
செய்தி 1: திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிலிருந்து படகோட்டிகளிற்கு ஒன்றரை இலட்சம் ரூபா பணம் செலுத்தி கடல் மார்க்கமாகத் தாயகம் திரும்பியுள்ளார். அவர் தொண்டமானாறு கரையை வந்து சேர்ந்தவுடன் அவரை அழைத்துச் செல்வதற்கு திருகோணமலையிலிருந்து ஹயஸ் வாகனத்தில் மூவரும் வருகைத்தந்திருந்தனர். இதன் பின்னர் சோதனை மேற்கொண்ட பொலிஸாரிடம் இந்தியாவிலிருந்து திரும்பியவரும் அவரை அழைத்துச் செல்லச் சென்றிருந்த மூவருமாக நால்வரையும் வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
செய்தி 2: தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை படகோட்டியொருவர் தப்பிச் சென்றுள்ளார். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், படகோட்டியிடம் தலா பத்தாயிரம் ரூபா என 60 ஆயிரம் ரூபா கொடுத்திருந்தனர்.
செய்தி 3: அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டலில் தமிழகத்திலிருந்து 83 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்கவே இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் இலவச விமான பயனச்சீட்டு உட்பட மேலும் பல வசதிகளைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. இந்த அகதிகளுக்கு 6 மாதங்களுக்குத் தேவையான உலருணவுப்பொருட்களை வழங்கவும் வாழ்வாதாரத்துக்காக ஒரு இலட்சம் ரூபா வரை நிவாரண உதவி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்து வந்தாலும் அதற்கு தேவையில்லாத நிலையே தற்போது இலங்கையில் காணப்படுவதாக அரசாங்கத்தால் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல் நிலைவரம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியா சென்ற அகதிகள் தமது சொந்த விருப்புடன் மீள்குடியேற்ற அமைச்சின் தலையீட்டின் பேரில் மீண்டும் இலங்கை திரும்பி வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அளவில் 3001 அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த 7818 பேர் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான செயலாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய அரசாங்கத்தில் மீள்குடியேற்ற அமைச்சு இல்லாமலாக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் கீழ் செயற்பட்ட நிறுவனங்கள் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கையில் நிலவிய அசாதரண சூழ்நிலைகளின் போது இலங்கையிலிருந்து பலர் வெளியேறி உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் அகதிகளாக தஞ்சமடைந்து தற்போது வெளிநாட்டுவாழ் இலங்கையர்களாக மாறிவிட்டனர். இன்னும் பலர் ஒருசில நாடுகளில் அகதிகளாகவே மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை இந்தியாவில் அகதிகளாக வசிக்கும் இலங்கை அகதி மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் அண்மையில் இந்தியாவில் திருத்தியமைக்கப்பட்டிருந்த குடியுரிமை மசோதாவில் விலக்களிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் 19 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் 107 முகாம்களில் வசித்து வருகின்றனர். இதில் 10 ஆயிரம் நபர்கள் 8 வயதுக்கு குறைவானவர்களாவர். முகாம்களிலுள்ள 60 ஆயிரம் பேரைத்தவிர, வெளியில் சுமார் 30 ஆயிரம் இலங்கைத்தமிழர்கள் சொந்தமாக வாழ்கின்றனர். இவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் அடிக்கடி அறிக்கைகளை கையளிக்க வேண்டும். அத்துடன் படகுகள் மூலமாகவும் இதர வழிகளிலும் சட்டத்துக்கு புறம்பாக இந்தியாவுக்கு வந்தவர்கள் யாரும் அகதிகள் என்று அழைக்கப்பட மாட்டார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை மக்களை மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு கடந்த அரசாங்கம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பலரும் நாட்டுக்குத் திரும்பியிருந்தாலும் அவர்கள் இன்னும் முழுமையான மீள்குடியேற்றத்துக்கு உட்படுத்தவில்லையென்பதும் முக்கியமானதாகும். அதனால் தாய்நாட்டுக்குத் திரும்பி எவ்வித உரிமைகளும் அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்வதற்கு அகதி மக்கள் விரும்பாத நிலைமையே காணப்படுகின்றது.
இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் (பதிவு இல.145) பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றவர்களில் 2011 2018 ஆம் ஆண்டு வரை நாட்டுக்குத்திரும்பியோர் தொகை தொடர்பான விபரங்கள் அட்டவணை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கியிருக்கின்ற இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பும் போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை வழங்குவதற்கும் அவசியமான வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கும் (முன்னைய) மீள்குடியேற்ற அமைச்சின் உத்தியோகத்தர்களும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தமது சொந்த விருப்புடன் நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கான கடவுச்சீட்டு, சென்னையிலுள்ள இலங்கை பிரதி ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்தாசையுடன் இலவசமாக வழங்கப்படுவதுடன், விமான பயணச்சீட்டையும் இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
இவற்றில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (க்Nஏஇகீ) மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான இலவச விமான பயணச்சீட்டு, மீள்குடியேறுவதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட ஆளொருவருக்கு 10 ஆயிரம் ரூபாவும் 18 வயதுக்கும் குறைந்த ஆளொருவருக்கு 7500 ரூபாவும் போக்குவரத்துச் செலவுகளுக்காக தலா ஒவ்வொருவருக்கும் 2500 ரூபாவும் உணவு அல்லாத பொருட்களுக்கான கொடுப்பனவாக தனிநபர் கொண்ட குடும்பத்துக்கு 5000 ரூபாவும் குடும்பமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.
இவற்றை விடவும் இலங்கையில் குறித்த அமைச்சினால் வருகைத்தரும் குடும்பமொன்றுக்கு உணவுப்பங்கீடாக 5000 ரூபா வழங்கப்படுவதுடன் மாவட்ட செயலக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டப்பின் குடும்பமொன்றுக்கு தற்காலிக வாழ்விடத்துக்காக 25 ஆயிரம் ரூபாவும் காணி தயார்ப்படுத்தலுக்காக குடும்பமொன்றுக்கு 5000 ரூபாவும் குடும்பங்களுக்கான பொருட் கொள்வனவிற்கு 3000 ரூபாவும் என மொத்தமாக இலங்கை திரும்பும் தனிநபரொருவருக்கு 73000 ரூபா (விமான பயணச்சீட்டு தவிர்த்து) வழங்கப்படுகின்றது. அவ்வாறு நாடுதிரும்பிய அகதிகளுக்கு 930 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாழ்வதற்கான வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பனவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் இடம்பெற்ற உள்ளக மோதல்கள் காரணமாக தமது சொந்த கிராமங்களை விட்டகன்று இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குரிய 2018 ஆம் ஆண்டு சிபாரிசு செய்யப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் மீள்குடியேறும் எதிர்பார்ப்புடன் நிவாரணக்கிராமங்களிலும் தமது உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்கி வாழ்கின்ற மக்களுக்கு அவசியமான நலன்புரி சேவைகளை வழங்குவதற்கும் (முன்னைய) மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி அமைச்சிற்கு 2018 ஆம் ஆண்டில் 9000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைத்தது. இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்தும்போது இடம்பெயர்ந்த குடும்பங்களின் தேவைகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் அடையாளம் கண்டு அத்தகைய தகவல்களை அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்களின் கீழ் அவசியமான பயனாளிகள் மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இங்கு மோதல் நிலைவரத்தின் கீழ் வலது குறைந்தவர்கள் இருக்கின்ற குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், குறைந்த வருமானம்பெறும் குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள், நலன்புரி நிலையங்களில் தங்கி இருக்கின்ற குடும்பங்கள், உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கி இருக்கின்ற குடும்பங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. அதன்படி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அளவுகோள்களின் அடிப்படையில் பயனாளிகளின் தெரிவு மாவட்ட செயலாளர்களின் நேரடித்தலையீட்டுடன் கீழ் மட்டத்திலிருந்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகமயமாக்கப்பட்டப்பின்னர் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளக் கூடியவாறு தொழில்சார் அறிவைப் பெற்றுக்கொடுத்தல், குடும்ப அமைப்பினை வலுப்படுத்தல், அதன் முக்கியத்துவம், இருதரப்பு பொறுப்புக்களைப் பற்றி புரிய வைத்தல், குடும்ப கட்டுகோப்பை பேணிச்செல்வதற்கான பொருளாதார, சமூக, நலன்புரி நடவடிக்கைகளை கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கூறியவாறு பல்வேறு செயற்றிட்டங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் சட்டவிரோதமாக படகு பயணம் மூலம் அகதிகள் நாட்டுக்குத் திரும்பிவரும் நிலை காணப்படுகின்றது. அதற்கான காரணம் என்ன? அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகள் தொடர்பாக தெறிவுபடுத்தவும் வேண்டும். நாட்டுக்குத் திரும்பி வருவதால் அச்சுறுத்தல் இருக்குமென கருதுதல், விமானநிலைய விசாரணைகளுக்குப் பயப்படுதல், சிலவேளைகளில் குற்றவாளிகளாக நாட்டைவிட்டு தப்பிச் சென்றிருத்தல், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியிருத்தல், இந்தியத் தமிழர்களை மணம்முடித்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிவருதல், அகதிகளாக பதிவு செய்யப்படாதவர்களாக இருத்தல் போன்ற பல காரணங்கள் இவர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குத்திரும்பி வருவதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு சுதந்திரமாக திரும்புவதையும் வாழ்வதையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதைவிடவும் தாய் நாட்டுக்குத் திரும்பியவர்கள் முறையாக மீள்குடியேற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தாய்நாடு திரும்புபவர்களுக்கான புதிய கருத்திட்டமொன்றையும் உருவாக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக