- பராமரிப்பற்ற நிலையில் பொது மலசலகூடம்
- பொது மலசலகூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பு
- குத்தகையின் மூலம் அதிக வருமானம்
ஹட்டன் பஸ்தரிப்பு நிலையம் பஸ்களை தரித்து வைக்கும் இடமாக மாத்திரமல்லாது தற்போது பஸ்களின் பின்னால் மறைவான பகுதிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியையும் பலருக்கும் வழங்குகின்றது. பஸ் தரிப்பிடத்துக்கு அண்மையிலேயே பொது மலசலகூடம் அமைந்திருந்தாலும் பெரும்பாலானோரின் தெரிவு இதுவாகவே இருக்கின்றது. இச்செயற்பாடுகள் பல காலமாக இடம்பெற்றுவந்தாலும் அவற்றை தடுப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் ஆர்வலர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இதேவேளை தலவாக்கலை மற்றும் ஹட்டன் நகரங்களில் அமைந்துள்ள பேருந்து நிலைய மலசலகூடங்களில் அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் முறைப்பாடுகள் தெரிவித்துள்ளதாக அண்மையில் பத்திரிகைச் செய்தியொன்று வெளியாகியிருந்தது. அச்செய்தியில், தினந்தோறும் சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த நகரங்களில் அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதால் பெரும் அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த அதிகரித்த கட்டணத்தை செலுத்துவதென்பது கடினம் என சுட்டிக்காட்டும் பொதுமக்கள் குறித்த நகரங்களிலுள்ள பொது மலசலகூடங்களில் சிறுநீர் அல்லது மலம் கழிப்பதற்கு 20 ரூபா வீதம் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடமானது, மக்கள் பாவனைக்கு உகந்ததாக இல்லை என அண்மையில் சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேவேளை வெலிமடை நகரசபை நிர்வாகத்துக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் காணப்படும் மலசலகூடமானது முற்றிலும் இலவசமான சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மலசலகூட விவகாரம் தொடர்பாக தலவாக்கலை லிந்துலை நகரசபையிடமும் (CPC/N/TUC/5/1/RTI) ஹட்டன் டிக்கோயா நகர சபையிடமும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி தலவாக்கலை லிந்துலை நகரசபை எல்லைப்பிரதேசத்தில் ஒரு பொது மலசலகூடமே அமையப்பெற்றுள்ளதாகவும் கேள்விமனு கோரல் மூலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இம்மலசலகூடத்தின் மூலம் மாதம் 52,170 ரூபா வருமானம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மலசலகூடத்தில் 20 ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது. இதேவேளை அதிக கட்டணம் அறவிடப்படுவது தொடர்பாக எவ்விதமான முறைப்பாடுகளும் தலவாக்கலை லிந்துலை நகரசபையில் பதிவு செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு கேள்விமனு மூலம் பொது மலசலகூடம் வருடத்துக்கு 360,000 ரூபா (மாதம் 30,000ரூபா) அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 201% ஆம் ஆண்டு வருடத்துக்கு 375,000 ரூபா (மாதம் 31,290 ரூபா) அடிப்படையிலும் 2018 ஆம் ஆண்டு வருடத்துக்கு 475,000 ரூபா (மாதம் 39,580 ரூபா) அடிப்படையிலும் 2019 ஆம் ஆண்டு வருடத்துக்கு 626,000 ரூபா (மாதம் 52,170 ரூபா) அடிப்படையிலும் தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட பொது மலசலகூடமானது குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பொது மலசலகூடத்தின் மூலம் மக்கள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்நோக்கின் அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியும்.
ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குச் சொந்தமாக மூன்று பொது மலசலக்கூடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு ஹட்டன் நகரத்தை மையப்படுத்தியதாகவும் ஒன்று டிக்கோயாவிலும் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கோயா பொது மலசலகூடமானது, குத்தகைக்கு வழங்கப்படாது பொதுமக்களின் பாவனைக்காக இலவசமாக விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் பேருந்து நிலைய பொது மலசலகூடம் மற்றும் ஹட்டன் நட்சத்திரசதுக்க பொது மலசலகூடம் என்பன குத்தகைக்கு வழங்கப்படுவதால் வருடாந்தம் பல இலட்சங்களை வருமானமாக பெற்றுக்கொள்கின்றன. அதனடிப்படையில் குத்தகையின் மூலம் 2016 ஆம் ஆண்டு 3874643.49 ரூபாவினை வருமானமாகவும் 2017 ஆம் ஆண்டு 4845061.86 ரூபாவினை வருமானமாகவும் 2018 ஆம் ஆண்டு 4211809.92 ரூபாவினை வருமானமாகவும் 2019 ஆம் ஆண்டு 2952108.29 ரூபாவினையும் (2019.09.30 வரை) வருமானமாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பெற்றுக்கொண்டுள்ளது.
பொது மலசலக்கூடத்தினை பாவிப்போருக்கு கட்டணமாக 10 ரூபாவே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 ரூபாவினை விடவும் அதிகமான தொகையே கட்டணமாக அறவிடப்படுவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பொது மலசலகூடத்தினை பாவிப்போருக்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அம்முறைப்பாடுகளுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் டிக்கோயா நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு அதிகமான கட்டணங்கள் அறவிடப்படுவதனாலும் சுகாதாரமான முறையில் பொது மலசலகூடங்கள் பேணப்படாமையினாலும் பலர் திறந்த வெளியினையே கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது. ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் பஸ்கள் தரித்து நிற்கும் இடத்துக்கு பின்னால் காணப்படும் வடிகாண்களில் சிறுநீர் கழிப்பது பலருக்கும் வாடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் தரித்து நிற்கின்ற பஸ்களில் பொது மக்கள் அமர்ந்திருப்பதே மிகப்பெரும் சவாலாக இருப்பதோடு கடும் துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது. இதனால் இயற்கை காற்றுக்குப் பதிலாக சிறுநீர் நாற்றத்தையே அனைவரும் சுவாசிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பொது மலசலகூடங்களின் மூலம் பல இலட்சங்களில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நகரசபை இவ்விடயம் தொடர்பாக அக்கறையற்ற நிலையில் இருப்பது வேடிக்கையானது. அதேவேளை பேருந்து நிலையத்துக்கு அருகில் காணப்படும் பொது மலசலகூடமானது முறையான பராமரிப்புகளின்றி காணப்படுவதுடன் அதன் வளவுகளிலேயே குப்பைகளும் சேகரிக்கப்படுகின்றன. இவையனைத்தும் சுகாதாரத்துக்கு பெரும் கேடாக அமைவதுடன் அருகிலுள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு கடும் துர்நாற்றம் வீசும் பகுதிகளிலேயே பொரித்த உணவுகளும் கூடைகளில் கொண்டு வந்து பஸ்களில் விற்கப்படுகின்றன. இந்த உணவுகளில் இந்த காற்றுபடாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதங்களும் இல்லை.
புதிய ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய நாடு முழுவதுமுள்ள வெற்று சுவர்களில் சித்திரம் வரைந்து நாட்டை அழகுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுவர் ஓவியங்கள் மூலம் ஹட்டன் பேருந்து நிலையத்தில் வீசும் துர்நாற்றத்தை இல்லாதொழித்துவிட முடியாது. அதற்கு முறையான கழிவகற்றல் முறையுடன் வடிகாணில் சிறுநீர் கழிக்கும் நடவடிக்கையினையும் தடைசெய்ய வேண்டும். பேருந்து நிலையத்தில் தரித்து நிற்கும் பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் வடிகாண்களையே மலசலகூடமாக பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது. எனவே இவற்றை தடுப்பதற்கு கடுமையான தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட வேண்டும். ஹட்டன் நகரை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஹட்டன் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து பஸ் தரிப்பிடங்களும் உள்வாங்கப்படவேண்டும். அதற்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை, ஹட்டன் டிப்போ, மத்திய மாகாண பொதுப்போக்குவரத்து அதிகாரசபை மற்றும் ஹட்டன் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் செயற்பட வேண்டும்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக