கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 நவம்பர், 2023

2024 வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீடு: பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?

பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் 200 வருடங்களை கடந்துள்ள போதும் அவர்களின் வாழ்க்கைத் தரம் தேசிய இனங்களுடன் ஒப்பிடுகையில் குறை மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளுக்கான ஆரம்பம் ஏற்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிவீட்டுத்திட்டம் மற்றும் காணியுரிமை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டாலும் 2023 ஆம் ஆண்டில் அவை மந்த நிலையை அடைந்தது. இந்நிலையில் 200 வருடங்களை நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள மக்களின் நல்வாழ்வுக்கு 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வரவு - செலவுத்திட்டங்களில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளே பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்படாத நிலையில் இம்முறையும் அந்நிலை தொடருமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு அரசாங்கங்களும் தனது வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்கின்றன. ஆனால் அந்நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என்பதை தற்போதைய பெருந்தோட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட முடியும். 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் மலைநாட்டில் கிடைக்கக்கூடிய பொது உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் பல்வேறு காரணங்களினால் வளங்களின் பகிர்வில் முரண்பாடுகள் காணப்படுவதனால் ஒப்பீட்டு ரீதியில் இப்பிரதேசம் அபிவிருத்தி குன்றிக் காணப்படுகின்றது. இந்த முரண் நிலைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் பிரதிபலிக்கின்றது. மலைநாட்டில் கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் அதேபோன்று பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய மலைநாட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளக்கியதாக 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமுதாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றினை 2024 வருடத்திலிருந்து செயற்படுத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளையும் காணி உறுதிகளையும் வழங்குவதற்கு 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் தீர்மானம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (நிதியமைச்சர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க)

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் நாட்டில் வருமானம் பெறுகின்ற பிரதான துறைகளில் பெருந்தோட்டப் பொருளாதாரம் முக்கியமானதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு வரவு - செலவுத்திட்டத்தில் தனியான ஒதுக்கீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. (நிதியமைச்சர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத்திக்காக அடுத்த மூன்று (03) வருடத்திற்குள் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேவேளை 2022 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் மற்றுமொரு அம்சமாக சர்வதேச சந்தையினை வெற்றி கொள்வதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, பெறுமதி சேர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறையினை உருவாக்குவது எமது நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டது. 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 1000 ரூபா நாட்சம்பளம் வழங்குவதற்கான முன்மொழிவு வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நடைமுறையில் 1000 ரூபா நாட்சம்பளம் கிடைக்கப்பெறவில்லை.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையானது எமது ஏற்றுமதி வருமானத்திற்கு தொடர்ச்சியாக பாரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அவர்களது வாழ்க்கைத்தரம் இன்றும் நியம நிலைக்கு கீழாகவுள்ளது. பெருந்தோட்ட மக்களை லைன் அறைகளிலிருந்து வீடுகளுக்கு மாற்றும் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கவுள்ளோம். நடுத்தர காலப்பகுதியில் 25,000 வீடுகள் இதற்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்டத் துறையிலுள்ள வீட்டுத் தேவைகளும் உக்கிரமடைந்த நிலையில் காணப்படுவதோடு, இன்னும் சிலர் செயலிழந்த லயன்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையிலுங் கூட வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அரசாங்கம், பெருந்தோட்டத் துறைக்கு 25,000 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அப்போதைய ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கு 50,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அடுத்த வருடமே அரசாங்கமே இல்லாமல் போனதுடன் முன்மொழிவு ஏட்டளவிலேயே காணாமல் போனது. 

வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளுக்கான முன்மொழிவுகள் வழங்கப்பட்டாலும் அவற்றை முழுமையாக செயற்படுத்துவதில் தொடர்ச்சியாக பல அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன. இவற்றை தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. 

2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டத்துக்காக 14,348 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 6567.71 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7780.29 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 200 மில்லியன் ரூபாவும் 2016 இல் 1200 மில்லியன் ரூபாவும் 2017 இல் 3288 ரூபாவும் 2018 இல் 2677 மில்லியன் ரூபாவும் 2019 இல் 2900 மில்லியன் ரூபாவும் 2020 இல் 771 மில்லியன் ரூபாவும் 2021 இல் 1522 மில்லியன் ரூபாவும் 2022 இல் 1790 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனினும் 2015 இல் 349.7 மில்லியன் ரூபாவும் 2016 இல் 726.42 மில்லியன் ரூபாவும் 2017 இல் 1794.2 ரூபாவும் 2019 இல் 2280.5 மில்லியன் ரூபாவும் 2020 இல் 768.79 மில்லியன் ரூபாவும் 2021 இல் 648.1 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளுக்கான சுகாதார மற்றும் போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வரவு - செலவுத்திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் சில நிகழ்சித்திட்டங்கள் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 5,097 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் 2,203.8 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2893.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 2015 இல் 600 மில்லியன் ரூபாவும் 2016 இல் 318 மில்லியன் ரூபாவும் 2017 இல் 732 ரூபாவும் 2018 இல் 709 மில்லியன் ரூபாவும் 2019 இல் 600 மில்லியன் ரூபாவும் 2020 இல் 604 மில்லியன் ரூபாவும் 2021 இல் 814 மில்லியன் ரூபாவும் 2022 இல் 720 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனினும் 2015 இல் 418.38 மில்லியன் ரூபாவும் 2016 இல் 313.9 மில்லியன் ரூபாவும் 2017 இல் 310.17 ரூபாவும் 2019 இல் 361 மில்லியன் ரூபாவும் 2020 இல் 467.35 மில்லியன் ரூபாவும் 2021 இல் 333 மில்லியன் ரூபாவும் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. 

எனவே வரவு செலவுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கப்படும் நிதி பரிந்துரைகள் எவையும் பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தியில் முழுமையான பங்களிப்பைச் செலுத்தியிருக்கவில்லை என்பதை இத்தகவல்களின் மூலம் அறியமுடிகின்றது. குறித்த காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட ஒன்பது வரவு - செலவுத்திட்டங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு 100,000 க்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவை முழுமையாக நிறைவுபெறவில்லை. மாறாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் மாத்திரமே மலையக மக்களின் தனி வீட்டுத்திட்ட கனவை நிறைவேற்றியுள்ளது. 

தற்போது நாட்டிலுள்ள 454 பெருந்தோட்டங்களை 32 பெருந்தோட்ட கம்பனிகள் நிர்வகிக்கின்றன. இங்கு 2020 டிசம்பர் வரையில் 39,799 தனி வீடுகளும் 29,567 இரட்டை வீடுகளும் 73,130 தனி தொடர் வீடுகளும் 68,628 இரட்டை தொடர் வீடுகளும் 1637 மாடி தொடர் வீடுகளும் 15,480 தற்காலிக குடில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 200 வருடங்களில் அரசாங்கத்தால் சுமார் 40 ஆயிரம் தனி வீடுகளை மாத்திரமே பெருந்தோட்ட மக்களுக்காக அமைக்க முடிந்துள்ளது. 

மேலும் பெருந்தோட்ட மக்களின் சுகாதாரம், குடிநீர், பாதை அபிவிருத்தி, பாடசாலை வளங்கள் என பல்வேறு விடயங்களுக்கான நிதியொதுக்கீடுகள் கடந்த ஒவ்வொரு வரவு - செலவுத் திட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அடுத்த வருடத்துக்கான முன்மொழிவுகளிலும் அதுவே நடந்துள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மக்களை வைத்து பட்டாசுகளை கொளுத்தியும் பேண்ட் இசைத்தும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு மக்களை காலங்காலமாக ஏமாற்றும் நிகழ்ச்சி நிரலையே அவர்கள் மேற்கொள்கின்றனர். இன்று அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருக்கும் பலரே கடந்த காலத்திலும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தனர். அவர்களுக்கு மலையக பெருந்தோட்ட மக்களின் தேவைகள் தெரியாமல் போனமை அதிசயமானதே. இவர்களை நம்பி பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்களை கடந்ததே அதிசயம்தான். இன்னும் எத்தனை வருடங்கள் இவ்வாறே கடக்க வேண்டுமோ தெரியவில்லை.

மக்களின் மாற்றத்துக்காக அரசியலுக்கு வருவதாக தெரிவிக்கும் பலரும் இறுதியில் மக்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் செய்கின்றனர். மலையக மக்கள் பட்டாசு கொளுத்தி பேண்ட் இசைக்கும் வரையே அவர்களால் அரசியல் செய்ய முடியும். அவர்கள் சிந்திக்க தொடங்கினால் அவர்களின் அரசியல் நாடகம் காணாமல் போகும். ஆனால் எப்போது இவர்கள் சிந்திப்பார்கள் என்று தெரியவில்லை?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக