கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

கூட்டு ஒப்பந்தம் ஏமாற்று வித்தை
சனா
அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளையும் கடன்களையும் உள்நாட்டு வரிகளையும் கவனத்தில் கொண்டு செயற்பட்டு வருவதால் சாதாரண மக்களின் வாழ்வியல் கஷ்டங்களை அதிகமாக உணராத நிலை காணப்படுகின்றது. அரசினால் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டாலும் மலையகத்தின் பெரும்பாலான இடங்களில் விலைக் குறைப்பு இடம்பெறவில்லை. இவ்வாறு மேலோட்டமாக செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசால் பெருந்தோட்ட மக்களிடம் ஆழமாக பதிந்து கிடக்கும் பிரச்சினைகளை எவ்வாறு களைய முடியும். பெருந்தோட்டப் பகுதிகளில் ஒரு சில தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில பகுதிகளில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் பற்றாக்குறையால் தடுமாறுகின்.
இவ்வாறான சகல பிரச்சினைகளும் தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் ஏற்பட்டவையென்பதை சகலரும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுகள் முறையாக வழங்கப்படாமலும் இடைக்கால கொடுப்பனவுகள் செலுத்தப்படாமையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையும் இவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள், தோட்டங்களில் விடுமுறைபெற்று தலைநகரங்களில் வேலை செய்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை தவிர்த்து 620 ரூபாவும் இடைக்காலக் கொடுப்பனவுடன் 720 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இதற்கு வழங்கப்பட்ட வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இத் தொகையினைக் கொண்டு தமது குடும்ப செலவுகளையும் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய இதர செலவுகளையும் கவனிப்பதற்கு போதுமானதாக அமையவில்லை. இதனால் தோட்டங்களில் இருந்து வெளியேறும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கொழும்பிலேயே தொழில் புரிகின்றனர்.
இவர்கள் கொழும்பில் நாளொன்றுக்கு 1000 - 1300 ரூபா வரையில் வேதனம் பெற முடிகின்றது. இதனால் கணிசமானோர் இன்று கொழும்பில் தொழில் புரிவதை அவதானிக்க முடிகிறது. இவர்கள் நாளடைவில் தொடர்ந்து இங்கேயே நிரந்தரமாக தொழில் புரிய ஆரம்பித்தால் தேயிலைத் தோட்டங்களை பெண்களே சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். தற்பொழுது சில தோட்டங்களில் காலையில் இருந்து பகல் இரண்டு மணி வரை கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள் பகல் இரண்டு மணி முதல் 4 மணி வரை களைகள் பிடுங்க பணிக்கப்படுகின்றனர். தோட்ட நிர்வாகங்கள் தேயிலை மலைகளை முறையாக கவனிக்காமையினால் அவை காடுகளாகவும் உரமிடப்படாமையினால் தேயிலை உற்பத்தி குறைந்தும் காணப்படுகிறது.
எனவே, ஆண் தொழிலாளர்களின் வெளியேற்றத்தால் பெண் தொழிலாளர்கள் இரட்டை வேலையை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் பெரும்பாலான தோட்டங்கள் காணிகளை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றன. இதற்கு தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கின்றன. முறையான பராமரிப்பின்றி குறைவான விளைச்சலைத் தருகின்ற தேயிலைக் காணிகளை தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும். தோட்ட நிர்வாகங்கள் உரமிட்டு, களையெடுத்து முறையான பராமரிப்புக்குட்படுத்தி குறைந்த பரப்புகளில் அதிக விளைச்சலை எதிர்பார்க்கக் கூடிய வகையில் காணிகளை பேணுமாயின் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதில் நியாயம் இருக்கிறது.
இதையெல்லாம் விடுத்து கொடுப்பதை பெற்றுக்கொண்டு நாளைக்கு ஒன்றுக்கும் உதவாத காணியாகிவிட்டால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்து விடும். எனவே நிர்வாகங்களுடன் முறையான நிபந்தனையுடனான ஒப்பந்தங்களின் மூலமே இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். தொழிற் சங்கங்கள் சுயமாக எடுக்கின்ற தீர்மானங்களனைத்தையும் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. விடாபிடியாக திணிக்கவும் முடியாது.
இவை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்குப் பெற்று தேயிலைத் தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வாகங்களைத் தவிர ஏனைய தனியார் தோட்டங்களில் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகவிருக்கின்றது. பெரும்பாலான தோட்டங்கள் மூடப்பட்டே விட்டன. ஆனால், தொழிலாளர்களின் வாழ்விடங்கள் அங்கு அமையப் பெற்றிருந்தாலும் தொழிலுக்காக அவர்கள் வேறிடங்களையே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. தோட்டங்கள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் சென்று தங்குவதற்கு வசதியில்லாத காரணத்தால் எவ்வித அபிவிருத்திகளும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ வேண்டிய சூழல் இருக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகள் கடுமையான பேசுபொருளாக மாறுவதற்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே காரணமாக இருக்கிறது. இம் மாதம் கூட்டு ஒப்பந்தம் உற்பத்தி அடிப்படையில் சம்பள உயர்வு என்ற நிபந்தனையில் கைச்சாத்திடப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படுகிறதென முதலாளிமார் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்திக் குறைவு, பராமரிப்பின்மை என்பவற்றாலே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இருக்கின்ற நிலையில், தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையிலான வேதன உயர்வு எவ்வாறு சாத்தியமாகும் ?
அவ்வாறு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் நிர்வாகங்கள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதோடு தேயிலை உற்பத்தி எழுச்சிக்குத் தேவையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து உற்பத்தியில் தன்னிறைவு கண்டபின்பே தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையிலான வேதன உயர்வுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதைவிடுத்து தற்போது தேயிலை உற்பத்தி குறைவான நேரத்தில் ஒப்பந்தத்துக்கு தலையசைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை தொடர்பில் தொழிற் சங்கங்கள் தன்னிச்சையாக செயற்படாது, தொழிலாளர்களுக்கு இம்முறை தொடர்பில் விளக்கமளித்து அவர்களின் கருத்துகளை பெற்றுக் கொண்ட பின்பே முதலாளிமார் சம்மேளனத்துடன் இறுதித் தீர்மானத்துக்கு வரவேண்டும்.
இம் மாதத்துடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இடைக்காலக் கொடுப்பனவையும நிறுத்தப் போவதாக பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் கூறியிருக்கும் நிலையில், அரசியல் இலாபத்திற்கான தீர்மானங்கள் அம்பலத்திற்கு வந்திருப்பதை அறிய முடிகின்றது. அரசாங்கமும் இடைக்காலக் கொடுப்பனவுக்காக தோட்ட நிர்வாகங்களுக்கு அரச வங்கிகளினூடாக கடனை பெற்றுக் கொடுத்ததுடன் தனது கடமையை முடித்துக் கொண்டிருக்கிறது. 200 வருட கால அடிமை வாழ்க்கையை விட மோசமான நிலையில் இருக்கும் இவர்களின் குறைபாடுகளை நிவர்த்திக்க எந்த மலையகத் தலைமைகளுக்கு துணிவிருக்கிறது.
கூட்டு ஒப்பந்த விவகாரம் ஒன்றரை வருடங்களை கடக்கப் போகும் நிலையில், அடுத்த கூட்டு ஒப்பந்தத்துக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் மறைமுகமாக தொழிலாளர்கள் 2017 ஆம் ஆண்டு மீண்டும் கைச்சாத்திடப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தத்திலிருந்து ஏமாற்றப்படப் போகிறார்கள். 2 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தால் முறையாக 2017 ஆம் ஆண்டு அடுத்த ஒப்பந்தத்துக்கு தயாராகியிருக்க வேண்டும். தற்போது 2015 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தமே பூர்த்தியாகாத நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் சாத்தியமா ? இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களாலும் முதலாளிமார் சம்மேளனத்தினாலும் வெளிப்படையாகவே ஏமாற்றப்படப் போகிறார்கள். இதனைக் கூட கேட்டுப் பெற்றுக் கொடுக்க தைரியமில்லாதவர்களையே நாம் அரசியல் தலைமைகளாக ஏற்று அங்கீகரித்திருக்கின்றோமென நினைக்கையில் என்ன செய்ய தோன்றுகிறது உங்களுக்கு ?
ஜூலை 29 ஆம் திகதி வழங்கப்பட்ட 2,500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு இன்னும் பல தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. சென்.கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் இடைக்காலக் கொடுப்பனவுக்காக போராடி வருகின்றனர். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இந் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவில் அசமந்தப் போக்கை கையாள்வது கண்டிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக