கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

17 மார்ச், 2016

சமூக வலைத்தளங்களில் சிக்கும் சிறார்கள்

உலக சனத்தொகையில் பாதியளவானோர் சமூகவலைத் தளங்களில் அங்கம் பெற்றுள்ளனர். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் இணைவதற்கு கட்டுப்பாடுகள் என்பது கடுமையானதாக இல்லை. குறிப்பாக வயதெல்லை. தற்போது சிறுபராயத்தினர் சமூக வலைத்தளங்களினால் அதிகளவு பிரச்சினைகளை எதிர்கொள்வதால் வயது கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு சில நாடுகள் இணங்கியுள்ளன. இலங்கையும் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்போருக்கு வயது கட்டுப்பாட்டைக் கொண்டு வர முனைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விடயமெனினும் இலங்கை குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகளிலும் சிக்கல்கள் இருக்கவே  செய்கின்றன.

சமூக வலைத்தளங்களை தடை செய்வதோ அல்லது கட்டுப்படுத்துவதோ பாவனையாளர்களை உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பதாகவே இருக்கும். சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான மாற்று வழிகள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறு சாத்தியப்படுமா? வயதுக் கட்டுப்பாட்டை அறிவித்து விட்டால் சிறுவர் பயனர்களையும் போலி கணக்குகளையும் தடுத்து விட முடியுமா? இன்று இணையத்தை பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் இருக்கிறது. தொலைபேசி, இணைய சேவை நிலையங்கள் என்பவற்றில் முறையாகவும் முறைகேடாகவும் அனைவரும் இணையத்தை பயன்படுத்தக்கூடிய நிலை இருக்கையில் வெறுமனே வீட்டுக்குள் இருக்கும் கணினியை

கண்காணிப்பதால் மட்டும் இணைய துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாது.

இவ்வாறு இணைய சேவை பரந்துபட்டு இருக்கையில் சமூக வலைத்தள பாவனையை மட்டும் மட்டுப்படுத்த முடியுமா? ஐரோப்பா மற்றும் ஏனைய சில மேற்குலக நாடுகளில் பேஸ்புக் கணக்கை ஆரம்பிக்க தேவையான வயதெல்லை 13 இல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி இலங்கையும் செயற்படப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது பேஸ்புக்குக்கு மட்டும் உள்ள தடையல்ல. ஸ்னப்சட், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் முறையாக சிறுவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்படுவதை தடுக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களாலேயே முடியும். ஆனால் அவை சாத்தியமற்றது. பெற்றோரே தம் பிள்ளைகளுக்கு தொலைபேசி, ஏனைய தொழில்நுட்ப சாதனங்களை வழங்கி இணைய பாவனையை ஊக்குவிக்கின்றனர். பின்னர் எவ்வாறு சமூக வலைத்தளங்களால் பிள்ளைகள் தடம்மாறுவதை தடுப்பது? இலங்கை அரசு கூறுவதைப் போல வயதுக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தினாலும் அவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமா? தற்போதும் வயதுக் கட்டுப்பாடு அமுலில் உள்ள போதும் இலகுவாக போலி கணக்குகளை உருவாக்க முடிகிறதே!

2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் பேஸ் புக் நிறுவனமானது 17 வயதை பூர்த்தி செய்பவர்களுக்கே கணக்கை ஆரம்பிக்க முடியுமென கூறியிருந்த போதும் சிறுவர்களின் செயற்பாடுகளை பேஸ்புக் நிறுவனத்தால் குறைக்க முடியவில்லை. அதிகமான சமூக வலைத்தளங்கள், புதிய கணக்கினை ஆரம்பிக்கும் போது ஒருவரின் பிறந்த திகதியை கேட்கும் ஆனால் அவற்றை உறுதிப்படுத்த எந்த ஆதாரங்களையும் கேட்பதில்லை. இதனால் விரும்பிய வருடங்களை கொடுத்து கணக்கை ஆரம்பிக்கும் நிலைமை தற்போதும் இருக்கின்றது. இருப்பினும் சில வயது வந்தோருக்கான கேளிக்கை இணையத்தளங்கள் கடன் அட்டைகளின் இலக்கங்களை கோருவதால் போலி கணக்குகளை இனங்காண முடிகிறது.

ஆனால் இலங்கையில் போலிக் கணக்குகளை இனம் காண கடன் அட்டை இலக்கங்களை கோர முடியாது. இலங்கையில் உயர்தர மக்கள் பாவனைக்கே கடன் அட்டை என்ற நிலை காணப்படுகிறது. இதனால் பாவனையாளர்களின் தொகை குறையும் வாய்ப்புள்ளது. ஆனால் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்புகுத்தி கணக்கை ஆரம்பிக்கும் முறை பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்து பார்க்கலாம். அதுவும் இலங்கையில் சாத்தியமானதா? உலகம் முழுவதும் 1.8 பில்லியன் பேஸ்புக் பயனர்கள் இருக்கின்றனர். இவற்றில் ஒவ்வொருவரும் நேர்மையானவர்கள் என்று கூறிவிட முடியாது.

 வலைத்தளங்கள் வளர்ச்சி பெற்று வந்தாலும்  மிரட்டும் வகையிலான
அல்லது போலிக் கணக்குகளை தடுக்க முடியாதுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சர்வதேச நாடுகள் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளன. பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் சமூக வலைத்தளங்களினூடே தமது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அச்சம் மிகுந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களும் சர்வதேச நாடுகளும் பயணிக்கின்றன. இவற்றைத் தடுக்க இலங்கை அரசும் வயதெல்லை தொடர்பான கருத்தை வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் சிறுவர்கள் மட்டும் என்றால் 18 வயதுக்குட்பட்டவர்கள். 16 வயதுக்கு  உள்ளவர்கள் மட்டும் மேல் பேஸ்புக் கணக்கை பாவிக்கலாம் என்றால் ஏனைய சிறுவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவே?

எந்த அடிப்படையில் இலங்கை அரசு வயதெல்லை கட்டுப்பாட்டை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் 2.5 மில்லியன் மக்கள் பேஸ்புக் பாவனையாளர்களாக இருக்கின்றனர். இவற்றில் அதிகமானவை போலி கணக்குகளாகும். இவை போலி தகவல்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இதுவொரு சைபர் குற்றமாகும். இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவே இவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.
இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு( குணூடி ஃச்ணடுச் ஞிணிட்ணீதtஞுணூ உட்ஞுணூஞ்ஞுணஞிதூ கீஞுச்ஞீடிணஞுண்ண் கூஞுச்ட்)  தனது அறிக்கையில்; இவ்வருடம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் பேஸ்புக் சம்பந்தமான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இக்குழுவின் சிரேஷ்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர்  ரொஷான் சந்ரகுப்தா தெரிவிக்கையில்; பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களிடமிருந்தும் 40 வீதமானவை ஆண்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் 17 - 45 வயதிற்கிடைப்பட்டவர்கள். சிலர் போலியாக தயாரிக்கும் கணக்குகளுக்கு உண்மையான புகைப்படத்தை பதிவிடுவதும் சட்டவிரோதமானதாகும். சிலர் போலிக் கணக்குகளை தயாரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் இவர்  தெரிவித்துள்ளார்.

சிலர் பழிவாங்கும் நோக்கத்தோடும் சிலர் சட்ட விரோத செயலுக்கும் சிலர் ஒருவரை களங்கப்படுத்தும் நோக்கோடும் பேஸ்புக் கணக்கை போலியாக ஆரம்பிக்கின்றனர். 13 வயது சிறுவர்கள் கூட போலியான தகவல்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். உங்களுடைய தகவல்களும் அல்லது புகைப்படங்களும் இவ்வாறு முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால் குழுவின் 0112691692/ தொலைநகல் 011 2691064 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். பெரும்பாலானோர் தமது கணக்கை எவரும் பார்வையிடக் கூடிய வகையில் ’கதஞடூடிஞி’  நிலையில் வைத்திருப்பதால் ஒருவரின் புகைப்படங்களை சகலரும் பார்வையிடக்கூடிய நிலையும் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய நிலைமையும் காணப்படுவதால் பயனர்கள் தமது கணக்கு பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் 1.2 மில்லியன் பேஸ்புக் பயனர்களில் 67 வீதமானோர் ஆண்களாகவும் 33 வீதமானோர் பெண்களாகவும் இருக்கின்றனர். பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் 70 வீதமான புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன காதலின் ஒரு பகுதியாக இருக்கிறன. 20 வீதமான கணக்குகள் போலியானவை. 5 வீதமான கணக்குகள் நிர்வாணப் படங்கள், வீடியோக்கள் என்பவற்றை வெளியிட்டு மிரட்டுவதாகவும் 5 வீதமானவை ஊடுருவப் பட்ட கணக்குகளாகவும் இருக்கின்றன. இவ்வாறு இலங்கையிலே பேஸ்புக் நிலைமை மோசமாக இருக்கையில் சர்வதேச கணக்குகள் எவ்வாறு அமைந்திருக்கும்?

எனவே கணக்குகளை உருவாக்கும் போதும் அதனை பயன்படுத்தும் போதும் அவதானமாக இருப்பதுடன் பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யார் உங்களை நண்பராக அடைகிறார், கணக்குத் தகவல்களை பரிசோதித்தல், நாம் ஏன் பேஸ்புக்கை பயன்படுத்துகிறோம், கடவுச் சொல் பாதுகாப்பானதா?, நாம் எங்கிருந்து கணக்கினை திறக்கிறோம், பதிவேற்றும் விடயங்களில் கவனமாக இருத்தல், கணக்கு விபரம் திருடப்படுதல், உடனடியாக முறையிடுதல், தொலைபேசிகளை பாதுகாத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல்  போன்ற ஒவ்வொரு விடயங்களையும் சமூக வலைத்தளங்களை பாவிக்கும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கம் சமூக வலைத்தளங்களை பாவிப்போருக்கான ஒழுக்கக் கோவைகளையும் வயதுக் கட்டுப்பாட்டையும் உரிமைகள் மீறப்படாத வகையில் அமுல்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு சமூக வலைத்தள பயனர்களின் ஆலோசனைகளையும் கட்டாயம் பெற வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் துஷ்பிரயோக நடவடிக்கைகளே அதன் பாதுகாப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் காரணமாக இருக்கின்றன. பாடசாலை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் சீரழிவது தொடர்பில் பெற்றோரே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக பயனர்கள் தமது கணக்குகளின் பாதுகாப்பில் அக்கறை கொள்ளுதல் வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பாடசாலைகளும் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாடசாலை நேரங்களிலேயே மாணவர்களின் தொலைபேசி பாவனை அதிகமிருக்கின்றன. இவற்றை பாடசாலைகள் தடை செய்ய வேண்டும். அரசாங்கம் நடைமுறைப்படுத்த நினைக்கும் கட்டுப்பாடுகளால் துஷ்பிரயோகங்கள் குறைய வேண்டும். சிறுவர்கள் சமூக வலைத்தளங்களின் மீது கொண்டிருக்கும் எதிர்மறையான நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். இவற்றில் குறைகள் தீர்க்கப்படும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களின் தரத்தை பேண முடியும்.

க. பிரசன்னா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக