கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 ஜனவரி, 2025

35 ஆண்டுகளுக்குப் பின்னர் வலுவிழந்த பிராந்திய கட்சிகள்

10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் களமிறங்கியிருந்தனர். நுவரெலியா மாவட்டத்திலிருந்து எட்டு பாராளுமன்ற ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் சார்பாக 187 வேட்பாளர்களும் சுயேச்சை குழுக்கள் சார்பாக 121 வேட்பாளர்களும் களமிறங்கியிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் உள்ள 605,292 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 429,851 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். 175,441 வாக்குகள் அளிக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்திக்கு ஐந்து ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்தி இரு ஆசனங்களும் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றன.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 17 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் மூன்று கட்சிகள் மாத்திரமே ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தன. இவற்றில் 94.51 வீத வாக்குகளை கட்சிகளும் 5.49 வீத வாக்குகளை சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக்கொண்டன.

1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் முதன்முறையாக 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.கட்சிகளின் வெற்றியும் தோல்வியும்

ஐக்கிய மக்கள் கூட்டணியை முன்னிலைப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன் மற்றும் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் மயில்வாகனம் உதயகுமார் தோல்வியடைந்து இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியை முன்னிலைப்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஜீவன் தொண்டமான், ராமேஸ்வரன் மற்றும் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிட்டனர். ராமேஸ்வரன் மற்றும் பழனி சக்திவேல் தோல்வியடைந்த நிலையில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக் கொண்டது. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இம்முறை முதற் தடவையாக நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஐவரும் பாராளுமன்றத்துக்கு முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மஞ்சுள சுரவீர ஆராச்சி, மதுர செனவிரத்ன, ஆர்.ஜி.விஜேரத்ன, அனுஷ்கா திலகரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் உள்ளடங்குவர்.

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையிலான மலையக அரசியல் அரங்கம்  (தமிழர் விடுதலை கூட்டணி) உள்ளிட்ட 17 அரசியல் கட்சிகளும் மலையக ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 11 சுயேச்சைக் குழுக்களும் குறைந்தளவிலான வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டன.

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியை சந்தித்ததுடன் இரு பெண்கள் முதன் முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் தமிழராவார்.

குறைந்தளவான வாக்களிப்பு வீதம்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 605,292 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அதிகமாக நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும் கொத்மலை தேர்தல் தொகுதியில் 88,219 வாக்காளர்களும் ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்தவர்களில் 58,727 வாக்காளர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. மொத்தமாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 175,441 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இந்த வாக்காளர்களே பல வேட்பாளர்களின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துள்ளார்கள் என்பது முக்கியமான விடயமாகும்.

35 ஆண்டில் முதல் வெற்றி

விகிதாசார தேர்தல் முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் எவ்வித வெற்றியையும் பெற்றதில்லை. ஆனால் அக்கட்சியின் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்ற வரலாறுகள் காணப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த இடைவெளி நிரப்பப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்து நேரடியாக ஒரு தேசியக் கட்சி தங்களது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளமை முக்கிய விடயமாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன அதிக வாக்கு வங்கியை கொண்டிருந்தன. எனினும் கட்சி மற்றும் கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தி அவர்களின் வாக்கு வங்கியை சடுதியாக குறைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜீவன் தொண்டமான், இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதற்கேனும் கடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டது.

விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகபட்சமாக ஐக்கிய தேசியக்கட்சி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன தலா ஒரு முறை என பிராந்திய கட்சிகளின் அனுசரணையுடன் வெற்றி பெற்றுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நேரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பதாக நுவரெலியா மாவட்டத்தில் நான்கு முறை ஜே.வி.பி. மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட போதும் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் கடந்த காலங்களில் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கியிருந்தது.

மக்கள் விரும்பிய மாற்றம்

நாட்டில் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் போராட்டம் முதலே இந்த மாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. அதனை முதலாவதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெளிப்படுத்தியிருந்தது. பொருளாதார நெருக்கடி, ஊழலற்ற அரசாங்கம் என்பவற்றை மக்கள் விரும்பியதன் காரணமாக வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதேபோலவே நுவரெலியா மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்திய பிராந்திய கட்சிகளும் தற்போது செல்வாக்கை இழந்துள்ளன. மக்களை ஏமாற்றி தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைக்க முடியுமெனவும் பரம்பரை அரசியலை தொடர முடியுமெனவும் கனவு கண்டவர்கள் தங்களுடைய ஆசனத்தை தக்கவைப்பதற்கே போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் அவ்வாறே இருந்தாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஊழல் மோசடிகள் மூலம் தங்களின் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள். மலையகத்தில் இதற்கு முன் இருந்த அடாவடி அரசியல் தற்போது செல்லாது என்பதற்கு மக்களின் தெரிவு சாட்சியாக அமைந்து விட்டது.

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பன கட்சி ரீதியாக வழங்கப்பட்டதும் மக்களின் மிக நீண்டகால கோரிக்கையாகவிருக்கும் காணியுரிமை, தனி பல்கலைக்கழகம் மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களை ஏமாற்றியமை போன்ற பல்வேறு விடயங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இதற்கு முன் செல்வாக்கு செலுத்திய தேசியக் கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் மீது மக்களின் நிராகரிப்பை ஊக்குவித்தது.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் ஐவர் தேசிய மக்கள் சக்தியில் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களில் எத்தனைபேர் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து செயற்படக்கூடியவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் இம்முறை அமைச்சுப் பதவி கிடைக்கப் பெறவில்லை. இதனால் அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடுகளில் முன்பை போலவே பாரபட்சமான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் என்ன சாதித்தார்கள் என்ற கேள்வியும் எழலாம். எல்லாவற்றுக்கும் எதிர்வரும் காலங்களில் பதில் தேடலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக