கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

பண மோசடியால் பரிதவிக்கும் மக்கள்

எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் இலங்கையர்களுக்கு இத்தாலி செல்வதென்றால் அபூர்வமான விடயமொன்றாகவே இருக்கும். அக்காலத்தில்  இத்தாலி செல்வதென்றால் ஏழு பரம்பரையாக பூர்வஜென்ம புண்ணியமாகக் கூட  சிலருக்கு இருக்கும். அதையெல்லாம் தாண்டி இத்தாலி சென்றிருந்தாலும்  நடைமுறையில் எம்நாட்டு மக்கள்  ஜப்பான் செல்வதற்கே அதிகம் பிரயத்தனப்படுகின்றனர். ஜப்பானியர்கள் போல திறமையாகவும் அறிவாளிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குச் சென்ற சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏமாற்றமே காத்திருந்தது. வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரை அபூர்வமாகி நடித்து ஏமாற்றிய ஏமாற்றுக்காரனொருவனால் ஜப்பானுக்கு செல்ல ஆர்வமாக இருந்தவர்கள் கடைசியாக பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றதே மிச்சம். புதுவருடத்தன்றே அவனுக்கு சாதகமான நல்ல நேரத்தில் பல  அப்பாவி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபா பணத்தை கொள்ளையடித்தான்.

”இப்படி இருந்து முன்னேற முடியாது தம்பி இங்கிருந்து என்னதான் செய்யப்போகிறீர்கள்? தேவையென்றால் உதவியாக ஜப்பானுக்கு குறைந்த விலையில் அனுப்பிவைக்க முடியும் ஜப்பான் சென்றால் அமோக முன்னேற்றம் தான்”  என கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகித்து மக்களை ஏமாற்றுவதில் குறித்த ஏமாற்றுக்காரன்  திறமைபடைத்தவன் . சில நேரத்தில் தனக்குத் தானே புகழாரமும் சூட்டிக்கொள்வான். ஏனென்றால் அதிலும் மயங்கக்கூடிய பல அப்பாவி மக்கள் இருப்பதாலாகும். குறிப்பிட்ட சிலரை ஒரே நேரத்தில் ஏமாற்றும் பொருட்டு அந்நபர் இவ்வாறு செயற்படுவதாகவும் குறிப்பிடலாம்.

மெல்ல மெல்ல வஞ்சனைக் கதைகளை கதைத்து அப்பாவிகளை ஒன்றுதிரட்டி எந்த வழியிலாவது தனது ஏமாற்றுச் செயல்களுக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிடுவான். கதைப்பதில் வீரசூரனாகவும் அவ்வாறே கள்ளச் சிரிப்புடன் முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் இவனை நம்பர் -01 ஏமாற்றுக்காரன் என பார்த்தவுடன் சொல்லிவிட முடியாது.


பெரும்பாலும்  கோடிக்கணக்கிலேயே கொடுக்கல்- வாங்கல்களை மேற்கொள்வான். சரியாகச் சொல்லப்போனால் திருட்டு கோடீஸ்வரன் என்று சொல்லலாம்.  இவனது பிரதான ஏமாற்றுச் செயலானது ,  கல்வியோடு சேர்த்து ஜப்பான் மற்றும்  சிங்கப்பூரில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மக்கள் மனதில் அது தொடர்பில்  நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து பணம் கொள்ளையடிப்பதாகும். கொழும்பு - 7 ரோஸ்மிட் பிரதேசத்தில் அமைந்துள்ள இருமாடிக் கட்டிடமொன்றில்  காணப்படும் , மாதம் 5 இலட்சம் ரூபா வாடகைப் பணம் செலுத்தி நடத்திச் செல்லப்படும் நிறுவனமொன்றிலேயே இந்த ஏமாற்றுச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.  சுமார்  2 மாத காலமாகவே இந்நபர் இவ்வாறான ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உழைத்து எப்படியாவது பணத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் பிள்ளைகளுக்கு ஒழுங்கான உணவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். சந்தோஷமாக வாழ்வதற்கென இன்ன பிற காரணங்களுக்காக வேண்டி பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு தொழில்களை தேடிச் செல்கின்றனர். வெவ்வேறு கனவுகளுடன் அவர்கள் அங்கு செல்ல ஆயத்தமாகின்றனர்.

சீக்கிரம் வெளிநாடு செல்ல வேண்டும் மற்றும்  குறைந்த விலையில் செல்ல வேண்டும் என்ற  நோக்கிலேயே பெரும்பாலானோர் இவ்வாறான மோசடிக்காரர்களிடம் இலகுவில் சிக்கிக் கொள்கின்றனர். குறித்த அப்பாவி மக்களின் ஆசையால் அதிக இலாபத்தை ஈட்டுவது இவ்வாறான மோசடிக்காரர்களே. வெளிநாடு  செல்வதென்பது சொர்க்க உலகுக்கு  போவது போன்றதே என்பன போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை வெளிநாடு செல்ல தூண்டுகின்றனர். இது தெரியாமலேயே இவர்களின் வலைகளில் அப்பாவி பொதுமக்கள் சிலர் மாட்டிக் கொள்கின்றனர். இது அவர்களின் அறிவிலித் தனம் என்று கூட சொல்லலாம்.

ரோஸ்மிட் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நபரின் நிலையத்தின் வேலைக்காக 3 பெண்களும் 2 ஆண்களும் மோசடிக்காரரால்  நியமிக்கப்பட்டிருந்தனர். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டே இவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.  எமது நிலையத்துக்கு வருபவர்களிடம் நம்பிக்கை வரக்கூடிய வகையிலேயே மிகவும் சூட்சுமமாக கதைக்க வேண்டுமென குறித்த நபர் தனது வேலையாட்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ”வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வது உங்கள் கைகளிலேயே உள்ளது. நிதானமாக கதையுங்கள் . எம்மீது முழு நம்பிக்கை வரும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள்” என தனது சேவகர்களுக்கு எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் கதைக்க வேண்டும் என்பது பற்றி பூரண பயிற்சியை அந்த மோசடிக்காரன்  வழங்கினான். வாடிக்கையாளர்களின் இருப்பு அவனுக்கு எவ்வளவு பெறுமதி கொண்டது என்பதைப் பற்றி அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அவனது சேவையாளர்களும் இது விடயத்தில் பூரண பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.  அதன் காரணமாக இவனது நிலையத்துக்கு வரும் பெருமளவானோருக்கு இந்த நிலையத்தைப் பற்றிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படக் கூடும் . அன்றைக்கே ஜப்பானுக்கு செல்ல முடியும் என்ற பாணியிலேயே  அவர்களது நாடகம் அரங்கேறியது இந்தக் குழுவினர்  அந்தளவுக்கு வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல் -வாங்கல் பற்றி கண்ணும் கருத்துமாக செயற்படுவர்.

எவரொருவருக்கும் சந்தேகம் ஏற்படாவண்ணம் சேவையை கச்சிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு மோசடிக்காரனிடம் அவ்வளவு திறமை காணப்பட்டது. குறித்த நபரின் நம்பிக்கை பாணியிலான கதைகளுக்கு ஏமாந்து பெருமளவானோர்  இலட்சக்கணக்கில்  அவனிடம்  பணத்தைக் கொடுத்துள்ளனர். ”வேலையப்  பற்றிய சந்தேகமோ  கேள்விகளோ உங்களுக்குள் இருக்க கூடாது . சரியான நேரத்தில்  விமான நிலையத்துக்கு வருவதே  உங்களது வேலை” என போலி வேஷம் போட்டு நடித்துக்கூறிய அவனிடம் ஒருவர் சுமார்  6 இலட்சம் ரூபா வரை கொடுத்துள்ளனர். இந்த மாதிரி 2,3 மடங்கு அங்கு சென்று சம்பாதிக்கலாம் . அதனால் பயப்பட வேண்டாம்”  என மேலும்  தன்மீது நம்பிக்கை ஏற்படும் வண்ணம் அவன் தெரிவித்தான். இந்த நம்பிக்கை காரணமாக குடும்பத்தோடு  வெளிநாடு செல்ல தயாரானவர்கள் சுமார்  40 இலட்சம் ரூபா வரை  அவனுக்கு ஒரேடியாக கொடுத்திருந்தனர். இவ்வாறு  பலரை ஏமாற்றி பெற்றுக் கொண்ட கோடிக்கணக்கான  ரூபா பணத்தோடு  யாருக்கும்  தெரியாமல்  தப்பிச் செல்வதே இவனது அடுத்தக்கட்ட யோசனையாக இருந்தது.

கடந்த 19 ஆம் திகதி  ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு கல்வி மற்றும்  தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகக் கூறி இந்த நாடகத்தை முடித்துக்கொள்ள திட்டம் தீட்டினான். இந்த மோசடிக்காரனை பெரிதும் நம்பியிருந்தவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு நாள் குறிப்பிட்டதை எண்ணி  மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. 19 ஆம் திகதி சகல கனவுகளும்  நிறைவேறப்போவதை எண்ணி ஆவலோடு காத்திருந்தனர்.  உண்மையாகவே   அளவு கடந்த அன்பை அந்நபர் மீது காசு கொடுத்தவர்கள்  வைத்திருந்தனர்.  அவர்களது நம்பிக்கை மேலும்  அதிகமாவதற்கு காரணம் வெளிநாடு செல்ல ஆவலோடு  காத்திருந்தவர்களை வைத்திய பரிசோதனை வரை  மேற்கொள்ளச் செய்ததே.  இவனென்றால்  இயற்கையாகவே  ஏமாற்றுவித்தையையும்  மோசடிகளையும் கொண்டிருந்தவன் என்றே கூற வேண்டும். வெளிநாடு செல்பவர்களிடம் செல்ல  5 நாட்களுக்கு முன்னர் ஜப்பான் மொழியை கற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தது மேலும் அவன் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவன் கூறியதற்கிணங்கவே கடந்த 14 ஆம்  திகதி  வெளிநாடு செல்ல  தயாராகவிருந்தவர்கள் அவனது காரியாலயத்துக்கு ஜப்பான் மொழி கற்றுக்கொள்ளும் பொருட்டு சென்றிருந்தனர். இருப்பினும் அவர்கள் எதிர்பார்த்திராத சம்பவமே அங்கு இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் வேலை வாய்ப்பு நிலையம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இருந்திருக்கவில்லை.


”ஐயோ கடவுளே ! நிலையம் பூட்டிக் கிடக்கிறதே....  இவ்வளவு நாள் இந்த இடத்தில் காரியாலயம் ஒன்று இருந்ததை தேடக் கூட முடியவில்லையே ” என  தலையில் கையை வைத்து வெளிநாடு செல்ல எதிர்பார்த்து வந்தவர்கள் புலம்பத் தொடங்கினர். கஷ்டப்பட்டு சம்பாதித்த எல்லா பணத்தையும்  அவனுக்கு கொடுத்துவிட்டோமே என  எண்ணத்  தொடங்கினர். சிலர் பைத்தியம் பிடித்தவர்கள் போன்று செய்வதறியாது நிலையத்தின் ஏனைய பகுதிகளில் நடமாடிக் கொண்டிருந்தனர்.  என்ன  செய்வதென்று தெரியாது திண்டாடினர்.

அந்தளவுக்கு  தாங்கள் ஏமாந்து போனதை எண்ணி சோகத்திற்காளாகியிருந்தனர்.  அந்த நேரத்தில் மேற்படி வெளிநாடு  செல்லும் ஆசையில்  ஏமாந்து போனவர்கள் மோசடிக்காரரின் வங்கிக் கணக்கிற்கு 5 கோடி  ரூபாவுக்கு  மேல் வைப்பிலிட்டிருந்தார்கள். இப்பணம் மரத்தால் பிடுங்கப்பட்டது அல்ல மாறாக கஷ்டப்பட்டு உழைத்து வியர்வை சிந்தி சம்பாதித்த அப்பாவிகளின் பணமாகும். சிலர் தாங்கள் வாழும் வீட்டை அடகு வைத்து கூட அவனுக்கு பணத்தை கொடுத்திருந்தனர். அந்தளவுக்கு அவன் மீது  நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்று போல்  அல்லாமல் நாளை  முன்னேற்றகரமான நாளாக அமையப்பெற வேண்டும்  என்ற  நோக்கிலேயே  வெளிநாடு செல்ல  ஆயத்தமானவர்களுக்கு இறுதியில்  கஷ்டத்துக்கு மேல் கஷ்டமே ஏற்பட்டது. இருந்த நிலைமையை விட மோசமான நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

கடந்த  14 ஆம் திகதியிலிருந்து  மோசடிக்காரனால் இவர்களுக்கு தரப்பட்ட எந்தவொரு தொலைபேசி எண்ணும் செயற்படவில்லை.  அவனது எந்தவொரு தொலைபேசியும்  செயலிழந்தே காணப்பட்டது. இறுதியில்  செய்வதற்கு இவர்களுக்கு ஒன்றுமே இல்லை கடைசியில் எதிர்பார்ப்பு சிதைந்த நிலையில் சட்டத்தை நாடிச் சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் குருந்துவத்தை பொலிஸ்  நிலையம்  நோக்கி பாதிக்கப்பட்டவர்கள் சென்றனர்.  விரைந்து செயற்பட்ட பொலிஸார்  சந்தேக நபரை கையோடு பிடித்துக்கொள்ள வேண்டும்  என்ற போர்வையில் விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டனர். ஏமாற்றியும் பொய்கூறியும் மோசடி செய்தும்  சம்பாதித்த பணத்தில்  சிறிது காலமே வாழலாம். அந்த பணத்தில் நீண்ட நாள் கனவு பலிக்காது. இவனுக்கும் அந்த நிலைமையே ஏற்பட்டது. புதுவருட தினத்தன்றே கையில் விலங்கை மாட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது. கடுவெல பிரதேசத்தில் மறைந்திருந்த சந்தர்ப்பத்தில்  குருந்துவத்தை பொலிஸாரால்  அவன் கைது செய்யப்பட்டான். பொலிஸாரின் விசாரணையின் போது சந்தேக நபரால் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கு  இலக்கமானது  போலியானது. அதாவது கணக்கு ஆரம்பிப்பதற்காக வேண்டி குறித்த சந்தேக நபர் எத்தனையோ வருடங்களுக்கு  முன்னர் மொரட்டுவ பிரதேசத்தில் இறந்து போன ஒருவரின் தேசியஅடையாள அட்டையில் அவரத படத்தை ஒட்டி திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட போலி தேசிய அடையாள அட்டையொன்றின் மூலம்  கணக்கை ஆரம்பித்துள்ளார்.  இறந்து போனவரின் தயார்  இவ்வாறான  போலி அட்டைகளை தயார்ப்படுத்துவதில் ஈடுபடுபவள் என்பது பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் வசித்துவந்த வீட்டிலிருந்து வேறு நபர்களுக்குச் சொந்தமான விமான பயணச் சீட்டுப் பத்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் மனைவியும்  கணவனைப்  போலவே  ஏமாற்றுப் பேர்வழிப் பெண்ணாவாள். இவளது கணக்கில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பெற்றுக் கொண்ட   பணத்திலிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்  ஏமாற்றி பெற்றுக்கொண்ட பணத்தில் 2 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மோட்டார் சைக்கிளொன்று சந்தேக நபரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறு இரு பெயர்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இரண்டு என்பவற்றையும் குருந்துவத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த நபர் இதற்கு முன்னரும் இந்தப் பாணியில் நுகேகொட , வெள்ளவத்தை , கடவத்த போன்ற பல  பிரசேதங்களில் இவ்வாறு மோசடி செய்த பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிச் சென்ற நம்பர் 1 மோசடிக்காரர் என்பது பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் மூலம்  ஊர்ஜிதமாகியது. மோசடி செய்வது மட்டுமல்லாமல் சூதாட்டத்திலும் இந்த நபர்  வல்லவன் எனக் கூறப்படுகின்றது . அப்பாவி மக்களை ஏமாற்றி பெற்றுக்கொண்ட பணத்தை கசினோ விளையாட்டுக்கு இவன்  பயன்படுத்துவதாகவும் பொலிஸார் தேடியறிந்து கொண்டனர். மேலும் எஞ்சிய பணத்தை வெவ்வேறு பெண்களுக்கு செலவழிப்பதாகவும் பொலிஸாரின்  விசாரணையில்  தெரியவந்துள்ளது.

குருந்துவத்தை பொலிஸ் நிலையத் தலைவரும்  பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஈ.ஏ. நாகஹவத்தவின் வேண்டுகோளின் பேரில் குற்றத்தடுப்பு  பிரிவுத் தலைவரும் உப  பொலிஸ்  பரிசோதகருமான ஆர். எல்.  ஆர். மதுரங்க , சார்ஜன்ட் மென்டிஸ் (28107), பொலிஸ் கொஸ்தாபல்களான சமன் (74293), அமல் (69112), சிறில் (33774), வசந்த  (69200), அபேசேக்கர (86352), புத்திக (91941), பண்டார (92338), பெண் பொலிஸ் சார்ஜன்ட் ரணவீர(150), பெண் பொலிஸ் கொஸ்தாபல் தர்ஷனி (10599) ஆகிய அதிகாரிகள் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பல சம்பவங்கள் வரலாற்றுக் காலத்திலிருந்தே  பதிவு செய்யப்பட்டிருப்பினும் எமது மக்கள் இன்னுமே இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாறுவதென்பது கவலைக்குரிய விடயமே. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இன்னொருவருக்கு கொடுக்கும்  போது ஒரு தடவையல்ல பத்து தடவைகளுக்கு மேல் சிந்தித்து செயற்பட வேண்டும்.  இதன் மூலம் எல்லாம் நடந்து முடிந்த பின்னர்  கவலைப்படுவதிலிருந்து ஓரளவாயினும் மீட்டுக்கொள்ள முடிகின்றது. அதுமாத்திரமன்றி சிந்திப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே இவ்வாறான மோசடிச் சம்பவங்களிலிருந்து நாம் தப்பிக் கொள்ளலாம். மேலும் தெரியாத்தனத்தால் இவ்வாறு நடப்பதென்றால் நிறைய பத்திரிகைச் செய்திகளை வாசிக்க வேண்டும் இல்லாவிடில் வானொலிச் செய்திகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்னுமே ஒரு சிலர் கிணற்றுத் தவளைகளைப் போல இருப்பதுதான் இவ்வாறான சம்பவங்கள் தொடர மூலக்காரணமாக இருக்கின்றது . எனவே பிறந்திருக்கும் இப்புத்தாண்டிலாவது இவ்வாறான மோசடிக்காரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக