கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

மீண்டுமொரு பேரழிவு
க. பிரசன்னா
இலங்கையை இயற்கையின் சீற்றம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் முற்றுப்பெறாத அனர்த்தங்கள் உயிர்களை காவுகொள்வதோடு உடைமைகளுக்கும் பலத்த சேதத்தை விளைவிக்கின்றன. இலங்கையை தற்போது கடந்த 14 வருடங்களில் இல்லாதளவுக்கான மிக மோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன தாக்கியுள்ளன. மனிதன் இயற்கைக்கு எதிராக மேற்கொள்கின்ற செயற்பாடுகளே இவ்வாறு அனர்த்தங்களாக பிரதிபலிக்கின்றன. கடந்த சில நாட்களில் பெய்த மழையே 180 க்கும் மேற்பட்டோர் பலியாவதற்கும் பலஇலட்சம் பேரின் இடம்பெயர்வுகளுக்கும் காரணமாகியிருக்கின்றது. களுத்துறை, மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பாரிய அனர்த்தங்கள் பதிவாகியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பாதிப்புக்கள்
வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 153,303 குடும்பங்களிலுள்ள 588,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது. உயிரிழப்புகள் 180 ஐ தாண்டியிருக்கும் நிலையில் அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 109 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினை விட மிக மோசமான தாக்கமாக காணப்படுகின்றது.
இதன்படி காலியில் 38155 குடும்பங்களைச் சேர்ந்த 151,360 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 29,199 குடும்பங்களைச் சேர்ந்த 107,906 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 3756 குடும்பங்களைச் சேர்ந்த 16,133 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதோடு இதுவரை 368 முகாம்களில் 18,845 குடும்பங்களைச் சேர்ந்த 76,902 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை 640 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5329 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள 300,000 பேர் மின்சாரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2003 வெள்ள அனர்த்தத்தில் 250 பேர் கொல்லப்பட்டதுடன் 10,000 வீடுகள் முற்றாக சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையானது ஏற்படுத்தியுள்ள மண்சரிவானது, இலங்கையில் இடம்பெற்றுவரும் காடழிப்பு தொடர்பிலும், மீள் காடாக்கத்துக்கான அவசியம் தொடர்பிலும் வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
அனர்த்த மாவட்டங்கள்
தற்போதைய சூழ்நிலையில் சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள மாவட்டங்களே அதிக பாதிப்பினை எதிர்நோக்கியிருந்தன. இதன்படி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, மாவட்டங்களும் தென் மாகாணத்திலுள்ள காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை என்பனவும் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியவையாக இருக்கின்றன. அதேபோல தற்போது நிலவிவருகின்ற காலநிலையால் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு “மோரா புயல் வங்காள நாட்டை நோக்கி நகர்வதால் திங்கட்கிழமை மத்திய மலைநாட்டின் பிரதேசங்களில் கடும் மழை பெய்யுமெனவும் எதிர்வுகூறப்பட்டிருந்தது.
மேலும் அதியுயர் ஆபத்து வலயங்களாக இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா என்பன அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அலபாத்த, மெல்மதுளை, குருவிட்ட, எகலியகொட, இம்புல்பே அயகம, காவத்தை, கலவான, கொலன்னா, கிரியெல்ல, நிவித்திகலை பகுதிகளும் கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹுபிட்டிய, தெரணியகல, எட்டியாந்தொட்டை, தெஹியோவிட்ட பகுதிகளும் காலி மாவட்டத்தில், பத்தேகம, யக்கலமுல்ல, நிலுவ, நியகம, நகிட பகுதிகளும் களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள,அகலவத்த, வலல்லவிற்ற, பதுரெலிய பகுதிகளும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல, பஸ்கொட, பிட்டபட்டற, முலட்டியான பகுதிகளும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல, கட்டுவான பகுதிகளும் கண்டி மாவட்டத்தில் ஹங்கஇஹலகோரள பகுதியும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பகுதியும் அதியுயர் ஆபத்து வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இப்பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்வதோடு அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுதலும் வேண்டும்.
உயிரிழப்புகள்
சுனாமி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வரட்சி என தொடர்ச்சியாக இலங்கை இயற்கையின் சீற்றங்களுக்கு ஆளாகி வரும் ஒரு நிலையை அறியக்கூடியதாகவுள்ளது. தற்போது நிலவுகின்ற தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன் 109 பேர் வரை காணாமல் போயிருப்பதாக (பத்தி எழுதும் வரை) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது. இதில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதை அறியமுடிகின்றது.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 77 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 54 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 24 பேரும் கேகாலை மாவட்டத்தில் 4 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5 பேரும் காலி மாவட்டத்தில் 12 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 4 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவில் சிக்கியும் வெள்ளத்தினால் இழுத்துக் செல்லப்பட்டும் களுத்துறை மாவட்டத்தில் 57 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 15 காலி மாவட்டத்தில் 10 பேரும்பேரும் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்புகளின் தொகை அதிகரிக்கலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கட்டிடங்கள்
ஆறுகளின் பிரதான ஊற்றெடுப்பு மலைப் பிரதேசங்களாக காணப்படுகின்றன. அதுபோலவே நீர்த்தேக்கங்களும் காணப்படுகின்றன. ஒரு ஆற்றின் ஆரம்பமானது குறுகிய இடைவெளிகளில் இருந்தாலும் அவை சங்கமிக்கும் கடல்பகுதியில் மிக அகலமான பரப்பினை கொண்டிருக்கும். இதற்கு ஆறு கொண்டிருக்கின்ற நீரின் கொள்ளளவும் காரணமாகும். ஆனால் இவ்வாறு பிரதான ஆறுகள் மற்றும் ஓடைகளின் பாதைகளில் மனிதனின் அத்துமீறிய நடவடிக்கையால் உருவாக்கப்படுகின்ற சட்டவிரோத கட்டிடங்களினால் ஆறுகள் மற்றும் ஓடைகளின் பாதைகள் குறுகலாக்கப்படுவதால் வெள்ளநீர் மனித வாழ்விடங்களுக்குள் புகும் நிலை காணப்படுகின்றது.
அண்மைய தகவல்களின் படி கொழும்பு நகருக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 10000 சட்டவிரோத கட்டிடங்கள் காணப்படுவதுடன் இவற்றில் 1800 கட்டிடங்கள் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் காணப்படுவதாக மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக மேல் மாகாணத்துக்குள் நுழைகின்ற களனி கங்கைக்கு அருகிலுள்ள கொஸ்கம, ஹங்வெலல, கடுவெல, பியகம, வெல்லம்பிட்டிய, களனிய, வத்தளை, சேதுவத்த, மாதம்பிட்டிய என்பன அதிக பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக நீரோடைக்கும் கட்டிடத்துக்கும் 40 அடி இடைவெளி காணப்படுதல் அவசியமாகும். ஆனால் அவற்றை மீறும்வகையிலேயே இலங்கையின் பெரும்பாலான நகர்ப்புற கட்டிடங்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு நீரோடைகள், நீர்செல்லும் வழிகளை இடைமறித்து சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாலேயே களனிகங்கையில் நீர்மட்டம் உயர்வதால் கொழும்பு நகர், கொலன்னாவ, கடுவலை, வத்தளை மற்றும் களனி பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இதே மாதத்தில்.....
கடந்த 2016 மே மாதம் 15 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்தன. இவ்வனர்த்தத்தில் 104 பேர் கொல்லப்பட்டதுடன் 99 பேர் காணாமல் போயிருந்தனர். இதில் கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க மண்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டிருந்தன. இவ்வனர்த்தத்தால் 301,602 பேர் பாதிக்கப்பட்டதுடன் 21,484 பேர் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 623 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 4414 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 2016 மே 25 இல் 128,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 வீடுகளை மீள்கட்டுமானம் செய்யவேண்டுமெனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு கடந்த கால அனர்த்தங்களை படிப்பினையாகக் கொண்டு அனர்த்த முகாமைத்துவமானது முன் கூட்டியே திட்டமிடல்களை மேற்கொண்டு மக்களை அப்புறப்படுத்தியிருந்தால் தற்போதைய பாதிப்புகளை ஓரளவுக்கு குறைத்திருக்கலாம்.
டெங்கு அபாயம்
நாட்டில் கடந்த தசாப்தங்களை விட டெங்கு நோயின் தாக்கம் மிகஅதிகமாக காணப்படுகின்றது. இதற்கு சுற்றுப்புறச் சூழல் அசுத்தமாக காணப்படுவதும் டெங்கு நோய் காவிகள் தோற்றம் பெறுவதற்குரிய நீர் குட்டைகள் காணப்படுவதும் பிரதான காரணமாக இருக்கின்றன. இதுவரைக்கும் நாடு முழுவதும் 53,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்குத்தாக்கம் 150 வீதத்தால் அதிகரித்திருப்பதையும் இனங்காணமுடிகிறது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நோயின் தாக்கம் தீவிரமடையலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களுடன் வெள்ளநீர் வடிந்துள்ள பிரதேசங்களில் தேங்கியிருக்கின்ற நீர்க்குட்டைகளை அகற்றுவதோடு நீர்தேங்கியிருக்கின்ற பிளாஸ்டிக் உட்பட ஏனைய பொருட்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அணைகட்டுகளில் நீர்மட்டம் உயர்வு
வெள்ள அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளிலுள்ள அணைக்கட்டுகளில் நீர்க்கசிவு ஏற்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்டிருந்தது. களுத்துறை, பண்டாரகம மற்றும் பரதுவஎல்ல அணைக்கட்டுகளிலேயே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பண்டாரகம, வியன்கொட, பரகஸதொட, தெல்கட, மெனேரி ஹென் துடுவ, புலேகொட, பொல்பொல ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக வசிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
எனினும் பனபிட்ய, பொல்கொட நீர்த்தேக்கமானது கடுமையான மழை காரணமாக பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கடந்த திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, பண்டாரகம, மொரன்துடுவ, அங்குறுவதொட்ட பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. எனவே அணைக்கட்டுகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களை ஏற்படுத்திக் கொடுக்க நிவாரண பணியாளர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
வெள்ளத்தின் போதான தற்பாதுகாப்பு நடவடிக்கைகள்
வெள்ள அனர்த்தத்தின் போதான அதிக பாதிப்புகளுக்கு அவற்றின் போதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமையே பிரதான காரணமாகும். எனவே வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் வானொலி மற்றும் தொலைக்காட்சி தகவல்களை பெற்றுக்கொள்ளல், இரவு வேளைகளில் கவனமாக இருத்தல், குடிநீர், உணவு, முதலுதவி பொருட்கள், பட்டரியுடனான வானொலிப் பெட்டி, துணிகள். அத்தியாவசியமான சான்றிதழ்கள் என்பவை அடங்கிய பையினை எப்போதும் தயார் நிலையில் வைத்தல். நீரில் கிடக்கின்ற மின்சாரப் பொருட்களை கையாள்வதை தவிர்த்தல், வீட்டிலுள்ள அனைவருக்கும் தகவல் தெரிவித்தல்.
வெள்ளநீர் அதிகமுள்ள இடங்களில் நடப்பதை தவிர்த்தல், நீரில் மூழ்கியுள்ள வாகனங்களை பாதுகாப்பான இடங்களுக்கு தள்ளிச் செல்தல், மழைக்காலங்களின் போது ஆறுகள், நீரோடைகள், சிற்றோடைகளின் அருகில் முகாமிடுவதை அல்லது வாகனத்தை நிறுத்துவதை தடுத்தல். குழந்தைகளை அசுத்தமான நீரிலிருந்து வெளியேற்றுவதால் பக்றீரியா தொற்று ஏற்படாமலும் மின்சார தாக்கம் ஏற்படாலும் தடுக்கலாம். வீட்டு வளர்ப்பு பிராணிகளை அடைத்து வைக்காமல் சுதந்திரமாக நடமாடவிடுதல் போன்ற நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ளவேண்டும். இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எப்போதுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.
நிவாரண உதவிகள்/ அவசர தேவைகள்
நாட்டில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட நிலையில் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதில் இந்தியா, உதவிப் பொருட்களடங்கிய இரு கப்பல்களை அனுப்பியிருந்ததோடு, மனிதாபிமான உதவிகளுக்காக 2.2 மில்லியன் அ. டொலர்களை சீன அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய உதவிகளையும் இராணுவத்துடன் இணைந்தான மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் அனைவரும் முன்வரவேண்டும்.
அதேபோல அவசர உதவிகள் தேவைப்படுமிடத்து அதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987, தனியார் மின்சார நிறுவனத்தின் 1910 அல்லது 1901 ஆகிய இலக்கங்களுக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீரில்லையென்றால் 0777724360,0777891332 மற்றும் 0714532222 இலக்கங்களுக்கும், பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்கள் இராணுவ பிரிவின் 0766907125 என்ற இலக்கத்துக்கும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் 0766907206 என்ற இலக்கத்துக்கும் அத்தோடு 117/ 0112136136 /0112670002 ஆகிய இலக்கங்களுடன் அனர்த்த மத்திய நிலையத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு பாரிய அனர்த்தங்களை நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. மேலும் வெள்ளம் காரணமாக தெற்கு அதிவேக பாதைகளும் நீரில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து தடைப்பட்டிருக்கின்றது. அத்தோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக 50 முக்கிய வீதிகளினூடான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் மண்சரிவும் போக்குவரத்தை சீர்குலைத்திருந்தது. இவ்வாறு பல்வேறு சிக்கல்களை இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு என்பன ஏற்படுத்தியிருந்தன. அனர்த்தங்கள் அடிக்கடி இடம்பெறுமிடங்கள் என அடையாளங் காணப்பட்டும் தென்மேல் பருவ மழைக்கு முன்பான எச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த வருடம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சில இடங்கள், இவ்வருடம் பாதிப்பினை எதிர்கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பினை வழங்கியிருக்கலாம். அத்தோடு மனித நடவடிகைகள் ஏற்படுத்தியிருக்கின்ற காலநிலை மாற்றமே அண்மைய வரட்சி, மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறது. எனவே இயற்கை மீதான நேசிப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே மீண்டுமொரு அனர்த்த அபாயம் தோன்றாதிருக்க வழிவகுக்கும்.
31/05/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக