சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் செயற்படுத்தப்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கமானது, தலவாக்கலை நகருக்கு புது பொலிவினை ஏற்படுத்தியிருந்தது. நீர்த்தேக்கத்தின் நிர்மாணத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வீடுகள், பாடசாலைக்கான வளங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. எனினும் தலவாக்கலை நீர்த்தேக்கத்தினால் சென் கிளயர் நீர்வீழ்ச்சி நீரின்றி பொலிவிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இத்திட்டம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. மேல் கொத்மலை நீர்த்தேக்க செயற்திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி மற்றும் மக்களுக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும் சமீப காலங்களாக நீர்த்தேக்கத்தில் தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. தற்கொலையை தூண்டுவதற்காக மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்படவில்லையாயினும் அபிவிருத்திகளை இளைஞர்கள் தற்கொலைக்காக பயன்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
இதனால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை முயற்சிகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இதனடிப்படையில், தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள 3 பேர் முயற்சித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தோரில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் இவர்களில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவர்.
அத்துடன் மூன்று பெண்கள் நீர்த்தேக்கத்தில் மூழ்கியுள்ளனர். தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தமைக்கான பிரதான காரணம் குடும்பப் பிரச்சினை மற்றும் காதல் தொடர்புகளால் ஏற்பட்ட மனக் குழப்பங்களேயாகும் என நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதனால் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. மன உளைச்சல்களினால் ஏற்படுகின்ற தற்கொலை எண்ணத்தினை தீர்த்து கொள்வதற்கு இவ்வாறான தவறான வழிகளை கையாள்வதனால் அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனால் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் பாதுகாப்பு வேலைகளுக்காக ஒருநாளைக்கு 4 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (அவர்களுள்
இதேவேளை இந்தப் பிரதேசத்தில் தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்காக நீர்த்தேக்கத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது, 'விபத்து ஏற்படும் பகுதி" என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருக்கின்றது, பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவினரால் பிரதேச மக்களுக்கு இவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மின்சார சபையின் வேலைத்திட்டத்தின் மூலம் உயிர் காக்கும் படகுச் சேவையொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறான நடவடிக்கைகள் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கின்றதே தவிர எவருக்கும் தற்கொலை எண்ணம் ஏற்படுவதை தடுக்கவில்லை. தலவாக்கலை நகரானது, பெருந்தோட்ட பகுதிகைள உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. இங்கு குறைந்தளவானோரே நகர்புறவாசிகளாக காணப்பட்டாலும் சுற்றிலும் பெருந்தோட்டங்களை மையப்படுத்தியே நகரம் அமைந்துள்ளது. அத்துடன் இதுவரை தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டவர்கள் மற்றும் அதனால் மரணித்தவர்கள் அனைவரும் தலவாக்கலை நகரை சுற்றியுள்ள அல்லது அண்மித்துள்ள பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்களாவர்.
எனவே தற்கொலை எண்ணத்தை அவர்கள் தவிர்த்துகொள்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை பெருந்தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை இப்பகுதியில் இடம்பெற்ற தற்கொலைகள் குடும்ப பிரச்சினை மற்றும் காதல் விவகாரங்களினால் ஏற்பட்ட மன உளைச்சலினால் ஏற்பட்டவையாக அறிய முடிகின்றது. எனவே இவற்றை தடுப்பதற்கு முதலில் குடும்ப ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைகள்ஈ தற்கொலை முயற்சிகள் மற்றும் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடல்காள் தொடர்பான செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அதிகளவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 2020 இல் இரண்டு பேரும் 2021 இல் இரண்டு பேரும் 2022 இல் ஒருவரும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள்
02.01.2019 : ஆணொருவரின் சடலம் மீட்பு
04.01.2019 : பெண்ணொருவரின் சடலம் மீட்பு
16.03.2019 : நானுஓயா சமர்செட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தற்கொலை
29.11.2019 : பூண்டுலோயா வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண்யொருவரின் சடலம் மீட்பு
16.01.2020 : ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞரின் சடலம் மீட்பு
21.05.2020 : தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்றிய 28 வயதுடைய நபர் நீரில் மூழ்கிப் பலி
12.02.2021 : பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்பு
25.05.2021 : யுவதியொருவரின் சடலம் மீட்பு
31.05.2022 : பெண்ணொருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றாலும் அடையாளம் தெரியாத சடலங்களும் மீட்கப்படுகின்றன. இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக