கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 நவம்பர், 2023

அவதியுறும் ஆசிரியர் உதவியாளர்கள்



  • மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வழங்கிய தகவலிலும் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவலிலும் முரண்பட்ட நிலைமை
  • ஆசிரியர் உதவியாளர் தொடர்பான தகவல்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலய கல்வி அலுவலகங்கள் உரிய முறையில் பேணவில்லை.

பெருந்தோட்ட தமிழ்மொழிமூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டு 3021 பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்டன. குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு 8 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் இதுவரை பல ஆசிரியர் உதவியாளர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும். இதனால் தகைமைகளை பூர்த்தி செய்தும் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளாத ஆசிரியர் உதவியாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு சேவைக்குள் உள்வாங்கப்பட்ட போது அவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்ட பின்னர் 2017 ஆம் ஆண்டு முதல் அத்தொகை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. தற்போதுவரை பல ஆசிரியர் உதவியாளர்கள் 10 ஆயிரம் ரூபாவையே மாதாந்த ஊதியமாக பெற்றுவருகின்றனர் என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமாகும். இவற்றில் மத்திய மாகாணத்தில் நியமனம் பெற்ற 900 ஆசிரியர் உதவியாளர்களில் 104 பேருக்கு 8 வருடங்கள் கடந்தும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வழங்கிய தகவல்களின் மூலம் அறிய முடிந்தது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சுமார் 140 பேர் இதுவரை நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிந்தது. இதன்மூலம் ஆசிரிய உதவியாளர்கள் தொடர்பில் உரிய தரவுகளை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் பேணவில்லை என்றே தெரிகின்றது.

2013.12.16 ஆம்  திகதிய அமை/13/1636/530/059 ஆம் இலக்கம் கொண்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி தமிழ்மொழி மூலம் தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடயங்களுக்காக ஆசிரியர் உதவியாளர்களை நியமனம் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் 08.08.2014 ஆம் திகதிய 1875 இலக்கமிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 19.05.2015 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்த பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 7 கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனமானது, நிபந்தனைகளின் அடிப்படையில், வெறும் 6000 ரூபா மாதாந்த ஊதியத்துக்கு வழங்கப்பட்டது. 10 வருடங்களில் நியமனப் பாடசாலையில் கடமையாற்றுதல், ஐந்து வருடங்களுக்கிடையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரியர் கலாசாலைகளில் பயிற்சியினை நிறைவு செய்தல் என்பன நிபந்தனைகளாக காணப்பட்டன. இதன்படி ஆசிரியர் உதவியாளர்களில் முதலாவது தொகுதியினர் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகளில் 2 வருட பயிற்சிகளுக்காக உள்வாங்கப்பட்டனர். பின்னர் பல கட்டங்களாக இவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்து பெறுபேறுகளும் வெளியாகிய நிலையில் இன்னும் அவர்கள் ஆசிரியர் சேவையின் 3 (1) க்கு உள்வாங்குவதாக கூறிய உறுதிமொழியினால் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான அழுத்தத்தை உரிய அதிகாரிகளுக்கு வழங்கும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு தகவல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன. எனினும் தகல்களின் உண்மைத்தன்மை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை.

மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்கள்

ஆசிரியர் உதவியாளர்கள் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் கண்டி மாவட்டத்தில் 253 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 581 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 66 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். 

கண்டி மாவட்டத்தில் கண்டி கல்வி வலயத்தில் 27 பேரும் கட்டுகஸ்தோட்டை வலயத்தில் 40 பேரும் தெல்தெனிய வலயத்தில் 70 பேரும் தெநுவர வலயத்தில் 20 பேரும் வத்தேகம வலயத்தில் 54 பேரும் கம்பளை வலயத்தில் 42 பேரும் நியமிக்கப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை கல்வி வலயத்தில் 84 பேரும் நுவரெலியா வலயத்தில் 48 பேரும் வலப்பனை வலயத்தில் 41 பேரும் ஹங்குராங்கெத்த வலயத்தில் 65 பேரும் ஹட்டன் வலயத்தில் 343 பேரும் நியமனம் பெற்றனர். மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை கல்வி வலயத்தில் 35 பேரும் நாவுல வலயத்தில் 20 பேரும் கலேவல வலயத்தில் 66 பேரும் நியமனம் பெற்றனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை

மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 900 பேரில் 104 பேருக்கு 8 வருடங்கள் கடந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. கண்டி மாவட்டத்தில் 67 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 28 பேருக்கும் மாத்தளை மாவட்டத்தில் 9 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கண்டி மாவட்டத்தில் கண்டி கல்வி வலயத்தில் 5 பேருக்கும் கட்டுகஸ்தோட்டை வலயத்தில் 16 பேருக்கும் தெல்தெனிய வலயத்தில் 14 பேருக்கும் தெநுவர வலயத்தில் 2 பேருக்கும் வத்தேகம வலயத்தில் 7 பேருக்கும் கம்பளை வலயத்தில் 23 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை கல்வி வலயத்தில் 13 பேருக்கும் வலப்பனை வலயத்தில் 13 பேருக்கும் ஹங்குராங்கெத்த வலயத்தில் ஒருவருக்கும் ஹட்டன் வலயத்தில் ஒருவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை

மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை கல்வி வலயத்தில் ஐவருக்கும் நாவுல வலயத்தில் இருவருக்கும் கலேவல வலயத்தில் இருவருக்கும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

நிரந்தர நியமனம் வழங்காமைக்கான காரணம் என்ன?

ஆசிரியர் உதவியாளர்களாக நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளாதவர்கள் சகல தகைமைகளையும் பூர்த்தி செய்து கோவைகளை மத்திய மாகாண கல்வி திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள நிலையிலும் இன்னும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து தங்களுடைய கோரிக்கையை முன்வைத்த போதும், போதிய நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையால் நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய மாகாணத்தில் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் நிலவும் க.பொ.த.உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சு கோரியுள்ளது. நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளாமல் எவ்வாறு இந்த நியமனங்களை வழங்க முடியுமென்ற கேள்வி எழுந்துள்ளது.


கோவைகளை பூர்த்தி செய்யாமை, பெறுபேற்றை உறுதிப்படுத்தாமை, பயிற்சியை பூரணப்படுத்தாமை, சரியான ஆவணங்களை நிரந்தரமாக்குவதற்கு அனுப்பி வைக்காமை, உரிய கல்வித் தகைமைகளை பெற்றுக்கொள்ளாமை, 5 வருட காலப்பகுதியில் பயிற்சியை பூர்த்தி செய்யாமை, அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்யாமை, பயிற்சியை முடித்தாலும் பெறுபேறு வெளிவராமை, பயிற்சியை நிறைவு செய்யாமை போன்ற காரணங்களால் இன்னும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தில் இருவர் இன்னும் பயிற்சியை பூர்த்தி செய்யவில்லையெனவும் மாத்தளை கல்வி வலயத்தில் இருவர் 5 வருட காலத்துக்குள் பயிற்சியை பூர்த்தி செய்யவில்லை, ஏனைய மூவரை நிரந்தரமாக்குவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாவுல கல்வி வலயத்தில் இருவரை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலேவல வலயத்தில் இருவர் இன்னும் பேறுபேற்றை உறுதிப்படுத்தவில்லை. தெல்தெனிய வலயத்தில் 13 பேருக்கு நிரந்தர நியமனத்துக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது, ஒருவர் பெறுபேற்றை உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ஆசிரியர் உதவியாளர்களுக்கான சம்பளம் 4000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தொடர்ச்சியாக 10 ஆயிரம் ரூபாவே மாதச்சம்பளமாக வழங்கப்படுகின்றது. நிரந்தர நியமனம் பெற்றவர்களுக்கு 3/2016 சுற்றறிக்கையின் படி மாதாந்தம் 33,090 ரூபா வழங்கப்படுகின்றது.


இவர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற நாமத்தின் கீழ் நியமனத்தைப் பெற்றிருந்தாலும் பாடசாலைகளில் ஆசிரியருக்குரிய நேர அட்டவணை, பாட ஒதுக்கீடு உட்பட சகல பணிகளும் இவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சேவையிலுள்ள ஆசிரியரின் குறைந்த பட்ச மாதச் சம்பளம் 27000 ரூபா என்பதுடன் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுப் படியும் வழங்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் தரத்துக்குள் உள்வாங்காமல் வெறுமனே 10,000 ரூபா கொடுப்பனவில் வைத்திருப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

1875 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் 2.2 ஆம் பந்தியில், ஆட்சேர்க்கப்படும் ஆசிரிய உதவியாளர்கள் தமது முதல் நியமனத் திகதியிலிருந்து 5 வருடங்களினுள் தாம் நியமனம் பெறும் பாடத்துடன் தொடர்புறும் வண்ணம் கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்படும் பல்கலைக்கழகமொன்றில் / உயர் கல்வி நிறுவனமொன்றில் குறித்த பாடத்திற்கான பட்டமொன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் அவ் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் செல்லுபடியாகும் திகதி முதல் அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் 3(1) தரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுச் சேவையில் உறுதிப்படுத்தப்படுவர். ஆனால் பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மற்றும் பட்டப்படிப்புகைள நிறைவு செய்த பலர் இன்னும் நிரந்தர நியமனங்களுக்கு உள்வாங்கப்படவில்லை.

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவையின் தரம் 3(ii) ஆட்சேர்ப்பதற்கான கல்வி தகைமை க.பொ.த. உயர் தரத்தில் சித்தியாகும். (அதாவது புதிய பாடத்திட்டமாயின் பொது சாதாரண பரீட்சை தவிர மற்றைய பாடங்கள் மூன்றிலும் சித்தி பெற்றிருத்தல். பழைய பாடத்திட்டமாயின் 4 பாடங்களில் சித்தியடைந்திருத்தலாகும்) இத்தகைமையை கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நுண்ணறிவு மற்றும் பொது அறிவு பாடங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகளை பெற்று நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஒருவர் தகுதியானவராக தெரிவு செய்யப்படுவாராயின் அவர் ஆசிரியர் சேவை தரம் 3(ii) தெரிவு செய்யப்பட முடியும்.

எனவே, பெருந்தோட்ட பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவை தரம் 3(ii) அமர்த்தப்படுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளதுடன், தரம் 3(ii) ஆட்சேர்ப்பதற்கு பின்பற்றப்படும் நடைமுறையை கல்வி அமைச்சு பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் பின்பற்றியுள்ளமையினால் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர்கள் நேரடியாக ஆசிரியர் சேவை தரம் 3(ii) சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் தொடர்ச்சியாக தகைமைகளை பூர்த்தி செய்துள்ள போதும் அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காது இருப்பது சட்ட விரோதமாகும். எனவே தகைமையை பூர்த்தி செய்த அனைவருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியமாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக