கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 நவம்பர், 2023

தொழிலாளர்களுக்கான 365 கோடி ரூபா கொடுப்பனவு : அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் இன்னும் வழங்கவில்லை



அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 120 கோடி ரூபா செலுத்த வேண்டும்.

எல்கடுவ பிளான்டேஷன் 45.2 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும்.

ஜனவசம நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.

திறைச்சேரி உரிய நிதியொதுக்கீடு மேற்கொள்ளவில்லையென நிறுவனங்கள் அறிவிப்பு.

கொடுப்பனவுகளை வழங்க உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


கடந்த 200 வருடங்களாக இலங்கை பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றிவரும் பெருந்தோட்டத்துறை அண்மைக்காலங்களில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதிலும் அங்கு தொழில்புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது.  இலங்கை அரசாங்கம் தனியார்துறையிடம் ஒப்படைத்துள்ள பெருந்தோட்டங்களை விடவும் அரசாங்கத்தால் நிர்வகிப்படுகின்ற அரச பெருந்தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தோட்டங்களில் தொழிலாளர்களுக்கான சலுகைகள் நிபந்தனைகள் அடிப்படையிலேனும் வழங்கப்படாலும் அரச பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய சலுகைகள்கூட வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலங்களாக நிலைத்து வருகின்றது.

குறிப்பாக கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இயங்கும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பிளான்டேசன் கம்பனி ஆகியவற்றுக்கு கீழ் செயற்படும் பெருந்தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சுமார் 20 வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட பல கோடி ரூபா செலுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முயற்சித்தும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும் உரியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய பலர் இன்று உயிரோடு இல்லை என்பதும் மிகவும் வருத்தத்துக்குரிய விடயம்.


“ஜனவசம தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டி கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லையென்றே தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது. தோட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வயோதிபர்கள் மற்றும் மரணித்தவர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவுகளையாவது வழங்குவதற்கு வலியுறுத்தினோம். இது தொடர்பான பெயர் பட்டியலை வழங்குமாறு கண்டி மாவட்ட தொழில் உதவி ஆணையாளர் கோரியுள்ளார். இது தொடர்பாக உதவி தொழில் ஆணையாளரினால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதிய நிதி இன்மை காரணமாக ஊழியர் சேமலாப நிதியினை தற்போதைக்கு செலுத்த முடியாதென ஜனவசம அறிவித்துள்ளது. இவ்வாறு சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாமல் வயோதிபமடைந்துள்ளதாகவும் பலர் மரணித்துள்ளதாகவும்”
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளர் சிவசாமி வீரப்பன் தெரிவித்தார்.

இவ்வாறு சுமார் 20 வருடங்களாக தங்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு போராடும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அறிந்துகொள்ளவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 10.09.2020 ஆம் ஆண்டு தகவல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு சிலதகவல்களை வழங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பன முன்வந்தது. இதுவரை மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை தகவல்களை வழங்கவில்லை. 


இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தால் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால கொடுப்பனவு, தோட்ட அதிகாரிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்காக 2021 - 2021.06.30 வரை செலுத்த வேண்டிய 120 கோடி ரூபா (1.2 பில்லியன்) இன்னும் செலுத்தப்படவில்லை. கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 15 தோட்டங்கள் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமானவை. இதில் கண்டி மாவட்டத்திலுள்ள 12 தோட்டங்களில் 2814 பேரும் மாத்தளை மாவட்டத்திலுள்ள 3 தோட்டங்களில் 415 பேரும் தற்போது தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2001 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை  அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டமடைந்து சென்றதன் காரணமாக ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்  தொகை எப்போது செலுத்தப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகின்ற மேற்படி கடன் தொகையை செலுத்த முடியாத காரணத்தினால் நிகழ்கால நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இதற்கான உரிய தீர்வை பெற்றுத் தருமாறு பெருந்தோட்ட அமைச்சிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம். 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வீதம் திறைசேரியால் உதவித் தொகையாக வழங்கப்பட்ட போதிலும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பமான வேளையில் இருந்து இம்மாதிரியான எவ்வித உதவித் தொகையும் திறைசேரியால் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படவில்லை. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாவை வேறாக ஒதுக்குவதற்கான தேவை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவிய போது, இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு வருடாந்தம் 180 ஹெக்டேயர் பரப்பளவில் மீண்டும் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேயிலையின் விலையை ஸ்திரப்படுத்தி விலையை உயர்த்துவதற்காக தற்போது மூடப்பட்டுள்ள கோமர அரச தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை நவீனமயமாக்கப்பட்டு 03 மாத குறுகிய காலத்திற்குள் மீண்டும் தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு புனரமைப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்கடுவ பிளான்டேஷன்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் எல்கடுவ பிளான்டேஷன் நிறுவனமானது கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 10 தோட்டங்களை நிர்வகிக்கின்றது. இங்கு 1634 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறித்த தோட்டங்களில் தொழில் புரிந்த மற்றும் தற்போது தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படவில்லை. நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரமின்மை மற்றும் எதிர்மறையான பணப்புழக்கமே இந்நிலைக்கு காரணம் என எல்கடுவ தோட்ட நிறுவனம் தெரிவித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளரும் தகவல் அதிகாரியுமான அருணி எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 452 மில்லியன் ரூபாவை கடந்த 18 வருடங்களாக நிறுவனம் செலுத்தியிருக்கவில்லை. இத்தொகை தற்போது இன்னும் அதிகரித்திருக்கலாமென கூறப்படுகின்றது. குறித்த கொடுப்பனவுகளை எப்போது செலுத்த முடியுமென உறுதியாக அறிவிக்க முடியாதெனவும் இது தொடர்பான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, திறைசேரி மற்றும் பெருந்தோட்ட அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் எல்கடுவ பிளான்டேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

“கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிகமாக அரசினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் காணப்படுகின்றது. ஜனவசம நிர்வாகத்தின் கீழ் 17 தோட்டங்களும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 12 தோட்டங்களும் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பிளான்டேஷன் கீழ் 11 தோட்டங்களும் உள்ளது. மேலும் கேகாலை, மொனராகலை மாவட்டங்களிலும் ஜனவசம தோட்டங்கள் உள்ளன. இங்கு சேவையாற்றிய, சேவையாற்றும் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால கொடுப்பனவு போன்ற சட்டரீதியான கொடுப்பனவுகள் 16 வருடங்களுக்கும் மேலாக செலுத்தப்படவில்லை. ஜனவசம தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 மில்லியனுக்கும் (2 பில்லியன்) அதிகமான நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது. அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 500 மில்லியனுக்கு அதிகமாகவும் எல்கடுவ பிளான்டேஷன் சுமார் 350 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார்.

“இவற்றை பெறாமலேயே பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஓய்வு பெற்று 75 வயதை கடந்த பல தொழிலாளர்களுக்கும் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கள் நடவடிக்கை எடுத்தாலும் கடந்த 15 வருடங்களாக அந்நடவடிக்கை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. மூன்று அரச நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குவதால் அவை திறைசேரி கொடுப்பனவுகளையே நம்பியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள், ஏனைய செலவினங்களை ஈடுசெய்ய போதிய வருமானம் இல்லையென நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பல முன்மொழிவுகளை நாங்கள் சமர்ப்பித்திருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தவறியுள்ளனர். நிறுசனங்களுக்குச் சொந்தமான சொத்தினை விற்று தொழிலாளர்களுக்கான கொடுப்பனவை செலுத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டாலும் நடவடிக்கையெடுக்கவில்லை. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பில் கண்டி, மாத்தளை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்தம் வட்டி தொகையினை மாத்திரம் செலுத்தி வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.


மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அரச பெருந்தோட்டங்களில் கடமையாற்றிய மற்றும் கடமையாற்றும் சுமார் 10,000 தொழிலாளர்களுக்கு 18 ஆண்டுகளாக 1888 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் செலுத்தப்படவில்லையென 2013 ஆம் ஆண்டு கண்டி மனித அபிவிருத்தி நிறுவனத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடு 4 வருடங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டு நிலுவைத் தொகையினை மூன்று தவணைகளுள் ஒன்றரை வருடங்களுக்கு வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டது. எனினும் 2022 ஆம் ஆண்டு வரை முழுமையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது குறித்த அரச சிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

கண்டி மனித அபிவிருத்தி நிறுவனத்தால் கண்டியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரச பெருந்தோட்டயாக்கம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தொழில் அமைச்சு, நிதி அமைச்சு, தொழில் ஆணையாளர், இலங்கை மத்திய வங்கி, அரச தொழில்வாண்மை அமைச்சு ஆகியவற்றுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணைகள் கொழும்பு மணித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மாற்றப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நிறைவுற்று பணிப்புரைகள் வழங்கப்பட்டன. 

பொறுப்பான நிறுவனங்கள் அவற்றின் முகாமைத்துவத்தின் கீழ் 12,000 தோட்டத் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 2000 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் கொடுப்பனவுகளை திறைச்சேரியூடாக மூன்று தவணைகளுக்குள் (குறித்த திகதியிலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள்) பின்வரும் அடிப்படையில் வங்கியில் வைப்பிலிடுவதற்கு பணிக்கப்பட்டது.

2000 - 2006 வரையான காலப்பகுதியில் நிலுவையிலுள்ள தொகையை 01.01.2020 தொடக்கம் 30.06.2020 வரையான காலப்பகுதிக்குள்ளும்

2007 - 2012 வரையான காலப்பகுதியில் நிலவையிலுள்ள தொகையை 01.06.2020 தொடக்கம் 30.12.2020 வரையான காலப்பகுதிக்குள்ளும்

2013 - 2018 வரையான காலப்பகுதியில் நிலுவையிலுள்ள தொகையை 01.01.2021 தொடக்கம் 30.06.2021 காலப்பகுதிக்குள் வங்கியில் வைப்பிலிட வேண்டும்.

இந்த மூன்று நிறுவன முகாமைத்துவத் தோட்டங்களில் தற்போது தொழில் புரியும் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக வங்கியில் இடுவதை முகாமைத்துவம் உறுதி செய்வதுடன் தொழில் ஆணையாளர் இச்செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றமையை கண்காணிப்பதுடன் தேவையேற்படின் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் ஆணையாளர் நாயகமும் மத்திய வங்கியும் (அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில்) தொழிலாளர்களுக்கு அரைவருட மற்றும் முழுவருட கணக்கு அறிக்கைகள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றை அமைக்க வேண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பணிப்புரை வழங்கப்பட்டது.


தற்போதைய நிலை என்ன?

எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை சுமார் 425 கோடி ரூபா பெறுமதியான கொடுப்பனவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றது. குறித்த அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்புரைகளை பின்பற்றாமல் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கான சட்டரீதியான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது. அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் எவ்வித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. அரசாங்கத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் என்பன தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை வழங்குவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள ஜனவசம தோட்ட ஊழியர்களின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு உதவி தொழில் ஆணையாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வழங்குவதில் தாமதம் காணப்படுகின்றது. 

இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளர் சிவசாமி வீரப்பன் தெரிவிக்கையில், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியான தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு உதவி தொழில் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில தோட்டத் தலைவவர்களுக்கு அறிவிக்கப்பட்டு பெயர் பட்டியலை தயார் செய்யுமாறு கூறப்பட்ட போதும் இன்னும் பெயர் பட்டியலை வழங்கவில்லை. தொழிலாளர்களின் சட்டரீதியான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் கடும்பங்களுக்கும் அக்கறை இல்லாத நிலைமையே காணப்படுகின்றத. நேரடியாக சென்று பெயர் பட்டியலை தயாரிக்க எங்களிடம் போதுமான நிதி வசதி இல்லை. இதனால் இளைஞர், யுவதிகள் தாமாக முன்வந்து குறித்த பெயர் பட்டியலை பெற்றுக்கொடுப்பதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரச பெருந்தோட்டங்களான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பிளான்டேசன் கம்பனி ஆகியன ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால கொடுப்பனவு, தோட்ட அதிகாரிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்காக 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 365 கோடி ரூபா வழங்க வேண்டியுள்ளது. மக்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய இவ்வாறான கொடுப்பனவுகளை அரசாங்கமே வழங்க மறுப்பது மனித உரிமை மீறலாகும். இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை என்பது வேதனையாகும். தனியாரிடம் கையளிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெருந்தோட்டங்களிலுள்ள நிர்வாகங்கங்கள் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் இவ்வாறு முறைகேடாக செயற்படுகின்றன. எனவே அரச பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் அவசியமாகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக