- இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10,000 தனி வீடுகள் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 2022 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவு செய்ய வேண்டிய நிலையில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- அதிகரித்துள்ள பணவீக்கம், கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை, விலையில் ஏற்ற இறக்கம், வீட்டுக்கான செலவு தொடர்பான மதிப்பீடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளாமை போன்றவற்றினால் வீட்டுத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
- 2022 ஆம் ஆண்டு 3525 வீடுகளும் 2023 ஆம் ஆண்டு 2531 வீடுகளும் 2024 ஆம் ஆண்டு 3944 வீடுகளும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட மக்களின் லயன் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களின் நீண்டகால கனவான தனி வீட்டுத்திட்டத்தை உருவாக்கி குடியமர்த்தும் நோக்குடன் இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்கு 14,000 தனி வீட்டுத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் 2016 - 2019 ஆம் ஆண்டுக்குள் 4000 தனி வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும் 2022 ஆம் ஆண்டு வரை அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறைவு செய்வதற்கு முடியாத நிலை காணப்பட்டது. இதேவேளை 2022 - 2024 ஆம் ஆண்டுக்குள் 10,000 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டும் இன்னும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே இந்திய வீட்டுத்திட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் அடிப்படையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
4000 தனி வீட்டுத்திட்டம்
2016.01.08 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடனான 2016.04.01 ஆம் திகதி இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீடொன்றுக்கு 950,000 ரூபாவினை இந்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன் 30,000 ரூபா உரிய பெருந்தோட்ட கம்பனிகளும் 20,000 ரூபா பெறுமதியான உழைப்பு பயனாளிகளாலும் வழங்கப்பட்டது. குறித்த வீடமைப்பு திட்டத்துக்கு தேவையான குடிநீர் வசதிகள், பிரவேச பாதை உள்ளடங்களாக ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட 4000 வீடுகள் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது மாறிய அரசாங்கத்தினால் இத்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதியாக முழுமையாக பூர்ர்தி செய்யப்படாத மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாத 1235 வீடுகள் முன்னாள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் அண்மையில் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய அரசாங்கத்தின் 4000 தனிவீடுகள் பல்வேறு கட்டங்களை கடந்து பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டும் தற்போதும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளன.
10,000 தனிவீட்டுத் திட்டம்
இந்திய அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாக 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் அறிவித்தார். 10,000 தனி வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி 2018.02.16 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகராலயத்தில் 2018.08.12 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்துக்காக இந்திய நன்கொடையாக 9500 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் தகவல்களின்படி, (RTI/2022/04) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 4000 வீடுகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள 10,000 தனி வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா பிராந்தியத்தில் 5875 வீடுகளும் பதுளை பிராந்தியத்தில் 1400 வீடுகளும் கண்டி பிராந்தியத்தில் 975 வீடுகளும் மாத்தளை பிராந்தியத்தில் 250 வீடுகளும் கேகாலை பிராந்தியத்தில் 750 வீடுகளும் இரத்தினபுரி பிராந்தியத்தில் 350 வீடுகளும் குருநாகல் பிராந்தியத்தில் 100 வீடுகளும் காலி பிராந்தியத்தில் 100 வீடுகளும் மாத்தறை பிராந்தியத்தில் 50 வீடுகளும் களுத்துறை மற்றும் மொனராகலை பிராந்தியங்களில் தலா 75 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2022 ஆம் ஆண்டு 3525 வீடுகளும் 2023 ஆம் ஆண்டு 2531 வீடுகளும் 2024 ஆம் ஆண்டு 3944 வீடுகளும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளும் நிலையில் இன்னும் அவை தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் ஒரு வீடுகள் கூடமுழுமை பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள பணவீக்கம், கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை, விலையில் ஏற்ற இறக்கம், வீட்டுக்கான செலவு தொடர்பான மதிப்பீடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளாமை போன்றவற்றினால் வீட்டுத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
பயனாளிகளின் தெரிவு
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அமைச்சு என்பன இரு வகையான அளவுகோள்களின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்கின்றன. ஆத்தியாவசிய அளவுகோள்களின் அடிப்படையில் அனைத்து தகுதிகளையும் பயனாளிகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்படமாட்டார்கள். தோட்டத்தொழிலாளியாக பதிவு செய்திருத்தல், லயன் குடியிருப்புகள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் வசித்தல் மற்றும் புதிய வீடுக்கு செல்லுமுன் லயன் வீடுகளை கையளித்தல், தோட்டதொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தவராகவிருத்தல், கடந்த ஐந்து வருடங்களில் தோட்டத்தில் தடையின்றிய சேவை, நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வேறு வீடமைப்பு திட்டங்களில் பயனாளிகளாக இருக்கக்கூடாது. 50 வயதைவிட குறைந்தவராக இருத்தல் (குடும்பத்தில் வேறு ஒருவர் தோட்டத் தொழிலாளியாக இருக்கும்பட்சத்தில் 50 -55 வயது கவனத்தில் கொள்ளப்படும்) என்பன முக்கியமாகும்.
எனினும் மேற்கூறிய தகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகமாக பயனாளிகள் காணப்படுமாயின் புள்ளிகளின் அடிப்படையில் தகுதியான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த காலங்களில் பயனாளிகளின் தெரிவின்போது கட்சி ரீதியிலான பகிர்வு காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே குறித்த தெரிவு நடைமுறைகள் அமுல்படுத்துவதில் இன்னும் சந்தேகம் காணப்புடுகின்றது.
10,000 வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதா?
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 16.02.2020 அன்று அட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார். அத்தோடு இலங்கைக்கான இந்திய உதவி தூதுவர் திரேந்திர சிங் உள்ளிட்ட முன்னாள் பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி பயிர் செய்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், கணபதி கனகராஜ், பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார் அடங்களாக மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பரத் அருள்சாமி உள்ளிட்ட பலர். கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இத்தனி வீடுகளில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் அமைக்கப்படவிருந்தன. அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள், வீதி மற்றும் வடிகாலமைப்பு போன்றன சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் பின்னரான ஆட்சி மாற்றத்தினால் 10,000 வீட்டுத்திட்டம் முழுமையாக முடங்கியுள்ளது.
10,000 வீட்டுத்திட்டம் எப்போது அரம்பிக்கப்படும்?
2020 ஆம் ஆண்டு 10,000 வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னரான கொவிட் தொற்று பரவல் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் திட்டத்தை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்டுமானப் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு என்பவற்றினால் திட்டமிட்டவாறு ஒரு மில்லியன் ரூபாவில் புதிய வீடுகளை முழுமையாக அமைக்க முடியாது. பகுதியளவிலேயே அமைக்க முடியும். ஒரு வீட்டுக்கான நிதியினை அதிகரித்தால் 10,000 வீடுகளை விட குறைந்தளவான வீடுகளையே ஒதுக்க முடியும். அவ்வாறெனில் மேலதிகமான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும்.
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மேலதிக நிதியினை ஒதுக்குவது சாத்தியமற்றது. ஆத்துடன் வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்வதும் சவாலானது. புதிய திட்டங்கள் எவற்றையும் செயற்படுத்தவேண்டாமென அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10,000 வீடுகளை அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெருந்தொட்டங்களில் இருந்து புதிய வீடுகளை அமைப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்த பிரச்சினைகள், அரசியல் தலையீடு என்பவற்றினால் தனிவீட்டுத்திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைவாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் உதவிகள் பயனற்றதாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக