கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 அக்டோபர், 2020

மும்மொழி தேசிய கலவன் பாடசாலை நானுஓயாவில் அமைக்கப்படுமா?


கல்வி அமைச்சு என்ன சொல்கின்றது?

நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய கலவன் பாடசாலை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அவை தடைபட்டு விட்டது. பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, சகல மாவட்டங்களிலும் மும்மொழி தேசிய பாடசாலை அமைக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலைகளின் வருகை மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், அம்மாவட்டத்தில் காணப்படும் ஏனைய பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிப் பாடங்களை கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 550 பாடசாலைகள் (2018) காணப்படுவதுடன் இவற்றில் 314 தனித்தமிழ் பாடசாலைகள் காணப்பட்டாலும் ஒரு தேசிய பாடசாலையும் இல்லாமை மிகப்பெரும் குறைபாடாக காணப்படுகின்றது. அத்துடன் 4 தமிழ் - சிங்கள இரு மொழி பாடசாலைகளும் 4 தமிழ் - ஆங்கில இருமொழி பாடசாலைகளும் அமைந்துள்ளன. அதனால் நுவரெலியா மாவட்டத்துக்கு தேசிய பாடசாலை அல்லது மும்மொழி தேசிய பாடசாலையின் அவசியம் அதிகம் காணப்படுகின்றது. 

தற்போது நாட்டில் 10,175 (2018) பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் 6370 சிங்கள மொழி பாடசாலைகளும் 3031 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 35 சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 531 சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளும் 170 தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளும் மும்மொழி பாடசாலைகள் 38 உம் காணப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, மும்மொழி பாடசாலைகளில் 31 – 1ஏபி, 10 – 1சி, 2 – வகை1, 4 – வகை2 பாடசாலைகளாக காணப்படுவதோடு நாடு முழுவதும் 358 தேசிய பாடசாலைகளும் காணப்படுகின்றன. 

1ஏபி பாடசாலைகள் - விஞ்ஞான பாடவிதானம் உட்பட க.பொ.த (உஃத) வரை வகுப்புக்கள் கொண்ட பாடசாலை, 1சி - விஞ்ஞான பாடவிதானம் இல்லாத க.பொ.த (உஃத) வரை வகுப்புக்கள் கொண்ட பாடசாலை, வகை1 - க.பொ.த (சாஃத) வரை மாத்திரம் வகுப்புக்கள் கொண்ட பாடசாலை, வகை2 – 1 தொடக்கம் 5 அல்லது 1 – 8 வரையான தரத்தினை மாத்திரம் கொண்ட பாடசாலைகள் என இலங்கையில் பாடசாலைகள் வகுக்கப்பட்டுள்ளன. நுவரெலிய மாவட்டத்தில் 1ஏபி பாடசாலைகளை உருவாக்குவதிலும் அதற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதிலும் அதற்காக மலையக கல்வி மட்டத்தை அதிகரிப்பதிலும் தலைவர்கள் பெரும்பாலும் தொல்வியையே கண்டிருக்கின்றார்கள்

மத்திய மாகாணத்தில் 1517 பாடசாலைகள் (2018) காணப்படுவதுடன், இவற்றில் 857 சிங்கள மொழி பாடசாலைகளும் 541 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 9 சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 74 சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளும் 21 தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளும் மும்மொழி பாடசாலைகள் 15 உம் காணப்படுகின்றன.  



எனவே நுவரெலியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலுமுள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்கு புதிய மும்மொழி பாடசாலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதன் அடிப்படையிலேயே கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தில் மும்மொழி தேசிய பாடசாலை உருவாக்கத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2018.08.21 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு சகல வசதிகளுடனும் கூடிய மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை 800 மில்லியன் ரூபா முதலீட்டில் நானுஓயா பிரதேசத்தில் தாபிப்பதற்கும் அதனை தரம் 6 இலிருந்து தரம் 13 வரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலையொன்றாக நடாத்திச் செல்வதற்கும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் புதிய அரசாங்கத்தில் இத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுமா என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் மும்மொழி கலவன் தேசிய பாடசாலை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினைப் பயன்படுத்தி கல்வி அமைச்சிடம் வினவியபோது சில விடயங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. 


கல்வி அமைச்சின் ED/RTI/2001/020  கடிதத்தின் மூலம் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கல்வி அமைச்சினால் பாடசாலை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் காணியினை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நடைபெற்றவருவதாகவும் கல்வி அமைச்சுக்குத் தேவையான ஐந்து ஏக்கர் நிலமானது, நானுஓயா பகுதியிலுள்ள எடின்பரோ தோட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், காணியின் பெறுமதி தொடர்பில் இறுதி செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தரம் 6 – 13 வரையான வகுப்புக்களைக் கொண்ட புதிய மும்மொழி கலவன் தேசிய பாடசாலை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வரைபட அளவிலேயே காணப்படுகின்றது. இப்பாடசாலையை அமைப்பதற்கான 800 மில்லியன் ரூபா நிதிக்கான அனுமதியினை கடந்த அரசாங்கம் அமைச்சரவையில் பெற்றிருந்தாலும் நிதி ஒதுக்கீட்டுக்கு பாராளுமன்ற அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காணி பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதனால் கட்டுமானப்பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தின் சட்டப்படியான முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே இத்திட்டத்துக்குத் தேவையான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆரம்பிக்கப்படும் நிலையிருக்கின்றது. இருப்பினும் தற்போதுள்ள உள்ளடக்கத்தில் கட்டுமானப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதுடன் பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதியில் முதன்மையான நவீன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதைப் பொறுத்தே மும்மொழி கலவன் தேசிய பாடசாலை அமையப்பெறும் நிலை இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்றின் தேவை தொடர்பில் பல வருடகாலமாக பேசப்பட்டு வந்தாலும் இன்னும் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி முடிவுறும் தருவாயில் முக்கிய திட்டங்களை ஆரம்பித்து பின்பு ஆட்சி மாறியவுடன் நிறுத்தப்பட்டு விட்டது என்று கதைகூறுவது மலையகத் தலைவர்களின் தொடர்ச்சியான நாடகம்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பாடசாலைக்காக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள எடின்பரோ தோட்டத்துக்கு முன்னாள் விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் செயல்திட்டப் பணிப்பாளர் பத்மன் மற்றும் கட்டிடப் பொறியியலாளர்கள் குழுவும் சென்றிருந்தனர். அதன் பின்னர் அவை தொடர்பில் எவ்வித தகவல்களும் குறித்த குழுவினால் வழங்கப்படவில்லை. மேலதிக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது அவசர அவசரமாக மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஒரு குழுவொன்றினை மஹிந்த ராஜபக்ஷ அமைத்திருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. வெற்றிபெற்றிருந்தாலும் பல்கலைக்கழகம் வந்திருக்காது என்பது வேறுகதை. அதேபோல 2014 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகவிருந்த பழனி திகாம்பரம் மலையகத்தில் நான்கு தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் ஆனால் இ.தொ.கா. அதனை தடுத்துவிட்டதாகவும் தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை குறிப்பிட்டு ஒருநாளும் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டிருந்தால் மும்மொழி கலவன் தேசிய பாடசாலையினை பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் அமைச்சுப் பதவிக்காகவும் கிழங்கு விலைக்காகவும் போராடியவர்கள் பாடசாலைக்காக போராடாமல் விட்டது துரதிர்ஷ்டமே. அமைச்சரவை அனுமதியினை பெற்றுக்கொள்வது மட்டுமே திட்டத்தின் பூர்த்தியாக கருத முடியாது. ஏற்கனவே அனுமதி பெற்ற பல விடயங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அதனை செயற்படுத்துவதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. தனிவீட்டுத்திட்டம், தொழிலாளர்களின்  சம்பளப் பிரச்சினை என பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் தலைவர்கள் கல்வித்துறையில் முக்கிய விடயமான தேசிய பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதே இல்லை.

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக