கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 மார்ச், 2020

நிவாரணங்களை பெறும் தகுதி மலையக மக்களுக்கு இல்லையா?

நாட்டில் நிலவும் அதி வெப்பமான காலநிலையினால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. சுகாதாரப் பிரச்சினைகளுடன் அனர்த்தங்களுக்கும் மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. காட்டுத்தீ குடிநீர் தட்டுப்பாடு வறட்சி என்பன பிரதான பிரச்சினைகளாக காணப்படுகின்றன. இவற்றை மலையக மக்கள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்ற நிலையில் தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்குகளுக்காக மக்களை இன்னும் உசுப்பேற்றும் படைகளும் மலையத்தை நோக்கி படையெடுத்துள்ளன. தற்போதைய காலநிலையின் காரணமாக பெருந்தோட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதுடன் தேயிலைச் செடிகளும் கருகி வருகின்றன. இதன் காரணமாக தேயிலையை நம்பியிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை பச்சை தேயிலை விலையும் கிலோ ஒன்று 110 ரூபாவாக அதிகரித்திருப்பதாக சிறுதோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெப்பக் காலநிலையில் பாதிக்கும் நிலை காணப்பட்டாலும் அவர்களுக்கான நிவாரணங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்கப்பட்டது கிடையாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு கையாலாகாத நிலையில் காணப்படுகின்றதோ அதுபோலவே அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிலையிலும் இருக்கின்றது. ஏற்கனவே சம்பள அதிகரிப்பிலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றபோது தோட்ட நிருவாகங்களும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி வேலைநாட்களை சரிபாதியாக குறைத்திருக்கின்றன. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்துக்கு மிகப்பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களைத் தவிர ஏனைய சகலத் தொழிலாளர்களும் அனர்த்தங்களின்போது நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வழியினை அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரமே அந்நடைமுறைகள் விதிவிலக்காக அமைந்திருக்கின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தனியார் கம்பனிகளின் நிர்வாகத்தின்கீழ் தொழில் புரிந்தாலும் வருமானத்தில் அரசாங்கமும் பங்கினை பெற்றுக் கொள்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மூலமாக பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் மட்டும் உரிமைகோருகின்ற அரசாங்கம் மக்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. இலங்கையில் விவசாயம் மற்றும் தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படுகின்றபோது இழப்பீடுகளும் நிவாரணங்களும் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக மானியமுறையும் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரம் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

அத்துடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்கமுடியாதென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் காலநிலையுடன் மட்டுமல்லாது அரசியல் நிலைமைகளுடனும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ நிலையத்தின் மார்ச் 12 ஆம் திகதிய நிலைமை அறிக்கையின்படி ஊவா மத்திய மேல் வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 80056 குடும்பங்களைச் சேர்ந்த 315788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பதுளை மாவட்டத்தில் கடுங்காற்றும் கேகாலை இரத்தினபுரி கண்டி மாவட்டங்களில் வறட்சியும் நுவரெலியா மாவட்டத்தில் காட்டுத்தீயும் களுத்துறை மாவட்டத்தில் வறட்சியுடன் குடிநீரில் கடல்நீர் கலந்திருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்கான தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்கள் தொடர்பான தகவல்களை அட்டவணை 01 இல் காணமுடியும்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக தோட்டப்புற மக்கள் அதிகமான பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். குடிநீருக்கான தட்டுப்பாடுகள் பிரதேச சபைகளின் மூலமாக நிவர்த்திக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவை தோட்டப்புறங்களை சென்றடைவதில்லை. நகர் மற்றும் கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அச்சேவையினை தோட்ட நிர்வாகங்களே வழங்கி வருகின்றன. எனவே மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்புக்களை மாத்திரம் கணக்கில் கொள்ளாது அவர்களுடைய தொழில் மற்றும் வருமான இழப்புக்களையும் கவனத்தில் கொண்டு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக