அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் திடீரென ‘பூல்பேங்’ தொழிற் பயிற்சி நிலையமான கதை பல சர்ச்சைகளுக்கும் பல சந்தர்ப்பங்களுக்கும் வழிகோலியிருக்கிறது. இதை அரசியல் விடயமாக பார்க்காமல் சமூக நோக்குடன் சிந்திப்பதே இக் கட்டுரையின் நோக்கம். மலையகத்தின் வரலாற்றில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு நீண்ட இடமுண்டு என்பதை எவராலும் நிராகரிக்க முடியாது. அவருடைய எண்ணக் கருவுக்கமைவாகவே அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் மறைந்தவர்களின் பெயர்களையும் உயிருடன் இருப்பவர்களின் பெயர்களையும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சூட்டுவது புதிய விடயமல்ல. அது தவறான விடயமுமல்ல. இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் என அபிவிருத்தித் திட்டங்கள் இருக்கின்ற போது அவற்றின் பெயரை நீக்க யாரும் நினைக்கவில்லை. அது மக்களின் தீர்மானமாகவும் இருக்கவில்லை. பெருந்தோட்ட பகுதிகளில் ஆரம்பத்தில் தொழிற் பயிற்சிகள் எவையும் பிரதானமாக காணப்பட்டதில்லை. இந்நிலையில் 1970 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சௌமிய மூர்த்தி தொண்டமானால் தச்சு தொழில், மேசன் தொழில் மற்றும் கணினி என்பன அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டு அரசாங்கத்தின் அனுசரணையுடன் அடிக்கல் நாட்டப்பட்டு கொழும்பில் ருவாக்கப்பட்ட தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் 2000 ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த ஆறுமுகன் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இரண்டு வருடங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. பின்னர் அதன் நிர்வாகம் தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டு முதல் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக இயங்கத் தொடங்கியது. இக் காலப் பகுதியில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுழற்சி முறையில் இந்திய அரசாங்கம் ஏழு போதானாசிரியர்களை கொடுத்துதவ ஒப்புக்கொண்டதுடன் நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டிடங்கள் பூரணப்படுத்தப்பட்டு 2007 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், நோர்வே நாட்டு தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர், ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரினால் 15 தொழிற் பயிற்சிகளை உள்ளடக்கிய தொழிற் பயிற்சி நிலையமாக அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் தொழிற் தகைமையினை அதிகரிக்கும் சௌமியமூர்த்தி தொண்டமானின் கனவு இன்றும் நனவாகி வருகிறது.
2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற் பயிற்சி நிறுவனத்தினூடாக இதுவரை 5600 பேர் தொழிற் பயிற்சிகளை பெற்று வெளியேறியுள்ளனர். இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் காலப் பகுதியில் இலங்கையில் உருவான தேசிய அரசாங்கத்தில் அமைச்சரான திகாம்பரத்தின் கீழ் உருவான மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் உள்வாங்கப்பட்ட கையோடு தொழிற் பயிற்சி நிலையத்துக்கான பெயர் மாற்றம் தொடர்பில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் ஒரு வருட காலத்துக்கும் மேலாக தொழிற் பயிற்சிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதன் தொடர்சசியாக கடந்த மாத இறுதியில் அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையமானது ‘ பூல்பேங் ’ தொழிற் பயிற்சி நிலையமாக பெயர் மாற்றம் பெற்றது. இதன் பின்னர் அட்டனில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களால் மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் பெயர் மாற்றமானது அமைச்சரவை தீர்மானத்துடனேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் திகாம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யாமல் அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாது. இவ்வாறு அவசர அவசரமாக பெயர் மாற்றத்துக்கான அங்கீகாரம் பெறுவதற்கான தேவையென்ன ?
இப் பயிற்சி நிலையத்தின் முக்கிய நோக்கமே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் தொழிற் பயிற்சியினை வழஙகுவதாகும். ஏ தரத்தினை பெற்ற இத் தொழிற் பயிற்சி நிலையமானது வருடமொன்றுக்கு 500 வரையான மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்குவதோடு மேலதிக பயிற்சிகளுக்கு தொழில் நிலையங்களின் அனுமதியினையும் பெற்றுத் தருகின்றது. இவ்வாறான சூழலில் அமைச்சர் திகாம்பரம் பெற்றது போன்ற அமைச்சரவை அங்கீகாரத்தை போன்று சகல இன மாணவர்களும் இங்கு கல்வி பயில்வதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் நிலை என்னவாகும். அதற்கு தற்போது அமைச்சர் திகாம்பரம் வழிசெய்து விட்டார். அதேபோலவே ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பெருந்தோட்ட மாணவர்களின் முன்னுரிமைக்கான 30 வருடகால ஒப்பந்தம் நிறைவடையவுள்ள நிலையில் மேலும் 10 வருடத்துக்கு நீடிப்பு கேட்டு கெஞ்சுகிறார்கள். ஏன் இதனை நிரந்தரமாக பெற்றுக்கொள்ள அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை ? வெறுமனே பெயர்களை மாற்றுவதால் மாத்திரம் மலையகம் கடந்து வந்த சவாலான பாதைகளை மறந்து விட முடியாது. சொல்லப்போனால் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு வழங்கப்பட்டது பொருத்தமானதே.
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிறந்த அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் அரசியல் நீரோட்டத்தில் ஆளுமை மிக்கவராகவே திகழ்ந்திருந்தார். இதனாலேயே மலையகத்துக்கான இந்திய பிரதமர் மோடியின் விஜயத்தின் போதும் அவர் நினைவு கூரப்பட்டிருந்தார். அதே போலவே தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை, வாக்குரிமை, காணிப் பங்கீடு, மலையக இளைஞர்களுக்கான காவல்துறை பயிற்சி, ஆசிரியர் நியமனம் எனும் ஐந்து கொள்கைகளுக்காகப் போராடி வெற்றி கண்டவர். வெறுமனே அரசியல இலாபங்களுக்காக அந்த இடத்தை அழித்து விட முடியாது. அத்தோடு ஏறத்தாழ 833 பெருந்தோட்டப் பாடசாலைகளில் அரைவாசியானவை சுவீடனின் ‘ சீடா’ நிதியுதவியுடனான கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி வேலைத் திட்டத்தினால் அபிவிருத்தி செய்ய வித்திட்டவர் இவரே. இவ்வாறு பல பெருமைகளையும் சமூக சேவையையும் கொண்டிருக்கும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் இத் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு மிகவும் பொருத்தமானதே. தூர பிரதேசங்களில் இருந்து தொழிற் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வரும் இளைஞர், யுவதிகளுக்கான பாதுகாப்புடனான தங்குமிட வசதி, இலவச உணவு, இலவச பஸ் கட்டணம் என பல சலுகைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெற இவரே பிரதான காரணமாக இருந்திருக்கிறார்.
முடிந்துபோன அபிவிருத்திகளை மக்களுக்கு நீண்ட பயனுள்ள அபிவிருத்திகளை அரசியலுக்காக தாரைவார்த்து விடமுடியாது. தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர்மாற்றத்துக்காக அமைச்சரவை அனுமதியினை பெற்றுக் கொண்டவர்கள், நாளையொருனாள் இத் தொழிற் பயிற்சி நிலையத்தில் சகலரும் உள்வாங்கப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய முழுமையான வாய்ப்புகள் பறிக்கப்பட்டால் இவர்கள் என்ன செய்வார்கள் ? இந்த தீர்மானத்திற்கு அசைந்து கொடுத்தது போல் அதற்கும் அசைநது கொடுத்துவிடுவார்களா ? இதேபோல ஒரு பிரச்சினையையே இறம்பாடை தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையமும் எதிர்கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பெயர் மாற்றத்தில் கவனம் கொள்ளும் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு சுமார் 2 வருட காலத்துக்கு தொழிற் பயிற்சி நிலையத்தை இயங்கவிடாமல் செய்ததற்கான காரணமென்ன ? இதனால் இரண்டு வருடத்தில் சுமார் 1000 மாணவர்களாவது தமது தொழிற் பயிற்சியை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனது. இது தான் மலையக மக்களுக்கு இவர்கள் வழங்கும் அபிவிருத்திகளா ? வெறுமனே வீடுகள் மட்டும் மலையக மக்களின் அபிவிருத்தியாக ஏற்றுக்கொள்ளளப்படுமா ? இதற்கு பதில் கூற யாரும் தயாராக இருக்கிறார்களா ?
கடந்த அரசாங்கத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 2015 ஆம் ஆண்டு வரைக்கும் 1328.72 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும் 2017 ஆம் ஆண்டில் இன்று வரையும் குறித்த 1328.72 மில்லியன் ரூபாவிற்கான கணக்கு வழக்கு, கணக்காய்வு என்பன அமைச்சிற்கு கையளிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அமைச்சர் திகாம்பரம், பெருந்தோட்ட மக்களுக்கென கிடைக்கப் பெற்ற நிதி வளங்களை , வரபிரசாதங்களை தனிமனித சுகபோகங்களுக்காக பயன்படுத்த முடியாதெனவும் தெரிவித்திருக்கிறார். இது நியாயமான விடயமாக இருந்தாலும் அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட இடங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். அதற்கு பெயர் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது நியாயமற்றதாகும்.
இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்த மன்றத்தின் வாழ் நாள் உறுப்பினராக இருக்கின்ற இராமநாதன் ஆறுமுகன் மற்றும் முத்துசிவலிங்கம் என்பதோடு இவை தொடர்பில் பாராளுமன்றத்திலும் பலமுறை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் ஞாபகார்த்த மன்றத்தின் ஆலோசகராகவிருந்த இந்தியாவிலுள்ள பெண்மணியொருவருக்கு சொந்தமான தனியார் கம்பனிக்கு ஒரு மில்லியன் டொலர் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆவணங்கள் இல்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறெனில் ஏன் இதுவரையும் இவற்றுக்கான முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை. பெயர் மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகளினால் இவற்றை விளம்பரமாக்குவதில் என்ன பயன் கிடைக்கப் போகின்றது.
இதேபோல கிளங்கன் வைத்தியசாலையில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடமும் மிக நீண்ட காலமாக பெயர் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக திறக்கப்படாமலிருந்து அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மிகவும் தாமதமாகியிருந்தன, மேலைத்தேய நாடுகளில் மேற்கெ õள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதனை முன்கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுப்பவரின் பெயரே ஞாபகார்த்தமாக வைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளிலேயே ஆள்பவர்களின் பெயர்கள் மாத்திரம் பொறிக்கப்படுகின்றன என்பதுவே வரலாறு.
எனவே, தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்துக்கான பெயர் மாற்றம் ஒரு ஆளுமையை அவமானப்படுத்திய விடயமென்பதோடு இதற்கு அமைச்சரவை அந்தஸ்தினை பெற்றுக் கொண்டமையானது எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக மட்டுமே என்றிருந்த தொழிற் பயிற்சி நிலையத்தின் வரலாற்றை மாற்றிவிடுமா ? என்பதை பற்றியே அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, முடிந்த அபிவிருத்திகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை விடுத்து புதியதொன்றை அமுல்படுத்த அனைவரும் அணிதிரள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக