கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

9 மார்ச், 2020

நுவரெலியா மாவட்டத்துக்கான புதிய பிரதேச செயலகங்கள்

பெருந்தோட்ட பிரதேசங்களின் தேவைகளை நிறைவேற்றவும் அபிவிருத்திகளை கொண்டுவரவும் நாம் மத்திய அரசாங்கத்தையும் மாகாண அரசாங்கத்தையும் நம்பியிருக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறாத வகையில் சட்டத்தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் அத்தடையும் நீக்கப்பட்டது. 2017.10.31 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின்படி, புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளை தாபிப்பதற்கும் நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகளை தரமுயர்த்துவதற்குமாக நிபுணர்கள் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட தகுதி விதிகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தகுதி விதிகளை அடிப்படையாகக் கொண்டு நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் பிரதேச சபைகளின் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் இலகுபடுத்தப்பட்டிருந்தன.
ஆனால் மக்களின் தேவை அத்துடன் முடிந்துவிடவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகள் எவ்வளவு முக்கியத்துவமுடையனவோ, அதுபோலவே பிரதேச செயலகங்களின் தேவையும் முக்கியமாகும். ஆனால் நுவரெலிய மாவட்டத்தில் காணப்படும் சனத்தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் 2019.05.07 ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் உயர் சனத்தொகை அடர்த்தி மற்றும் உள்ளடக்குவதற்கான பாரிய விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் காணப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பொதுச்சேவைகளை வழங்கும் போது எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் அனுகுவழியில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டும் 2012 எல்லை நிர்ணயக்குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நீல்தன்டாஹின்ன, தலவாக்கலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட் ஆகிய புதிய பிரதேச பிரிவுகளை தாபிப்பதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சிடம் (HA/RTI/05/11/161)பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்படுகின்றன.

1. தற்போதுவரை நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் செயற்பட்டு வருவதோடு புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

2. தற்போது செயற்படுகின்ற ஹங்குராங்கெத்த, நுவரெலியா, வலப்பனை, அம்பகமுவ கோரளை, கொத்மலை பிரதேச வலயங்களிலும் புதிய பிரதேச செயலகக் காரியாலயங்களான மத்துரட்ட, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன, நோர்வூட், கொத்மலை தெற்கு போன்ற வலயங்களிலுள்ள மக்கள் தொகை தொடர்பான தகவல்களை நுவரெலியா மாவட்ட செயலகத்திலேயே பெற வேண்டும்.

3. புதிய பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் கேட்டபோது, அமைப்பதற்குரித்தான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. புதிய பிரதேச செயலகங்களின் உருவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விபரங்களை கோரிய போது, பிரதேச செயலகங்கள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதோடு, அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உபகரணங்கள், வாகனம் என்பன மானியமுறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.


5. புதிய பிரதேச செயலகங்களின் கட்டிடங்கள் அமையவுள்ள இடங்கள் மற்றும் புதிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்கள், மக்கள் தொகை தொடர்பிலான தகவல்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2147/28 ஆம் இலக்க 2019.10.29 ஆம் திகதி அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி, 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, அதிகாரம் ஒப்படைத்தல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நுவரெலியா நிர்வாக மாவட்டத்துக்கு உரித்தாக நிலவுகின்ற ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் திருத்தியமைக்கப்பட்டு, அப்பிரதேச செயலகம் உள்ளடங்களாக புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் 10 ஆகவும் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பகமுவ கோரளையானது, 32 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - பஸ்பாகே கோரளைப் பிரதேச செயலகத்தின் எல்லையையும் தெற்கு - நோர்வூட் செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - பஸ்பாகே கோரளைப் பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - தெரணியகல பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 46,578 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவானது, 35 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - அம்பகமுவ கோரளைப் பிரதேச செயலக பிரிவின் எல்லையையும் தெற்கு - இரத்தினபுரி மற்றும் இபுல்பே பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - பஸ்பாகே கோரளைப் பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 175,436 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

கொத்மலை (கிழக்கு) பிரதேச செயலகப் பிரிவானது, 47 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - உடபலாத்த, தொலுவ மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவின் எல்லையையும் தெற்கு - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - ஹங்குராங்கெத்த மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - கொத்மலை ஒயா, கொத்மலை நீர்த்தேக்கம், 458 ரன்வன்தலாவ, 459ஏ கோடகேபிட்டிய தெற்கு, 459பி கோடகேபிட்டிய வடக்கு கிராம அலுவலர் பிரிவின் எல்லைகளையும் கொண்டுள்ளதுடன் 66,831 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

கொத்மலை (மேற்கு) பிரதேச செயலகப் பிரிவானது, 49 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - மஹாவலி கங்கை, கொத்மலை ஓயா, உடபலான பிரதேச செயலகப் பிரிவின் எல்லையையும் தெற்கு - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் கொத்மலை ஓயா, 456டி நவ மொரபே, 456பி மாவெல கிழக்கு, 457 மாஸ்வெல கிராம அலுவலர் பிரிவின் எல்லையையும் மேற்கு - மஹாவலி கங்கை, கோரவக்கா ஓயா, நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 42,362 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவானது, 63 கிராமசேவகர்பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - கண்டி மாவட்டத்தின் எல்லையையும் தெற்கு - நுவரெலியா மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - கந்தகெடிய மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - வலப்பனை பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 44,914 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

வலப்பனை பிரதேச செயலகப் பிரிவானது, 62 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - கண்டி மாவட்டத்தின் எல்லையையும் தெற்கு - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 67,450 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவானது, 38 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - ஹங்குரான்கெத்த பிரதேச செயலக பிரிவின் எல்லையையும் தெற்கு - தலவாக்கலை பிரதேச செயலகப்பிரிவின் 476எஸ் கிழக்கு டயகம மற்றும் 476 ஆர் சந்திரஹம் கிராம அலுவலர் பிரிவின் எல்லையையும் இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லையையும் கிழக்கு - பதுளை மாவட்டத்தின் எல்லையையும் மேற்கு - தலவாக்கலை பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 71,775 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவானது, 34 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - கொத்மலை பிரதேச செயலகப்பிரிவு எல்லையையும் தெற்கு - அம்பகமுவ கோரளை பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் மேற்கு - கொத்மலை பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் அம்பகமுவ கோரளை செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 157,115 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவானது, 79 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - மஹாவலி கங்கை, தெல்தெணிய பிரதேச செயலக பிரிவின் எல்லையையும் தெற்கு - மத்துரட்ட மற்றும் கொத்மலை பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - பெலிஹூல்ஓய, வலப்பனை மற்றும் மத்துரட்ட பிரதேச செயலகப் பிரிவின் எல்லையையும் மேற்கு - குருகல்ஓய, தெல்தொட்ட பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 59,756 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

மத்துரட்ட பிரதேச செயலகப் பிரிவானது, 52 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளதுடன் வடக்கு - ஹங்குரான்கெத்த பிரதேச செயலக பிரிவின் எல்லையையும் தெற்கு - நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கிழக்கு - பெலிஹூல்ஓய, வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் எல்லையையும் மேற்கு - கொத்மலை மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப்பிரிவின் எல்லையையும் கொண்டுள்ளதுடன் 35,783 பேரை சனத்தொகையாகவும் கொண்டமைந்திருக்கிறது.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையானது, 12 ஆக அதிகரிக்கப்படவேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகமானது, அம்பகமுவ கோரளை, நோர்வூட், மஸ்கெலியா என மூன்றாகவும் நுவரெலியா பிரதேச செயலகமானது, நுவரெலியா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை என மூன்றாகவும் கொத்மலை பிரதேச செயலகமானது, கொத்மலை, பூண்டுலோயா என இரண்டாகவும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகமானது, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட என இரண்டாகவும் வலப்பனை பிரதேச செயலகமானது, வலப்பனை, ராகலை என இரண்டாகவும் அதிகரிக்கப்படவேண்டுமென்றே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக பத்து பிரதேச செயலகங்கள் உருவாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகைக்கேற்ப போதுமானவையாக இல்லையென்பதுடன் எதிர்வரும் காலங்களில் நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா பிரதேச செயலகங்களை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது நில்தண்டாஹின்ன மற்றும் மத்துரட்ட பிரதேச செயலகங்கள் ஆறு கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்திருப்பதால் அதில் ஒரு பிரதேசசபை மக்கள் இலகுவாக சென்றடையக்கூடிய வகையில் இராகலையில் அமையவேண்டுமென்றும் கொத்மலை கிழக்கு பிரதேச செயலகமானது பூண்டுலோயா நகரத்தில் அமைய வேண்டுமென்பதுவுமே பெரும்பாலானோரின் விருப்பமாக காணப்படுவதுடன் அதுவே நியாயமானதாகவும் இருக்கின்றது.

வள பங்கீட்டினை சமமான முறையில் முன்னெடுக்கவும் பொதுமக்களின் தேவையை தங்குதடையின்றி நிறைவேற்றிக்கொடுக்கவும் சனத்தொகைக்கேற்ற வகையிலான பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படுவது கட்டாயமாகும். தற்போதைய பிரதேச செயலகங்களின் சனத்தொகை விபரங்களை அட்டவணை 01 இல் அவதானிக்கமுடியும். அத்துடன் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவு 22,500 ஹெக்டேயர் விஸ்தீரணத்தையும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவு 22,900 ஹெக்டேயர் விஸ்தீரணத்தையும் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு 32,000 ஹெக்டேயர் விஸ்தீரணத்தையும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவு 47,800 ஹெக்டேயர் விஸ்தீரணத்தையும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு 48,900 ஹெக்டேயர் விஸ்தீரணத்தையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (மாவட்ட புள்ளிவிபர பிரிவு, நுவரெலியா).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக