கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 மார்ச், 2020

குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனங்கள்

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை தொழில்களில் ஈடுபடுத்தல் தொடர்பான PS/CM/OMC/15/2020 ஆம் இலக்க 2020.02.05 ஆந் திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனம் மற்றும் அது தொடர்பான அ.ப/20/0312/201/08 ஆம் இலக்க 2020.03.13 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிலுனர் நியமனங்கள் விநியோகம் நிறைவடைந்து பிரதேச செயலகங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 45585 பேருக்கான பயிலுனர் கடிதங்களை அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வழங்கியுள்ளது. தகுதி பெற்றுள்ள அனைவருக்கும் ஒருவருட பயிற்சி வழங்கப்படுவதுடன் 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் பயிற்சிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 2020.03.02 ஆம் திகதி முதல் பயிலுனர் நியமனங்களை இடைநிறுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.


பின்னர் மே 04 அல்லது மே 11 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுமென அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. அதனடிப்படையில் பிரதேச செயலகங்களில் தற்போது பதிவுகள் மட்டும் இடம்பெற்று வரும் நிலையில் அமைச்சினால் பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதமானது நியமனமாக வழங்கப்படவில்லை என்பதுடன் அறிவுறுத்தல் கடிதமாகவே இருக்கின்றது. அதன்மூலம் பயிற்சிகளை நிறைவு செய்தாலும் நியமனம் வழங்குவது கட்டாயமாக பதிவு செய்யப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் பயிற்சிக்கு சமூகமளிக்கும் தினத்திலிருந்து பயற்சிகாலம் ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பயிலுனர் காலத்தை திருப்திகரமாக நிறைவு செய்தபின் நீங்கள் விருப்பம் தெரிவித்த துறையொன்றில் நியமனத்தை உறுதிப்படுத்துவதன் மீது கவனம் செலுத்தப்படுமென்றே கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பயிற்சிக்கு ஜனாதிபதி செயலகத்தினால் கோரப்பட்ட விண்ணப்பத்தில் 11 அரச நிறுவனங்களுக்கான பதவி வெற்றிடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலக்கமிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் கிராமிய மற்றும் தோட்ட பாடசாலைகள், பிரதேச கமத்தொழில் அலுவலகங்கள், விவசாய சேவை நிலையம், பிரதேச வனக் காரியாலயம், உள்ளூர் ஆயுர்வேத வைத்தியசாலை, கிராமிய வைத்தியசாலை/மருந்தகங்கள், நில அளவைத் திணைக்களம், விவசாய பண்ணைகள்/திட்ட சேவை நிலையம், கிராமிய சிறு ஏற்றுமதி பயிர்கள் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களே உள்ளடக்கப்பட்டிருந்தன.

தற்போது வழங்கப்பட்டுள்ள பயிலுனர் அறிவுறுத்தல் கடிதத்தில் விடுமுறைகள், கொடுப்பனவு மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இறுதியாக தாங்கள் எதிர்பார்க்கும் துறையில் மற்றும் அமைச்சுக்களில் திணைக்களங்களில் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் வாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு தங்களுக்கு கூடுதல் வசதியேற்படும் வகையில் மத்திய அரசின் மற்றும் மாகாண அரசசேவையின் நிறுவனங்களுக்கு தங்களை இணைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வாறு இணைப்புச்செய்ய முடியாவிடின் தங்களுக்கு வழங்கப்படும் சேவைத்தலத்தில் தாங்கள் பயிற்சி பெற வேண்டும். எவ்வாறாயினும் தாங்கள் பயிற்சிக்காக வேறொரு சேவைக்காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வழங்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றுவதற்கான பயிற்சிகளை பிரதேச செயலகங்களால் எவ்வாறு வழங்க முடியும். பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களுக்கு எவ்வாறு பிரதேச செயலகத்தினால் பயிற்சி வழங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கையிடுவதுடன் பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை நிலையம் அல்லது நகர கஷ்டப் பிரதேச நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒருவருடகால பயிற்சிக்குட்படுத்தப்படுவதுடன் முதல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இரண்டுமாதகால தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். இரண்டாம் குழுவினர் குறித்த சேவை நிலையத்தில் தமது கடமை தொடர்பாகவும் சேவை நிலையம் தொடர்பாகவும் இரண்டுமாத காலம் ஆய்வு செய்து அந்நிலையத்தை முன்னேற்றுவதற்கான செயற்றிட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும்.

முதல் குழுவின் தலைமைத்துவ பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்கள் தமது சேவை நிலையத்துக்கு இணைக்கப்படுவதுடன் இரண்டுமாதகாலம் சேவைநிலையம் மற்றும் வழங்கப்பட்ட கடமைகள் தொடர்பாக ஆய்வு செய்து செயற்றிட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும். செயற்றிட்ட அறிக்கையை நிறைவுசெய்த இரண்டாம் குழுவினர் இரண்டுமாதகால தலைமைத்துவ பயிற்சியினை பெறுவதோடு இவ்விரண்டு குழுக்களும் பின்னர் குறித்த சேவையில் தொழில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருவருட பயிற்சிக்காலம் நிறைவடைந்தாலும் பின்னர் குறித்த சேவைக்கான பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நேரடியாகவே சேவைக்கான பயிற்சிக்கு உட்படுத்தி ஏன் தொழில் வழங்கவில்லை. விண்ணப்பதாரிகள் ஏன் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை. தற்போதைய பட்டதாரிகளில் பெரும்பாலானோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அவர்களுக்கு நேரடியாக பாடசாலைகளுக்கே பயிலுனர் நியமனங்களை வழங்கியிருக்க முடியுமே. ஏன் அவ்வாறு செய்யவில்லை. அத்தோடு கல்வி அமைச்சால் வழங்கப்படும் பட்டதாரி நியமனங்களுக்கு சுற்றுநிருபங்களுக்கேற்ப சம்பள அளவுகள் தீர்மானிக்கப்படும் நிலை இருக்கையில் தற்போதைய நியமனத்தில் அதிக கேள்விகள் எழுகின்றன. தற்போதைய ஆசிரிய சேவையில் ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டதே தவிர பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் எவருக்கும் ஆசிரியர் பயிலுனர் என்ற நியமனம் வழங்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் 45585 பேருக்கு பயிலுனர் அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்த துறையில் அந்தளவு வெற்றிடங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சால் வழங்கப்பட்ட இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட 7500 பேருக்கான கருத்திட்ட உதவியாளர் நியமனங்கள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தினால் இரத்துச்செய்யப்பட்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் தேர்தலுக்குப்பின்பே சகலவற்றையும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரு நியமனங்களையும் நம்பி பலர் தாங்கள் செய்துவந்த தொழிலையும் கைவிட்டிருந்தனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் விண்ணப்பங்களை கோரும்போதே ஒரு வருடக்காலப்பகுதியில் தொழில் எதனையும் மேற்கொள்ளாதவர்களையே விண்ணப்பிக்கும்படி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆரம்பம் முதல் தற்போது வரை நிலவுகின்ற குழப்பநிலைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் தெளிவுபடுத்தலை முன்வைக்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக