கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

10 ஆகஸ்ட், 2022

கடவுச்சீட்டுக்களுக்காக காத்திருக்கும் மக்கள்





  • இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதங்களில் 288,645 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
  • 2015 - 2021 ஆம் ஆண்டு வரையில் 3,480,212 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்.
  • 2015 -2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருநாள் சேவையூடாக 1,483,018 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்.
  • கடவுச்சீட்டு விநியோகத்தின் மூலம் கடந்த 5 வருடங்களில் 1812 கோடி ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
  • கடந்த 5 வருடங்களில் 1,661,535 பேர் புதிதாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் ஐந்து மாதங்களில் 288,645 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் பிரதிக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார். இவ்வருடம் ஜனவரியில் 52,278 கடவுச்சீட்டுக்களும், பெப்ரவரியில் 55,381, மார்ச் மாதம் 74,890, ஏப்ரல் மாதத்தில் 53,151, மே மாதம் 52,945 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தினசரி 1500 க்கும் அதிகமானோர் திணைக்களத்தில் சேவையாற்றி வரும் நிலையிலும் மிக நீண்டவரிசையில் பலர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இம்மாதம் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 10,000  ஆகும். இருப்பினும், கடந்த சில நாட்களில் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பான விடயங்களை அறிவதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

இலங்கையில் அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு (சாதாரண கடவுச்சீட்டு, இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு), இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பௌத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு (அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது) என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு தனியான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. 

2015 - 2021 ஆம் ஆண்டு வரையில் 3,480,212 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2015 ஆம் ஆண்டு 491,367 கடவுச்சீட்டுக்களும் 2016 இல் 658,725 கடவுச்சீட்டுக்களும் 2017 இல் 563,044 கடவுச்சீட்டுக்களும் 2018 இல் 603,732 கடவுச்சீட்டுக்களும் 2019 இல் 571,373 கடவுச்சீட்டுக்களும் 2020 இல் 209,411 கடவுச்சீட்டுக்களும் 2021 இல் 382,560 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. (மேலதிக தகவல்கள் அட்டவணையில்) ஒப்பீட்டளவில் 2020 ஆம் ஆம் ஆண்டு கொவிட் தொற்று பரவல் காலப்பகுதியில் கடவுச்சீட்டுக்களின் விநியோகம் குறைந்தளவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் 2462 இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடவுச்சீட்டில் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலேயொழிய, இக்கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான ஆட்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்களுக்காக இக்கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.


அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபைத் தலைவர்கள், உள்ளுராட்சி சபைத் தலைவர்கள், நாடளாவிய சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இனங்கண்ட பணியாள் குழாமிற்கு வழங்கப்படும் 9771 உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் 2015 -2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருநாள் சேவையூடாக 1,483,018 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2015 ஆம் ஆண்டு 265,392 கடவுச்சீட்டுக்களும் 2016 இல் 260,985 கடவுச்சீட்டுக்களும் 2017 இல் 269,854 கடவுச்சீட்டுக்களும் 2018 இல் 293,057 கடவுச்சீட்டுக்களும் 2019 இல் 204,502 கடவுச்சீட்டுக்களும் 2020 இல் 48,394 கடவுச்சீட்டுக்களும் 2021 இல் 140,834 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் சேவையூடாக இதுவரை 2000 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது 3500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கடந்த 5 வருடங்களில் 1,661,535 பேர் புதிதாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். நாட்டில் கொவிட் தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2015 இல் 265,020 கடவுச்சீட்டுக்கள் புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 2016 இல் 294,338 கடவுச்சீட்டுக்களும் 2017 இல் 272,490 கடவுச்சீட்டுக்களும் 2018 இல் 289,390 கடவுச்சீட்டுக்களும் 2019 இல் 276,371 கடவுச்சீட்டுக்களும் 2020 இல் 87,463 கடவுச்சீட்டுக்களும் 2021 இல் 176,463 கடவுச்சீட்டுக்களும் புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்ட மாவட்ட அடிப்படையிலான தரவுகள் கோரிய போதும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மாவட்ட அடிப்படையில் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காது. பிராந்திய அலுவலகங்களின் மூலம் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பான விபரங்களை தரமுடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் கண்டி, வவுனியா, மாத்தறை, குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. குறித்த பிராந்திய அலுவலகங்களின் மூலம் 2015 - 2021 வரையான காலப்பகுதியில் 665,611 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2015 ஆம் ஆண்டு 78,670 கடவுச்சீட்டுக்களும் 2016 இல் 100,299 கடவுச்சீட்டுக்களும் 2017 இல் 92,416 கடவுச்சீட்டுக்களும் 2018 இல் 112,260 2019 இல் 137,500 கடவுச்சீட்டுக்களும் 2020 இல் 51,303 கடவுச்சீட்டுக்களும் 2021 இல் 93,163 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கண்டி பிராந்திய அலுவலகத்தில் இருந்து 268,263 கடவுச்சீட்டுக்களும் வவுனியா அலுவலகத்தில் 151,290 கடவுச்சீட்டுக்களும் மாத்தறை அலுவலகத்தில் 159,667 கடவுச்சீட்டுக்களும் குருநாகல் அலுவலகத்தில் 86,391 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

கடவுச்சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒரு விண்ணப்பத்துக்கு 1000 ரூபாவும் புதிய கடவுச்சீட்டை ஒருநாள் சேவையில் பெற்றுக்கொள்வதற்கு 15,000 ரூபாவும் சாதாரண சேவைக்கு 3,500 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது. 

கடவுச்சீட்டு விநியோகத்தின் மூலம் கடந்த 5 வருடங்களில் 1812 கோடி ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 18,124,787,120 ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது. இவற்றில் 2015 இல் 2,104,719,692 ரூபாவும் 2016 இல் 2,602,701,826 ரூபாவும் 2017 இல் 2,639,465,409 ரூபாவும் 2018 இல் 2,827,558,600 ரூபாவும் 2019 இல் 3,809,859,195 ரூபாவும் 2020 இல் 1,138,380,960 ரூபாவும் 2021 இல் 3,002,101,438 ரூபாவும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

எனினும் கடவுச்சீட்டை அச்சடிப்பதற்கான செலவுகள் தனியாக கணக்கிடுவது இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றுக் கடவுச்சீட்டுக்களுக்கான செலவு, உபகரணங்களுக்கான முகாமைத்துச செலவு, மென்பொருளுக்கான செலவு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஏனைய அவசியமான செலவுகள் என சகல விடயங்களும் உள்ளடங்குவதாகவும் இவற்றுக்கான செலவுகளை தனித்தனியாக கணக்கிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளமையின் காரணமாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் செல்வதில் இலங்கையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த வருடத்தை விட 100 வீத அதிகரிப்பு எனவும் 2021ஆம் ஆண்டு முழுவதுமாக 22,000 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாகவும் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வருமானம் இழந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பலர் நாட்டைவிட்டு தொழிலுக்காக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை அரசாங்கமும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களை ஊக்குவித்து வருகின்றது. இது நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்காகும். தற்போது அரச ஊழியர்களாக கடமையாற்றுபவர்களுக்கும் ஊதியமில்லா விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இதனால் குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வாழ்க்கைச் செலவினை சமாளிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் செல்வதில் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக தினந்தோறும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக் கணக்கானோர் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் காத்திருக்கின்றனர். எனினும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச அலுவலகங்களில் பணியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவையின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியினை சமாளிப்பதற்கு வெளிநாடு செல்வதே ஒருவழியென பலரும் தீர்மானித்துள்ள நிலையில் இலங்கையை விட்டு பலரும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக