மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் கடக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மலையக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யத் தவறியமை சற்று கவலையான விடயமாகும். இருப்பினும் 200 வருடங்களில் மலையக மக்கள் அனுபவித்த இன்னல்கள், பெற்றுக்கொண்ட உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. இவற்றில் தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மலையக மக்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வலியும் வேதனையும் நிறைந்த பயணத்தை 200 வருடங்கள் கடந்து மீண்டும் மீட்டிப்பார்க்கும் வகையில் ‘மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு’ ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் அமைந்துள்ளது. 252 கிலோமீற்றர் தூரம் கொண்ட குறித்த நடை பயணம் கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஆரம்பித்து 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றது. இந்த 16 நாட்கள் நடை பயணமானது வலிமிகுந்த விடயமாக இருந்தாலும் மலையக சமூதாயத்தை உலகளவில் முன்னிலைப்படுத்துவதற்கு வழிசமைத்துள்ளமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த நடை பயணம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை பல்வேறு தரப்பினரின் ஆதரவு தினசரி அதிகரித்தமையை அவதானிக்க முடிகின்றது. இன,மத பேதமின்றிய வகையில் அனைவரும் நடைபயணம் மேற்கொண்டவர்களை வரவேற்று உபசரித்தமை மலையக மக்களின் அங்கீகாரத்தின் அவசியத்தையும் வரவேற்பையும் உறுதிப்படுத்துகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் (மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்கள்) தொடர்ந்து பருவ மழை பெய்யாமையின் காரணமாக விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமற்போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சம் அதிகரித்தது. மற்றும் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி முதலிய வரிவிதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலையும் ஏற்பட்டது. அத்துடன் சாதிக்கொடுமைகள், கடன்கள், ஆங்கிலேயரது காலணித்துவம், பண்ணையாளர்களது கொடுமைகள், வறுமை என பல காரணங்களால் பிரித்தானிய காலணித்துவ நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற சமகாலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுவே இலங்கைக்கான இவர்களின் வருகைக்கு வித்திட்டது.
தங்களது ஊர்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து படகுகளில் பயணித்து இலங்கையின் தலைமன்னாரில் இறங்கி அங்கிருந்து கால் நடையாகக் இலங்கையின் பெருந்தோட்டங்களிற்கு அழைத்துவரப்பட்ட இம்மக்களில்; தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40 வீதம் வரையினர் மடிந்தனர்.
மலையக மக்களது வருகை பல கட்டங்களாக இடம்பெற்றன. 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) அழைத்துவரப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கு முன்னர் வந்தவர்கள் இலங்கையின் உட்கட்டமைப்பு வேலைகள், கண்டிப்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிகளை(1818) அடக்குவதற்கு கொண்டுவரப்பட்டார்கள். அன்று முதல் இன்று வரை பல்வேறு இன்னல்களின் பின்னர் மீண்டும் உயிர்பெற்ற சமூகமாக வளர்வதற்கு பல்வேறு தடைகளை கடக்க வேண்டியிருந்தது. எனினும் முழுமையான சம அந்தஸ்துள்ள சமூகமாக வாழ்வதற்கு இந்த 200 வருடங்களிலும் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளமையை மாற்ற முடியாதுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மலையக மக்களின் 200 வருட நிறைவை நினைகூரும் நிகழ்வுகளில் தலை மன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணத்தின் நோக்கமும் முக்கியமானது. மலைநாட்டின் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இந்த நாட்டிற்கு முதன்முதலில் அழைத்து வரப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குழுக்களின் பயணத்தின் தடங்களை நாம் மீளவும் அடியொற்றி வருகின்றது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடினமான பயணத்தை மேற்கொண்ட முதல் தலைமுறையினர் பற்றி சிந்திக்கவும் அவர்களுடனான தொடர்பினை மீள ஏற்படுத்துவதற்கும் இந்த நடைபணயம் மேற்கொள்ளப்படுகின்றது.
‘மலையக எழுச்சிப் பயணம்’ - எதிர்காலத்தைப் பற்றியதுமாகும் – இது இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான பிரசைகளாக மலையகத் தமிழ் சமுதாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பற்றியது. 200 வருடங்களுக்கு முன்னர் நாம் இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து இங்கு எமது இருப்பு போராட்டமாகவே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் தனித்துவமான அடையாளம் கொண்ட மக்களாக அங்கீகரிக்கவும் மற்றும் ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையாக நடாத்த வேண்டும் என தொடர்ந்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களிடம் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த வேண்டுகோள்களிலிருந்து இந்தக் கோரிக்கைகள் எழுகின்றன. இது ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையாக சுதந்திர இலங்கையின் ஒரு மக்கள் கூறு என்னும் அடையாளத்திற்கான இந்தச் சமுதாயத்தின் போராட்டங்களை எதிரொலிக்கின்றது.
‘மலையக எழுச்சிப் பயணம்’ - என்பது சக சகோதர பிரசைகளுடனான ஓர் உரையாடலாகும். சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரசைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார- அரசியல் அந்தஸ்து மற்றும் அபிலாஷைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதும் இந்தப் பயணத்தின் இலக்காக அமைந்துள்ளது.
பெருந்தோட்ட சமுதாயத்தின் பெரும் பகுதியினர் தற்போதுவரை மோசமான நீர் மற்றும் சுகாதார வசதிகளுடனான லயத்து வீடுகளில் வசிக்கின்றனர். சிசு இறப்பு, பிறப்பு நிறை மற்றும் வளர்ச்சியின்மை உள்ளிட்ட பெரும்பாலான சுகாதார மற்றும் போஷாக்குக் குறிகாட்டிகள், தேசிய சராசரிகளுடன் ஒப்பிடும்போது பாரிய பின்னடைவை எடுத்துக்காட்டுகின்றன.
பெருந்தோட்டங்களிலுள்ள சிறுவர்கள் பல தசாப்தங்களாகத் தேசிய கல்வி முறைமைக்கு வெளியே காணப்பட்டதுடன், இந்நிலையானது தற்போதுவரை முழுமையாக சரிசெய்யப்படாத ஒரு குறிப்பிடத்தக்க இழப்பை உருவாக்கியுள்ளது. தோட்ட மக்களுக்கு சேவை வழங்கும் சுகாதார வசதிகள் தற்போதுவரை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்று, சாதாரண தரம் மற்றும் பல்கலைக்கழகக் கல்வியைக் கொண்டுள்ள மக்கள் தொகை உள்ளடங்கலான கல்வி அடைவு வீதங்களும் இந்த பிரிவினரில் கணிசமாகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. ஏனைய சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது, அரச துறைகளிலுள்ள தொழில்வாய்ப்பு மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றில் மலையகத் தமிழ் சமுதாயத்தினரின் இருப்பு மிகக் குறைவானதாகவே உள்ளதுடன் காணி, நிர்வாக சேவைகள் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களுக்கான அணுகலும் முற்றிலும் சமமற்றதாகவே காணப்படுகின்றது. இவர்களில் பலருக்கு முகவரி இல்லை. இந்தச் சமுதாயத்தின் உறுப்பினர்களிடையேயான வறுமை விகிதம் தேசிய சராசரியை விட கணிசமான அளவிற்கு அதிகமாக உள்ளது. இவர்கள் அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களாக காணப்படுகின்றபோதும் அரசாங்கத்தின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் அனர்த்தத் தணிப்பு நடவடிக்கைகளில் குறைந்தளவிலேயே ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
சமுதாயத்தின் அரசியல் அந்தஸ்து மற்றும் சமூக-பொருளாதார நல்வாழ்வு ஆகியவை நெருக்கமாக இணைந்தவை என நாம் நம்புகிறோம். நீடித்த நாடற்ற நிலை, வாக்குரிமை பறிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து சனத்தொகையில் சரிவு நிலை ஆகியவை இன்றுவரை தாக்கங்களைக் கொண்டுள்ளதுடன், எமது கோரிக்கைகளின் விஸ்தீரனத்தினையும் வடிவமைத்துள்ளன. எம் மீது அவிழ்த்துவிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட தொடர் வன்முறைகள், அதன் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வுகள், பாரபட்சமான மற்றும் நியாயமற்ற நடத்துகை மற்றும் இந்தச் சமுதாயம் தொடரச்சியாக ஓரங்கட்டப்பட்டமை ஆகியவை எங்கள் கோரிக்கைகளின் அவசரத்தை அதிகரித்துள்ளதாக ‘மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு’ கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
தமது வருகையின் 200 ஆவது வருடப் பூர்த்தியை நினைவுகூரும் மலையகத் தமிழ் சமுதாயத்தினர், முழுமையான மற்றும் சமமான பிரசைகளாக, இலங்கை வாழ்வில் முழுமையாகவும் அர்த்தபூர்வமாகவும் பங்கேற்பதற்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் இச்சிந்திப்பின் சந்தர்ப்பமாக அமைவதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் ஆதரவுப் பயணமாகவும் அமைந்துள்ளது. இலங்கையின் அர்த்தமுள்ள பிரசைகளாவதற்கு, மலையகத் தமிழ் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது நடை பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
எமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல், ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல், தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை, வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை, தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து, அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு, பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல், வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு, மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும், ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன மலையக மக்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
எனவே தலைமன்னார் முதல் மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபயணம் ஒட்டமொத்த இலங்கை மக்களுக்கும் சொல்லும் செய்தியாகும். இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏனைய சமூகத்தினர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் நியாயமாக பெற்றுக்கொள்ளவே இவர்கள் போராடுகின்றனர். மாறாக எந்த சமூகத்தினதும் உரிமைகளையும் சலுகைகளையும் இவர்கள் பறிக்க நினைக்கவில்லை. 200 வருடங்களின் பின்னராவது மலையக மக்கள் தமது நிலையான இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடை பயணம் வழியேற்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக