2020 ஆம் ஆண்டுக்கான கோடை ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இப்போட்டிகள் 2020 ஆம் ஆண்டு இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கொவிட் தொற்றின் காரணமாக பிற்போடப்பட்டு பார்வையாளர்கள் இன்றிய நிலையில் நடைபெற்று முடிந்திருந்தது. ஓலிம்பிக் போட்டியொன்று பிற்போடப்பட்டமை வராலாற்றில் முதல் தடவையாகும். இதேவேளை மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த இரு நிகழ்வுகளுக்கும் இலங்கை சார்பாக வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன் அவர்களின் முயற்சிக்கும் திறமைக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். அதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற வேளை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச செயற்பட்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் உட்பட ஏராளமானோர் பொதுமக்கள் பணத்தில் டோக்கியோ சென்றமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் பொதுமக்கள் பணத்தில் எவ்வித செலவுகளும் மேற்கொள்ளப்படவில்லையென அமைச்சு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக விளையாட்டு அமைச்சருடன் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் அனுசரணையாளர்களினால் வழங்கப்பட்ட நிதியில் சென்றுள்ளனர் என்றும் அரசாங்கத்தின் செலவில் அல்ல என்றும் அப்போதைய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 27.07.2021 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.
வெளிநாட்டு பயணத்தால் அரசின் நிதிக்கோ அல்லது திறைசேரிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிகழ்விற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, டி.வி.சானக்க மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் சென்றுள்ளனர். இந்தச் செலவை தனியார் துறையைச் சேர்ந்த பல அனுசரணையாளர்கள் ஏற்றுக்கொண்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்நிலையில் 2021 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீர வீராங்கனைகள் மற்றும் அலுவலர்களுக்கான செலவு விபரங்கள் தொடர்பில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிடம் கடந்த 2021.07.07 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான பதில் 2022 ஜூன் மாதம் வழங்கி வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வீரர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு 280,690,050 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கோடை ஒலிம்பிக் போட்டிகளுக்கு 131,928,100 ரூபாவும் பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 148,761,950 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசுத் தொகையாக மாத்திரம் 95,625,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - 2020
2020 டோக்கியோ கோடை ஒலிம்பிக் நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு சார்பாக அதன் செயலாளரும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளரும் சென்றிருந்தனர். இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினை பிரதிநித்துவப்புடுத்தி 23 பேர் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆறு பயிற்றுவிப்பாளர்களும் (4 பேர் பங்குபற்றியிருந்தனர்) 3 அணி முகாமையாளர்களும் உள்ளடங்குவர். அதேவேளை போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 9 வீர, வீராங்கணைகள் பங்குபற்றியிருந்தனர். இதற்கான அனுமதியினை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியிருந்தது.
ஓலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்த மூன்று வீர, வீராங்கணைகளுக்கு 46,360 அ.டொலர்கள் கொடுப்பனவாக (16,504,160 ரூபா) வழங்கப்பட்டிருந்தது. யுபுன் அபேகோன் (15,480 அ.அடாலர்), மல்கா ஜெஹானி (15,440 அ.டொலர்), மதில்டா கார்ல்சன் (15,440 அ.டொலர்) ஆகியோருக்கு இத்தொகை வழஙகப்பட்டிருந்தது.
தகுதிச்சுற்றில் பங்குபற்றிய ஏனைய ஆறு வீரர்களுக்கான கொடுப்பனவாக 62,520 அ.டொலர்கள் (22,257,120 ரூபா) வழங்கப்பட்டுளளன. நிலூகா குணரத்ன (10,520 டொலர்), மெத்திவ் அபேசிங்க (10,400 டொலர்), அனிகா கபூர் (10,320 டொலர்), சாமர நுவான் (10,520 டொலர்), நிமாலி லியனாராச்சி (10,320 டொலர்), எரந்தி எகொடவெல (10,440 டொலர்) ஆகியோருக்கே இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் யுபுன் மற்றும் கிளடியோ ஆகியோருக்கான விமான பயணங்களுக்கு 3,311,160 ரூபாவும் மெத்திவ் அபேசிங்கவுக்கு 2,805,700 ரூபாவும் அனியா கபூருக்கு 1,035,600 ரூபாவும் விமான பயணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்காக 8,369,060 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
2020 டோக்கியோ கோடை ஒலிம்பிக் நிகழ்வில் பங்குபற்றிய நான்கு பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுப்பனவுகளாக 20,800 அ.டொலர்கள் (7,404,800 ரூபா) வழங்கப்பட்டுள்ளன. ரஞ்சன தரங்க (5000 டொலர்), மனோஜ் அபேசிங்க (5400 டொலர்), அமல் ரத்நாயக்க (5400 டொலர்), சுஜித் அபேசேகர (5000 டொலர்) ஆகியோருக்கே இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஒலிம்பிக் நிகழ்வில் பங்குபற்றியிருக்காத இரண்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுப்பனவுகளாக 10,000 அ.டொலர் (3,560,000 ரூபா) வழங்கப்பட்டுள்ளன. லுவி கருனாரத்ன (5000 டொலர்), யு.எம்.பிரேமலால் (5000 டொலர்) ஆகியோருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டுத்துறை அமைச்சினை பிரதிதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஆறு நாட்களுக்கு 2012.5 அ.டொலர்கள் (716,450 ரூபா) வழங்கப்பட்டுள்ளது.
டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகள் - 2020
2021 ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 வீர, வீராங்கனைகளும் 9 அலுவலர்களும் பங்குபற்றுவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 6 பயிற்றுவிப்பாளர்களும் உள்ளடங்குவர்.
பரா ஓலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்த இரண்டு வீரர்களுக்கு 31,040 அ.டொலர்கள் கொடுப்பனவாக (11,050,020 ரூபா) வழங்கப்பட்டிருந்தது. பிரியந்த ஹேரத் (15,520 அ.டொலர்), சமித துலான் (15,520 அ.டொலர்) ஆகியோருக்கு இத்தொகை வழஙகப்பட்டிருந்தது.
தகுதிச்சுற்றில் பங்குபற்றிய ஏனைய ஏழு வீரர்களுக்கான கொடுப்பனவாக 74,640 அ.டொலர்கள் (26,571,840 ரூபா) வழங்கப்பட்டுளளன. பிரியமல் ஜயகொடி (10,520 டொலர்), சம்பத் பண்டார (10,720 டொலர்), ஹெட்டயாராச்சி (10,520 டொலர்), ரஞ்சன் தர்மசேன (10,720 டொலர்), பாலித பண்டார (10,720 டொலர்), சுபசிங்க (10,720 டொலர்), குமுது பிரியங்க (10,720 டொலர்) ஆகியோருக்கே இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் நிகழ்வில் பங்குபற்றிய ஆறு பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுப்பனவுகளாக 34,120 அ.டொலர்கள் (12,146,720 ரூபா) வழங்கப்பட்டுள்ளன. சுஜித் ஜயலால் (5700 டொலர்), விக்ரமசிங்க (5720 டொலர்), வெலிகல (5720 டொலர்), அழகியவண்ண (5520 டொலர்), ரத்னாயக்க (5720 டொலர்), நிசாந்த ஹப்புஹாமி (5720 டொலர்) ஆகியோருக்கே இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை பரா ஒலிம்பிக் நிகழ்வில் பங்குபற்றியிருக்காத பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கு கொடுப்பனவாக 5000 அ.டொலர் (1,780,000 ரூபா) வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 17 பேருக்கான பயணக்காப்புறுதிக்காக 110,500 ரூபாவும் உபகரணங்களின் வாடகை மற்றும் கொள்வனவுக்காக 147,620 ரூபாவும் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுக்காக வீரர்களுக்கான உடைகள் மற்றும் கழுத்துப்பட்டிக்கு 340,000 ரூபாவும் பாதணிகளுக்கு 102,000 ரூபாவும் பத்திக் சாரம் மற்றும் சட்டைக்கு 85,000 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொற்று திரவ நீக்கி, முகக்கவசம் என்பவற்றுக்கு 29,750 ரூபாவும் 7 நாட்களுக்கு முன்னரான பி.சி.ஆர். பரிசோதனைக்கு 773,500 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பரா ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் பரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் மற்றும் குறிப்பிட்ட இடங்களை பெற்றுக்கொண்ட வீரர்களுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் 76.5 மில்லியன் ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்கப் பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்துக்கு 50 மில்லியன் ரூபாவும் வெண்கல பதக்கத்தினை வென்ற சமித் துலானுக்கு 20 மில்லியன் ரூபாவும் 5 ஆம் இடத்தை பெற்ற பாலித பண்டாரவுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் ஏனைய நான்கு வீரர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கு 19,125,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2020 டோக்கியோ கோடை ஒலிம்பிக் போட்டிகளுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வீரர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு 131,928,100 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 148,761,950 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசுத் தொகையாக மாத்திரம் 95,625,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தாலும் அவற்றுக்கான அரசாங்க செலவுகள் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் இல்லை.
இலங்கையின் தேசிய அணிகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரமே உள்ளீர்ப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு கவனம் செலுத்துகின்றது. ஏனைய இன மக்களை புறந்தள்ளி செயற்படுவதாகவே தெரிகின்றது. தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பல நிகழ்வுகளிலும் வெற்றியீட்டிய தமிழர்களுக்கு ஒரு ஊக்குவிப்பினையும் வழங்காத அரசாங்கம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்று வருவதற்கு மாத்திரம் கோடிகளில் செலவுகளை மேற்கொள்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக