கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 நவம்பர், 2019

மின்சாரவேலிகள்: யானைகளை கட்டுப்படுத்துகின்றதா?

கடந்த 13, 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதுமுள்ள காட்டு யானைகளின் சனத்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காட்டு யானைகள் நடமாடும் சகல பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில் 229 இடங்களில் 7316 அதிகாரிகளால் இக்கணக்கெடுப்பு நடைபெறவிருந்தது. இலங்கையில், மக்களிடமிருந்து யானைகளை பாதுகாப்பதற்காகவும் யானைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தாலும் கூட யானை  மனித மோதலை தடுக்க முடியாத நிலை தோன்றிவருகின்றது. இதனால் யானைகளால் மனிதருக்கும் மனிதர்களால் யானைகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. இந்நிலையில், மனித வாழ்விடங்களுக்குள் யானைகள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்காகவே இலங்கையில் தற்போது மின்சார வேலிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் மின்சாரவேலி திட்டம் நடைமுறையில் யானைகளையும் மனிதர்களையும் பாதுகாப்பதற்கு வழியேற்படுத்தியதா என்பது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் யானைகளின் தொகை மற்றும் மின்சாரவேலிகள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து (WL/16/RTI - 01/2019/25) பெற்றுக்கொள்வதற்கு ஓரளவுக்கு முடியுமாகவிருந்தது. இதன்படி இலங்கையில் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் 5879 யானைகள் நாடுமுழுவதும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள யானைகளின் இறப்புகள் மற்றும் பிறப்புகள் அத்தொகையினை மாற்றியமைத்திருக்ககூடும். விபத்துக்கள், குண்டுகளினால் ஏற்படும் காயங்கள், சட்டவிரோதமான முறையில் யானைகளைப் பிடித்தல், குட்டி யானைகளைப் பிடித்தல், குட்டி யானைகளைப் பிடித்த பின்னர் தாய் யானைகளை சுடுதல், வறட்சியான காலங்களில் நீரின்றி மரணமடைதல், காடுகளை அழிக்கும் போது யானைக் கூட்டங்கள் பிரிந்து செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்கள் யானைகளின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் தாக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கின்றன.

வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை வணிக ரீதியாகவும் ஏனைய முறையற்ற விதத்திலான பாவனைக்கும் உட்படுத்துவதனால், இலங்கையில் காட்டு யானைகளின் பெருக்கம் மற்றும் அதன் நிலவுகைக்கு பாரிய தடையொன்று நிலவியதாக கடந்த வருடங்களினுள் பெறப்பட்ட யானைகளின் மரண எண்ணிக்கையை நோக்கும் போது தெளிவாவதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான விசேட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. மனிதன்  யானை மோதல்களின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் அதற்காக வழங்கப்பட்டுள்ள இழப்பிடுகள் தொடர்பில் (அட்டவணை 01) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் தகவல் பெறப்பட்டிருந்தது.

 அதேவேளை அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கதம்பன் யானைகளும் தற்போது அதிகமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012  2017 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 38 கதம்பன் யானைகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தரவுகளில் இருந்து சுட்டிக்காட்டப்படுகின்றது. அந்த வகையில் 2012 இல் 06 யானைகளும் 2013 இல் 09 யானைகளும் 2014 இல் 07 யானைகளும் 2015 இல் 05 யானைகளும் 2016 இல் 06 யானைகளும் 2017 இல் 05 கதம்பன் யானைகளும் இறந்துள்ளன.

தற்போது அதிக எண்ணிக்கையான காட்டு யானைகள் கழிவுப்பொருட்களை உணவாகக் கொள்வதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு இறப்பதுடன் மரணப்பரிசோதனையின் போது யானையின் வயிற்றில் உக்காத பொலித்தீன், டைப்பிங் பைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உட்பட அநேகமானவை காணப்பட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாவர உண்ணியான யானை கழிவுப்பொருட்களின் நுகர்விற்குப் பழக்கப்பட்டப்பின்னர் நாளாந்தம் கழிவுப்பொருட்களை உணவுப்பொருளாக கொள்ளும் வழக்கத்தினால் வருகைதரும் காட்டு யானைகளின் கூட்டம் அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. கழிவுப்பொருட்கள் வெளியேற்றும் இடங்களில் யானைகள் சுற்றித்திரிவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கையெடுத்தல் என்ற தலைப்பில் 2017 ஜூன் 07 ஆம் திகதிய  ட்டுஞ்/17/1057/708/014 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படும் இடங்களுக்கு யானைகள் வராமல் இருப்பதற்காக மின்சார வேலிகள் அமைப்பதன் மூலம் இந்நிலைமைகளை தவிர்ப்பதற்கு வழிகள் காணப்பட்டிருந்தபோதிலும் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இதுவரை (2017) தவறியிருந்ததாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் வலயத்தில் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படும்54 இடங்களில் 300 க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிவது இனங்காணப்பட்டுள்ளது.

யானை  மனித மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான தீர்வுகளில் மின்சார வேலிகளை அமைத்தல் தீர்வொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. அந்தவகையில் 2016 ஆம் ஆண்டு வரை 4211.8 கிலோ மீற்றர் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் 293 மின்சாரவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நீளம் 4439 கிலோமீற்றர்களாகும். 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 1200 கிலோ மீற்றர் நீளமான மின்சார வேலிகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சாரவேலிகளை அமைப்பதற்கு வருடாந்தம் பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன. அதன்படி 2015 இல் 275.82 மில்லியன் ரூபாவும் 2016 இல் 239.5 மில்லியன் ரூபாவும் 2017 இல் 99.95 மில்லியன் ரூபாவும் 2018 இல் 141.50 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன. மின்சாரவேலி நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட பணத்தினுள் மின்சார வேலி உபகரணங்கள் கொள்வனவு செலவீனம் உள்ளடக்கப்படுவதுடன் அனைத்து மின்சார வேலி உபகரணங்கள் உரிய ஆண்டில் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் யானை  மனித மோதலைக் குறைக்கும் நடவடிக்கையாக மின்சார வேலிகள் அமைக்கும் பணிகள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் நிர்மாண ஊழியர்களின் பற்றாக்குறை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பாரிய சிக்கலொன்றாக இனங்காணப்பட்டிருந்தது. அதற்குத் தீர்வாக 2012 அக்டோபர்19 ஆம் திகதி முதல் நாட்டின் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு வலயங்களுக்குரிய அனைத்து மின்சார வேலிகளை அமைத்தல், பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் என்பன முறையான நடைமுறையொன்றுடனும் ஒழுங்குபடுத்தலுக்கு உட்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், 2017 ஆம் ஆண்டில் மின்சார வேலிகளை பராமரிப்பதற்காக ரூபா 99,784,505 ஆன நிதி ஏற்பாடு வழங்கப்பட்டிருந்தது.
மின்சார வேலி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பௌதீக பரிசோதனையின் போது சில பிரதேசங்களில் ஆட்களால் தமது பயிர்ச்செய்கை நிலத்தைச் சுற்றி அனுமதியற்ற மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்ததுடன் அவ்வாறான மின்சார வேலிகளுக்காக மின்சக்தியை பெற்றுக்கொள்ளும் மூலம் எதுவென்பதும் காணப்படும் வோல்ட் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தில் விதிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக பரிசோதனையொன்றோ அல்லது வழிகாட்டல் இல்லாதிருந்தமை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அம்சமாகவும் இருக்கின்றது.

2012  2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் மின்சார வேலி நிர்மாணத்திற்காகவும் பராமரிப்பதற்காகவும் ரூபா 1,081,415,399 ஆன செலவீனம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், ரூபா 22,746,196 பெறுமதியான யானை வேலி உபகரணங்கள் அலுவலகத்திலும் பீட்டு அலுவலகங்களிலும் விளைவற்ற வகையிலும் குறைப்பயன்பாட்டுடனும் இருந்தமையும் அவதானிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை மின்சார வேலிகளை அமைப்பதில் காணி தொடர்பான சிக்கல்களும் அக்காணி தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் தினைக்களத்துக்கு முடியாமல் போனமையாலும் சில மின்சார வேலிகளை அமைப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமைகளும் காணப்பட்டிருந்தன. வந்தினகல  கரபன, கொனகெட்டியாவ  தேவாலமங்கட, கொஹொலவகல  கரம்பவவ, ஹிங்கமாலா ஒய வடக்கு, நிதிணியாவ, வலதம்பாபுர  மதவத்த, மஹவந்த  வெலிபிட்டிய, வெலிபிட்டிய  கட்டம்பேரி, விலமென்ன உரணிய  மோதர வெலஸ்ஸ, அத்தகலகம  கிலுக்பெலஸ்ஸ  மஹநெட்டுவுல, அலுத்கங்ஆற  உனதாவௌ போன்ற பகுதிகளிலேயே மேற்படி காணி தொடர்பான பிரச்சினைகள் எழுந்திருந்தன.

அத்துடன் ஹொரவப்பொத்தான யானைகள் காப்பகத்தில் மின்சாரவேலி பொருத்துவதில் அதன் தரம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்ததுடன் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆவேசமான யானைகள் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கடந்தகால செயற்பாடுகளின் காரணமாக மின்சார வேலிகளை அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னேற்றமில்லாத வகையில் நகர்ந்து சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான இடர்பாடுகளே யானை  மனித மோதலுக்கும் தூண்டுதலாக அமைந்திருக்கின்றது. காட்டு யானைகள் இயற்கையிலேயே சஞ்சரிக்கும் தன்மை கொண்ட விலங்கினமொன்றாவதுடன், இவற்றுக்கே உரிய பழக்கமான வழிகளில் பயணம் செய்யும் இயல்புடையவை. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காட்டு யானைகளின் நிலங்கள் காடழிப்பிற்கு உட்பட்டிருந்த போதிலும் அவை சஞ்சரிக்கும் பிரதேசங்களை காட்டு யானைகள் கைவிட்டுச் செல்லவில்லை.

2009 இன் 22 ஆம் இலக்க வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு (திருத்திய) அதிகாரச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் காட்டிற்கு வெளியே 51 ஆம் பிரிவின் பிரகாரம் காட்டினுள்ளே ஏதேனும் யானைகள் இறத்தல், துப்பாக்கியால் சுடுதல், காயமேற்படுத்துதல் என்பது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 21 (ஆ) பிரிவின் பிரகாரம் காட்டிற்கு வெளியே யானைகள் தொடர்பாக செய்த தவறொன்றிற்கு ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் குறையாத மற்றும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்படாத தண்டமொன்று விதிக்கக்கூடியதாக இருப்பதுடன் இச்சட்டத்தின் கீழ் யானைக்கு செய்யப்பட்ட ஏதேனும் தவறொன்றுக்கு பிணை வழங்க முடியாத தவறொன்றாக இருப்பதுடன் அவ்வாறான தவறு தொடர்பாக 1997 இன் 15 ஆம் இலக்க குற்றவியல் நடபடி சட்டக்கோவை சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.

காட்டினுள் யானையொன்று தொடர்பாக செய்யப்பட்ட தவறொன்றுக்கு 51 ஆம் பிரிவின் பிரகாரம், ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் குறையாத மற்றும் ஐந்து இலட்சத்துக்கு மேற்படாத தண்டமொன்று விதிக்கக்கூடியதாக இருப்பதுடன் மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்தில் மறியல் தண்டனை அல்லது இரண்டில் ஒன்றான சிறைத்தண்டனை அல்லது அத்தண்டபணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

எனவே யானைகள் மனித வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைகின்றனவா அல்லது மனிதன் யானைகளின் வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டானா என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய தருணமே இது. இன்றைய அபிவிருத்தியின் வளர்ச்சிப் போக்கு மற்றும் சனத்தொகை வளர்ச்சி என்பன வளச்சுரண்டல்களுக்கு வித்திட்டுள்ளது என்பது உண்மையாகும். அதில் காடழிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. காட்டிலிருந்து வெளிவந்த மனிதன் மீண்டும் காட்டுக்குள்ளேயே நகர்ந்து செல்வதனால் காட்டு விலங்குகளின் வளங்கள் குறையத் தொடங்குகின்றன. மனிதர்கள் அங்கு குடியேறிய பின்பும் விலங்குகள் தங்களுடைய வாழ்விடங்களை மறந்து செல்லாமையினால் மீண்டும் அவை தங்களது சொந்த நிலங்களுக்கு வரும்போது அவை மனிதர்களுடைய வாழ்விடமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கேயே மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் தொடங்குகின்றது. இவற்றை தடுப்பதற்கே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான். அதற்காகவே மின்சார வேலிகளையும் அமைத்துக் கொண்டிருக்கின்றான். அது சாத்தியப்படுவதற்கே இன்னும் காலங்கள் தேவைப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக