இலங்கையில் 200 வருடங்கள் உழைத்து நாட்டை வளப்படுத்திய மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் சமீபகாலங்களில் அதிக குரல்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் 200 வருடங்களாக நிரந்தர முகவரியில்லாது தவித்த அவர்களுக்கு நிரந்தர முகவரி வழங்கும் திட்டம் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின் பிரகாசமாகியுள்ளது.
மாவத்தகம மூவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த ஜீவரட்ணம் சுரேஸ்குமார் என்பவர் மலையக மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுகோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போது அரசாங்கம் வழங்கிய பதிலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் மலையக மக்களுக்கு 200 ஆவது வருடத்தில் ஒரு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கின்றது.
இலங்கையின் தேசிய இனக்குழுமத்தில் மலையக மக்களும் உள்ளடங்கும் நிலையிலும் அவர்களுக்கான சமவாய்ப்புகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது. அவர்களுக்கு இதுவரை நிரந்தர முகவரிகள் இல்லாத நிலைமை அவர்களுக்கான வாய்ப்புகள் பலவற்றை பறித்ததும் உண்மையாகும். அவர்கள் தங்கள் வசிக்கும் தோட்டங்களின் பெயர்களையே இன்னும் முகவரிகளாக கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தோட்டங்களில் உள்ள அனைவரும் ஒரே முகவரியினை கொண்டிருப்பதால் எதிர்நோக்கும் சிக்கல்கள், பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை.
மலையக மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும் நியாயமான வளங்களை பெற்றுக்கொள்வதற்கும் போராடிய போதும் தங்களுக்கான முகவரியை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் குறைந்தளவான முனைப்பினையே காட்டியுள்ளனர். பலருக்கு சொந்த முகவரிகளின் அத்தியாவசியமே தெரியாத நிலை இருந்தது. எனினும் அந்த நிலை தற்போது மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களுக்கான சொந்த முகவரியின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். அதன் விளைவாக மாவத்தகம மூவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த ஜீவரட்ணம் சுரேஸ்குமார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மலையக மக்களுக்கு தங்களின் உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளது.
நாட்டிலுள்ள 32 பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் 454 தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு 258,695 பெருந்தோட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் கேகாலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரந்து வசிக்கின்றனர். தோட்டங்களிலிருந்து நகர்புறங்களுக்கு வியாபாரம், கல்வி மற்றும் ஏனைய தேவைகள் கருதி இடம்பெயர்ந்த பலர் இன்று சொந்த நிலம் மற்றும் வீடுகளை பெற்று நிரந்தர முகவரிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இன்றும் தோட்டங்களில் குடியிருப்புக்களை கொண்டுள்ளவர்களுக்கு நிரந்தர முகவரிகள் வழங்கப்படவில்லை. அவர்கள் தோட்ட முகவரியினையே இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு அரசியல்வாதிகள் எவரும் முயற்சிக்காத நிலையில் ஜீவரட்ணம் சுரேஸ்குமாரின் செயற்பாடு போற்றுதலுக்குரியது.
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி கோரி உயர் நீதிமன்றில் மனு
மலையக மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுகோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மூவாங்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிப்பதாகவும் இந்த குடும்பங்கள் எவருக்கும் நிரந்தர முகவரி இல்லை எனவும் இதனால் மேற்படி பகுதியில் வசிக்கும் மக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் பொருட்களை தங்களின் வீடுகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் மனுதாரரான ஜீவரட்ணம் சுரேஸ்குமார் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான முகவரியாக காணப்படும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரிக்கே அனைத்து கடிதங்களும் பொருட்களும் அனுப்பப்படுவதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்கு என தனிப்பட்ட நிரந்தர முகவரில் இல்லை. இவர்களிற்கு அனுப்பப்படும் கடிதங்கள் மாவத்தகம பிரதான தபால் நிலையத்திற்கே அனுப்பப்படுகின்றன. தபால்காரர்கள் மூவாங்கந்த உப தபால் நிலையத்திற்கே வழங்குகின்றனர். பின்னர் குறிப்பிட்ட தோட்டத்தின் கண்காணிப்பாளருக்கு இந்த கடிதங்கள் வழங்கப்படுகின்றன. அவர் நம்பகதன்மையற்ற தனது முகவர் மூலம் கடிதங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கின்றார். ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை கிட்டத்தட்ட 277 தோட்டங்களை நிர்வகித்து வருவதாகவும் அந்த தோட்டங்களில் சுமார் 400,000 பேர் வசிப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் குடியிருப்பு முகவரி இல்லையெனவும் மனுவில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.மனுதாரர்சார்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, மே 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மூவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவந்த போதே உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இதனை அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, மூவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சகல தோட்டங்களிலும் இத்திட்டம் அமுல்படுத்த வேண்டும்
மூவன்கந்த தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியை வழங்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் ஏனைய தோட்ட மக்களுக்கும் நிரந்தர முகவரி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இனிமேலும் முகவரி இல்லாத நிலையால் வாய்ப்புகளை இழக்கும் நிலை மாற்றமடைய வேண்டும். குறிப்பாக உரிய நேரங்களில் கடிதங்கள் கிடைக்காமையால் வாய்ப்புகளை இழந்தவர்கள் ஏராளம்.
210 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமையான வரலாற்றைக்கொண்ட இலங்கையின் தபால் சேவைத் துறையானது 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்டும் இயங்கி வருகின்றது. எனினும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் சகல மக்களுக்குமான கடிதங்கள் தோட்ட அலுவலகத்தில் சேமிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களிலேயே சகலருக்கும் விநியோகிக்கப்படும் நிலை காணப்பட்டது. அதனால் காலம் கடந்து கூட கடிதங்கள் கிடைக்கப்பெறும். இதனால் பெருந்தோட்ட மக்கள் வங்கி கொடுப்பனவுகள், நகை அடகு கொடுப்பனவு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. தற்போது பெருந்தோட்டங்களுக்கு தபால்களை விநியோகிப்பதற்கு தபால் ஊழியர்கள் செயற்பட்டாலும் ஒரே பெயரில் பலர் இருப்பதும் அனைவரும் ஒரே முகவரியினை பயன்படுத்துவதும் சிக்கலை ஏற்படுத்துகின்றது. இனிவரும் காலங்களில் இந்நிலையில் மாற்றம் ஏற்படுமென கருதலாம்.
சொந்த நிலத்தில் வீடுகளுக்கென்று நில அளவுகள், தனியான இலக்கங்கள் காணப்படாமையும் குடியிருப்புகளுக்கு பிரத்தியேக பெயர் வழங்காமையும் அடிப்படையில் அவர்கள் நிரந்தர முகவரிகளை பெற்றுக்கொள்வதில் தடையை ஏற்படுத்தியது. அத்தோடு அரசாங்கமும் மலையகத் தலைவர்களும் இத்தனை பிரச்சினைகளை அறிந்தும் அவர்களுக்கான நிரந்தர முகவரிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அரசசார்பற்ற நிறுவனங்கள் மலையத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள்
2013 ஆம் ஆண்டு மலையக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் நிரந்தர முகவரியை வழங்கும் சமூக செயற்பாடொன்றை மாற்று கொள்கைகளுக்கான நிலையம் தனது பிரதேச பங்காளர் அமைப்பான ஊவா சக்தி நிறுவனத்தோடு ஒன்றிணைந்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்டது. இக்கருத்திட்டமானது, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்மூலம் கிட்டத்தட்ட 3000 பேர் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பசறை பிரதேசத்தின் பெருந்தோட்ட குடியிருப்புகளுக்கு நிரந்தர முகவரியை பெற்று கொடுப்பதும், அவர்களுக்கான நேரடி தபால் சேவையை சீர் செய்வதும் இதன் பிரதான நோக்கமாக காணப்பட்டது. பசறை பிரதேச சபை, பசறை பிரதேச செயலகம், பசறை தபால் நிலையம், பசறை பொலிஸ் நிலையம் என்பன இதன் பிரதான பங்காளர்களாக செயற்பட்டன. இந்நிகழ்வில் முகவரியற்ற பசறை பிரதேச பெருந்தோட்ட பகுதி மக்களின் லயன் குடியிருப்புகளுக்கு நிரந்தர விலாசம் ஒன்றை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பெருந்தோட்ட பாதைகளுக்கு புதிய வீதி பெயர்களும் சூட்டப்பட்டன. அத்துடன் குறித்த முகவரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தன.
இதேவேளை 2016 மார்ச் 5 ஆம் திகதி மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர முகவரி வழங்கும் செயற்பாடு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலையீட்டுடன் மொக்கா தோட்ட பிரஜைகள் சபை ஒன்றியம் மற்றும் மொக்கா தோட்ட முகாமைத்துவம் மற்றும் வேர்ள்ட் விஷன் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலகம், மொக்கா தோட்ட முகாமைத்துவம், மொக்கா கிராம உத்தியோகத்தர் மற்றும் மஸ்கெலிய பொலிஸ் நிலையம் உட்பட பல நிறுவனங்கள் இதற்கு பங்காளர்களாக செயற்பட்டனர். தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான முகவரிகளை உறுதிப்படுத்தல் மேற்படி முகவரிகளுக்கு உரிய சாதாரண தபால் முறையின் கீழ் கடிதங்களை பெறுவதற்கு வகை செய்தல் இலக்காக காணப்பட்டது. எனினும் முகவரிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் உரித்தாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு 200 வருடம் சொந்த நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்ந்த பதுளை ஸ்பிரிங்வெளி மக்களுக்காக அமெரிக்காவின் ஸ்பைஸ் நிறுவனத்தின் வழிகாட்டலிலும் பதுளை ஊவா சக்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி இருவரின் தலைமையில் நிரந்தர முகவரி வழங்கும் நிகழ்வு ஸ்பிரிங்வெளி தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இவ்வாறு அவ்வப்போது அரசசார்பற்ற நிறுவனங்களால் மலையக மக்களுக்கு முகவரிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவை சட்ட உரித்துடையதாக காணப்படவில்லை. மலையக மக்களுக்கான சொந்த நிலம் மற்றும் சொந்த வீடுகள் காணப்படாமையும் இந்த செயற்பாட்டை தாமதப்படுத்தியது. எனினும் தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மலையக மக்களுக்கான நிரந்தர முகவரியினை உறுதிப்படுத்தியுள்ளது. விரைவில் அனைத்து பெருந்தோட்ட மலையக மக்களும் நிரந்தர முகவரியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக