2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் மலையக கல்வி வீழ்ச்சிக்கு காரணமானதா?
வெளி மாவட்டங்களை சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என்ற தீர்மானத்தால் மலையக கல்வியை அழித்தவர்கள் யார்?
கலைதுறையை தவிர விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்ப துறைகளை அதிகம் மாணவர்கள் தேர்வு செய்யாமைக்கான காரணம் என்ன?
2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக மலையகத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசியல் தலைமைகளிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. பாராளுமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற கல்வி அமைச்சு மீதான விவாதத்தின் போது இந்த சர்ச்சைகள் எழுந்தன. குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ள போது தற்போது இந்த விவாதம் மேலெழுந்தமைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
சமீப காலங்களில் மத்திய, ஊவா, சப்ரகமுவ உள்ளிட்ட ஏனைய மாகாணங்களிலும் வசிக்கும் மலையக மாணவர்களிலிருந்து உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் பல்கலைக்கழகங்களுக்கு கணித, விஞ்ஞான பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்திய துறைகளுக்கும் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது உரையில், மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமை தொடர்பில் கவலை வெளியிட்டார். மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முன்னர், பல்கலைக்கழகம் செல்வதற்கான பாதை அமைக்கப்பட வேண்டும். மலையக பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அதிகளவான மலையக மாணவர்கள் கல்வி கற்றாலும் அவர்கள் பெரும்பாலும் கலைப்பிரிவிலேயே கல்வி கற்கின்றனர். பின்னர் எவ்வாறு வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாக முடியுமெனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கூறுகையில், நீங்கள் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை என்று கூறினீர்கள். ஒரு கவலைக்குரிய விடயத்தை நான் சுட்டிக்காட்ட வேண்டும். 2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது வெளி மாவட்டங்களை சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என்பதே அந்த தீர்மானம். அது பதுளையாக இருக்கலாம், சப்ரகமுவவாக இருக்கலாம். இங்கெல்லாம் இருந்து 9 ஏ சித்திகளை எடுத்த மாணவர்களைக்கூட நுவரலியா மாவட்டத்திலுள்ள நல்ல கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க கூடிய அந்த பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாத ஒரு தன்மை அந்த தீர்மானத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இதிலும் கூட ஒரு கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், அப்போது அந்தக்கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரான எமது சமூகத்தை சார்ந்த இராதாகிரு~;னணனும் கூட இணைந்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர். இந்த முடிவுக்கு நான் இணங்க மாட்டேன் என அவர் அப்போது சொல்லியிருந்தால் கடந்த 7, 8 வருடங்களில் நூற்றுக்கணக்கான கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கியிருக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அந்த விவாதம் நீண்டு சென்றிருந்தது. 2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மலையக கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றதென்றால் எவ்வித அடிப்படையும் இன்றி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறெனின் மலையகத்தின் கல்வி வீழ்ச்சிக்கு இவர்கள் அனைவரும் காரணமானவர்களாகவே கருத வேண்டும். இதனை மலையக அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்களா?
மலையகத்திலுள்ள பெரும்பாலான பெருந்தோட்டப் பாடசாலைகளில் இன்றும் பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. பல பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியர் இல்லாத பாடங்களுக்கு வேறு பாடங்களை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகள் வழமையானதொன்றாகவே உள்ளது. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் இவற்றில் உள்ளடங்கும். குறித்த பாடங்களில் பெறுபேறுகளும் ஏனைய பாடங்களை விட குறைந்த மட்டத்தில் இருப்பதையும் அதிகம் காண முடிகின்றது. இவ்வாறான நிலையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாத்திரமல்லாது அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. தற்போது மாத்திரம் அவற்றை முன்னிலைப்படுத்துவது தவறானது. மலையகத்தில் சமீப காலங்களில் ஆசிரியர்களின் நியமனங்கள் எவ்வாறு அமைந்துள்ளன?, ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா?, பல்கலைக்கழக நுழைவு மட்டம் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதை இந்த தொடரிலும் இனிவரும் தொடர்களிலும் நாம் ஆராயலாம்.
பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள்
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் தேவைகளை நிறைவு செய்யும் போது பொருத்தமான தகுதியுடையவர்களை நியமனம் செய்வது சிக்கலான விடயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமனம் பெற்று செல்வதை விரும்பாமையும் குறுகிய காலத்துக்குள் இடமாற்றம் பெற்று செல்கின்றமையும் ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட பாடசாலைகளை ஒரு வழியாக பயன்படுத்துவதும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு செல்லவாக்கு செலுத்தும் காரணிகளாக இருக்கின்றன. (பெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு: ஒரு வரலாற்று நோக்கு - பொன்.இராமதாஸ்)
இவற்றில் கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம் கலைத்துறையினையும் அல்லது ஆரம்ப கல்வி பாடப்பிரிவுகளையும் தெரிவு செய்வதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு கணித, விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களை தெரிவு செய்வதற்கான தகைமைகளையும் விழிப்புணர்வுகளையும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் உருவாக்கவில்லை. அவ்வாறு உருவாக்குவதற்கு போதிய ஆசிரியர் வளங்கள் இன்மை முக்கிய காரணமாகும். இந்நிலைமை பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட மலையகப் பாடசாலைகளில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளாகும்.
எதிர்காலத்திலும் இந்நிலைமையை குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் அவை தொடர்ச்சியாக நீண்டு செல்வதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற (பண்டாரவலையில் ஆரம்பிக்கப்பட்டது) கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் தமிழ்மொழி பிரிவு உருவாக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டாலும் அங்கு பயிற்சி பெற்றவர்கள் பெரும்பாலும் ஆரம்பக்கல்வி பாடநெறியினையே தெரிவு செய்துள்ளனர். கல்வி அமைச்சில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு 112 பேர் இங்கு பயிற்சி பெற்று வெளியேறியுள்ள நிலையில் அவர்களில் அவர்களில் 60 பேர் ஆரம்ப கல்வியையும் ஏனையோர் விவசாயவியல், சித்திரம், நடனம், சமயம், உடற்கல்வி, விசேடக்கல்வி என்பவற்றையும் தெரிவு செய்துள்ளனர். (அட்டவணை 01)
மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர் சேவையில் முக்கியத்துவமளிக்கும் வகையில் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி 1992 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. 11 பாடப்பிரிவுகளை கொண்டு குறித்த கல்வியியற் கல்லூரிக்கான ஆட்சேர்புகள் இடம்பெற்று வருகின்றன. இங்கு நுவnலியா மாவட்டம் உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கு 1992 - 2015 வரையான காலப்பகுதியில் ஆசிரியர்களாக 3583 பேர் பயிற்றப்பட்டுள்ளனர். இவர்களில் ஆரம்பக்கல்விக்கு 2000 பேரும் விஞ்ஞான பாடநெறிக்கு 272 பேரும் கணித பாடநெறிக்கு 120 பேரும் கர்நாடக சங்கீதத்துக்கு 247 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு 24 வருடங்களில் 11 வீதமான கணித, விஞ்ஞான ஆசிரியர்களே வெளியேறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.
கல்வி அமைச்சு வழங்கும் அனுமதியின் அடிப்படையில் குறித்த காலப்பகுதியில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 960 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய நிலையில் 338 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை பெருந்தோட்டப் பாடசாலைகளின் கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் பறாக்குறைக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
தற்போது மாவட்டங்களில் காணப்படும் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு அமைவாகவே மாணவர் அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இறுதியாக உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையே தற்போதைய பதவி வெற்றிடங்கள் என்ற முடிவுக்கு வர முடியும். (அட்டவணை 02) இதற்கு மேலாக 2008 ஆம் ஆண்டு உயர்தர சித்தியை கவனத்தில் கொண்டு 3179 பேருக்கு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல கட்டங்களாக பெருந்தோட்ட தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 3021 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டு, தகைமையினை பூர்த்தி செய்த பின்னர் ஆசிரியர் தரங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய மாகாண தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 2017 ஆகஸ்ட் மாதமளவில் பட்டதார் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. தற்போது 2023 ஆம் ஆண்டளவில் உயர்தர பாடங்களுக்கான 3000 பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொடரும்…



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக