- 2014 - 2019 வரையான காலப்பகுதியில் 668 இலங்கையர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
- அதிகமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 87 இலங்கையர்.
- குவைத்திலுள்ள 151 இலங்கையர் இலங்கையில் தண்டனையை கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை முக்கிய இலாபத்தை பெற்றுத் தருகின்றது. அதேபோலவே இலங்கையர் பலரின் உழைப்பில் பல வெளிநாடுகள் பலன் பெற்று வருகின்றன. அவற்றில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கிய பங்குண்டு. இலங்கைப் பெண்கள் பணிப்பெண்களாகவும் ஆண்கள் கட்டுமானம் உள்ளிட்ட ஏனையத் தொழில்களுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளுக்கும் நாடிச் செல்கின்றனர். ஆனால் எதிர்பார்த்ததைவிட வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலம் இலங்கையர் அதிகமான பலன்களை பெற்றுக்கொள்வதிலும் மாறாக தண்டனைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். அவற்றினை வெளிநாட்டுச் சிறைகளில் வாழ்கின்ற இலங்கையரின் புள்ளிவிபரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. வெளிநாடுகளில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டவர்களாகவும் சிலர் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற இலங்கையரில் குற்றச் செயல்களுக்காக 2014 2019 ஆண்டு காலப்பகுதியில் சிறை தண்டனை பெற்றுள்ளோர் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கடந்த மே மாதம் கோரியிருந்த போதிலும் (59/2019) கடந்த சில மாதமளவிலேயே தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இருப்பினும் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக போலியான சான்றிதழ்களின் மூலம் அனுப்பப்பட்ட சிறுமி ரிசானா மரணதண்டனை பெற்றமை சகலரும் அறிந்த விடயமாகும். ஆனால் அவரை தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு எவராலுமே முடியாமல் போனது. அதன்பின்னர் பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்புக்குச் செல்லும் பெண்கள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்றும் போலி ஆவணங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
2014 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற இலங்கையரில் 668 பேர் பல்வேறு குற்றச் செயல்களுக்காக வெளிநாடுகளில் சிறை தண்டனை பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 2014 ஆம் ஆண்டு 176 பேரும், 2015 இல் 122 பேரும், 2016 இல் 108 பேரும், 2017 இல் 80 பேரும், 2018 இல் 162 பேரும், 2019 இல் 20 பேரும் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இவற்றில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 87 பேரும், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேரும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேரும், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேரும், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேருமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 668 பேர் இவ்வாறு சிறைதண்டனை பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இலங்கையரை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் சட்டம் நடைமுறையிலிருந்தாலும் இலங்கையர் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நாட்டினுடைய உள்நாட்டு சட்டங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன மற்றும் குற்றவாளி பெற்றுள்ள தண்டனை என்பவற்றைப் பொறுத்தே கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையும் தண்டனை நிறுத்தமும் குற்றவாளிகளை பரிமாறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாகவும் இலகுவில் சமரசத்துக்கு உட்படாத வகையிலும் அமைந்திருப்பதால் அங்கு தண்டனை பெற்றவர்களை உடனடியாக விடுவிப்பதோ, நாட்டுக்கு மீண்டும் அழைப்பதோ இலகுவான விடயமல்ல.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை தொடர்பான கணக்காளர் நாயகத்தின் 2019 ஆம் ஆண்டு விசேட அறிக்கையின் படி, 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் சட்டத்தின் மூலம் இலங்கையினுள் குற்றமிழைத்த வேறுநாட்டு நபரொருவரை அந்நாட்டுக்குக் கையளிப்பதற்காக மற்றும் வேறொரு நாட்டில் குற்றமிழைத்த இலங்கையர் ஒருவரை இந்நாட்டுக்கு கையளித்தல் தொடர்பான சட்ட திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் குற்றமிழைத்ததாக இனங்காணப்பட்ட மூன்று இலங்கையர்களை இச்சட்டத்தின் விதிமுறைகளுக்கமைவாக தமது தண்டனை காலத்தை கழிப்பதற்காக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கையில் வைத்து குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று இந்திய நாட்டுக் கைதிகள் மீதமுள்ள தமது தண்டனை காலத்தை கழிப்பதற்காக இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று குவைத் நாட்டிலுள்ள இலங்கை கைதிகளுள் 151 பேர் இலங்கையில் தமக்கு மீதமாகவுள்ள தண்டனைக் காலத்தை கழிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்து வெளிநாட்டமைச்சு மூலமாக தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையில் குற்றவாளிகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதுடன் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையில் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை ஆவணப்படுத்துவதற்காக 2017 செப்டெம்பர் மாதம் இலங்கையில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளதுடன் அவ்வொப்பந்தத்தை கைச்சாத்திடல் மற்றும் நடைமுறைப்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கையைச் சேர்ந்த ஊழியர்கள் தொழில் புரிகின்ற 13 நாடுகளின் சிறைச்சாலைகளில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 500 க்கும் அதிகமான கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் திகதி குவைத் நாட்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையர்கள் 206 பேர் இருந்ததுடன் இதில் 168 பேர் அதாவது 82 வீதமானோர் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவித்தல் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுட்காலத்தண்டனை அல்லது 15 வருடங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். ஏனையவர்கள் திருட்டு, கொலை, வீடுடைப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்களாவர். மேலும் 206 பேரில் 87 பேர் வெளிநாட்டு வேலைவாப்பு பணியகத்தின் மூலம் வெளிநாடு சென்றவர்களாக அல்லது இல்லையென உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான தகவல்களும் காணப்படவில்லை.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்கள் தொடர்பில் முறையான ஆவணங்களை இலங்கை தூதுவராலயங்களே கொண்டிருப்பதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் போலி முகவர்களின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தொடர்பிலும் விசா காலம் முடிவடைந்தும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பாமல் இருப்பவர்கள், தொழிலிடங்களிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியவர்கள் தொடர்பிலும் எவ்விதமான பதிவுகளும் காணப்படாமையும் பாரிய குறைபாடாக இருக்கின்றது. இவர்கள் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பிருப்பதுடன் அவர்களை இலகுவாக அடையாளம் காண்பதிலும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள், தான் செல்லும் பணியிடங்களில் பல்வேறு நாட்டினருடன் தொடர்பினை ஏற்படுத்துவது இலகுவாக இருப்பதாலும் இவர்களின் ஏழ்மையினை வேறுசிலர் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதினாலும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பங்கள் தூண்டப்படுகின்றன. அதேவேளை இலங்கையின் பிரபல போதைப்பொருள் குற்றவாளிகள் கூட வெளிநாடுகளிலிருந்தே போதைப்பொருள் விற்பனையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கின்றது.
வெளிநாடுகளில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சிறைகளில் காணப்பட்டாலும் அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கையில் மிகுதி தண்டனை காலத்தை கழிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தூதுவராலயங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் நடவடிக்கைகளை போதியளவு மேற்கொண்டிருக்காமையினால் தொடர்ச்சியாக இலங்கையர் வெளிநாட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. அதேவேளை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்பவர்கள் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டாலும் கூட பதிவு செய்யாமல் செல்கின்ற ஊழியர்கள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்வதிலும் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் இலங்கையர் தொழில்துறைகளுக்கு புலம் பெயரும் 13 நாடுகளின் சிறைக்கூடங்களில் வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 500 க்கும் மேற்பட்டோர் சிறையிலடைக்கப்பட்டிருந்த போதிலும் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்ளும் நடைமுறைகளின் கீழ் அச்சிறை கைதிகளை வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு எஞ்சிய தண்டனைக்காலத்தை இலங்கையில் கழிப்பதற்காக பொருத்தமான வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பான கணக்காளர் நாயகத்தின் 2019 ஆம் ஆண்டு விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 08 சிறைக்கூடங்களில் 2017 அக்டோபர் 02 ஆம் திகதியில் உள்ளவாறு இலங்கையின் 30 சிறைக்கைதிகளில் 11 பேர் தொடர்பாக போதியளவு தகவல்கள் தூதுவராலயங்களில் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை.
வெளிநாடுகளுக்குச் செல்லுகின்ற ஊழியர்கள் தொடர்பாக தூதரகமானது, கடவுச்சீட்டு இலக்கத்தினூடாக தகவல்களைப் பேணி வருகின்ற அதேவேளை அவ்வூழியர்களை தொழிலுக்கு அமர்த்தியுள்ள வெளிநாடுகளின் காரியாலயங்கள் அவர்களுக்கு அந்நாடுகளினால் வழங்கியுள்ள அடையாள அட்டை இலக்கத்தினூடாக சகல தகவல்களும் பேணப்பட்டு வருகின்றன. இதனால் அதிகமான சந்தர்ப்பங்களில் சிறைப்படுத்தப்பட்ட அல்லது வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பான முறைப்பாடொன்று கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் இகாமா (அடையாள அட்டை) இலக்கம் தெரியாததன் காரணமாக அவர்கள் இருக்கின்ற சிறைச்சாலைகள் அல்லது வைத்திய சாலைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் நிலை காணப்படுகின்றது.
இதனால் வெளிநாட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. முறையான திட்டமிடல்கள் மற்றும் வெளிநாடுகளில் இலங்கையரால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள், போலி முகவரமைப்புகள், பதிவுகளை மேற்கொள்ளாமை போன்ற விடயங்களின் காரணமாக பலரின் வாழ்க்கையே கேள்விக்குரியான நிலையில் சிறைகளில் கழிக்கப்படுகின்றது. ஒருவேளை குற்றங்களை இவர்கள் செய்திருக்காவிட்டாலும் அதனை நிரூபிப்பதற்கோ மற்றும் சட்ட நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கோ இலகுவில் முடியாமையும் தண்டனைக்கான காரணமாக அமைந்திருக்கலாம். இருப்பினும் குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்துவது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே நிரபராதி தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதும் அவசியமாகவிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக