கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2025

தனி வீட்டுத் திட்டத்தை நீக்கி மக்களை வெளியேற்றும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா?

சர்ச்சைகளுக்கு மத்தியில் பேஸ்புக் பதிவை மாற்றியமைத்த பெருந்தோட்ட அமைச்சர்

மலையக பெருந்தோட்ட மக்களை லயன் வீடுகளில் இருந்து அகற்றி அவர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி தனி வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனையே மலையக பெருந்தோட்ட மக்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். தற்போது மலையக பெருந்தோட்ட மக்கள் லயன் அறை மற்றும் காணி தொடர்பாக சந்திக்கும் பிரச்சினைகள் அவர்களுக்கான காணி உரிமையின்மையின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் தற்போது பெருந்தோட்ட அமைச்சராக பதவி வகிக்கும் சமந்த வித்தியாரத்ன, மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை இல்லாமலாக்கி கைவிடப்பட்டுள்ள மாடி வீட்டுத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக அறிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே, மலையக மக்களுக்கான மாடி வீட்டுத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவின் பேஸ்புக் பதிவில், “விரைவில் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை தோட்டங்களுக்கு அருகில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவை எதிர்க்கும் தோட்ட நிலங்களை அடையாளம் கண்டு, அந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவை எதிர்க்கும் தோட்ட நிலங்களை அடையாளம் கண்டு, அந்த நிலங்களில் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது. விவசாயம் மற்றும் வீடு கட்டுவதற்கு மிகக் குறைந்த நிலம் மட்டுமே உள்ளது, எனவே அடுக்குமாடி வீடுகள் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. பாலர் பாடசாலைகள் முதல் சிறு குழந்தைகளுக்கான கற்றல் மையங்கள், கூட்டுறவு மற்றும் மதஸ்தலங்கள் என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட இந்த அடுக்கு மாடி வீட்டுத் திட்டம், தோட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்ட திட்டமிடப்படும்” என பதிவிடப்பட்டிருந்தது.


எனினும் இக்கருத்துக்கு பலராலும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்த பேஸ்புக் பதிவு “வீட்டுத்திட்டம்” என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியின் கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் 150,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான தேவை காணப்படுகிறது. எனினும் 7 பேர்ச்சஸ் வீதம் காணி ஒதுக்கி தனி வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு பெருந்தோட்டப் பகுதிகளில் பெருமளவில் நிலத்தை ஒதுக்க வேண்டும். இது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அடுக்குமாடி குடியிருப்பை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.” என தெரிவித்திருந்தார்.


பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்கு மாடி குடியிருப்பே பொருத்தமானதென பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் தொடர்ந்து கூறிவரும் கருத்துக்கள், முதலாளிமார் சம்மேளனத்தின் நிகழ்ச்சி நிரலை பின்பற்றி கூறப்படுகின்றதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

எனினும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 11.12.2024 ஆம் திகதி இடம்பெற்ற காணி உரித்து வழங்கும் நிகழ்வில், “அமைச்சின் செயலாளர் குறிப்பிட்ட கருத்தை பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மறுத்திருந்ததுடன், மாடி குடியிருப்பை அமைப்பதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தினதும் அமைச்சினதும் தீர்மானங்கள் தொடர்பில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களால் மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியிருந்தது. அமைச்சின் செயலாளரின் கருத்துக்கள் திட்டமிட்ட சேறுபூசும் விடயம் என தெரிவித்த பிரதி அமைச்சர், தற்போது அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எவ்வாறு பதில் வழங்குவார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து வெளியிடுகையில், “அரசாங்கம் மாடி வீடுகளை அமைப்பதற்கு எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மலையகப் பகுதிகளில் அமைக்கப்படும் சகல வீடுகளும் தனி வீடுகளாகவே அமையும். எனினும் நகர்புறங்களுக்கு அருகில் வசிக்கும் மலையக மக்களுக்கு வீடுகளை அமைக்கும் போது அவர்களுக்கான காணிகளை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் எழலாம். அவர்களை நகர்புற பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் அனுமதியுடன் மாடி வீட்டுத்திட்டத்துக்கு செல்லும் நிலைப்பாடு இருப்பதாகவும் மக்கள் விரும்பாத பட்சத்தில் வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்படும்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.


பிரதி அமைச்சரின் கூற்றின் அடிப்படையில், தனி வீட்டுத்திட்டம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வெளிப்படுத்தப்பட்டதுடன், இவை தொடர்பாக சிலர் தவறாக வழிநடத்தும் கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அறியமுடிந்தது.

இவ்விடயம் தொடர்பில் மலையக மக்களுக்கான காணி உரிமை இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவிக்கையில், “தோட்ட மக்களில் 78 வீதத்துக்கும் அதிகமானோர் லயன் அறைகளில் வாழ்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் 37 ஆயிரம் வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை அவர்களுக்கு சொந்தமாக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு 1.26 பேர்ச் நிலப்பரப்பில் மாடி வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக்குறுகிய இடப்பரப்பில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி உருவாக்கப்பட்ட இவ்வீட்டுத்திட்டத்துக்கு அப்போது தொடர்ச்சியாக வெளிப்பட்ட எதிர்ப்பினால் அவை கைவிடப்பட்டது. அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் தனி வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த வசதியுடன் தரமற்ற வகையில் கட்டப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. அதன் பின்னரான அரசாங்கங்கள் தனி வீட்டுத்திட்டத்தில் போதியளவு கவனம் செலுத்தவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு வருட ஆட்சியில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டாலும் அவை பயன்படுத்தப்படவில்லை” என தெரிவித்தார்.

மேலும் “அரசாங்கத்தின் ஹட்டன் பிரகடனம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென குறிப்பிடப்பட்டாலும் எவ்வாறு தீர்க்கப்படுமென்பது தெளிவாக கூறப்படவில்லை. தற்போது மாடி வீட்டுத்திட்டத்துக்கான முனைப்புகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இது மலையக மக்களுக்கு பொருத்தமானதா என்பதை அவர்கள் ஆய்வு செய்யவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தோட்ட கம்பனிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் என்பது இன்னும் இரகசியமாகவே இருக்கிறது. நகர்புறங்களையொட்டி மாடி வீடுகளை அமைக்கும் இவர்களின் திட்டம் மலையக மக்களை இன்னும் பின்தள்ளும் நிலையே இருக்கின்றது. அரசாங்கத்திடம் மலையக மக்களின் வீட்டுத்திட்டம் மற்றும் காணியுரிமை தொடர்பில் சரியான கொள்கை இல்லையென்பதையே இது வெளிப்படுத்துகின்றது” எனவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையின் கீழ் அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு இதுவரை நேரடியாக மறுப்பு வெளியிடவில்லை. பிரதி அமைச்சர் மாத்திரமே இவ்வாறான விடயங்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கி வருகின்றார். எனவே பேஸ்புக் பதிவை வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் தங்களது தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

காணியுரிமை மறுப்பின் விளைவாகவே அரசாங்கமும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் மாடி வீட்டுத் திட்டத்தை பரிந்துரைக்கின்றன. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தில் பல பிரதேசங்களில் மாடி லயன் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதற்கு கிளம்பிய எதிர்ப்பினால் அவை கைவிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் வருடாந்த அறிக்கையின் அடிப்படையில், 1270 மாடி லயன் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாடி வீட்டுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், “மீண்டும் மலையகத்துக்கான மாடிவீட்டுத் திட்டம் பற்றிய பேச்சு பெருந்தோட்ட மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியரத்னவின் அண்மைய கருத்துக்களோடு முன்னிலைப் பெற்றுள்ளது. ஏற்கனவே, குறித்த அமைச்சின் செயலாளர் இவ்வாறான கருத்தை முன்வைத்து அது ஊடகங்களில் அவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட நிலையில் அது பொய்யாக பரப்பப்பட்ட செய்தியாக குறித்த அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டிருந்தார். இந்த பின்னணியிலேயே அமைச்சரினால் மாடி வீடு திட்டம் பற்றி பேசப்பட்டுள்ளது. இந்த மாடி வீடு திட்டம் தொடர்பில் மலையக மக்களிடம், சிவில் அமைப்புகளிடம், அக்கறையுடையவர்களிடம் கருத்துக்கள் எடுக்கப்பட்டதா என்பது நாம் கேற்க வேண்டிய ஒரு பிரதானமான கேள்வியாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

மேலும், “மாடி வீடுத்திட்டம் நகரங்களுக்கு அண்மையில் உள்ள தோட்டங்களுக்கு மாத்திரம் கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் நகரங்களுக்கு அண்மையில் உள்ள  தோட்டங்களுக்கும் மாடி வீடுகளை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் மாடி வீட்டுத்திட்டங்களில் உள்ள வேறு பிரச்சினைகளுக்கு அப்பால் அதில் உள்ள முக்கிய பிரச்சினை. அது அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களை இந்த மண்ணில் இருந்து பிரிப்பதற்கான இன்னொரு முயற்சியாகும். அதாவது கிராமங்களில் உள்ள மக்களுக்கு உள்ளது போன்று தனிக் காணித்துண்டிற்கான உரிமையைப் பெற்று நிலத்தோடு அவர்கள் கொண்டிக்க வேண்டிய உரித்தை மறுக்கும் செயலாகும்” என தெரிவித்தார்.

மேலும், “நகரங்களுக்கு அண்மையில் உள்ள காணிகள் பல கிராம விஸ்தரிப்புக்காக வழங்கப்பட்டு பல ஏக்கர் தோட்டக் காணிகள் சகோதர சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக இரத்தினபுரி நகரத்துக்கு அண்மையில் உள்ள “செனவி புர” என்ற குடியிருப்பு பிரதேசம் பால்ம்கார்டன் என்ற தோட்டத்துக்கு சொந்தமான காணியில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு பிரதேசமாகும். முன்னால் அமைச்சர் செனவிரத்னவின் தலையீட்டில் உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு தோட்டக் காணிகள் சகோதர மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது நகரங்களில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 20 பேரச்சுக்கும் அதிகமான காணிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் மாடி திட்டங்கள் ஒரு பேசுபொருளாக இருப்பதே இல்லை. அப்படி இருக்கையில் மலையகத் தமிழர்களுக்கு வீட்டுரிமை என்று வந்தவுடன் இந்த மாடி வீட்டுத்திட்டங்கள் பற்றி பேசப்படுவது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்” எனவும் குறிப்பிட்டார்.

“காணி இல்லை என்பதோ, சூழல் பிரச்சினையோ அல்லது பெருந்தோட்டத்தை பாதுகாப்பதோ உண்மையான பிரச்சினை அல்ல. மலையகத் தமிழர்களுக்கு காணி வழங்குவதற்கு பல தடைகள் இருக்கிறது என்பதே உண்மையான பிரச்சினை. இது வரலாற்று ரீதியாக நடந்து வரும் விடயம். இந்த தடைகளை நீக்கி மாடி வீட்டு திட்டங்களை ஒதுக்கி அவர்களுக்கு காணி வழங்க அரசியல் விருப்பம் இருக்க வேண்டும். இதுவரை இருந்த ஆட்சியாளர்களுக்கு அது இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அந்த விருப்பு இருப்பதாக அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் நம்புகிறார்கள்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  


எனவே அரசாங்கம் மலையக மக்களுக்கு மாடி வீட்டுத்திட்டம் வழங்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அவர்களை காணி உரித்துடன் கூடிய தனி வீடுகளுக்கு சொந்தக்கார்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மலையக மக்கள் என்பதற்காக அவர்கள் மீது பாரபட்சம் காட்டுவது, இலங்கையர் என்ற பதத்தை மீறுவதாக அமையும். முதலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது கொள்கை தொடர்பில் அறிவிக்க வேண்டும். அனுபவமற்ற அமைச்சரின் பேச்சு பெருந்தோட்ட கம்பனிகளை திருப்திப்படுத்தும். மாறாக வாக்களித்த மக்களை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக