கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

31 ஜனவரி, 2024

மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள்



👉 மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 1859 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

👉 கண்டி மாவட்டத்தில் 860 ஆசிரியர் வெற்றிடங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 859 ஆசிரியர் வெற்றிடங்களும் மாத்தளை மாவட்டத்தில் 140 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன.


மலையக இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்பென்றால் அது ஆசிரியர் தொழில் மாத்திரமே என்ற அடிப்படையில் பெரும்பாலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் வேறு அரச தொழில்கள் பெற்றுக் கொடுப்பது குறைவாகவே உள்ளது. ஆனாலும் இன்னும் பெரும்பாலான பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகளை தீர்க்க முடியவில்லை. பெரும்பாலான பாடசாலைகள் அதிபர்கள் இன்றி பதில் அதிபர்களின் நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகின்றன. மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 10,059 ஆசிரியர்கள் தற்போது கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் 429 அதிபர்களும் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 1859 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 293 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 860 ஆசிரியர் வெற்றிடங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 859 ஆசிரியர் வெற்றிடங்களும் மாத்தளை மாவட்டத்தில் 140 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன. பின்வருமாறு கல்வி வலயங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

🛑 கண்டி கல்வி வலயம்

கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட கங்கவட்டை மற்றும் பாத்தஹேவாஹட்ட கோட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 145 ஆசிரியர் வெற்றிடங்களும் 18 அதிபர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன. குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேறு வலயங்களில் இருந்து இடம்பெற்று வரும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 556 ஆசிரியர்களும் 38 அதிபர்களும் கடமையாற்றி வருகின்றனர்.

🛑 கட்டுகஸ்தோட்டை கல்வி வலயம்

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் 99 ஆசிரியர் மற்றும் 20 அதிபர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பேர்து அங்கு 533 ஆசிரியர்களும் 21 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 தெல்தெனிய கல்வி வலயம்

தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட மெததும்பர, உடதும்பர கோட்டங்களில் 84 ஆசிரியர்கள் மற்றும் 5 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறித்த வெற்றிடங்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 208 ஆசிரியர்களும் 9 அதிபர்களும் பணியாற்றுகின்றனர்.

🛑 தெநுவர கல்வி வலயம்

தெநுவர கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 97 ஆசிரியர் மற்றும் 12 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வெற்றிடத்தை மேலதிக ஆசிரியர்களால் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இங்கு 85 ஆசிரியர் மற்றும் 13 அதிபர் பணிகளுக்கான வெற்றிடம் காணப்பட்டது. தற்போது அங்கு 440 ஆசிரியர்களும் 7 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.




🛑 வத்தேகம கல்வி வலயம்

வத்தேகம கல்வி வலயத்தில் 40 ஆசிரியர் மற்றும் 16 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 2022 இல் 184 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்டன. ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 520 ஆசிரியர்களும் 12 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 கம்பளை கல்வி வலயம்

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட உடபளாத்த, பஸ்பாகே, கங்க இஹல கோட்டங்களில் 395 ஆசிரியர் வெற்றிடங்களும் 26 அதிபர் வெற்றிடங்களும் காணப்படுகின்றன. அதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களது அனுமதியுடன் பாடசாலைக்கு ஆசிரியர்களை விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 942 ஆசிரியர்களும் 48 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 கொத்மலை கல்வி வலயம்

கொத்மலை கல்வி வலயத்தில் 187 ஆசிரியர் மற்றும் 24 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிரப்ப உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 515 ஆசிரியர்களும் 27 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 நுவரெலியா கல்வி வலயம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1, கோட்டம் 2, கோட்டம் 3 ஆகியவற்றில் 332 ஆசிரியர்கள் மற்றும் 90 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கு வலயத்துக்குள் இருக்கும் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2022 இல் 435 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்டன. தற்போது அங்கு 2206 ஆசிரியர்களும் 89 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.




🛑 வலப்பனை கல்வி வலயம்

வலப்பனை கல்வி வலயத்தில் 64 ஆசிரியர்கள் மற்றும் 21 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆசிரிய வெற்றிடங்களை நியமிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அங்கு 455 ஆசிரியர்களும் 8 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 ஹங்குராங்கெத்த கல்வி வலயம்

ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் 67 ஆசிரியர் மற்றும் 10 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 170 ஆசிரியர்களும் 12 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 ஹட்டன் கல்வி வலயம்

ஹட்டன் கல்வி வலயத்தில் 209 ஆசிரியர்கள் மற்றும் 20 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. வருடாந்த வெற்றிடங்கள் தொடர்பாக கலந்தாலோசித்து திட்டமிடல் பிரிவினூடாக வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு மாகாண பணிப்பாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2017 அதிபர் மற்றும் ஆசிரியர் உள்ளடங்களாக 940 வெற்றிடங்களும் 2018 இல் 768 வெற்றிடங்களும் 2019 ஆம் ஆண்டு 632 வெற்றிடங்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கு 2198 ஆசிரியர்களும் 93 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 மாத்தளை கல்வி வலயம்

மாத்தளை கல்வி வலயத்துக்குட்பட்ட மாத்தளை, இரத்தோட்டை, உக்குவளை, யட்டவத்தை கோட்டங்களில் 34 ஆசிரியர் மற்றும் 20 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2015 இல் 48 வெற்றிடங்களும் 2016 இல் 43, 2017 இல் 43, 2018 இல் 39, 2019 இல் 36, 2020 இல் 44 வெற்றிடங்களும் காணப்பட்டன. இது தொடர்பாக மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 978 ஆசிரியர்களும் 54 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.

🛑 நாவுல கல்வி வலயம்

நாவுல கல்வி வலயத்தில் 30 ஆசிரியர் மற்றும் 5 அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் வேறு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2015 இல் 71 வெற்றிடங்களும் 2016 இல் 66, 2017 இல் 58, 2018 இல் 32, 2019 இல் 44, 2020 இல் 48 வெற்றிடங்களும் காணப்பட்டன. தற்போது அங்கு 115 ஆசிரியர்களும் 8 அதிபர்களும் கடமையாற்றுகின்றனர்.




🛑 கலேவெல கல்வி வலயம்

கலேவெல கல்வி வலயத்துக்குட்பட்ட கலேவெல, தம்புள்ளை, பள்ளேபொல ஆகிய கோட்டங்களில் 76 ஆசிரியர்கள் மற்றும் ஆறு அதிபர் பணிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. இங்கு 2015 இல் 48 ஆசிரியர் வெற்றிடங்களும் 2016 இல் 57, 2018 இல் 63, 2018 இல் 50, 2019 இல் 25 மற்றும் 2020 இல் 20 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்பட்டன. வெற்றிடத்தை பூர்த்தி செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது 223 ஆசிரியர் மற்றும் மூன்று அதிபர் இங்கு கடமையாற்றுகின்றனர்.

மத்திய மாகாணத்திலுள்ள 2020.11.14 ஆம் திகதி வலயக்கல்வி காரியாலயங்களுக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கான பதில்கள் இரண்டு வருடங்களின் பின்னரே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்பட்டது. எனினும் பெரும்பாலான வலய கல்வி காரியாலயங்கள் அவற்றுக்கு உரிய தகவல்களை வழங்கியிருக்கவில்லை. வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெரும்பாலான பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே இயங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாகாண கல்வி அமைச்சில் செயற்பட்டவர்கள் மற்றும் தற்போது கல்வி அமைச்சில் செயற்படுபவர்கள் இதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும். தற்போதும் இந்த வெற்றிடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்த பின்னரே மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பான தீர்மானத்துக்கு வர முடியும்.

கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆசிரியர்களை நியமிக்காமல் மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் அதிக முன்னேற்றமடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்துவதற்கும், தேர்வு செய்வதற்கும், சித்தியடைவதற்கும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். பாடசாலை கல்வியை இடைநிறுத்தி வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் மலையக கல்வியில் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக