கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

வாழ்வை முடிக்கிறதா உலக முடிவு?

ஹோர்டன் சமவெளி அல்லது உலக முடிவு என்ற பெயரைக் கேட்டவுடனே எம்முன் தோன்றுவது அழகான சூழல் கொண்ட இயற்கைக் காட்சியாகும். இயற்கையாகவே அமையப்பெற்றுள்ள இந்த சுந்தரப் பிரதேசத்தை பார்வையிடவென பெருமளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவது வழக்கம். இந்த பிரதேசத்தைச்  சுற்றியுள்ள மரங்கள் , இலைகளுக்கு மத்தியில் ரத்மல் மரம் விசேட இடத்தைப் பிடிக்கிறது. 20 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இச் சூழலைச் சுற்றிக் காணப்படுவது மட்டுமன்றி வண்ண வண்ண நிறங்களில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளும் சிறகுகளை விரித்து பறக்கும் அழகோ அழகு .   இப்பிரதேசத்தில் இருக்கும் விலங்குகளில்  மான் , சிறுத்தை , மரை, முயல்,  குரங்கு என்பன விசேடமானவை .  இங்கு காணக்கூடிய .......... ஓணானுக்கு பிரதான இடம் கிடைக்கின்றது.

இருப்பினும் சுந்தரமயமான இந்த உலக முடிவு அமைந்திருப்பது வாழ்க்கையின் முடிவை காண்பதற்கல்ல  மாறாக இயற்கையை அனுபவித்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கேயாகும். ஆனால் அடிக்கடி எமக்கு கிடைக்கப்பெறும் செய்திகளால் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது முழுப் பிரதேச மக்களும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறான சோகச் சம்பவமொன்று கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அந்த சோகத்தை கீழே பார்ப்போம்.


வெளிநாட்டு வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமைபுரியும் நினன் ரெபயா மற்றும் இக்கதையின் கதாநாயகியான ஜூலியா ஹெல்கா ஆகிய ஜேர்மன் நாட்டு நண்பிகள் இருவர் இம்மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்த இரு நண்பிகளும் முதலாம் நாள் மீகமுவ பிரதேசத்தில் காணப்படும் ஹோட்டலொன்றில் தங்கினர். பல உலக நாடுகளில் இல்லாத அதிசயமொன்று இலங்கையில் காணப்படுவதாக தெரிவித்து இவர்களை சுற்றுலா மேற்கொள்ள வைத்து அந்நாட்டு நண்பிகளுக்கு ,  தாங்கள் இலங்கைக்கு வந்து விட்டதாக இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களது பயணத்துக்கு ,  இலங்கையிலுள்ள அநேக சுற்றுலா இடங்களை தெரிந்து வைத்துள்ள சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதியாக செயற்பட்ட , மிகவும் பழக்கப்பட்ட நீல் பிரேமதிலகவை இவர்கள் தெரிவு செய்துகொண்டதன் காரணம் , தங்களது பயணத்துக்கு பூரண ஒத்துழைப்பை இவர் வழங்குவார் என்ற நோக்கிலேயாகும்.

அதற்கிணங்க சீகிரிய , தம்புள்ள , அநுராதபுரம் , பொலன்னறுவை ,  நிலாவெளி ஆகிய நிறைய இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டு இம்மாதம் 10 ஆம் திகதி  நுவரெலியாவுக்குச் சென்றனர். அன்று மாலை 5 மணியளவில் ஹோட்டலில் தங்கி அடுத்த நாள் அதிகாலையிலேயே தயாராகி காலை உணவையும் உட்கொண்டு விட்டு உலக முடிவை நோக்கிச் சென்றனர். நவம்பர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும். விடுமுறை நாளென்பதால் பெருமளவான உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

உலக முடிவைப் பார்ப்பதற்கான  சரியான நேரம் காலை 6 மணியிலிருந்து 10.30 மணியாகும் . இதை அறியாது வருகை தருவோருக்கு அநேக இடங்களை பார்க்க முடியாத சந்தர்ப்பம்  ஏற்படுகின்றதோடு 6000 அடிக்கு கீழே காணப்படும் தேயிலைத் தோட்டம் , தேயிலைத் தொழிற்சாலை  என்பவற்றை இலகுவாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடுகிறது. மேகக் கூட்டங்களால் அவை மூடப்படுவதே இவைகளை பார்வையிடாமல் போவதற்குக் காரணமாகின்றன. இதை அறிந்திருந்த நண்பிகள் இருவரும் காலை 7 மணியளவில் உரிய இடத்துக்கு வருகை தந்ததோடு குறித்த இடத்தில் அமைந்துள்ள டிக்கட் விற்பனை நிலையத்துக்கு வந்து தங்களுக்குரிய டிக்கெட்டுகளைப் பெற்றுகொண்டு உள்நுழைந்தனர். அங்கு இளைப்பாற அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பின்னர் அண்மையில் காணப்பட்ட சிற்றூண்டிச்சாலைக்குச் சென்று , குளிரிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளும் பொருட்டு வாகனச் சாரதி தேநீர் அருந்தினார். அப்போது காலை 8.30 மணியாகியிருந்தது. அப்போது பூங்கா அதிகாரி ஒருவரால் ஒலிபெருக்கி மூலம் தகவலொன்று பரிமாற்றப்பட்டது. அதாவது , வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணொருவர் உலக முடிவிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்ற செய்தியாகும். இச்செய்தியானது உலக முடிவின் பிரதான தலைமையிடத்துக்கே அறிவிக்கப்பட்டிருந்தது.

சாரதி இந்தச் செய்தியைக் கேட்டதும் திக்குமுக்காடிப் போனார். விரைந்து பிரதான நுழைவாயிலுக்குள் ஓடிச் சென்ற வேளை வேறு நாட்டு வெளிநாட்டு பெண்கள்   இருவருடன் தன்னோடு நினன் ரெபயா வந்து கொண்டிருந்ததை அவதானித்தார். ஜூலியா ஹெல்கா கீழே விழுந்துவிட்டதாக
அந்தப் பெண் தெரிவித்தாள். இருப்பினும் சந்தேகத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளவென  குறித்த இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு உலக முடிவிப் பகுதிக்குச் சென்று விபரத்தை தெளிவுப்படுத்தினர். அங்கு தன்னுடன் வந்த சுற்றுலாப் பெண்ணொருவர் இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளாகியிருப்பதாக மற்ற பெண்ணுடன்  பட்டிபொல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று குறித்த  சாரதி தகவல் வழங்கினார்.   பின்னர் நாங்கள் பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்துவிட்டு பலாங்கொடை விடுதியில் தங்கிவிட்டோம்.

இத்தகவல்களுக்கிணங்க செயற்பட்ட நுவரெலியா இராணுவத்தின் மலை வீரர்கள் 25 பேரளவில் உலக முடிவிலிருந்து கீழே இறங்கியது , யுவதி மரத்தில் அல்லது எங்காவது சிக்கிக்கொண்டிருப்பாளோ என்றெண்ணியேயாகும். இதற்கு காரணம் 2015 ஆம் ஆண்டு உலக முடிவிலிருந்து கீழே விழுந்த நெதர்லாந்து நாட்டவரான மார்டின் லோரன்ஸ் என்பவர் இராணுவ வீரர் ஒருவரால் காப்பாற்றப்பட்டமையேயாகும். இந்த சந்தர்ப்பத்தில் மு.ப. 11.30 மணியிருக்கும். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உலக முடிவிலிருந்து யாதேனும் வீழ்ந்தால் மீண்டும் கண்டுப்பிடிக்கப்படுவது இரத்தினபுரி மாவட்டத்தில் , பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நன்பேரியல் தோட்டம் அமைந்துள்ள இடத்திலாகும். அதன் தூரம் 6000 அடியாகும். இதுவரை பலாங்கொடை   பொலிஸ் மா அதிபர்  உதயன பண்டார தென்னகோனின் உத்தரவின் பேரில் சமனல வெவ பொலிஸ் காவலரண் தலைவர் பெர்னாண்டோ அடங்கிய அதிகாரிகள் குழுவொன்றும் வனஜீவி அதிகாரிகள் குழுவொன்றும் குறித்த சம்பவம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நன்பேரியல் தோட்டம் நோக்கிச் சென்றனர். இருப்பினும் 11 ஆம் திகதி மாலையாகிய போதும் உடலை கொண்டுவர முடியாமல் போய்விட்டது. மேலும் உலக முடிவின் கிழ் இறங்கி தேடுதல் பணியை மேற்கொண்ட இராணுவ வீரர்கள் பற்றியும் எந்தவிதத் தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. காரணம் அந்த வலயத்துக்குள் தொலைபேசி இயங்காமையாகும். அடுத்த நாள் 12 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் நன்பேரியல் தோட்டமூடாக  மேலும் சில இராணுவ அதிகாரிகள் உலக முடிவின் ஆழமான பகுதி நோக்கி தங்களது பயணங்களை மேற்கொண்டனர். காரணம் தங்களது சக இராணுவ வீரர்கள் அதிக பனிமூட்டம் காரணமாக எங்காவது வழிதெரியாது , உணவு , பானம் இன்றி இருப்பார்களோ என்றெண்ணி அவர்களுக்குத் தேவையான உணவு பானங்களை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிச் சென்றனர். ஒருவேளையாக 12 ஆம் திகதி மு.ப. 11 மணியளவில் இரு இராணுவக் குழுக்களும் ஒன்றுசேர்ந்து விட்டன. அதற்கிணங்க 24 மணிநேரமாக தேடுதல் பணியை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு , நுவரெலியா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் அசித ரணவீர மற்றும் பதுளை இராணுவப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் அஜந்த விஜேசூரிய ஆகியோரால் உணவுப் பானம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதுவரை இறந்து போன யுவதியின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது. சுமார் 20 மணித்தியாலங்களுக்குள் அட்டைக்கடி , பாம்புக்கடி மற்றும் ஏனைய சில விலங்குகளுக்கு மத்தியிலும் அதிக குளிருக்கு மத்தியிலும் சடலமொன்றை பாதுகாப்பதென்பது பெரிய காரியமாகும். அதற்காக முயற்சி செய்த இராணுவ வீரர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இது தொடர்பில் இராணுவ வீரர்கள் தெரிவிக்கையில் ;

சடலத்தை கண்டுப்பிடித்த போதும் மேலே கொண்டுவர முடியாமல்
போய்விட்டது. முன்னுக்குள்ள பாதை மட்டுமன்றி தங்களுக்கு முன்னாலுள்ள சக இராணுவ வீரர்களைக் கூட  பார்க்க முடியாதளவுக்கு பனிமூட்டம்  காணப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் இருளும் சூழ்ந்துக்கொண்டது.  மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே  இரவுப் பொழுதைக் கழிக்க நெருப்பை மூட்டிக் கொண்டோம்.  மேலும் சடலத்தைச் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு இராணுவ வீரர்கள் சிலரின் சீருடையைக் கழற்றி சடலம் மீது போட்டு சடலத்தைச் சுற்றினோம். பின்னர் சிறிய துணித்துண்டுகளால் சடலத்தை நன்றாக இறுக்கி கட்டிவிட்டோம்.  உணவு இல்லாவிடினும் அதிக குளிரை தாங்கிக் கொள்ள முடியாததால் நெருப்பு மூட்டினோம். இது எங்களுக்கு பெரும் துணையாய் அமைந்தது.

எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு சடலத்தைப் பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் நீளமான பலகையொன்றில் சடலத்தை வைத்து துணிப்பட்டிகள்  மூலம் இறுக்கமாகக் கட்டி தூக்கிக் கொண்டு கல்லுக்கு கல் தாவி வழுக்கும் பாதையூடாக நன்பேரியல் தோட்ட மேல் பிரிவுக்கு கொண்டு வந்தோம். அந்த நேரத்தில் இரவு 10 மணியிருக்கும் ஒருவாறு இருள் சூழ்ந்த பிரதேசத்தைக் கடக்க இருந்த மின்சார ஒளி போதாமை காரணமாக மண்ணெண்ணெய் பந்தங்கள் பலவற்றை பயன்படுத்திக்கொண்டு உலக முடிவின் கீழ் பிரிவிலுள்ள நன்பேரியல் மலையிலிருந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வளைவுகள் கொண்ட பாதையூடாக தனியார்   மலர்ச்சாலை ஒன்றுக்குச் சொந்தமான வானொன்றின் மூலம் பலாங்கொடை பொது வைத்திசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லும் போது 13 ஆம் திகதி அதிகாலை 1.30 மணியாகிவிட்டது. எப்படியோ 13 ஆம் திகதி பெலிஹுல் ஓய திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ். எம். ஐ.டி. செனவிரத்னவால் மரண விசாரணைக்குத் தேவையான சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அடுத்த நாளான 14 ஆம் திகதி மாலை வேளையே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்படியிருக்க , ஜேர்மன் நாட்டு யுவதியின் இலங்கைப் பயணம் பலாங்கொடை வைத்தியசாலையில் நிறைவு பெற்றது. ஆனால் இவ்வாறான அநேகமான சம்பவங்கள் கடந்த காலங்களில் உலக முடிவில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்ட விசாரணையில் ஜேர்மன் யுவதி செல்பி எடுக்க விளைந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரண விசாரணையின் போது ,  அவளது கைத்தொலைபேசி தன்னிடம் இருந்ததாகவும் அவள் செல்பி எடுக்கவில்லை என்றும் உலக முடிவை பார்க்க ஒரு அடி முன்னுக்குச் சென்ற சமயமே கீழே விழ்ந்ததாகவும் இறந்து போனவரின் சக நண்பியான நினன் ரெபயா தெரிவித்திருந்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் குறித்த இடம் தொடர்பில் போதிய தெளிவின்றி  காணப்பட்டாலும் டோசன்  காதல் ஜோடி உலக முடிவிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலிருந்து இதுவரை 11 இலங்கையர்கள் வரை தற்கொலை செய்து கொண்டும் தவறி வீழ்ந்தும் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு மேரியன் அப்துல் கரீம் என்ற 26 வயதுடைய பெண்ணொருவர் , பனிமூட்டம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில்  தனது தந்தையை தேடிச் சென்ற போது உலக முடிவிலிருந்து கீழே விழுந்துள்ளார். அவ்வாறே 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய நாட்டுக்காரரான  கிறிஸ்டோபர் பில்டர் தனது கமரா மூலம் ஓணான் ஒன்றை படம் பிடிக்க சென்ற வேளையில் மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் 72 வயதான பெண்ணொருவர் 2013 ஆம் ஆண்டு இங்கிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். உலக முடிவிலிருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய ஒரேயொருவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்டின் லோரன்ஸ் (வயது 35)  என்ற இளைஞராவார். அவர் இங்கு வந்ததது தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்காகும். மலையிலிருந்து கீழே விழுந்த இவர் மரத்தின் கிளையொன்றில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் , இராணுவ வீரர் சுதேஷ் லலின்த கயிறொன்றின் மூலம் கீழே இறங்கி இவரைக் காப்பாற்றியுள்ளார். இதன் காரணமாக குறித்த இராணுவ வீரருக்கு இராணுவ படைப்பிரிவில் உயர் பதவி கிடைக்கப்பெற்றது. அவ்வாறே  இந்த ஜேர்மன் நாட்டு யுவதியின் சடலத்தை கொண்டுவருவதற்கும் குறித்த இராணுவ வீரரின் உதவி கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும். ஆரம்பக் காலத்தில் காதல் ஜோடியொன்று இம்மலையிலிருந்து குதித்த சம்பவத்துக்கு பின்னர்  ஒரு காலகட்டம் வரை  சடலத்தை மேலே கொண்டுவருவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான சடலங்களை கொண்டுசெல்வதில் கைதேர்ந்த மற்றும் காட்டுக்குள் பயணம் செய்யும் பாதை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள நன்பேரியல் தோட்டத்தில் வசிக்கும் சண்முகம் உதயகுமார் என்பவர் தனது அனுபவம் தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சடலத்தை கொண்டுவர நானுட்பட இத்தோட்டத்திலுள்ள 10 பேரளவில் ஒத்துழைப்பு வழங்கினோம். அது பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்கவே இடம்பெற்றது. வெளிநாட்டுக்காரரொருவரின் சடலத்தை மேலே கொண்டு வந்து கொடுத்தால் 1 1/2 இலட்சம் ரூபா தருவதாக அவரது உறவினர்களால் கூறப்பட்டது. அதற்கிணங்க சுமார் 16 மணித்தியாலங்களுக்குள் அச்சடலத்தை கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தோம்.  எங்களுக்கு அவர்கள் 2 இலட்சம் ரூபாவை தந்துதவினார்கள் . அவ்வாறு நம்நாட்டவர்களின் சடலத்தை கொண்டுவந்து தருவதற்கும் பாரியளவு தொகையை நிர்ணயிப்போம். இந்த தேடுதல் வேட்டையில் எங்களது உயிரை பணயம் வைத்தே இறங்குகின்றோம். இவ்வாறான தேடுதல் சம்பவங்களின் போது கீழே விழுந்து காயமேற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு நாளைக்கு உலக முடிவை பார்வையிட சுமார் 2000 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதோடு , கிட்டத்தட்ட 500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அவர்களில் ஒருவருக்கு சுமார் 5000 ரூபா அறவிடப்படுகிறது. இருப்பினும் அவர்களின் பாதுகாப்புக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தவிர்க்கப்படுகின்றார்கள். குறிப்பாக இந்த சுற்றுலாப் பிரதேசத்தைச்  சுற்றி  இரும்பு வேலி அமைக்க ஆரம்பத்தில்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு வேலியில் ஏறக்கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகமாகவே காணப்படுவதால்தான் அம்முயற்சி கைவிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில்  சுற்றுலாப் பயணிகள் குறைவடைந்து செல்வதற்கு இவ்வாறான சம்பவங்களும் காரணமாகின்றன. இதனால் தேவையான வேலைத்திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரம் கொண்ட இயற்கை அழகுபெற்ற உலக முடிவில் இவ்வாறான சோகச் சம்பவங்கள் காதுக்கு எட்டாமல் இருக்குமாயின் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அது அவ்வாறே நடக்க வேண்டும் என்பதே எம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையாக அமையும் .
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக