கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 டிசம்பர், 2023

1000 தேசிய பாடசாலை திட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை?


1000 பாடசாலைகளில் 23 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு.

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டத்துக்கு ஆளுநர்கள் அனுமதி வழங்கியுள்ள போதும், மாகாண சபைகள் அவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் மொழிமூல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் ஒரு பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது.


சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தழுவும் விதத்தில் 1,000 புதிய தேசிய பாடசாலைகளை தாபிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் 2019 டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 3 கட்டங்களின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதோடு, முதலாம் கட்டத்தின் கீழ் தற்போது தேசிய பாடசாலையொன்றேனும் இல்லாத 123 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாகாண சபை பாடசாலை ஒன்று என்ற அடிப்படையில் தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் இனங்காணப்படும் தகவுதிறன்களின் மீது தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கும் மூன்றாம் கட்டத்தின் கீழ் தற்போது இயங்கி வரும் 373 தேசிய பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையால் 2020.12.07 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக்கேற்ப நாட்டிலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1000 புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மொனராகலை – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் 2022 ஜனவரி 7 ஆம் திகதி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் 16 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக பெயர் பலகைகள் மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கம் தலா 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலண்டஸ் கல்லூரி, ஹட்டன் பொஸ்கோஸ் கல்லூரி, தலவாக்கலை த.ம.வி, ஹோல்புறுக் த.ம.வி, கொட்டகலை த.ம.வி, லிந்துலை மொராயா த.ம.வி, பொகந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி, நோர்வூட் த.ம.வி, மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி, ஹொன்சி கல்லூரி, மஸ்கெலியா புளும்பீல்ட் கல்லூரி, இராகலை த.ம.வி, அல் மின்ஹாஜ் ம.வி, பூண்டுலோயா த.ம.வி, ஹொலிடின்ரி த.ம.வி, கந்தபொல மெதடிஸ்ட் கல்லூரி ஆகிய தமிழ்மொழிமூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடக்கும் நிலையில், அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் கல்வி அமைச்சின் நடவடிக்கை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக நாட்டில் 23 பாடசாலைகள் மாத்திரமே மாகாண நிர்வாகத்திடமிருந்து கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய பாடசாலைகள் இன்னும் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழேயே செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நிலையியற் கட்டளை 50ஐ பிறப்பித்து மத்திய அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள 23 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் தேசிய பாடசாலைகளுக்கு நிகரான முறையிலேயே நிர்வகிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு வழங்கியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாடசாலையை நிர்வகிப்பதற்காக 31.05.2023 திகதியிட்ட ED/PLN/N/23/09  இலக்கமுடைய அமைச்சரவைக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தும் திட்டத்துக்கு ஆளுநர்களின்  அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த மாகாண சபைகள் மூலம் இன்னும் தேசிய பாடசாலைகளாக மாற்றப்படவில்லை. குறித்த அமைச்சரவைக் குறிப்பின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது மற்றும் பாடசாலைகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, கொள்கை மற்றும் திட்டமிடல் கிளையால் வெளியிடப்பட்ட 01.01.2020 திகதியிட்ட 03ஃ2020 சுற்றறிக்கையின் அளவுகோல்களின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 04.11.2022 திகதியிட்ட சுற்றறிக்கை எண். 03/2020 (1) மேலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 836 மாகாண சபை பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு மாகாண சபைகளின் நிர்வாகத்திடம் இருந்து பாடசாலையை விடுவிப்பதற்கு அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் 23 பாடசாலைகள் நிலையியற் கட்டளை 50 வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடக்கும் நிலையில் மத்திய மாகாணத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கல்வி அமைச்சு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பாடசாலைகளின் பட்டியலில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியும் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ ராமகிருஸ்ணா கல்லூரியும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகள் வெறும் பெயர் பலகைகளில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருப்பதை கல்வி அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் திட்டம் மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி எனவும் ஏற்கனவே தேசிய பாடசாலைகளாக காணப்படும் பாடசாலைகளில் இன்னும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. எனவே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு தேசிய பாடசாலை என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த கல்வி சமூகமும் ஏமாற்றப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட பாடசாலைகளில் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியை தவிர்த்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் தற்போது மாகாண கல்வி அமைச்சின் கீழேயே செயற்படுகின்றன. அவை உத்தியோகபூர்வமாக இன்னும் கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை. அவ்வாறு கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அவற்றால் முகாமைத்துவம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குரியாக இருக்கிறது.


இதனடிப்படையில் கல்வி அமைச்சினால் நாடு முழுவதும் புதிதாக 23 பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வட மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் மேல் மாகாணத்தில் ஐந்து பாடசாலைகளும் தென் மாகாணத்தில் மூன்று பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் வடமேல் மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் வடமத்திய மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் மூன்று பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் ஏன் 16 பாடசாலைகளில் தேசிய பாடசாலைக்கான பெயர்பலகைகள் அமைக்கப்பட வேண்டும். மாகாண கல்வி அமைச்சிடமிருந்து மத்திய கல்வி அமைச்சுக்கு பாடசாலைகள் சுவீகரிக்கப்படாமல் பெயர் பலகை மற்றும் பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இதேவேளை பாராளுமன்றத்திலும் இவை தொடர்பில் எவ்வித பிரேரணையும் கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேவேளை தற்போது தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் மாகாண கல்வி அமைச்சின் கீழேயே நிர்வகிப்பதற்கும் ஒரு தீர்மானம் காணப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் நிறைந்த வகையில் அமுல்படுத்தப்பட்ட 1000 தேசிய பாடசாலை செயற்றிட்டம் தற்போது செயலிழந்த நிலையில் இருப்பது வருத்தத்துக்குரியது.

1000 தேசிய பாடசாலையை தரமுயர்த்தும் செயற்றிட்டத்தில் பல பெருந்தோட்டப் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரத்தில் சகல பாடப்பிரிவுகளையும் கொண்ட தமிழ் பாடசாலைகள் மிகவும் குறைவாகும். பாடப்பிரிவுகளை கொண்ட பாடசாலைகளும் வளப்பற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகின்றன. இதனால் தேசிய பாடசாலை செயற்றிட்டத்தின் மூலம் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகள் உருவாக்கப்படுவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டது.

சகல பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக சம சந்தர்ப்பங்களை வழங்குதல், விதிமுறைகள் மற்றும் நியமங்களுக்கமைய கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்குதல் என்பன தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் பிரதான குறிக்கோளாக இருந்தது. எனினும் அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய கல்விக் கொள்கை என்பவற்றால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் ஏமாற்றமடைந்துள்ளன.

குறித்த திட்டத்துக்கு கல்வி அமைச்சினால் செயற்றிட்ட முன்மொழிவுகளை தயாரித்து, அவற்றை முன்வைத்து அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து அளவுகோல்கள் மற்றும் வரைபடப்படுத்தல் பயிற்சிக;டாக சகல பிரதேச பிரிவுகளும் உள்ளடங்கக்கூடியதாக பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மாகாண கல்வித் திணைக்களங்களால் பரிந்துரைக்கப்பட்ட இப்பாடசாலைகளுக்கான அனுமதியை ஆளுநர்கள் வழங்கியுள்ளனர். ஆனால் பாடசாலைகளை இன்னும் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்காத நிலை காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் இத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தேசிய பாடசாலையாக அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் எதிர்கால நிலை தொடர்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும்.

அதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் அப்போது விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட இராதாகிருஸ்ணன் (பா.உ) கல்வி அதிகாரிகளுடன் அதற்கான இடத்தினையும் தேர்வு செய்திருந்தார். இறுதியில் அத்திட்டம் இன்றுவரை நிறைவேறாமல் கைவிடப்பட்டுள்ளது. இதேபோல தேசிய பாடசாலை திட்டமும் கைவிடப்பட்டால் அது நுவரெலியா மாவட்ட கல்வி அபிவிருத்தியில் பாரிய பின்னடைவாக கருதப்படும்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக