கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 நவம்பர், 2019

டெப் கணினிகள் கல்விக்கு சவாலாகுமா ?

தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்து செல்லுகின்ற நிலையில் அவற்றை கல்வி செயற்பாடுகளிலும் உள்ளடக்கி அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை தற்போது இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதுமுள்ள சகல உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகள் வழங்கும் யோசனை 2017 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் 13 தடவைகள் மேற்படி விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது சகல பாடசாலை உயர்தர மாணவர்கள் என்பதற்குப்பதிலாக தேசிய பாடசாலைகளிலுள்ள உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம் டெப் கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வளங்களை சமமான முறையில் பங்கிடுதல் என்ற கோட்பாட்டை தகர்த்தெரிவதாகவே உள்ளது. இதன்மூலம் பெருந்தோட்டப் பாடசாலைகள் உயர்தர கற்கையினை மேற்கொள்ளும் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்குவது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சிடம் (ED/RTI/1907/315) கோரியிருந்த நிலையில் முழுமையான தகவல்கள் வழங்கப்படாமல் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒருசில தகவல்களே வழங்கப்பட்டிருந்தன. கோரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் மாவட்ட ரீதியாக அத்திட்டத்துக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் மொத்தமாக இத்திட்டத்துக்காக 4000 மில்லயன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரவு  செலவுத் திட்டத்தில் 175,000 உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் 28,000 ஆசிரியர்களுக்கும் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் கீழ் இலவச டெப் கணினிகள் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுக்குப் பதிலாக டெப் கணினிகளில் மின் புத்தகங்களின் மூலம் பாடங்களை கற்க முடியும்.

டெப் கணினிகள் வழங்கும் திட்டமானது ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குரியதொரு திட்டமாக இருந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இத்திட்டம் இன்றுவரையும் இறுதியடையவில்லை. தற்போது தேசிய பாடசாலைகளிலுள்ள உயர்தர மாணவர்களுக்கு மட்டும் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதானது, ஏனைய மாணவர்களை ஏமாற்றும் செயற்பாடாக இருக்கின்றது. பெருந்தோட்ட மாணவர்கள் அதிகமாக கல்விக்கற்கின்ற எந்தவொரு பாடசாலையும் தேசிய பாடசாலையாக காணப்படவில்லை. அதனால் பெருந்தோட்ட மாணவர்கள் அதிகம் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது சாத்தியமில்லை. அத்தோடு தேசிய பாடசாலைகளில் கல்விகற்கின்ற சகல மாணவர்களும் கணினி அறிவினை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப கூடங்கள் சகல வசதிகளும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கணினி வசதிகளே இல்லாத நிலையில் பல பெருந்தோட்டப் பாடசாலைகள் இருக்கின்றன. கணினி பயிற்சியே இல்லாத நிலையிலும் பல மாணவர்கள் இருக்கின்றார்கள். ஆதலால் இத்திட்டம் பெருந்தோட்ட மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தும் கூட எட்டாமல் இருப்பது துரதிஷ்டமானது.

இம்மாதம் இறுதியிலிருந்து டெப் கணினிகள் வழங்கும் திட்டம் மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இத்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட்ட 4 பில்லியன் ரூபா நிதி கல்வியமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கேற்ப அனைத்து தேசிய பாடசாலைகளையும் சேர்ந்த உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு சுமார் இரண்டு இலட்சம் டெப் கணினிகள் தேவைப்படுவதாகவும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கேற்ப இரண்டு இலட்சம் கணினிகள் தொகுதி தொகுதியாக கொள்வனவு செய்யப்பட்டு அவற்றை வழங்கும் நடவடிக்கை அம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறு வழங்கப்படவுள்ள டெப் கணினிகள் 2019 ஆம் ஆண்டுக்கான மிகப் பிந்திய நவீன மாதிரிகளில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என்பதுடன் வைபை உட்பட அனைத்து நவீன வசதிகளையும் உடையதாக இருக்கும்.

இதற்கேற்ப அனைத்து நவீன உபகரணங்கள் மற்றும் கருவிகளும் இந்த டெப் கணினிகளில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதுடன், தேவைக்கேற்ப கீ போர்ட் மற்றும் கருவிகளும் வழங்கப்படும். இந்த டெப் கணினிகளை இரண்டு தொகுதி மாணவர்கள் நான்கு வருடங்களுக்கு பயன்படுத்தமுடியுமென்பதுடன் 25 பாடநெறிகளுக்காக இவை வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் இலங்கையின் கல்வித்துறையானது புதிய அத்தியாயத்தில் பயணிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் சகல பாடசாலைகளிலும் இவற்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெருந்தோட்டப் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் என்பது நெடுங்காலமாக நீடிக்கும் பிரச்சினையாகும். குறைந்தது அதிபர் அலுவலகங்களில் கூட ஒரு கணினி இல்லாத பாடசாலைகளே அதிகம் இருக்கின்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு சில பாடசாலைகளுக்கு ஐந்துக்கும் குறைவான அளவில் கஞுணtடிதட் கணினிகள் வழங்கப்பட்டன. பின்னர் 8  10 வருடங்களுக்குப்பின்னர் ஐந்துக்கும் குறைவான அளவில் கூதீஞுடூதிஞு இணிணூஞு கணினிகள் வழங்கப்பட்டன. அவை வழங்கப்பட்டு 10 வருடங்கள் கடக்கின்ற நிலையில் இன்னும் கணினி கூடங்களை சகல பாடசாலைகளிலும் அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எவரும் மேற்கொள்ளவில்லை.

மைதானங்களே இல்லாத கிராமங்களுக்கு துடுப்பு மட்டைகளும் விக்கட்டுகளும் வழங்குவதும் கோயில்களுக்கு பாத்திரங்கள் வழங்குவதும் பலரின் சேவையாக இருக்கிறதே தவிர பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவுகின்ற வளப் பற்றாக்குறையை ஓரளவுக்காவது குறைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பெருந்தோட்டங்களில் குறைந்தது 700 மாணவர்களை கொண்ட ஒரு பாடசாலைக்கு கணினி அறிவை வளர்ப்பதற்கும் அலுவலக வேலைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஐந்துக்கும் குறைவான பழைய கணினிகளே இருக்கின்றன. சில வேளைகளில் அவையும் இருப்பதில்லை. இதுவே பல பெருந்தோட்டப் பாடசாலைகளின் நிலைமை. இந்நிலையில் டெப் கணினிகள் வழங்கும் திட்டத்திலும் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லையென்ற நிலை காணப்பட்டாலும் டெப் கணினிகள் மூலம் உயர்தரப் பாடங்களை கற்றுக்கொள்ளுமளவுக்கு மாணவர்களுக்கு பயிற்சி இருக்கிறதா என்பதுவும் யோசிக்க வேண்டிய விடயமாகும். இதனால் முதலில் பாடசாலைகளில் கணினி கற்கைநெறியினை தொடர்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கவேண்டும். அடுத்ததாக டெப் கணினிகள் மூலம் எவ்வாறு உயர்தர கல்வியினை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக இப்போதே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அப்போதே பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு டெப் கணினிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தும் போது அவற்றை மாணவர்கள் இலகுவாக கையாள்வதற்கு பழக்கப்பட்டிருப்பார்கள்.

டெப் கணினிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் அச்சுப்புத்தகங்களுக்கான செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இன்னும் சில மாதங்களில் அனைத்துப் பாடசாலைகளிலுமுள்ள உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அத்துடன் எதிர்காலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் டெப் கணினிகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக