கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

10 ஆகஸ்ட், 2022

கிளங்கன் வைத்தியசாலைக்கான வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்


157 வருடகால வரலாற்றைக்கொண்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் புதிய வளங்களை கொண்டு செயற்பட்டு வருவதாக அறியப்பட்டாலும் வெளி நோயாளர்கள் இருந்து சிகிச்சை பெறுவதற்கேற்ற வசதிகளோ அல்லது விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளையோ பெற்றுக்கொள்வது கடினமான செயலாகவே இருக்கின்றது. பலகோடி ரூபாவில் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் நோயாளர்கள் தங்களுடைய தேவையினை பூர்த்திசெய்யக்கூடிய நிலையினை சுகாதார அமைச்சு ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு கிளங்கன் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டாலும் இறுதியில் வைத்தியசாலையினை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென ஒரு தரப்பும் மாகாண சுகாதார அமைச்சு பொறுப்பேற்க வேண்டுமென ஒரு தரப்பும் வாதாடிய நிலையில் இறுதியில் மத்திய மாகாண சுகாதார அமைச்சு வைத்தியசாலையினை பொறுப்பேற்று எவ்வித பராமரிப்பு நடவடிக்கைகளையும் முயாக பேணாமலும் ஆளணி பற்றாக்குறையுடனும் வைத்தியசாலை செயற்படுவதற்கு காரணமாகியுள்ளது. 

இந்நிலையில் கிளங்கன் வைத்தியசாலையின் தற்போதைய வளங்கள் மற்றும் ஆளணி தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 192 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 தாதியர் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் 89 பேர் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 64 வைத்திய அதிகாரி பதவிகளுக்கு 52 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு மொத்தமாக 43 பதவி நிலைகள் காணப்படுவதுடன் 36 பதவிகளுக்கான 192 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

வைத்தியசாலைக்கு பாரிய வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் முழுமையான ஆளணி வளம் இன்றி சேவைகளை பெற்றுக்கொடுப்பது இயலாதகாரியமாகும். வைத்தியசாலையில் வருடாந்தம் 24,500 பேர் தங்கி சிகிச்சை பெறுவதுடன் 124,500 பேர் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். 

இந்திய அரசாங்கத்தின் 120 கோடி ரூபா நிதியுதவியில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் அப்போதைய சுகாதார அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் 2011 ஜூன் மாதம் 4 ஆம் திகதி நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அன்றைய இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டார்.


நவீன முறையில் மூன்று மாடிக் கட்டடத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடமானது இந்திய அரசின் 120 கோடி ரூபா நிதியுதவியில் 150 கட்டில்களை கொண்டதாக உள்ளது. சத்திரசிகிச்சைப் பிரிவு, இரண்டு லிப்ட்கள், சமையலறை, சலவையறை, ஒன்றுகூடலறை, வைத்தியர்களுக்கான ஓய்வறை, சிறுவர் பூங்கா, வைத்தியர் விடுதிகள் என சகல வளங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மானப் பணிகளுக்கான சகல வளங்களும் பொருட்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்திய பணியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் 2013  ஆண்டு பூர்த்தியடைந்தது. எனினும் 2017 ஆம் ஆண்டே மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் வைத்தியசாலைக்கான பெயர்மாற்றம், யார் திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு, பற்சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒட்சிசன் முறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திரகிகிச்சை பிரிவு என்பவற்றை தரமுயர்த்துவதற்காக 2020 ஆம் ஆண்டு 1,538,226.97 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. ஆத்துடன் அறுவைசிகிச்சை, குழந்தை மருத்துவம், பிறப்புக்கு முந்தைய சிகிச்சை, குடும்ப கட்டுப்பாடு, மகப்பேறு, கண், குழந்தை நலன், மார்பகம், மனநல மருத்துவம், தோல் மருத்துவம், நோய்தடுப்பு போன்ற சிகிச்சைகளுக்கான கிளினிக்குகளும் நடத்தப்படுவதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

எனினும் தோட்டபுற மக்களின் சிகிச்சை வசதிகளை கருத்தில் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை, சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அசமந்தமாக செயற்படுகின்றது. குறித்த வைத்தியசாலைக்கு வருடாந்தம் ஒரு இலட்சத்துக்கு அதிகமான வெளிநோயாளர்க்ள இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். வரும் வெளி நோயாளர்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டும். வெளி நோயாளர்கள் அமர்வதற்கான வசதிகள் கூட ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. இன்னும் பாதைகளிலேயே அவர்கள் அமரவேண்டிய நிலை காணப்படுகின்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் நோயாளர்கள் தொடர்பில் சிந்திக்காமையே இதற்கான காரணமாகும். தற்போதைய நிலையில் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்ததாக வளங்கள் கொண்ட வைத்தியசாலையாக கிளங்கன் வைத்தியசாலை மாத்திரமே காணப்படுகின்றது. எனினும் முகாமைத்துவ சீர்கேடுகள் நோயாளர்களுக்கான வசதிகளை மட்டுப்படுத்துகின்றன. 

பெரும்பாலான வெளிநோயாளர்களுக்கு இங்கு கிளினிக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் அதிக தூரத்தில் இருந்து வருபவர்கள் அதிகாலை 5 மணிமுதல் வரிசையில் காத்திருந்து சிகிச்சைகள் பெறவேண்டிய தேவை இருக்கின்றது. ஆவர்களுக்கான ஓய்வு அறைகள் இல்லை. எனவே அதற்கேற்ற வகையில் நோயாளர்களுக்கான வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதனால் நோயாளர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதில் கிளங்கள் வைத்தியசாலை நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை முன்னதாக இங்கு பணியாற்றும் வைத்தியர்கள் சிலர் வைத்தியசாலை கடமை நேரத்தை விடவும் அதிகமாக தனியார் கிளினிக்குகளில் செலவளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வைத்தியசாலை ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பில் தகவல் அறியும் உpமைச்சட்டம் மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் உரிய நேரத்தில் தகவல்களை வழங்குவதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

அதன்படி வைத்திய அதிகாரிக்கு நாளொன்றுக்கு 6 மணித்தியாலங்கள் வைத்தியசாலையில் கடமையாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. தாதி உத்தியோகத்தர்களுக்கு 6 மணித்தியாலங்களும் இணை வைத்திய சேவை உத்தியோகத்தர்களுக்கு 8 மணித்தியாலங்களும் கடைநிலை ஊழியர்களுக்கு 8 மணித்தியாலங்களும் அலுவலக ஊழியர்களுக்கு 7.45 மணித்தியாலங்களும் கடமை நேரமாக சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நேரங்களில் எவரும் கடமையில் இருக்கவில்லையாயின் நோயாளர்களினால் முறைபாடுகளை பதிவு செய்ய முடியும்.

டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலைக்கு வைத்திய சிகிச்சைகளுக்காக வருடாந்தம் ஒப்பீட்டளவில் குறைந்தளவான நிதி ஒதுக்கீடுகளே மேற்கொள்ளப்படுகின்றமையை அறியமுடிந்தது. நீரிழிவு நோய், திரவ ஆகாரத்தை மாத்திரம் உட்கொள்ளும் நோயாளர்கள், புரோட்டின் அதிகமான நோயாளர்கள், குழந்தை மற்றும் ஏனைய நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக 2015 ஆம் ஆண்டு 3,799,091.76 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 5,660,055.18 ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 6,597,654.33 ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 7,776,760.11 ரூபாவும் 2019 ஆம் ஆண்டு 8,533,253.93 ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 6,118,162.15 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியினை விடவும் மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கு அதிக செலவீனங்களை கிளங்கன் வைத்தியசாலை எதிர்கொண்டுள்ளது. வைத்தியசாலையின் மின்சார கட்டணங்களுக்காக 2017 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 31,535,383.83 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2017 இல் 7,405,777.22 ரூபாவும் 2018 இல் 8,691,964.01 ரூபாவும் 2019 இல் 8,507,584.47 ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 6,930,058.13 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2017 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வைத்தியசாலையின் தொலைபேசி கட்டணங்களுக்காக 1,909,752.34 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 2017 இல் மூன்று தொலைபேசி இணைப்புகளுக்கு 452,763.8 ரூபாவும் 2018 இல் மூன்று இணைப்புகளுக்கு 480,032.77 ரூபாவும் 2019 இல் நான்கு இணைப்புகளுக்கு 560,296.38 ரூபாவும் 2020 இல் 5 இணைப்புகளுக்கு 416,659.39 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலையானது மாகாண சுகாதார அமைச்சின் கீழாகவே செயற்படுகின்றது. மாகாண அமைச்சினால் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டாலும் நோயாளர்களுக்கான சிறந்த சேவையினை வழங்குவதற்கு நிதியினையும் வளங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. மஸ்கெலியா ஆதார வைத்தியசாலை முடங்கியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக பெரும்பாலானோர் கிளங்கன் வைத்தியசாலைக்கே செல்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக