பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் தொடர்பான விடயம் தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் நிலையில் தற்போது அமுலில் இருக்கின்ற கூட்டு ஒப்பந்தமுறை நீக்கப்பட வேண்டுமெனவும் கூட்டு ஒப்பந்த பங்காளிகள் அவற்றிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இ.தொ.கா. தலைமைகளும் அவ்வப்போது கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இறுதியாக இடம்பெற்ற தொழிலாளர்களின் சம்பளவுயர்வு பேச்சுவார்த்தையில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதியும், பிரதமரும் எந்நேரமும் இருந்து வந்திருக்கின்றனர். எனினும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை, ஆகவே அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்து அமைச்சரவை அனுமதி பெற்று 1000 ரூபா வழங்கும் பட்சத்தில் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பெருந்தோட்டங்கள் அரசாங்கத்திடமிருந்து தனியாருக்கு கைமாற்றப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்று தொடக்கம் தொழிலாளர்களின் நலன்கள் உட்பட சம்பள விவகாரங்களை தீர்மானிக்கும் பொறிமுறையாக கூட்டு ஒப்பந்தம் இருந்து வருகின்றது.
சமீப காலங்களில் கூட்டு ஒப்பந்தமானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன கட்டமைப்பில் பாரிய தாக்கத்தினை செலுத்தி வருவதினை அவதானிக்க முடிகின்றது. தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகளும் நிலைமைகளும், அவர்களின் முறையான உரிமைகளும் பொறுப்புக்களும் தொழில் பிணக்குகளைக் தீர்க்கும் வழிவகை ஆகியவை சம்பந்தமாக தொழில் வழங்குநர், தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கிடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமே கூட்டு ஒப்பந்தமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் மற்று தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாக கொண்ட தொழிற்சங்கங்களுக்குமிடையே கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் யார் பேரம் பேசத் தகுதியானவர்கள் என்பதை தொழில் அமைச்சர் தீர்மானிப்பார். ஒரு தொழிற்துறையில் 40% அல்லது அதனிலும் அதிகமான உறுப்புரிமையைக் கொண்ட தொழிற்சங்கங்கள் கட்டாயம் கூட்டு ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென 1999 ஆம் ஆண்டு தொழில் பிணக்குச் சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தம் குறிப்பிடுகின்றது (கூட்டு ஒப்பந்தமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், சு.விஜயகுமார்).
தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர் சார்பாக இரண்டு தொழிற்சங்கங்களும் ஒரு தொழிற்சங்கக் கூட்டுச் சம்மேளனமும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம் பேசும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். அவையாவன இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பல சிறிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பனவாகும்.
கூட்டு ஒப்பந்தம் ஒரு குறித்த தொழிற்துறையில் மேற்கொள்ளப்படும் போது, தொழில் ஆணையாளர் அதனை ஏற்று அரச வர்த்தமானியில் வெளியிடும் போது அது சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும். கூட்டு ஒப்பந்தம் எழுத்தில் இருக்க வேண்டும் என்பதுடன் உரிய தரப்புக்கள் இரண்டாலுமோ அல்லது பிரதிநிதிகளாலோ கைச்சாத்திடப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கைச்சாத்திடும் தரப்பு வெளியேறுமாயின் ஒருமாத காலத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எழுத்து மூல அறிவிப்பினை விடுக்க வேண்டும்.
1998 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான 21 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 12 கூட்டு ஒப்பந்தங்களில் 11 கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுடைய சம்பள விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளன. ஆனால் அவற்றை தவிர்த்து மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில், தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஊதியங்கள் மற்றும் விலைபங்கு, மேலதிக நேரவேலை, வேலைநாட்களும் சம்பள முற்பணங்களும், வேலை ஏற்பாடுகள், பணி நிலையும் அது தொடர்பான பிரச்சினைகளும், மிகை விகிதங்கள், வருகை போனஸ், சுகயீன விடுமுறை, ஓய்வு பெறும் வயது, மகப்பேறு நலன்கள், தொழில் முகாமைத்துவ உறவுகள், ஒழுக்காற்று நடவடிக்கை, குறைஃபிணக்கு நடைமுறை, தொழிலுறவு என 20 சரத்துக்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் அவை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
1992 ஆம் ஆண்டு தோட்டங்களின் முகாமைத்துவம் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டதால், தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் வேதனச்சபைகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டே இடம்பெற்றன. 1994 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் வேதனம் 72.24 சதத்திலிருந்து 83 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது. 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வரவு – செலவு திட்டப்படி என்ற வகையில் 8.00 ரூபாவினை தொழிலாளருக்கும் செலுத்தவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்த நிலையிலும் வாழ்க்கைச் செலவுப்படியொன்று செலுத்தப்பட்டு வருவதால் இதனை வழங்க முடியாதென கம்பனிகள் மறுப்புத் தெரிவித்திருந்தன. அதேவேளையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் 500 ரூபா வேதன உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் தனியார்த்துறை தொழில் வழங்குநரும் 400 ரூபாவினை வேதன உயர்வை வழங்கவேண்டுமெனவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 200 ரூபா அதிகரிப்பை வழங்கவேண்டுமெனவும் விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் வேதன உயர்வை வழங்கியிருந்த தொழில் வழங்குநர்கள் இத்தொகையை செலுத்த தேவையில்லையென கூறப்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
1996 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய மதிப்பீட்டில் இலங்கையில் ஒரு தொழிலாளி இரண்டு மணித்தியாலம் உழைத்தால் தான் ஒரு கிலோ அரிசியை வாங்க முடியும். ஆயால் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளில் இரு கிலோ அரிசியைப் பெற நாற்பத்து மூன்று நிமிடங்கள் உழைத்தால் போதும். மலேசியாவில் முப்பது நிமிடங்கள் உழைத்தால் ஒரு கிலோ அரிசியை பெறக்கூடிய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டில் 72.24 ரூபாவாகவிருந்த நாட்சம்பளம் 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அன்று ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலையீட்டினால் அது சாத்தியமாகியிருந்தது. 1994 ஆம் ஆண்டுக்குப்பிறகு தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொண்டமையினால் சம்பள விடயங்களில் தொழிற்சங்கங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளுக்கு இலகுவான விடயமாகவிருந்தது. 1990 இல் தனியார்மயப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதே வேதனங்கள், வேலைநிலைகள் என்பன தொடர்பில் கூட்டு ஒப்பந்தம் மூலமே ஆராயப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னர் 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன்பாக அரசாங்கத்திற்கு அதிக வரி செலுத்தும் துறையாக பெருந்தோட்டத்துறை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப்பின்னரான காலப்பகுதியில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும் ஏற்றுமதி வரியும் நீக்கப்பட்டிருந்தது. இந்த வரிகள் மூலம் 1990 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு தேயிலை உற்பத்தியில் 1536.1 மில்லியனும் இறப்பர் உற்பத்தியில் 747 மில்லியனும் என மொத்தமாக 2283.1 மில்லியன் வருமானமாக கிடைத்திருந்தது. இவ்வரிகள் தனியார் பெருந்தோட்டத்துறைக்கு நீக்கப்பட்டதால் 2002 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு 5 பில்லியன் ரூபாவுக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டதுடன் அது கம்பனிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கும்போது கம்பனிகள் ந~;டத்தில் இயங்குவதாகவே முதலாளிகளால் தெரிவிக்கப்படுகின்றன.
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் ஏற்றுமதி வரி என்பன நீக்கப்பட்டதன் பின்னர் தேயிலைக்கு செஸ் வரி மாத்திரமே விதிக்கப்பட்டது. 08.05.1998 ஆம் ஆண்டு இறப்பர் மீதான செஸ் வரி நீக்கப்பட்ட பின்னர் கம்பனிகள் இன்னும் அதிக இலாபத்தை பெற்றுக்கொண்டனர். 1997 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு இறப்பருக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி மூலம் 344.2 மில்லியன் ரூபா வருமானமா கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வரிகள் நீக்கப்பட்டமையால் பிற்காலத்தில் இவ்வருமானங்களை கம்பனிகளே அனுபவிக்கும் சூழல் உருவானது.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஒப்பந்தத்திலேயே இரண்டு வருடங்களுக்கு சம்பள உயர்வு கோரவோ, அதற்காக வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடவோ முடியாதென கூறப்பட்டிருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொழிலாளர்கள் 10 நாள் வேலை நிறுத்தம் செய்து, இந்த ஒப்பந்தத்தை மீறியதால் முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. தொழிலாளர்களுக்கு இவ்வேலை நிறுத்தத்தால் எதுவித பயனும் ஏற்படவில்லையென்பதுடன் 10 நாட்களுக்கான ஊதியத்தினை இழந்திருந்தனர். ஆனால் சகல மலையகத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. மீண்டும் 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சம்பளவுயர்வுகோரி சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 23 நாட்களுக்கு மேலாக நீடித்த இப்போராட்டமானது, ஒப்பந்தங்களில் சில திருத்தங்களை இணைத்ததன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு 1998 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது கூட்டு ஒப்பந்தம் தொடக்கம் இன்று வரையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் குறித்த ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் வேதனம் மற்றும் சேமநலன்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் முரண்பட்டும் போராட்டங்களை முன்னெடுத்துமே தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் அறைகுறை தீர்வுகளே. இவ்வாறு தொழிலாளர்களை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும் கூட்டு ஒப்பந்த முறை தேவைதானா என்ற கேள்வி நியாயமானது.
மறுபுறம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் விலகுமாயின் தொழிலாளர்களின் வேதனம் மற்றும் சேமநலன்களை தீர்மானிப்பதற்கு சட்ட ரீதியான புதிய பொறிமுறை இருக்கின்றனவா என்பது தொடர்பாகவும் ஆராய வேண்டும். எவ்வித அடிப்படையும் இல்லாமல் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகும் நிலைமை தொழிலாளர்களையே அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். அல்லது வாழ்க்கைச் செலவுக்கேற்ப தொழிலாளர்களின் ஊதியத்தை சம்பள நிர்ணய சபைகளுக்கூடாக தீர்மானிக்கும் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக மாற்றியமைத்து தொழிலாளர்களின் வேதனத்தை சட்ட ரீதியில் உறுதிப்படுத்த வேண்டும். எனவே அழுத்தங்கள் இன்றி தொழிலாளர்கள் தொழில் புரிவதற்கும் அதற்கேற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கும் பொருத்தமான பொறிமுறையொன்றுக்கு செல்வது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மிகத்தரமான பதிவு பிரசன்ன்னா.
பதிலளிநீக்குதொடருங்கள்.