தனை, பனியன் தோட்டம் - மஸ்கெலியா, கிளன்டில்ட் - மஸ்கெலியா, ஆர்.பி.பிரிவு - இறம்பொடை, ஹரேபார்க் அரச பெருந்தோட்டம் - ஹுன்னஸ்கிரிய ஆகிய தோட்டங்களில் தோட்ட குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பெருந்தோட்ட குடியிருப்புகளில் பெரும்பாலானாவை பரம்பரையாக மக்கள் வாழும் பகுதிகளாக இருக்கின்றன. அவர்கள் குறித்த தோட்டம் உருவாக்கப்பட்டது முதல் தற்போது வரை வாழ்ந்தும் வருகின்றனர். தோட்டங்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் மூலம் குடியிருப்புகளும் தோட்ட நிர்வாககங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனால் தோட்ட குடியிருப்புகளில் தோட்ட நிர்வாகங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. இதில் தோட்டத் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் பங்கும் அதிகமாகும்.
தோட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றும் செயற்பாடு பெருந்தோட்ட அமைச்சின் உத்தரவின் அடிப்படையிலேயே இடம்பெறுவது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தோட்ட முகாமையாளர் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பெருந்தோட்ட அமைச்சு இந்நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இதனால் அரசாங்கத்தின் தலையீட்டுடனேயே தோட்ட மக்கள் தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படுகின்றனர். ஆனால் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை என்பதில் தோட்ட நிர்வாகங்கள் உறுதியாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கிளன்டில்ட் தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விடுத்துள்ள அறிவிப்பில், “மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான கிளன்டில்ட் தோட்டத்துக்குட்பட்ட ஐந்து பிரிவுகளிலும் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கப்படுவது யாதெனில், கிளன்டில்ட் தோட்ட கட்டுப்பாட்டில் நீங்கள் குடியிருக்கும் வீடுகள், மரக்கறி தோட்டங்கள் உட்பட நிலங்கள் போன்றவற்றை எந்த காரணத்தையும் கொண்டு விற்பனை செய்வது அல்லது அதனை வாங்க முயற்சி செய்வது அல்லது அதற்கு துணை போவது இலங்கை நாட்டு சட்டப்படி குற்றமாகும். காரணம் மேற்படி நிலம் மற்றும் வீடுகள் அனைத்தும் அரச சொத்துக்களாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தால் தீர்க்கமான முடிவு எட்டப்படாமை திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீடுகளை அமைக்கும் செயற்பாடுகளுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதிலும் அரசாங்கம் பின்னடிப்புச் செய்யும் நடவடிக்கையின் பின்னால் பெருந்தோட்ட மக்கள் காணி உரிமையை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற நோக்கம் காணப்படுவதாகவே தெரிகிறது.
தோட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எத்தனை வருடங்கள் தோட்டங்களில் தொழிலாளர்களாக கடமையாற்றினாலும் தொடரச்சியாக வேலைக்கு செல்லாத நிலை ஏற்பட்டாலும் அல்லது வீடுகள் மூடப்பட்டு காணப்பட்டாலும் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறெனின் தோட்டத்தொழிலிலிருந்து ஓய்வு பெறும் ஒரு தொழிலாளி எதிர்காலத்தில் அத்தோட்டத்திலேயே வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது அவர்களின் ஊழைப்பை மாத்திரம் சுரண்டும் செயற்பாடாகும்.
இதற்கு நிரந்தர தீர்வினை எந்த அரசாங்கமும் இதுவரை முன்வைக்கவில்லை. மேலும் தோட்ட மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து அகற்றுவது மாத்திரமல்லாது, தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தோட்ட காணிகளை பயன்படுத்துவதற்கும் பல்வேறு தடைகளை பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது அதே தோட்டத்தில் பிரதி முகாமையாளர் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தாக்குதல் நடத்தியுள்ளார். காணி பிரச்சனையால் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தற்போது கொலன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரத்தினபுரி ஹெயஸ் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ராஜலிங்கம் என்ற ஓய்வு பெற்ற தொழிலளாரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எல்கடுவ பிளான்டேசனுக்கு சொந்தமான மாத்தளை இறத்தொட்டை பகுதியிலுள்ள ரத்வத்தை தோட்டத்தில் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட, ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் குறித்த குடும்பத்தினர் கேட்டுவந்துள்ளனர். இதற்கமைய முன்னாள் முகாமையாளரொருவரால் ஒரு இடத்தைக் காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாமையாளரின் அனுமதிக்கமைய அந்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன்பு அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு (19.08.2023) தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.
இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு 2023 செப்டெம்பர் மாதம் தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இதன் போது குறிப்பிட்டிருந்தனர். தாங்கள் பரம்பரையாக வீட்டுத்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்பே இவ்வாறு அகற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை தொடர்பான வலுவான தேவையை வெளிப்படுத்துகின்றன. தங்களுடைய சிறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையில்லாத நிலைமை பெருந்தோட்டங்களில் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், “மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பில் தீர்வுகளை முன்வைப்பதற்கு எதிர்காலத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு முன்பாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் குடியிருப்பு, விவசாயம், சிறு கைத்தொழில் முயற்சி தேவைகளுக்காக மிகவும் குறைந்தளவான காணிகளை பயன்படுத்தி குடியேற முயற்சிக்கும்போது, அவர்களை வெளியேற்றுவதற்காக பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரம் பெற்ற அலுவலர் அரச காணிகளை மீளப் பெறும் சட்டத்தின் படி வெளியேற்றல் வழக்குகளை தொடுக்கும் நிலை காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு நான் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி அவ்வாறான வழக்கிடலுக்காக 2910 வழக்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இன்று இந்த கோப்புகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்திருக்கும். கடந்த காலத்தில் குடியேற்ற நோக்கத்திற்காக சிறு துண்டு தோட்டக் காணிகளில் குடியேறிய பலர் வெளியேற்றல் வழக்கு தொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் மலையக மக்கள் விசேடமாக இலக்கு வைக்கப்படும் நிலையும் காணப்படுகின்றமையும் கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு அம்சம். இப்பிரச்சினை பெருந்தோட்ட மக்களுக்கான அரசு காணி வழங்கப்படாமை மற்றும் தனியார் காணியை வாங்குவதற்கான பொருளாதார இயலுமையின்மை என்பவற்றோடு தொடர்புடையதாகும்.” எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதுவொரு வரலாற்று ரீதியான பிரச்சினையாகும். குடியிருப்பு, விவசாயம், சிறு கைத்தொழில் முயற்சி தேவைகளுக்காக பெருந்தோட்டக் காணிகளை பயன்படுத்துபவர்கள் வெளியேற்றாமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை பெருந்தோட்ட அமைச்சு எடுக்க வேண்டும். 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் அத்துமீறி கைப்பற்றப்பட்ட பெருந்தோட்ட காணிகளில் இருந்து மக்களை வெளியேற்றாமல் இருப்பதற்கான ஏற்பாடு காணப்பட்டது. இதனூடாக சகோதர சிங்கள மக்கள் நன்மை அடைந்தனர். மலையக மக்களின் காணி - வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு முன்னர் இவ்வாறான நடைமுறைமையை பின்பற்றி அவர்களை அங்கிருந்து வெளியேற்றாமல் இருப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இனிவரும் காலத்தில் சட்டவிரோதமாக காணிகளை பெறலாம் என்பது அர்த்தமல்ல. ஒரு தற்காலிக ஏற்பாடாக ஒரு குறித்த திகதியை நிர்ணயித்து அதற்கு முன்னர் மாத்திரம் அத்துமீறி பெற்ற காணிகளை கைப்பற்றியவர்களை வெளியேற்ற நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை பெருந்தோட்ட அமைச்சு முன்வைப்பது அவசியம். இவ்வாறான தீர்மானங்களை முன்னெடுப்பது மலையக மக்களுக்கு காணி - வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைசார் நிலைப்பாடுகளின் நேர்மையையும் மக்கள் சார் தன்மைக்கான ஒரு முன்னோட்டமாக நோக்கப்படலாம்.” எனவும் தெரிவித்தார்.
இதேபோலவே கடந்த வருடம் தனிநபரொருவருக்குச் சொந்தமான இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் உரிமையாளர் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொழிலாளர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்தது. இதன்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்களை தோட்டக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டன. இதற்கெதிராக தொழிலாளர்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் எந்த அரசியல்வாதிகளும் பிரச்சினையில் தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் அவ்வாறான அறிவிப்புகள் எவையும் வெளியிடப்படவில்லையென தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
இவ்வாறு தோட்டத் தொழிலாளர்களை சுற்றியும் அவர்களது குடியிருப்புகளை சுற்றியும் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான சட்டரீதியான நிவாரணங்கள் காணப்படாமையும் அவர்களின் காணியுரிமை உறுதிப்படுத்தாமையுமே இதற்கு பிரதான காரணமாகும். எனவே அவர்களுக்கான காணியுரிமை உறுதிப்படுத்தும் போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வினை நோக்கி எம்மால் நகர முடியும். அத்துடன் தோட்ட குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்றும் மற்றும் வழக்கு தொடுக்கும் நடவடிக்கைகளை பெருந்தோட்ட அமைச்சே மேற்கொள்வதால் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்களுக்கு அமைவாக அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எனவே அரசாங்கம் இவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக