கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

21 ஜனவரி, 2019

கூட்டு ஒப்பந்தம் : தொடரும் தோல்விகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிர்ணயத்தை மேற்கொள்ளும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளை மலையகப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும்  தொழில் அமைச்சரை மாறி மாறி சந்தித்து வருகின்றனர். மலையகப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் 1000 ரூபா என்ற கோஷத்தையே முன்வைத்து வருகின்றனர். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 1300 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனவே முதலில் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களின் வாழ்க்கைச் செலவினைக் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான  தீர்மானத்தின் அடிப்படையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.  கூட்டு ஒப்பந்த பங்காளிகள் முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொண்ட முதல் கட்டப் பேச்சுவார்த்தை  வெளிநாடப்பிலேயே நிறைவடைந்தது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்மானம் எட்டப்படாமல் நிறைவடைந்திருந்தது.  பின்னர் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த 3 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. ஆனாலும் அப்பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது.


2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமானது 2018 அக்டோபர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகியிருந்தது. ஆனால் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாமையினால் விடுபட்ட நாட்களுக்கான  நிலுவைத் தொகை வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  2016   ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த நிகழ்வின் போது 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையினை கூட்டு ஒப்பந்த பங்காளிகளும் முதலாளிமார் சம்மேளனமும் இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆதலால் இம்முறை அத் தவறு திருத்திக்கொள்ளப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு . இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் (பத்தி எழுதும்வரை) 100 ரூபா அதிகரிப்பை மாத்திரம் வழங்குவதாக தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.   500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவால் அதிகரித்தல் அதாவது 20 % தால் அதிகரிக்க இணங்கியிருந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும்  கூட்டு ஒப்பந்தத்தின் போது கம்பனிகளின் நட்டக் கணக்குகளை மாத்திரம் முதலாளிமார் சம்மேளம் வெளிப்படுத்துகிறது. ஆனால் இலாபங்களை மூடி மறைத்து விடுகின்றனர். ’2017 ஆம் ஆண்டு 17 கம்பனிகளின் நிதி அறிக்கைகளை நோக்கும் போது அவைகள் தேறிய இலாபமாக மொத்தமாக 4644 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளின் 17 பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து வருமான வரியாக அரசாங்கம் 2258 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் ” பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டதரணி சுகுமாரன் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

”தற்போதைய பொருளாதார சூழலில் நியாயமான நாட்சம்பளமாக குறைந்தது 1300 ரூபா வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான சம்பளமாக அமையும் . 1300 ரூபா என்ற நாட்சம்பளம் மனத்திருப்த்திக்காக முன்வைக்கப்படவில்லை. மாறாக  விஞ்ஞான பூர்வமாக வந்தடைந்த முடிவாகும்.  இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை . இன்று ஒரு தொழிலாளிக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 440 ரூபா வழங்கப்பட வேண்டும். அடிப்படைச் சம்பளம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு குறித்த விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதிருக்கும் 500 ரூபா அடிப்படைச் சம்பளம் கடந்த மூன்று வருடங்கள் அதிகரிக்கப்படாமையினால் ஒருவருடத்துக்கு 50 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டு 650 ரூபா வரை உயர்த்தப்பட வேண்டும் .எனவே அடிப்படை சம்பளத்தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவையும் இணைத்துக் கூட்டிணைக்கப்பட்ட சம்பளமாக 1090 ரூபா வழங்கப்பட வேண்டும்.  ஏனைய கொடுப்பனவுகளாக 210 ரூபா வழங்கப்பட வேண்டும்.  அதேவேளை நீண்ட காலத்தில் சம்பள பிரச்சினைக்குத் தீர்வாக அடிப்படைச் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு என்ற விடயங்கள் உள்ளடக்கிய திரட்டுச் சம்பளம் என்ற அம்சம் உருவாக்கப்படவேண்டும். அதிலே அடிப்படைச் சம்பளம் சேவைக்கால வருடங்களுக்கு சமாந்தரமாக அதிகரிக்கப்படும் ஒரு சூத்திரம் உள்வாங்கப்பட  வேண்டும்.   வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும், என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் சட்டத்தரணி இளைய தம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.  

ஆனால் இந்த வாழ்க்கைச் செலவு புள்ளியோ அல்லது திரட்டுச் சம்பளங்கள் தொடர்பாகவோ தொழிலாளர்களுக்கு எவ்விதமான விளக்கங்களும் இல்லாத நிலையிலேயே 1000 ரூபா சம்பளம் கோரி தொழிலாளர்கள் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறெனில் முதலில் இவ்வாறான திட்டங்களை தொழிலாளர்களிடம் கொண்டு செல்வதா? மலையகத் தலைவர்களிடம் கொண்டுசெல்வதா ?  , முதலாளிமார் சம்மேளனத்திடம் கொண்டு  செல்வதா? என்ற சிக்கல் இருக்கும் நிலையில் 1000 ரூபா என்பதே பெரும்பாலானோரின் இலக்காக இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இலட்சங்களில் வேதனம் பெரும் நிலையில் மக்களோ இன்னும் 1000 ஐக் கூடத்  தொடவில்லை. அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு  அமர்வுப்படியாக  2500 ரூபா , குழுப்படியாக 2500 ரூபா , அலுவலக படியாக 1,00,000 , உறுப்பினர்களின் படியாக 54,885 ரூபா , கேளிக்கைபடியாக 1000 ரூபா,  ஓட்டுனர்களின் படியாக 3500, தொலைபேசிபடியாக 50,000 ரூபா,  தனிப்பட்ட பணியாற்தொகுதியினருக்கான போக்குவரத்துப் படியாக (4 பேர்) 10,000 ரூபா , இலவச தபால் கட்டண வசதிக்காக 1,75,000 மற்றும் எரிபொருள் படியும் வழங்கப்படும் (தகவல் Parliment.lk ) நிலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் , இராஜாங் பிரதியமைச்சர்களுக்கான வேதன உயர்வுகளுக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன்படி  பாராளுமன்ற உறுப்பினர்களின் படியை (54,258 தற்போது )  1,20,000 ஆகவும் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் படியை (தற்போது 65,000)  1,40,000 ரூபாவாகவும் பிரதியமைச்சருக்கான படியை (தற்போது 63,500) 1,35,000 ரூபாவாகவும்  அதிகரிப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைச் செலவு 

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இழுத்தடிப்பு செய்யப்பட்டு கைசாத்திடப்படும் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தின் மூலமே பெருந்தோட்ட மக்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். பொருட்களின் விலையேற்றங்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளின் கல்வி செலவு மருத்துவ செலவு உட்பட இதர செலவுகள் அனைத்தையும் இவர்களின் வேதனத்தின் மூலமே பார்க்க வேண்டிய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பானது 50 ரூபா , 100 ரூபா எனக் கொடுப்பனவை வாங்கிக்கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றது. இல்லையெனில் கூட்டு ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு நிலுவைச் சம்பளமும் இல்லாமலாக்கச் செய்யப்படும்.

பெருந்தோட்டங்களை அரசாங்கம் நிர்வகித்த காலப்பகுதியில் உட்கட்மைப்பு வசதிகளை அரசாங்கமே செய்து கொடுத்திருந்தது. பின்னர் பெருந்தோட்டங்களை தனியாரிடம் குத்தகைக்கு வழங்கிய நிலையில் தற்போதும்  உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கமே வழங்கி வருகின்றது . பெருந்தோட்டக் கம்பனிகள் வெறுமனே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை மாத்திரமே வழங்கி வருகின்றது. அவற்றிலும் இத்தனை இடர்பாடுகளைக்  கடக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே கூட்டு ஒப்பந்தத்தை இல்லாமலாக்கச் செய்யப்பட வேண்டுமென்ற கோஷம் எழுப்பப்படுகின்றது. எதிர்வரும் மாதத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில் அதற்கு முன்பாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொடுத்து தீபாவளியில் தொழிலாளர்கள் தீப ஒளியில் பிரகாசித்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக