கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 நவம்பர், 2020

மலையகத்தில் கொரோனாவும் நெருக்கடிகளும்

மலையகத்தில் முதலாவது கொரோனா அலையின் தாக்கத்தினை விட பல மடங்கு அதிகமான தாக்கத்தினை இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டம் அதிக தொற்று நோயாளர்களை கொண்டுள்ளது. முதலாவது அலையில் எவ்வித நோயாளர்களும் அடையாளங் காணப்படாத மாவட்டமாக திகழ்ந்தது. தற்போதைய நெருக்கடியான சூழலில் மலையகத்தில் பலரும் தமது வருமானங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது. வேலைநாட்கள் குறைப்பு, ஊதிய பற்றாக்குறை, பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வசதியின்மை என பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரண கொடுப்பனவுகள் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் வாக்குகள் அவசியமாகவிருந்ததால் 5000 ரூபா தோட்டங்கள் தோறும் சென்றடைந்தது. தற்போது தேர்தல் முடிந்து அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் நிவாரண விடயங்கள் குப்பைக்குச் சென்றுவிட்டன. அதேவேளை கடந்த முறை வழங்கப்பட்ட நிவாரணங்களிலும் பல்வேறு சர்ச்சைகள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே மீண்டும் நிவாரணங்கள் வழங்கப்படுமா என்பதே தற்போதைய கேள்வி. அவ்வாறு வழங்கப்பட்டால் கடந்த கால தவறுகள் திருத்திக்கொள்ளப்படுமா?

நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா பேரிடர் முதலாவது அலையின் காரணமாக சமூக நன்மைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. இதன் காரணமாக அப்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு நான்காவது சுற்றறிக்கையிலேயே இறுதி செய்யப்பட்டது. பயனாளிகள் தெரிவில் முறைக்கேடு, கிராம சேவகர்களின் புறக்கணிப்பு, சமுர்த்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மற்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிதி நிறுத்தப்பட்டமை என பல சர்ச்சைகளை குறிப்பிடலாம். இவற்றில் பெருந்தோட்ட மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. தோட்டத் தொழிலாளர்களாக இருந்தமையினால் கொடுப்பனவுகள் மறுக்கப்பட்டதோடு அவர்களின் குடும்பத்தினர் பலருக்கும் கொடுப்பனவு வழங்குவதில் புறக்கணிப்பு காணப்பட்டது அத்துடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறான செயற்பாடுகளினால் நியாயமாக நிவாரணம் பெற வேண்டிய பலர் ஏமாற்றப்பட்டனர். அதனால் அவ்விடயம் தொடர்பில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகவும் பாரிய நிர்வாக எல்லையை கொண்டதுமான அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவினை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை எழுதப்படுகின்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி அம்பகமுவ பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் பேரிடர் நிலைமை காரணமாக சமூக நன்மைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவைச் செலுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்ட PTF/03/2020 ஆம் இலக்க 2020.03.31 ஆந் திகதிய சுற்றிக்கை மற்றும் PTF/03/2020(iv) ஆம் இலக்க 2020.04.03 ஆந் திகதிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக வெளியிடப்பட்ட இறுதி சுற்றறிக்கையில் காத்திருப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகளை மீண்டும் மீளாய்வு செய்து, தகுதியற்ற குடும்ப அலகுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்து நீக்கவும், நிலவும் நிலைமை காரணமாக உண்மையாகவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள, இந்தப் பயன்களை வழங்கும்போது முன்னுரிமை வழங்க வேண்டிய குடும்ப அலகுகள் காணப்படின் அவ்வாறான குடும்ப அலகுகளை பட்டியலில் இணைத்து முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான குடும்ப அலகுகள் நாளாந்த வாழ்வாதாரங்களை இழந்து வாழ்வதற்கான வழியின்றி ஆதரவற்ற நிலைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, அவர்களுக்கு உத்தேச 5000 ரூபா கொடுப்பனவை மிகவும் துரிதமாக செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்ததோடு, இப்பணியை உயர்ந்தபட்ச வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் மேற்கொள்ளவும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியான அனைத்து குடும்ப அலகுகளுக்கும் அந்த பயனை வழங்கவும், தகுதி பெறாத குடும்ப அலகுகளுக்கு அந்த பயன் செலுத்தப்படுவதனைத் தவிர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை பேரிடர் நிலைமையின் போது 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவுகள் மாத்திரமல்லாது சமுர்த்தி பொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, உணவு முத்திரை, குறை வருமானம் பெறுவோர், துணைக் குடும்பங்களுக்கான கொடுப்பனவு என பல கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும் இக்கொடுப்பனவுகள் நாடு முழுவதிலுமுள்ள கிராமங்களில் முறையாக வழங்கப்பட்டிருந்தன. ஆனால் பெருந்தோட்டங்களில் பல பகுதிகளில் போராட்டங்களை மேற்கொண்டு நிவாரணங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது.

320M பிரவுன்ஸ்விக் கிராம சேவகர் பிரிவில் 9 தோட்டங்கள் காணப்படுகின்றன. அங்கு 1679 குடும்பங்களைச் சேர்ந்த 7533 நபர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமைகளின் போது 70 வயதுக்கும் மேற்பட்டோருக்கான 4900 ரூபா கொடுப்பனவு 196 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 960,400 ரூபா பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முதற்கட்டமாக அரநெலு 190 பேருக்கும், 750 குறைவருமானம் பெறுவோருக்கும் சகன பியவர 44 பேருக்கும் 309 துணைக்குடும்பங்களுக்கும் நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 105 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அரநெலு 99 பேருக்கும், 870 குறைவருமானம் பெறுவோருக்கும் 295 துணைக்குடும்பங்களுக்கும் நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 105 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் மூலம் பகிரப்பட்ட தொகை தொடர்பான விபரம் வழங்கப்படவில்லை. இதேவேளை இப்பகுதிகளில் வசிக்கின்ற 99 பேருக்கு 450 – 3500 ரூபா வரையில் முத்திரை கொடுப்பனவுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. குறித்த பகுதியில் சமுர்த்தியில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்ட நிலையில் சமுர்த்தியில் இல்லாதவர்களுக்கு அத்தொகை வழங்கப்படவில்லை.

அதேவேளை அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் காணப்படும் 62 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 1475 பேருக்கு முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 5000 ரூபா கொடுப்பனவு 2537 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் செயலாற்று அறிக்கையின்படி, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் சனத்தொகை 220,629 ஆக காணப்பட்டது. இதில் நகர் பகுதியில் 15,085 பேரும் கிராம பகுதியில் 52,722 பேரும் தோட்டப்பகுதிகளில் 152,822 பேரும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அம்பகமுவ பிரதேச செயலகத்தில் நிவாரணங்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட்ட நடைமுறைகள், பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. அதன் காரணமாகவே நுவரெலியா மாவட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பிலான சர்ச்சைகள் அதிகமாகவே காணப்பட்டன.

வட்டவளை பிரதேசத்தில் கரோலினா, தெபட்டா, அகரவத்தை, மவுன்ஜீன், ரொசல்ல உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த 800 பேர் வரையானவர்களுக்கு மே மாதத்துக்கான 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லையென கூறி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதேவேளை மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் பெயர் பட்டியல் கிடைப்பதில் தாமதம் காணப்படுவதாக கூறி கொடுப்பனவு வழங்குவது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வந்ததோடு இதனால் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாதவர்கள் தினந்தோறும் சமுர்த்தி அலுவலகத்துக்கு சென்று ஏமாற்றத்துடனேயே திரும்பி வரும் நிலை காணப்பட்டது. இதேவேளை பலாங்கொட, வலயபொட பகுதியில் 500 ரூபா செலுத்தி சமுர்த்தி வங்கி கணக்கொன்றை ஆரம்பித்தால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென்று சமுர்த்தி அதிகாரியினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. 5000 ரூபா பெற்றுக்கொண்ட சமுர்த்தி வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி அதிகாரியினை சந்தித்து அங்கத்துவ கணக்கொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தேவையான தகவல்களை சமுர்த்தி அதிகாரியிடம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அவ் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான சம்பவங்கள் நிவாரணக் கொடுப்பனவில் தவறு இழைக்கப்பட்டதையே வெளிப்படுத்துகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 5000 ரூபா நிவாரணங்களை வழங்கும் செயற்றிட்டத்துக்குள் உள்வாங்கப்படாவிட்டாலும் தோட்டத்துறையில் அமைய, பதிலீட்டு, தற்காலிக அடிப்படையில் சேவையாற்றுகின்ற, தமது நாளாந்த, மாதாந்த வருமானத்தை இழந்த குடும்ப அலகுகளுக்கும் இந்த பயனைச் செலுத்துவது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் அலுவலகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றைத் தவிர்த்து தமக்கு பழக்கமானவர்களுக்கும் சிபாரிசின் பேரிலும் பெயர் பட்டியலை தயாரிக்கும் நிலையே காணப்பட்டது. இதனால் பலர் ஏமாற்றத்துடனேயே செல்லவேண்டி ஏற்பட்டது. தற்போது நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் நிறைவு பெற்று 3 மாதகாலங்கள் நிறைவு பெற்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நடைமுறை காணப்படவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நிவாரணங்களை பெற்றுக்கொண்டோர் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் 5000 ரூபா நிவாரணம் வழங்குவதிலிருந்து கைவிடப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவது யார்?

தற்போது இரண்டாவது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நுவரெலியா மாவட்டத்தில் நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 20 ஆவது திருத்தம் மற்றும் துமிந்த சில்வாவின் விடுதலை விவகாரம் என்பவற்றில் விலைபோயிருக்கும் மலையக தலைமைகள், தற்போதாவது மக்களின் வருமானத்தை கருத்தில்கொண்டு நிவாரணங்களை வழங்குவதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் அதை எதிர்பார்ப்பது கடினமானதாகவே இருக்கின்றது. வாக்களித்த மக்களை விட அவர்களின் வாக்குகளை விற்று பிழைப்பு தேடுவதே இவர்களுடைய கடமையாக தற்போது மாறிவிட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மலையக மக்களின் நிலையினை கவனத்தில் கொண்டு நிவாரணங்களை வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதுடன், கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்ளவும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக