இலங்கை மின்சார சபை, காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம், நுவரெலியா பிரதேச செயலகம், மின்சக்தி அமைச்சு என்பன பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றது.காணி உரித்தினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மின்சார சபையும் நுவரெலியா பிரதேச செயலகமும் வழங்கிய இடம்பெயர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் பொருந்தா தன்மை காணப்படுவதே காணி உரித்துக்களை வழங்குவதில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக மக்களின் காணியுரிமை தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும் 200 வருடங்களை கடக்கும் நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கான காணியுரிமையினை முழுமையாக பெற்றுக்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவீகரிக்கப்படும் காணிகளுக்காக வழங்கப்படும் மாற்றிடங்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதையும் அரசாங்கம் தொடர்ந்தும் தட்டிக்கழித்து வருவது வெதனையான விடயமாகும். அந்தவகையில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தலவாக்கலை நகரை ஆக்கிரமித்து மேல் கொத்மலை நீர் மின் கருத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல தொழிலாளர் குடியிருப்புகள் உட்பட பல வீடுகள், கடைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பன பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் புதிய இடத்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள், கடைகள் மற்றும் பாடசாலைகள் என்பன புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்டாலும் இன்னும் அதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. திட்டம் அமுல்படுத்தப்பட்டு 11 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் அவர்களுக்கான காணி உரித்துக்களை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ச்சியாக பின்னடிப்புச் செய்கின்றது. அவ்வாறெனின் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வீடுகள் அவர்களுக்கு சொந்தமில்லையா? வீடுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணிகளில் அவர்கள் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் எவ்வித வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாதா? என தொடர்ச்சியான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
இவர்களின் குறித்த நிலைப்பாடுகளுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எவ்வாறான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கான காணி உரித்துக்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?
22.07.2020 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி, மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்தக் கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள், கடைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றிற்கான மாற்று இடங்கள் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆகஸ்ட் மாதம் அளவில் இவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நட்டஈடு கொடுப்பனவு நடவடிக்கைகளும் தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் உரிமை இதுவரை வழங்கப்படவில்லை. ஆதலால், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காகவும் பயிர்செய்கை நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை உரிய பயனாளிகளுக்கு இறையிலி கொடைப்பத்திரத்தின் மூலம் உடைமையாக்கும் பொருட்டு அப்போதை மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேல் கொத்மலை நீர் மின்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 495 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தின் கொள்கைகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட சகல வீடுகளுக்கு பதிலாகவும் வேறு வீடுகள் அமைத்து கொடுக்க நேர்ந்ததுடன் சகல உரிமையாளர்களுக்கு சட்டரீதியான உரிமையை கருதி அவர்களுக்கு வீடுகளுக்கும் மேலதிகமாக இவர்களுக்கு சொந்தமாக இருந்த வீடுகளையும் பார்க்க பெரிய நிலையான வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டதுன் மின்சார வசதி, கிணற்று நீர் வசதி மற்றும் அபிவிருத்தியுடனான பிரவேச மார்க்கம் போன்ற வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் வீடுகளுக்கான நிலையான காணி உரித்துக்கள் தொடர்பில் எங்கும் கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய அரசாங்கமும் அரசியல் வாதிகளும் அவற்றை கண்டுகொள்ளவும் இல்லை.
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் வழங்கிய பதில்..
இது தொடர்பில் ஆராய்வதற்காக 20.05.2021 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில் 04.10.2021 குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதற்கும் உரிய பதில் வழங்கப்படாமையினால் 24.12.2021 தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் குறித்த மேன்முறையீடு 10.08.2022, 22.09.2022 மற்றும் 03.11.2022 ஆம் திகதிகளில் மூன்று முறை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஆணைக்குழு வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தினால் தகவல் வழங்க 2022 நவம்பர் மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ்.ஏ.என்.எம்.சிறிவர்தன (காணி ஆணையாளர் - நிர்வாகம்) வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தலவாக்கலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணி இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. 45.0224 ஹெக்டேயர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்த நுவரெலியா பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டது. இவற்றில் ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 7 பேர்ச் நிலம் ஒதுக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இவற்றுக்கான காணி உரித்துக்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு 2020.07.03 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் காணி உரித்து வழங்குவது தொடர்பில் அறிவுறுத்தப்பட்ட போதும் அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லையென காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் 136 காணி துண்டுகளில் 129 காணி துண்டுகளுக்கான காணி உரித்துக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி உரித்தினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மின்சார சபையும் நுவரெலியா பிரதேச செயலகமும் வழங்கிய இடம்பெயர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் பொருந்தா தன்மை காணப்படுவதே காணி உரித்துக்களை வழங்குவதில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் நபரொருவரிடம் (பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) வினவியபோது, ‘வீடுகளுக்கான காணி உரித்துக்களை பெற்றுக்கொள்வதில் இங்குள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தார். மேலும் இங்கு வீடுகளை பெற்றுக்கொண்ட ஒரு சிலர் வீடுகளை வேறு நபர்களுக்கு விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் பின்னர் காணி உரித்துக்கள் வழங்கப்படும் போது பிரச்சினை வருமா என்பது தெரியவில்லை. எனினும் இங்கு வசிக்கும் மக்கள் தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கு வரி செலுத்தி வருகின்றனர். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தலவாக்கலை – லிந்துலை நகர சபையுடன் கலந்துரையாடி தீர்மானங்களை பெறுகின்றனர். தோட்ட நிர்வாகமும் இந்த காணிகள் தங்களுக்கு சொந்தமானவை என கூறிவருகின்றது. இதனால் இவ்விடயம் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் காணப்படுகின்றது. வீடுகளுக்காக வழங்கப்பட்ட ஆவணங்களில் வீட்டு இலக்கம் மற்றும் பெயர் மாத்திரமே உள்ளது.’ என தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் பதில்..
இவ்விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக இலங்கை மின்சார சபையிடம் (CEB/AGMP/RTI/23/2021/03/029) தகவல் கோரிய போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள் வழங்குவது இலங்கை மின்சார சபையின் பொறுப்பல்லவெனவும் மின்சக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையும் சம்பந்தப்பட்ட நுவரெலியா பிரதேச செயலகத்துக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலவுரிமை இன்னும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2020.07.03 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலமாக, ‘மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் செயற்படுத்தப்படும்போது சுவீகரிக்கப்பட்ட காணிக்கு பதிலாக பெறப்பட்ட மாற்று இடத்துக்கு காணி உரித்து பத்திரம் பெற்றுகொடுப்பது தொடர்பான 22.07.2020 ஆத் திகதிய அமை/20/1107/226/068 இலக்க அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவை சிபாரிசு கடிதத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக இத்துடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை மின்சார சபையினால் 21.10.2020 ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘மேல் கொத்மலை நீர்மின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்பதிவு மற்றும் மீள்குடியேற்றத்துக்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்குவதற்காக காணியை குறித்த பிரதேச செயலகத்துக்கு பொறுப்பளிக்க இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளரின் இல.UKHP/PD/LAND/01 உடன் 2020.01.19 ஆம் திகதிய கடிதம் மூலம் அறியத்தருவதாகவும் மேற்கூறிய தகவல்கள் ஒருங்கிணைப்பு மற்றும் குறித்த காணியை ஒப்படைத்தல் மூலம் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் W.W.S.D.ஜயவர்தனவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதால் குறித்த காணியை பொறுப்பேற்க தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தி தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி திட்டத்தினால் 534 வீடுகள் பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக மாற்று புதிய வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட 534 வீடுகளுக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் திட்டம் ஆரம்பக்கப்பட்டது தொடக்கம் காலத்துக்கு காலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் இழப்பீடுகள் வழங்கப்பட்டதுடன் இலங்கை மின்சார சபை அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ததாகவும் மேலதிக தகவல்களை நுவரெலியா பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுவரெலியா பிரதேச செயலகத்தின் பதில்….
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளுக்கான காணி உரித்துக்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு (04/2023) முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தகவல் அதிகாரியும் உதவி பிரதேச செயலாளருமான கே.எச்.எஸ்.வீரசிங்கே வழங்கிய தகவலில், மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று காணிகள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து நில கையகப்படுத்தல் நடவடிக்கைகளும் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கோரிக்கைக்கு அமைவான தகவல் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான நில உரித்துக்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இவை தொடர்பான மேலதிக விபரங்களை மேல் கொத்மலை நீர்மின் திட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
தீர்வு என்ன?
இவ்விடயம் தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் நபரொருவரிடம் (பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) வினவியபோது, ‘காணி உரித்துக்கள் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலகத்திடம் வினவிய போது அவை தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை காணி உரித்துக்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஏ, பி, சி என மூன்று வகைகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏ வகையில் உள்ளடகப்பட்டவர்களில் 7 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வீடுகள் வழங்கப்பட்டதற்கான கடிதம் மாத்திரமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
மலையக மக்களின் தனிவீட்டுக் கனவினை நனவாக்குவதற்கு கடந்த ஆட்சிக் காலங்களில் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அவை முழுமைப்படுத்தப்படவில்லை. வழங்கப்பட்ட தனி வீடுகளுக்கான காணி உரித்துக்களும் வழங்கப்படவில்லை. அபிவிருத்தி திட்டங்களுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுவீடுகள் வழங்கப்பட்டும் அதற்கான காணி உறுதிகள் வழங்குவதில் தொடர்ந்தும் இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதன்மூலம் மலையக மக்களுக்கு காணி உரிமையினை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருவதை வெளிப்படையாக அறிய முடிகின்றது. அவ்வப்போது ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து பதவிகளை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏன் செயற்படவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளுக்கான காணி உரித்துக்கள் தொடர்பில் பயனாளிகளும் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதையே உணர முடிகின்றது. சிலர் வீடுகளை விற்றுச் சென்றுள்ளதாகவும் தகவல் மூலங்கள் மூலம் அறிய முடிந்தது. காணி உரித்துக்களை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித அழுத்தங்களையும் அரசாங்கத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மக்கள் வழங்கவில்லை. இதற்கு காணி தொடர்பில் போதிய அனுபவமின்மையும் காரணமாகும். வீடுகள் பெற்றுக்கொண்ட சந்தோசத்தில் இருந்தாலும் அதற்கான காணி உரிமை தொடர்பில் அவர்கள் தெளிவற்ற நிலையிலேயே இருக்கின்றனர். எனவே காணி உரிமை தொடர்பான விழிப்புணர்வை முதலில் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அரசியல் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக