கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

11 செப்டம்பர், 2020

கொவிட் – 19 முடக்ககாலத்தில் அதிகம் வன்முறைகளை எதிர்கொண்டிருந்த சிறுவர்கள்

உலகம் ஒவ்வொரு நிமிடமும் டிஜிட்டல் சாதனங்கள் அல்லது சேவைகளை முன்னோக்கி கொண்டு செல்வதையே வளர்ச்சி என்ற கோட்பாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றது. அதன் மூலம் சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகள் அல்லது விபரீதங்கள் இன்றைய வியாபார சமூகத்தில் கண்டுகொள்ளப்படுவதில்லை. எனவே இவ்வாறான ஒன்லைன் சேவைகளின் வளர்ச்சி, பயன்படுத்துகை எவ்வாறு ஒன்லைன் வன்முறைகளை தோற்றுவிக்கின்றன என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். உடல், உளவியல், உணர்ச்சி ரீதியான சுய தீங்கு விளைவிக்கும் அல்லது மற்றொரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட ஒன்லைன் டிஜிட்டல் சாதனங்கள் அல்லது சேவைகளை பயன்படுத்துதல் ஒன்லைன் வன்முறை என வரையறுக்கப்படுகின்றது. மனிதனுடைய அன்றாட தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களை விரைவான முடிவுகளை கையாள்வதற்கு தூண்டுகின்றது. அதன் விளைவே ஒன்லைன் பயன்பாடுகள் அதிகரிப்பாகும்.

கல்வி, பொருள் கொள்வனவு, ஆலோசனை, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் இன்னும் பல சேவைகளை ஒன்லைன் நோக்கி நகர்த்துவதில் சேவையாளர்கள் வெற்றி கண்டிருக்கின்றார்கள். அண்மையில் இலங்கையில் பரவிய கொவிட் - 19 தொற்றுக்குப் பின்னர் இணையவழி அல்லது ஒன்லைன் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இச்செயற்பாட்டை நாடளாவிய பாடசாலை மாணவர்களிடம் கொண்டு செல்வது தொடர்பாக பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. வடமாகாணத்தில் கடந்த காலங்களில் ணுழழஅ மற்றும் ஏiடிநச செயலிகள் மூலமாக மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளின்போது அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடைய தரவுகள் ஹேக் செய்யப்பட்டு அவர்களுக்கு தவறான படங்கள் மற்றும் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் ஏற்பட்டிருந்த முடக்கம் காரணமாக 4.3 மில்லியன் சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளை இழந்திருந்ததுடன் குறிப்பிடத்தக்களவிலான சிறுவர்கள் இணையவழி கல்விக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு தகவல் திருட்டை ஊக்குவிக்கும் இடமாக இணையம் இருக்கும் நிலையில் ஒன்லைன் பாவனை எவ்வாறு சிறுவர்களுக்கு பாதுகாப்பாக அமையப்போகின்றது?

ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் முதல் தடவையாக இணையத்தை பாவிக்கத் தொடங்குகின்றார்கள். இது ஒவ்வொரு அரை செக்கன்களுக்கும் ஒரு சிறுவன் என்ற வகையில் அமைந்திருக்கின்றது. ஒன்லைன் மீது அதிக அக்கறை செலுத்தும் 18 வயதுக்குட்பட்ட 80 வீதமான சிறுவர்கள் மற்றும் பருவ வயதினர் பாலியல் துன்புறுத்தலை அல்லது அதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளதாக யுனிசேப் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே ஒன்லைன் மூலம் சிறுவர்கள் எவ்வாறு வன்முறைகளை எதிர்கொள்கின்றார்கள் அல்லது அதற்கு எவ்வாறு தூண்டப்படுகின்றார்கள் என்பதற்கான காரணத்தை அறிந்து செயற்படுவது அவசியமாகின்றது.

750,000 தனிப்பட்ட நபர்கள் சிறுவர்களுடன் பாலியல் நோக்கத்துடன் ஒன்லைனில் தொடர்பு கொள்வதற்காக எந்நேரமும் தயாராகவிருப்பதாகவும் உலகில் இணையப் பாவனையில் மூன்றில் ஒருவர் சிறுவராக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் இணையத்தை பாவிக்கும்போது கண்காணிக்கும் தேவை ஏற்படுகின்றது. இந்நிலை அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யலாம். அதனால் கட்டுப்பாடுகளுடனான இணையச் சேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது அவசியம். ஆனால் நாட்டில் ஏற்பட்டிருந்த முடக்க நிலைமையின்போது இணையம் மூலம் கல்வியை தொடர்ந்த சிறுவர்கள் பாவனைக்குட்படுத்திய பெரும்பாலான ஒன்லைன் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சேவைகள் அவர்களுக்கான வரையறைகளை மட்டும் கொண்டதல்ல.

அவை பெற்றோரினதோ, நண்பர்களதோ அல்லது உறவினர்களுடையதாகவோ இருந்திருக்கலாம். அதுவே உண்மை. இதனால் இணையப்பாவனையின் மூலம் பெரியவர்கள் எதிர்நோக்கும் அதே பிரச்சினைகளை சிறுவர்களும் எதிர்நோக்கும் நிலை ஏற்படுமாயின் விளைவு பாரதூரமானதாக இருக்கும். இலங்கையிலுள்ள பாடசாலைகளிலேயே இன்னும் முழுமையான இணையவழி கற்றல் முறைமை மற்றும் கற்றல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதனால் அதன் பாவனை தொடர்பாக முழுமையான அறிவினை சிறுவர்கள் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பில்லை. இதனால் ஒன்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கோ, அவற்றிலிருந்து விடுபடவோ அவர்களுக்கு தெரியவில்லை. 2017 ஆம் ஆண்டு உலகளவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களைக் கொண்ட 5.1 மில்லியன் இணையப் பக்கங்கள் காணப்படுகின்றன. 

இலங்கையில் நிலவிய முடக்க நிலைக்குப் பின்னர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 சிறுவர் உதவி அழைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ள சிறுவர்களுக்கெதிரான கொடுமைகள் தொடர்பான முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 7 வரை 292 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. நாட்டின் முடக்கம் மிகவும் சாதகமான ஒன்லைன் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. உதாரணமாக 2014 – 2016 வரையான காலப்பகுதியில் மேற்கு ஆபிரிக்காவில் பரவியிருந்த எபோலா வைரஸ் காரணமாக பாடசாலைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவர் தொழிலாளர், புறக்கணிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இளவயது கர்ப்பங்கள் அதிகரித்திருந்தன. குறிப்பாக சியாரா லியோனில் 14,000 இளவயது கர்ப்பங்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளன. இந்நிலைமை கொவிட் தொற்று காலப்பகுதியில் இன்னும் அதிகரித்திருந்த நிலையை அவதானிக்க முடிந்திருந்தது.

அதேபோலவே கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த முடக்கத்தின் போது ஒன்லைன் ஊடாக இதற்கான அடித்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை மற்றும் அனைத்து நாட்களிலும் வீடுகளில் சிறுவர்கள் இருந்ததுடன் சிலவேளைகளில் பெற்றோர் தொழிலுக்குச் சென்றிருந்தமை ஒன்லைன் பாவனைக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. அத்துடன் முடக்க நிலையின்போது பிள்ளைகளை வீடுகளுக்குள்ளேயே முடக்குவதற்கு பெற்றோரும் ஒன்லைனையே பயன்படுத்தியிருந்தனர். பிள்ளைகளுக்கு ஒன்லைன் டிஜிட்டல் சாதனங்களை வழங்கி அவர்களை தங்களுடைய கண்காணிப்பிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டார்கள். மறுபுறம் தொலைபேசி சேவை வழங்குநர்களும் இலவச டேட்டா வசதிகளை வழங்கி ஒன்லைன் பாவனையை இன்னும் ஊக்கப்படுத்தியிருந்தனர். அதனால் இக்காலப்பகுதியில் சாதாரண காலங்களைவிடவும் மிக அதிகமான ஒன்லைன் பாவனைக்கு சிறுவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். இதன்மூலம் அவர்களுடைய தொடர்புகள் வீடு, நண்பர்கள், சமூகம் என மிகவும் பரந்துபட்டளவில் விரிவடைந்ததுடன் அவர்களுக்கான ஆபத்துக்களும் நெருங்கிவரத் தொடங்கின. 

சமூக இடைவெளியை பேணுவது முக்கிய நடவடிக்கையாக கருதப்பட்டதால், சிறுவர்கள் ஒன்லைன் மூலம் நெருக்கமான உறவினை பேணுவதற்கு தூண்டப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் இணையவழி சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஏழு சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்லைன் மூலம் இளம் பெண்களை குறிவைக்கும் குறித்த குழு அவர்களுடைய நிர்வாணப்படங்களைப் பெற்று அவற்றை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக கூறியே குறித்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை தகவல் தொழில்நுட்பத்துறையில் கடமைபுரியும் 21 வயதுடைய ஆண் நபரொருவர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து இணையவழி துஷ்பிரயோகத்தல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சிறுவர்களுக்கு ஒன்லைன் சேவை பாதுகாப்பு என்பதையும் தாண்டி ஆபத்துக்களை தோற்றுவித்துள்ளது. எனவே அவற்றிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் பழக்கப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

சகல சிறுவர்களுக்கும் பாடசாலைக் கல்வியில் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை போதிக்க வேண்டும். டிஜிட்டல் திறமைகளை வளர்ப்பதுடன் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிகளையும் தெளிவுபடுத்த வேண்டும். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் சிறுவர் பாதுகாப்பை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் தனியார் உற்பத்தி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். ஒன்லைன் மூலமாக அதிகரிக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் ஒன்லைன் கல்விக்கு முன்பாக ஒன்லைன் வியாபாரம், விளம்பரங்கள், விற்பனை என்பன பெருகியிருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் கல்வியும் இவ்வகைக்குள் உள்வாங்கப்படலாம். ஆனால் அவற்றை கையாள்வதற்கு சிறுவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதனை நாம் சரியாக கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். கொவிட் 19 கால அனுபவங்களை பயன்படுத்தி சிறுவர்கள் ஒன்லைன் வன்முறைகளிலிருந்து இருந்து விடுபடுவதற்கான வழிகளை கையாளவேண்டும். 

 க.பிரசன்னா



  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக