நாட்டில் அவ்வப்போது நிலவும் ஆட்சி மாற்றம், அரசியல் பழிவாங்கல் மற்றும் பாரிய ஊழல் குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நிலவும் அழுத்தங்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்கு வருவது பெரும்பாலும் சாத்தியமில்லாவையாக இருக்கின்றது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும். இலங்கையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பெரும்பாலும் பாரிய கண்துடைப்பாகவே அமைந்துள்ளன. ஆனால் அவற்றுக்காக கோடிக்கணக்கில் மக்கள் பணம் செலவு செய்யப்படுவது தனிக்கதை.
இறுதியாக ஜூன் 6 ஆம் திகதி 2022-03-31 மற்றும் 2022-05-15 திகதிகளுக்கு இடையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் திரு பீ.பீ. அலுவிஹாரே தலைமையிலான ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ் வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனெக ஹேரத் இதன் செயலாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றுக்கு செலவிடப்பட்ட நிதி தொடர்பிலான விடயங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து (PS/RTI/04) பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதுவரை 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆறு ஆணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. (இறுதி ஆணைக்குழு நீங்கலாக) பின்வரும் ஆணைக்குழுக்கள் அவ்வாறு நியமிக்கப்பட்டவையாகும்.
- பாரியளவான கொள்ளை, து~;பிரயோகம், அரசாங்க வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்கள் என்பனவற்றை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (01.02.2016)
- மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்திருந்த குப்பை மேட்டு மலை விழுந்தமை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகள் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதிக் குழு. (26.04.2017)
- 2015 பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி விநியோகஸ்தர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளல், விசாரணை செய்தல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (27.01.2017)
- வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒழுங்கற்ற செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை மற்றும் பரிசோதனை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (02.02.2018)
- 2015 ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31 அம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரசாங்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் து~;பிரயோகம், கொள்ளையடிப்புகள் தொடர்பில் தேடியறியும் விசாரணை ஆணைக்குழு. (01.01.2019)
- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து, முழு பரிசோதனை கொண்ட விடயங்களை அறிக்கையிடல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (21.09.2019)
- 2015 ஜனவரி 8 ஆம் திகதி தொடங்கி 2019 நவம்பர் 16 ஆம் திகதி முடிவடைந்த காலப்பகுதிக்குள் நடைபெற்றதாகக் கூறப்படும் அரசியல் ரீதியான பழிவாங்கல் தொடர்பில் ஆய்வு செய்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (09.01.2020)
- இலங்கை மத்திய வங்கி மூலம் ஒழுங்கு முறை செய்யப்பட்ட ஈ.டீ.ஐ. பினான்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒழுங்கற்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் விசாரணை செய்தல் மற்றும் விசாரணையின்பின் அறிக்கையிடல் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (09.01.2020)
- மக்களின் நலனுக்காக நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களை இலகுபடுத்துதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு. (07.01.2021)
- முழுமையான விசாரணைக் குழுவின் கீழ் மற்றும் குழுக்களிடையே முடிவுசெய்யப்பட்ட மதிப்பீடு மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு. (21.01.2021)
- ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலக காரியாலயத்தினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று விசாரணை நடத்துதல் மற்றும் விசாரணையின் பின் அறிக்கை தயாரித்தல் மற்றும் முறையான பரிந்துரை முன்வைத்தலுக்கான விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு. (29.01.2021)
- இலங்கை சுங்கம் தொடர்பில் வெளியிடப்படுகின்ற பலவாறான முறைப்பாடுகள் மற்றும் இடம்பெற்றதாகக் கருதப்படும் து~;பிரயோக செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கற்ற செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல், விசாரணை மேற்கொண்டு அறிக்கையிடல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு. (24.02.2021)
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் 2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 44 ஆணையாளர்களும் 128 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியுள்ளனர்.
- 2015 ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31 அம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரசாங்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் து~;பிரயோகம், கொள்ளையடிப்புகள் தொடர்பில் தேடியறியும் விசாரணை ஆணைக்குழுவில் மூன்று ஆணையாளர்களும் 19 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஐந்து ஆணையாளர்களும் 26 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- அரசியல் ரீதியான பழிவாங்கல் தொடர்பில் ஆய்வு செய்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மூன்று ஆணையாளர்களும் 18 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- இலங்கை மத்திய வங்கி மூலம் ஒழுங்கு முறை செய்யப்பட்ட ஈ.டீ.ஐ. பினான்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒழுங்கற்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மூன்று ஆணையாளர்களும் 11 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- மக்களின் நலனுக்காக நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களை இலகுபடுத்துதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் 18 ஆணையாளர்களும் ஒன்பது உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- முழுமையான விசாரணைக் குழுவின் கீழ் மற்றும் குழுக்களிடையே முடிவுசெய்யப்பட்ட மதிப்பீடு மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மூன்று ஆணையாளர்களும் 16 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- ஊழல் எதிர்பபு குழு மற்றும் அதன் செயலக காரியாலயத்தினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மூன்று ஆணையாளர்களும் 18 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
- இலங்கை சுங்கம் தொடர்பில் வெளியிடப்படுகின்ற பலவாறான முறைப்பாடுகள் மற்றும் இடம்பெற்றதாகக் கருதப்படும் து~;பிரயோக செயற்பாடுகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆறு ஆணையாளர்களும் 11 உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
இதேவேளை 2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரால் நியமிக்கப்பட்ட 12 ஆணைக்குழுக்களுக்கு 520,459,200 ரூபா (ஐம்பத்திரண்டு கோடியே நான்கு இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து இருநூறு ரூபா) செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களுக்காக 2015 ஆம் ஆண்டு 43,000,000 ரூபாவும் 2016 ஆம் ஆண்டு 41,774,500 ரூபாவும் 2017 ஆம் ஆண்டு 55,000,000 ரூபாவும் 2018 ஆம் ஆண்டு 33,000,000 ரூபாவும் 2019 ஆம் ஆண்டு 92,000,000 ரூபாவும் 2020 ஆம் ஆண்டு 129,500,000 ரூபாவும் 2021 ஆம் ஆண்டு 126,184,700 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பலகோடி ரூபா மக்கள் பணத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் முழுமையாக இதுவரை நாட்டில் அமுல்படுத்தப்பட்டது கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் எவையும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் விசாரணைகள் முன்னெடுத்து பரிந்துரைகளை சமர்ப்பித்தபோதும் இதுவரை பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்துடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித ஆர்வத்தினையும் முன்னைய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக