மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுக் கோரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தப்பட்ட போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால திட்டங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அவ்வப்போது மாதிரி வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்த போதும் அவை விஸ்தரிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக 4000 வீடுகளுக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் 2016 - 2019 ஆம் ஆண்டுக்குள் 4000 தனி வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும் 2022 ஆம் ஆண்டு வரை அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறைவு செய்வதற்கு முடியாத நிலை காணப்பட்டது.
2020 ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று பரவல் மற்றும் அதன் பின்னரான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு காரணமாகவும் அமைச்சுக்களின் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. 2020 ஆம் ஆண்டுப் பின்னர் மூன்று முறை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றதுடன் அமைச்சுக்களுக்கான உரிய நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. 2022 - 2024 ஆம் ஆண்டுக்குள் 10,000 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டும் இன்னும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.இதேவேளை அமைச்சுக்கள் அடிக்கடி மாற்றங்கள் இடம்பெறுவதால் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய தடை ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய வீட்டுத்திட்டத்துக்குப் பொறுப்பான மூன்று அமைச்சுக்கள் மாற்றம் பெற்றமையால் வீட்டத்திட்டம் தொடர்பான சரியான தகவல்கள் அமைச்சிடம் இல்லமையை அறியமுடிந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்து தகவல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அமைச்சுக்கள் வெவ்வேறான தகவல்களை வழங்கியமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் அமைச்சுக்கள் மாறினாலும் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான உறுதியான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமுடியவில்லை.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் தகவல்களின்படி, (சுவுஐஃ2022ஃ04) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 4000 வீடுகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள 10,000 தனி வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா பிராந்தியத்தில் 5875 வீடுகளும் பதுளை பிராந்தியத்தில் 1400 வீடுகளும் கண்டி பிராந்தியத்தில் 975 வீடுகளும் மாத்தளை பிராந்தியத்தில் 250 வீடுகளும் கேகாலை பிராந்தியத்தில் 750 வீடுகளும் இரத்தினபுரி பிராந்தியத்தில் 350 வீடுகளும் குருநாகல் பிராந்தியத்தில் 100 வீடுகளும் காலி பிராந்தியத்தில் 100 வீடுகளும் மாத்தறை பிராந்தியத்தில் 50 வீடுகளும் களுத்துறை மற்றும் மொனராகலை பிராந்தியங்களில் தலா 75 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2022 ஆம் ஆண்டு 3525 வீடுகளும் 2023 ஆம் ஆண்டு 2531 வீடுகளும் 2024 ஆம் ஆண்டு 3944 வீடுகளும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளும் நிலையில் இன்னும் அவை தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் ஒரு வீடுகள் கூடமுழுமை பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள பணவீக்கம், கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை, விலையில் ஏற்ற இறக்கம், வீட்டுக்கான செலவு தொடர்பான மதிப்பீடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளாமை போன்றவற்றினால் வீட்டுத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பயனாளிகளின் தெரிவு
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அமைச்சு என்பன இரு வகையான அளவுகோள்களின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்கின்றன. அத்தியாவசிய அளவுகோள்களின் அடிப்படையில் அனைத்து தகுதிகளையும் பயனாளிகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்படமாட்டார்கள். தோட்டத்தொழிலாளியாக பதிவு செய்திருத்தல், லயன் குடியிருப்புகள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் வசித்தல் மற்றும் புதிய வீடுக்கு செல்லுமுன் லயன் வீடுகளை கையளித்தல், தோட்டதொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தவராகவிருத்தல், கடந்த ஐந்து வருடங்களில் தோட்டத்தில் தடையின்றிய சேவை, நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வேறு வீடமைப்பு திட்டங்களில் பயனாளிகளாக இருக்கக்கூடாது. 50 வயதைவிட குறைந்தவராக இருத்தல் (குடும்பத்தில் வேறு ஒருவர் தோட்டத் தொழிலாளியாக இருக்கும்பட்சத்தில் 50 -55 வயது கவனத்தில் கொள்ளப்படும்) என்பன முக்கியமாகும்.
எனினும் மேற்கூறிய தகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகமாக பயனாளிகள் காணப்படுமாயின் புள்ளிகளின் அடிப்படையில் தகுதியான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
2022.11.11 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வழங்கிய தகவல்களில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்கு நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, களுத்துறை, மொனராகலை ஆகிய 11 மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எவையும் இல்லையெனவும் வீட்டுத்திட்டத்துக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. வீட்டுத்திட்டத்துக்கான காணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லையெனவும் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்காமைக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 10,000 வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
15.08.2023 ஆம் திகதி நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, களுத்துறை, மொனராகலை ஆகிய 11 மாவட்டங்களில் மூன்று கட்டங்களில் 10,000 இந்திய வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக 3525 தனி வீடுகளும் இரண்டாம் கட்டமாக 3944 வீடுகளும் மூன்றாம் கட்டமாக 2531 வீடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது ஒரு வீட்டுக்கு 3.1 மில்லியன் ரூபா (31 இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு 3500 மில்லியன் ரூபாவும் இலங்கை அரசாங்கம் 680 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்திருந்தன.இதேவேளை வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானமெடுக்குமெனவும் இலங்கை அரசாங்கம் அதில் தலையீடு மேற்கொள்வதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. வீட்டுத்திட்டத்துக்கான நில ஒதுக்கீடுகள் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 14 பிரிவுகளில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வீட்டுத்திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் 10,000 வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் இதுவரை தெரிவு செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த வேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.
முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும்?
நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய தடையாக அமைந்தது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட 4000 இந்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. 4000 வீட்டுத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் மீண்டும் 4000 வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளப்பட்டு வீட்டுத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
10 ஆயிரம் வீடுகளுக்கான அறிவிப்பு 2017.05.12 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் 2018.08.12 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. எனினும் 5 வருடங்கள் கடந்துள்ள போதும் வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது நிதி ஒதுக்கீடுகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதால் வீட்டுத்திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முன்னெடுக்கப்புடும் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் அத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுசெல்லும் மனப்பான்மையை அரசியல்வாதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்களை இலங்கையில் கடந்துள்ள போதும் அவர்களுக்கான காணியுரிமை, தனி வீடு என்பவற்றை உறுதிப்படுத்துவது முக்கிய நவாலாக மாறியுள்ளது. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக