- இலங்கையில் 200க்கும் மேற்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகள்
இலங்கையில் தற்போதைய பிரச்சினைகளாக காணப்படுகின்ற வருமானமின்மை, தொழில்வாய்ப்பின்மை மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் உயர்வு காணப்படும் நிலையில், அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதும் இயலாத விடயமாகவே இருக்கின்றது. இதனால் அநேகரின் தெரிவாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இருக்கின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலமாக பணத்தினை உழைக்கும் சாத்தியம் இருந்தாலும் உயிருக்கான உத்தரவாதமோ, உழைப்புக்கேற்ற ஊதியத்துக்கான உத்தரவாதமே கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடும் மக்களின் தொகை அதிகரித்திருப்பதானது, மறுபக்கம் போலி முகவர்களின் அதிகரிப்புக்கும் வழியேற்படுத்தியிருக்கின்றது. இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்காக அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இலங்கை அரசாங்கம், அதனை முறையாக முகாமைத்துவம் செய்யாமையின் காரணமாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோர் பல்வேறு வன்முறைகளை அனுபவிப்பதுடன் மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
அண்மையில் கம்பஹா, வலப்பத்தையைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்மணி 37 வருடங்களாக துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாகவும் பாடசாலையில் துப்புரவுத் தொழிலாளராகவும் வேலை செய்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் போட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பதிவாகியது. கடந்த மூன்று வருடங்களில் மத்திய கிழக்கு நாடுகள், தென்கொரியா மற்றும் ஏனைய உலக நாடுகளில் 1384 இலங்கைப் பணியாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் 834 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஆனால் 2014 - 2019 வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்சென்றுள்ளோரில் மரணமடைந்தோர், விபத்துக்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானோர் எண்ணிக்கை 1396 என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட தகவலுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பதில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2016 டிசம்பர் தொடக்கம் 2019 டிசம்பர் 4 ஆம் திகதி வரையான சுமார் மூன்று வருட காலப்பகுதியில் மத்திய கிழக்கு உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் பணியாற்றிய இலங்கைப் பணியாளர்களில் 1043 பேர் பணியாற்றும் நாடுகளில் பணியாற்றும் காலப்பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 834 பேர் மத்தியகிழக்கு நாடுகளிலும் 177 பேர் தென் கொரியாவிலும் ஏனைய உலக நாடுகளில் 24 பேரும் உயிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் பலியான 834 பேரில் அதிகமாக சவூதி அரேபியாவில் 362 பேரும், குவைத்தில்214 பேரும், கட்டாரில் 133 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 125 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 1043 இலங்கைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஏனைய தொழில்துறைகளுடன் ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளம் பெறுபவர்களாவர். இவ்வாறு இவர்கள் பணியாற்றும் காலத்தில் தொழில் சம்பந்தப்பட்ட இயற்கையான உடல் பாதிப்புக்கள், காயங்கள், வீதி விபத்துகள், தொழிலில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் நேரக்கூடிய தனிப்பட்ட உடல் மற்றும் மனோரீதியான பாதிப்புகள், காயங்கள், கவலைகள் மற்றும் தாக்கங்கள் ஆகிய காரணங்களாலும் குறித்த பாதிப்புகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாலுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு, தென்கொரியா மற்றும் ஏனைய உலக நாடுகளில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களின் வருமானம் மூலம் ஏனைய வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தைவிட மிகக் கூடுதலான செலாவணி பரிமாற்றம் இலங்கைக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், 2018 ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைத்துள்ளதாகவும் இது இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 7.9 வீதமாகும். இருப்பினும் மத்திய கிழக்கு, தென்கொரியா மற்றும் ஏனைய உலக நாடுகளில் பணியாற்றும் சாதாரணமட்டத் தொழிலாளர்கள் அதிகமானோர் உயிரிழப்பைச் சந்தித்திருந்தாலும் இந்நாடுகளில் தொழில் வாய்ப்பை தேடுவோரின் தொகை இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக பணிபுரிபவர்களின் அழுகையுடன் கூடிய வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பிரதான காரணமாக முகவர்களால் ஏமாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டமையும் காணப்படுகின்றது. போலி முகவர்களின் செயற்பாடுகள் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற பலர் காணாமல் போயிருப்பதுடன் அவர்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமே ஊடக விளம்பரங்களை வழங்குகின்றமையும் முக்கியமாகும். எனவே வெளிநாடுகள் சென்றோர் தொடர்பில் முறையாக தகவல்களை பேணாமை மற்றும் போலி ஆவணங்கள், போலிமுகவர்கள் மூலம் பயணம் செய்தமையும் அவ்வாறான நிலைமைக்கு காரணமாக இருக்கின்றது. இதற்கு வெளிநாட்டு முகவர்களினால் உள்ளூர் முகவர்களுக்கு வழங்கப்படும் தரகுப்பணமும் காரணமாகும். 2017 ஆம் ஆண்டின் குறைபாட்டிற்காக மாத்திரம் 16284 வீட்டுப் பணிப்பெண் வழங்களுக்காக தரகு தொகையான வெளிநாட்டு முகவர்கள் ஊடாக ஆகக் குறைந்தது நாட்டிற்கு 936 மில்லியன் ரூபா கிடைத்திருப்பதாகவும் வெளிநாடுகளில் சேவையில் ஈடுபட்டிருந்த போது மரணித்த அல்லது விபத்திற்கு உட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினூடாக அனுப்பி வைக்கப்பட்ட அந்நியச் செலாவணி அளவு (2015 ஆம் ஆண்டின் போது 143 சம்பவங்களுக்குரியதாக 210 மில்லியன் ரூபாவும் 2011 ஆம் ஆண்டின் போது 143 சம்பவங்களுக்காக 210 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டின் போது 159 சம்பவங்களுக்குரியதாக 262 மில்லியன் ரூபாவும் கிடைத்திருந்தது) 682 மில்லியன் ரூபாவாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை தொடர்பான கணக்காளர் நாயகத்தின் 2019 ஆம் ஆண்டு விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடாத்துவதற்கு பணியகத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயமாக இருப்பதுடன் பணியகத்தினால் விடுக்கப்படும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படும் விதத்திற்கு ஏற்பவும் பரிசோதனையின் பின்னர் பணியக அதிகாரிகள் திருப்தி அடையும் தன்மைக்கு ஏற்பவும் ஒரு வருட காலத்திற்கான 200,000 ரூபா அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடப்பட்டு முகவர் நிறுவனமாக பதிவு செய்யப்படும். பணியகத்தின் இணக்கப்பாட்டு, நீதி மற்றும் விசாரணைப் பிரிவுகளினால் அந்நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னர் 50 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டு வருடாந்தம் அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பது நடைமுறையிலுள்ள பொதுவான நடைமுறையாகும். பணியகத்தின் கணினிமயப்படுத்தப்பட்ட தகவல் முறைகளுக்கமைய 2016.10.01 ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர் நிலையங்களின் எண்ணிக்கை 1456 ஆக இருந்ததுடன், இதில் 645 மாத்திரம் செயற்பாட்டு நிலையில் இருந்தன. அந்நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உதாசீனம் செய்து கொண்டிருப்பதாக கடந்த வருடங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது அவதானிக்க முடிவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை தொடர்பான கணக்காளர் நாயகத்தின் 2019 ஆம் ஆண்டு விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து தகவல் அறியம் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலுக்கு அமைவாக, 2014 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் அட்டவணை 01 இல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து நாடெங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் முகவர்கள் நிறுவனங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் எனவே வெளிநாட்டு வேலைவாயப்புக்களைத் தேடுபவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு முகவரைத் தெரிந்தெடுப்பதில் விசேட அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற சுமார் 13 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகளும் முகவர்களும் தற்போது நாடெங்கும் உள்ளநிலையில் 200க்கும் மேற்பட்ட போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் முகவர் நிறுவனங்களும் நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியிலிருந்து போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களாலும் முகவர் நிறுவனங்களாலும் ஏமாற்றப்பட்ட 1384 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவர்களில் ஒருதடவைக்கு மேலாக போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளதுடன் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுவோரை ஏமாற்றியுள்ள போலியான முகவரிகளில் சிலர் தம்மை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உபமுகவரிகள் என்று அறிமுகப்படுத்தியே வேலைவாய்ப்பு தேடுவோரை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற 13 ஆயிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் முகவர்களில் 500 முகவர் நிறுவனங்கள் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலி முகவர்களின் நடவடிக்கைகளினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுவோர் மிகவும் சிரமத்தை எதிர்கொள்வதுடன், வெளிநாடுகளுக்கு சென்ற பின்னரும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர். சில வேளைகளில் மரணத்தைக்கூட சம்பாதிக்கின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் உழைக்கும் வருமானத்தில் இலங்கைக்கு அன்னியச் செலவாணி அனுப்புதல் தேசிய செயற்பாட்டிற்கு கூடுதலாக பங்களிப்பு மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கையராக இருந்ததுடன் 2016 ஆம் ஆண்டின் போது 566,260 மில்லியன் ரூபா அல்லது 54 சதவீதம் பங்களிப்புச் செய்த போதிலும் வீட்டுப்பணிப்பெண் சேவை, பயிற்சி பெறாத அரைதேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்ற ஊழியத்தைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் குறிப்பிட்ட நாட்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை கட்டாயம் பெற்றுக்கொள்வது அவசியமென்பதுடன் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் வசதியாகவிருக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலுக்கு அமைவாக, அட்டவணை 02 இல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்செல்லும் நாம் முதலில் எம்முடைய பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். எமது சொந்தங்களை விட்டுச்செல்லும் நாம், மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டும். அவர்களின் முன்னேற்றங்களை அறிய வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் சென்றோரின் குடும்பங்கள் பல சீர்குலைந்துள்ளன. பிள்ளைகள் பலர் அநாதைகளாகியுள்ளனர். இந்நிலை தொடராமல் எமது பாதையினை மிகவும் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள சட்டரீதியான வழிகளையே நாடுவது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக